சாதனை நாயகன்!

குகேஷின் செஸ் சாதனை: உலக சாம்பியன்ஷிப் நோக்கி ஒரு படி
சாதனை நாயகன்!

சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) சார்பில் நடைபெற்ற உலக கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்றதால், சாதனைகளின் நாயகனாக உருவெடுத்துள்ளார் இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர்

டி. குகேஷ். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் இளம் வீரர் என்ற பெருமையும் குகேஷ் வசம் உள்ளது.

விடாமுயற்சி, நுணுக்கம், புத்திக் கூர்மை, போராடும் குணங்கள் போன்றவை இருந்தால்தான் செஸ்ஸில் கொடிகட்டி பறக்க முடியும். ஏழாவது நூற்றாண்டில் இந்தியாவில் சதுரங்கம் என ஆடப்பட்டது. செஸ் ஆட்டத்துக்கான விதிகள் ஐரோப்பாவில் வகுக்கப்பட்டன. தற்போது உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களால் செஸ் விரும்பி ஆடப்பட்டு வருகிறது. கருப்பு, வெள்ளை நிறக் காய்களால் இருவரால் 64 சதுரங்கள் கொண்ட பலகையில் ஆடப்படுகிறது. எந்த இடத்திலும் செஸ் விளையாட்டை எளிதாக ஆடலாம்.

உலக அளவில் ரஷியா, சீனா, இந்தியா, அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், உக்ரைன், ஹங்கேரி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் செஸ் வல்லரசுகளாகத் திகழ்கின்றன.

இந்தியாவில் செஸ் விளையாட்டை உலகளவில் கொண்டு சென்ற பெருமை தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்தையே சாரும். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தார். அவரை வழிகாட்டியாகக் கொண்டு இந்தியாவில் பல்வேறு வீரர், வீராங்கனைகள் உருவாகி சர்வதேச அளவில் சாதித்து வருகின்றனர். இதில் குறிப்பாக குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன்,இனியன், விதித் குஜராத்தி, நாராயணன் என பலர் திகழ்கின்றனர்.

அசத்தும் குகேஷ்: சென்னையில் பிறந்த தொம்மராஜு குகேஷ் எனப்படும் டி.குகேஷ் ஏழாம் வயதில் செஸ் விளையாடத் தொடங்கினார். வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவரான குகேஷ், 2015-இல் யு -9 பிரிவில் ஆசிய பள்ளிகள் போட்டியில் பட்டம் வென்றார். ஆசிய யூத் செஸ் போட்டியில் ஐந்து தங்கம் வென்று அசத்தினார் குகேஷ். 2017-இல் சர்வதேச மாஸ்டர் ஆவதற்கான அனைத்து நடைமுறைகளையும் பூர்த்தி செய்தார். தொடர்ச்சியாக 12 ஆண்டுகள், 7 மாதங்கள், 17 நாள்கள் வயதான நிலையில், 2019-இல் 'உலகின் இரண்டாவது இளம் கிராண்ட்மாஸ்டர்' என்ற சாதனையை படைத்தார்.

செஸ் ஒலிம்பியாட் தங்கம்: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று மீண்டும் தனது திறமையை நிரூபித்தார் குகேஷ். உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை வீழ்த்திய இளம் வீரர் என்ற சிறப்பும் அவர் வசம் உள்ளது.

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்: ஃபிடே சார்பில் நடத்தப்படும் முக்கிய போட்டிகளில் ஒன்று கேண்டிடேட்ஸ் போட்டியாகும். இதில் உலகின் தலைசிறந்த எட்டு வீரர், வீராங்கனைகள் மொத்தம் 14 சுற்றுக்கள் ஆடுவர். அதில் வெல்பவர் நேரடியாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வாய்ப்பைப் பெறுவர்.

கனடாவின் டொரண்டோ நகரில் ஏப். 22-ஆம் தேதி நடைபெற்ற 14-ஆவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் ஹிகாரு நகாமுராவுடன் டிரா செய்தார் குகேஷ். மொத்தம் ஐந்து வெற்றி, ஒரு தோல்வி, 8 டிராக்களுடன் 9/14 போட்டியில் வென்று, சீனாவின் டிங் லிரேனுக்கு எதிராக 2024 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடுவதற்கான தகுதியையும் பெற்றார் குகேஷ்.

கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்றதின் மூலம் குகேஷுக்கு மொத்தம் ரூ.43 லட்சம் பரிசுத் தொகை கிடைத்துள்ளது. இதோடு, போட்டியில் வென்ற இளம் வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

இந்தியாவின் நம்பர் ஒன் வீரராகவும் திகழும் குகேஷின் தந்தை காது, மூக்கு, தொண்டை மருத்துவராகவும், தாய் மைக்ரோ பயாலஜிஸ்டாகவும் உள்ளனர்.

இதுகுறித்து குகேஷ் கூறியதாவது:

'கேண்டிடேட்ஸ் போட்டியில் பட்டம் வெல்ல முடியும் என நம்பிக்கையுடன் இருந்தேன். எனினும் ஃபேபியோ காருனா-நெபோம்னியாட்சி ஆட்டம் முடிவு என்ன என்பதில் சிறிது பதற்றமாக இருந்தது. அந்த முடிவை அறிந்தவுடன் மனது லேசானது. அடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்பது எனது நோக்கம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக வேண்டும். உலகின் நம்பர் ஒன் வீரர் என்ற நிலையை அடைய வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com