ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கோடையில் சிறுநீர் பிரச்னை தீர வழி என்ன?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கோடையில் சிறுநீர் பிரச்னை தீர வழி என்ன?

எனக்கு கோடைக்காலங்களில் சிறுநீர் வலியோடும், கஷ்டத்துடனும் சிறிது சிறிதாக வெளியேறுகிறது. எவ்வளவு தண்ணீர் அருந்தினாலும் இதே நிலைதான். இதை ஆயுர்வேதம் எவ்வாறு அணுகுகிறது. இதற்கு என்ன மருந்து சாப்பிடலாம்?

சுகுமாறன், திருவண்ணாமலை.

சிறுநீரை எடுத்துச் செல்லும் நாளங்களில் வரும் நோய்களை சிறுநீர் குறைவாகப் போகும் நிலைகள், சிறுநீர் அதிகமாகப் போகும் நிலைகள் என இரு நிலைகளாகப் பிரிக்கலாம். நீங்கள் குறிப்பிடும் உபாதைக்கு சிறுநீர் என்பது கப தோஷத்தின் 'க்லேதம்' எனப்படும் வழுவழுப்பான நிலையாகும். மலமாகிய கபமும், பித்தமும் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகின்றன.

சிறுநீரில் வாத- பித்த தோஷங்களின் தாக்கம் ஏற்படும்போது, நீர்ச்சுருக்கு ஏற்படுகிறது. அதனால் கபத்தின் தன்மையை நீர்ச்சுருக்கு தக்க வைத்துகொள்ளுதல் மிகவும் அவசியமாகும். கபம் சேரும்போது, சிறுநீரானது ஆல்கலைன் (க்ஷாரகுணம்) ஆகவும், வாத- பித்தம் சேரும்போது அசிட்டிக் (அம்லகுணம்) ஆகவும் மாறுகிறது. நடைமுறையில் 'இன்ஸ்பெக்ஷன்' என்கிற நுண்கிருமிகள் தாக்குதல், கல்லடைப்பு போன்றவை நீர்ச்சுருக்குக்கு முக்கிய காரணங்களாகும்.

அதிகமாகத் தண்ணீர் பருகுதல், இளநீர் பருகுதல், யவம் என்கிற பார்லி கஷாயம், வெள்ளரி, நன்னாரி, தண்ணீர்விட்டான்கிழங்கு, நெருஞ்சில், சுரைக்கொடி, நீர்முள்ளி போன்றவை சிறுநீரை அதிகப்படியாக வெளியேற்றும் தன்மை உடையவன. நால்பாமர மரங்கள், தாமரை வகைகள், மஞ்சள் போன்றவை சிறுநீரின் பழுப்புத்தன்மையாகிய ஆமம் என்கிற நிலையை மாற்றுத்தன்மையுடையன.

நாட்டு மருந்துக் கடைகளில் தண்ணீர்விட்டான் கிழங்கு கிடைக்கும். அதை நீங்கள் பதினைந்து கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து, காய்ச்சி இரு நூற்று ஐம்பது மில்லியாக வற்றியதும் அதில் பாதியை காலையிலும், மறுபாதியை மாலையிலும் வெறும் வயிற்றில் எழுபத்து ஐந்து மில்லி சூடாறிய பால் கலந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் கோடையில் ஏற்படும் நீர்ச்சுருக்கு உபாதையானது குணமாகிவிடும்.

மூலிகைத் தண்ணீரின் வலுவை அதிகரிக்க மேலும் சிலவற்றைச் சேர்க்கலாம். தண்ணீர்விட்டான்கிழங்கு, பால்முதப்பன்கிழங்கு, நெருஞ்சில்விதை, கோரைக்கிழங்கு, நன்னாரி ஆகியவற்றை சம அளவு எடுத்து, நீர்விட்டுக் காய்ச்சி கஷாயமாக்கிப் பருக நீர்ச் சுருக்கு ஒகுணமாகும்.

கடுக்காய்த் தோடு, நெருஞ்சில் விதை, கொன்னைப்பட்டை, கல்லுருக்கி, சிறுகாஞ்சூரி ஆகியவற்றை கஷாயம் செய்து, தேன் மேம்பொடி சேர்த்துக் குடிக்க வலி, மலச்சிக்கல், சூடு ஆகியவற்றுடன் சேர்ந்த நீர்ச்சுருக்கு விரைவில் குணமாகிவிடும்.

கல்லுருக்கு, அதிமதுரம், திப்பிலி, ஏலம், நெருஞ்சில் விதை, சிறுகாஞ்சூரி வேர் ஆகியவற்றை கஷாயம் செய்து தேன் மேம்பொடி சேர்த்துக் குடிக்க நீர்ச்சுருக்கினால் ஏற்படும் எரிச்சல், வலி நீங்கும்.

நெருஞ்சில் விதை, ஆமணக்கு விதை, சுக்கு, மருதம்பட்டை ஆகியவற்றை கஷாயம் செய்து குடிக்க சிறுநீர்க் கல் உடையும்.

விற்பனையாகும் மருந்துகளில் ப்ருகத்யாதி, த்ராக்ஷாதி, புனர்நவாதி, கோகிலாக்ஷம், வீரதராதி போன்ற கஷாயங்கள், சுகுமாரம், வஸ்திஆமயாந்தகம் எனும் லேகிய மருந்துகள், பிரவாளம், சிலாஜித் எனும் கேப்ஸ்யூல்கள் போன்றவை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிட உகந்தவை.

உணவில் ஏலக்காய், திராட்சை, பொன்னாங்கண்ணி கீரை, நெல்லிக்காய், நீர்க்காய்கள், இனிப்பான பழங்கள் ஆகியவற்றை நிறைய சேர்க்க வேண்டும். உப்பு, புளி, காரம், புலால் உணவு, அதிக காபி, டீ ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com