பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

காங்கிரஸ் கட்சியின் அடுத்த அதிரடி என்ன?
பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

ஆஸ்கர் பெர்ணான்டஸ் அடுத்தாற்போல என்ன சொல்லப் போகிறார் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.

'உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நான் வற்புறுத்தவில்லை என்று சோனியாஜியிடம் தெரிவித்துவிட்டுக் கிளம்ப எத்தனித்தேன். அவர் வறட்டுப் புன்னகையை உதிர்த்தபடி பேசத் தொடங்கினார்' என்று தொடர்ந்தார் ஆஸ்கர்.

'ஆஸ்கர்ஜி... நான் காங்கிரஸ் விவகாரங்களில் ஈடுபாடு காட்டுவதையோ, தலைவர்களை சந்திப்பதையோ குழந்தைகள் இருவரும் விரும்பவில்லை. கட்சிக்காரர்களைப் பார்த்தாலே அவர்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. தங்களது தந்தையின் மரணத்துக்குக் காரணமானவர்கள் என்பதுபோல அவர்கள் பார்க்கிறார்கள்' என்று சோனியா சொன்னதாக ஆஸ்கர் தெரிவித்தார். அதற்குப் பிறகு நடந்த உரையாடல்களையும் பகிர்ந்து கொண்டார் ஆஸ்கர்.

'நீங்கள் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது சரியாக இருக்குமா?'

'இருக்காது என்பதைத்தான் கடந்த ஐந்தாண்டு அனுபவங்கள் உணர்த்துக்கின்றன. காங்கிரஸூடன் எனக்கு தொடர்பில்லை என்று தெரிந்தால், தேவே கௌடாவும், இந்திரஜித் குப்தாவும் போஃபர்ஸ் பிரச்னையைத் தோண்டி எடுத்து அதில் என்னையும் தொடர்புபடுத்தி, ராஜீவ் காந்தியைக் குற்றவாளியாக்கி எங்கள் குடும்பத்தையே களங்கப்படுத்தத் தயங்க மாட்டார்கள். அதுதான் எனது பயம்.'

'இப்போது கட்சியில் இருக்கும் தலைவர்கள் எல்லோரையும்விடத் தொண்டர் களின் ஆதரவும், அனுதாபமும் உங்களுக்குத் தான் இருக்கிறது. உங்களுடைய வழிகாட்டுதலுடன்தான் கட்சி நடக்கிறது என்று அவர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையைக் கெடுத்து விடாதீர்கள்...'

'அதுதான் எனது தர்ம சங்கடம். நான் முற்றிலும் தலையிடாமல் ஒதுங்கினால் இந்திராஜியும், ராஜீவ்ஜியும் என்னை மன்னிக்க மாட்டார்கள். நான் கட்சியின் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டினாலோ, தலைவர்களைச் சந்தித் தாலோ குழந்தைகள் இருவரும் கடுமையாகக் கோபப்படுகிறார்கள். 'எங்களை அநாதையாக்கி விடாதே' என்கிற அவர்களது வார்த்தையை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை.'

'சரி, சோனியாஜி. நான் சரத் பவாரை ஏதாவது சொல்லி தவிர்த்து விடுகிறேன்.'

'நான் சரத் பவாரையோ, கேசரியையோ சந்தித்தால் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்கிற அபிப்பிராயம் எழக் கூடும். நான் யாருக்கும் ஆதரவு தரவோ, எதிர்க்கவோ தயாராக இல்லை...'

இன்னும்கூட அவர்களது உரையாடல் கள் குறித்துச் சொன்னார். அவை சரியாக நினைவில்லை என்பதுடன், நான் முழுமையாகப் பதிவு செய்து வைக்கவும் தவறிவிட்டேன்.

ஆஸ்கர் பெர்ணான்டஸை சந்தித்துவிட்டு, அவரது அறையிலிருந்து அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலக வாசலுக்கு வந்தேன். ஆர்.கே.தவான் காரில் ஏறிச் செல்வது கண்ணில் பட்டது. அவரை சந்தித்துப் பல நாள்களாகி விட்டன. நரசிம்ம ராவ் பதவி விலகியது முதல், அவர் அதிகம் கட்சி அலுவலகத்துக்கு வருவது குறைந்துவிட்டதுதான் அதற்கு காரணம்.

ஒருமுறை போய் சந்தித்தால் என்ன என்று தோன்றியது. தவான்ஜியை சந்திக்க எனக்கு முன் அனுமதி தேவையில்லை என்பதால், ஆட்டோ பிடித்து 141, கோல்ஃப் லிங்க்ஸிலுள்ள அவரது வீட்டை அடைந்தேன். அவர் வீட்டுக்கு வந்திருக்கவில்லை. எப்போது வருவார் என்று தெரியாது என்றும் அவரது உதவியாளர் கூறினார்.

சுமார் ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு ஆர்.கே.தவான் வீட்டுக்கு வந்தார். அதற்குள் அவரை சந்திக்க என்னைப்போல அங்கே பலர் காத்திருந்தனர். வந்தவர் நேரடியாக வீட்டிற்குள் சென்று விட்டார். பிறகும் சுமார் அரை மணி நேரக் காத்திருப்பு.

அதில் ஒரு நன்மையும் இருந்தது. தவான்ஜியை சந்திக்க வந்திருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்ததில், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், தில்லி அரசியல் சூழல்கள் குறித்து நிறையவே தெரிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்திருந்த சில முக்கிய தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், தாங்கள் என்ன நிலைப்பாடு எடுப்பது என்று தவான்ஜியுடன் கலந்தாலோசிப்பதற்காக வந்திருந்தனர்.

கட்சிக்காரர்களை எல்லாம் சந்தித்து, அவர்களை அனுப்பிய பிறகுதான், தவான்ஜியை சந்திக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்து. அவருக்கு எதிரில்போய் நான் அமர்ந்தவுடன், அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா?

'ஜெயலலிதாஜியை சிறையில் அடைத்திருப்பது போதாதென்று, அவரை சந்திப்பதற்குக் கட்சித் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகச் சொல்கிறார்களே..?' என்பதுதான் அவர் கேட்ட கேள்வி.

எந்த அளவுக்கு தவான்ஜி அரசியல் விஷயங்களில் 'அப்டேட்டடாக' இருப்பார் என்பதற்கு இது ஓர் உதாரணம். அவர் கேட்ட கேள்வியில் உண்மை இருந்தது.

தினந்தோறும் ஜெயலலிதாவை சந்திக்க மத்திய சிறைச் சாலை முன் கூடும் கட்சிக்காரர்கள், கட்சித் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. சிறைச்சாலைக்கு எதிரில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் செல்லும் பாதையின் நடை மேடைகளில் அதிமுகவினர் நிறைந்து காணப்பட்டனர். ஆங்காங்கே தலைவர்களைச் சுற்றித் தொண்டர்கள் அமர்ந்திருந்தனர். இது சிறை அதிகாரிகளுக்கு எரிச்சல்ஏற்படுத்தியதில் வியப்பில்லை.

முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர்களான பி.எச்.பாண்டியன், சேடப்பட்டி முத்தையா, மகளிர் அணித் தலைவி சுலோசனா சம்பத், துணைப் பொதுச்செயலாளர் எஸ்.திருநாவுக்கரசு என்று எல்லா தலைவர்களும் சிறைச்சாலைக்குப் போவதும், அனுமதி மறுக்கப்படுவதும்வழக்கமாகி இருந்தது.

'முன்னாள் பேரவைத் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படுகிறதோ இல்லையோ, குறைந்தபட்சம் அவர்களை சிறைச்சாலை வரவேற்பறையிலாவது அமர வைக்க வேண்டும். அவர்கள் வெளியில் நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறார்கள்' என்று திருநாவுக்கரசர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து சட்ட அமைச்சர் ஆலடி அருணா நிருபர்களுக்கு அளித்த விளக்கம் எல்லா பத்திரிகைகளிலும் வந்திருந்தது.

'உறவினர்கள், வேலையாட்கள், வழக்குகள் சம்பந்தப்பட்ட வழக்குரைஞர்கள் மட்டுமே சிறையில் உள்ள ஜெயலலிதாவைச் சந்திக்க முடியும். சிறை விதிமுறைப்படி மற்றவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.'

'முன்னாள் முதல்வர், அரசியல் கட்சித் தலைவர் என்கிற முறையில் அவருக்கு விதிவிலக்குக் கிடையாதா?'

'ஜெயலலிதா அரசியல் கைதி அல்ல. கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட விசாரணைக் கைதி. ஊழல், நம்பிக்கைத் துரோகம், விதிமுறை மீறல் உள்ளிட்ட புகார்கள் அவர் மீது உள்ளன. அரசியல் போராட்டம் நடத்திக் கைதாவனர் அல்ல ஜெயலலிதா.'

'ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச சலுகைகூட அவருக்கு வழங்கப்படவில்லை என்று அதிமுகவினர் குற்றம் சாட்டுகிறார்களே...'

'சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்ற காந்தி, நேரு; இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதான அண்ணா, கருணாநிதி போன்றவர்களுக்கு நிகரானவராக, ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி விசாரணைக் கைதியாக சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை உருவாக்க நினைக்கிறார்கள். அரசியல் ரீதியிலான சந்திப்புகளுக்கு அனுமதி தர முடியாது. பார்வையாளர்களை தினசரி அனுமதிக்க வேண்டும் என்று சிறை விதிமுறைகள் கூறவில்லை. அதிமுக அலுவலகம் சிறையில் செயல்பட முடியாது.'

ஆலடி அருணாவின் விளக்கம் பதற்றத்தை மேலும் அதிகரித்தது. 'ஜெயலலிதா பெண் என்ற காரணத்தால், பெருந்தன்மையாக முதல்வர் கருணாநிதி நடந்து கொள்கிறார். அவருக்குச் சிறையில் டேபிள் ஃபேன், வீட்டிலிருந்து மெத்தை ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பழங்கள், ரொட்டி போன்றவை தாராளமாக அனுமதிக்கப்படுகிறது. கொசுவத்திச் சுருள் வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது' என்கிற சட்ட அமைச்சர் ஆலடி அருணாவின் வார்த்தைகளைக் கேட்டு அதிமுகவினர் கொந்தளித்து விட்டனர்.

இதெல்லாமே ஆர்.கே.தவானுக்குத் தெரிந்திருந்தது. தன்னை வாழப்பாடி ராமமூர்த்தி சந்தித்துத் தகவல்களைக் கூறியதாகவும், ம.நடராசன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் என்னிடம் சொன்னபோது, தவானுடைய விசாரிப்பின் பின்னணி தெரிந்தது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே தொடர்பாக இருந்தவர் என்பதால், ஆர்.கே.தவானுக்கு அக்கறை இருந்தது எனக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை. எங்கள் பேச்சு காங்கிரஸ் கட்சியில் நடக்கும் பிரச்னைகள் குறித்துத் திரும்பியது.

'நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து நீங்கள் ஏன் மௌனம் காக்கிறீர்கள்? என்னதான் நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?'

'அரசியலில் பதவி இருக்கும் வரைதான் மரியாதையும் ஆதரவும் இருக்கும். நரசிம்ம ராவ்ஜி பல வழக்குகளை எதிர்கொள்கிறார். அவருக்கு பதவியில் அக்கறை இல்லை. ஆனால் அவரைச் சார்ந்து இருப்பவர்களால், சீதாராம் கேசரியின் செயல்பாடுகளை ஜீரணிக்க முடியவில்லை. அவரை இடைக்காலத் தலைவராகப் பரிந்துரைப்பதற்கு முன்னால் நரசிம்ம ராவ்ஜி யோசித்திருக்க வேண்டும். இப்போது வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்?'

'என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?'

'சீதாராம் கேசரிக்கு மக்கள் செல்வாக்கு கிடையாது.

ஆனால் அரசியல் ராஜதந்திரம் நன்றாகத் தெரிந்தவர். அவருக்கு சரத் பவார், ராஜேஷ் பைலட் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. நாடாளுமன்றக் கட்சித் தலைவராக அவர் தன்னை அறிவித்துக் கொள்வதைத் தடுக்கும் சக்தி ஒருவருக்குத்தான் உண்டு...'

'யார் அது?'

'வேறு யார், சோனியாஜிதான். சீதாராம் கேசரி வேண்டாம் என்று முடிவெடுக்காதவரை கேசரி தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுத்துவிட முடியாது.'

'சோனியாஜி தலையிட விரும்பவில்லை'

'அப்படி உங்களிடம் யார் சொன்னது?'

'ஆஸ்கர் பெர்ணான்டஸ். தனக்கு அரசியலில் நாட்டமே இல்லை என்று அவரிடம் சோனியாஜி தெரிவித்திருக்கிறார்...'

'அப்படியா, ஆச்சரியமாக இருக்கிறது. அவரிடம் என்ன சொன்னார் என்று சொல்லுங்கள்...' - ஆர்வத்துடன் கேட்டார் ஆர்.கே.தவான்.

ஆஸ்கர் பெர்ணான்டஸ் என்னிடம் சொன்னதை எல்லாம் நான் அவரிடம் தெரிவித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். மெல்லிய புன்னகையுடன், சிகரெட்டை புகைத்தபடி கேட்டுக் கொண்டிருந்தார். நான் சொல்லி முடித்த பிறகு அவர் பேசத்தொடங்கினார்.

'நான் தலையிடாமல் இருந்தால் இந்திராஜியும், ராஜீவ்ஜியும் என்னை மன்னிக்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்? குழந்தைகள் இருவரும் கோபப்படுகிறார்கள் என்றால், 'எனக்கு விருப்பம்தான்;

ஆனால் அவர்கள்எதிர்க்கிறார்கள்'என்று பொருள். இப்போது உடனடி யாக சோனியாஜி அரசியலுக்குவரமாட்டார். ஆனால்,அவரால் அதிக காலம் ஒதுங்கி இருக்கமுடியாது. அவர் மட்டுமல்ல, அவருக்குப் பிறகு ராகுல் அல்லது பிரியங்காவும் அரசியலுக்குவருவார்கள். காங்கிரஸ் தலைவரா வார்கள்.'

'இவ்வளவு தீர்க்கமாக எப்படிச் சொல்கிறீர்கள்?'

'என் வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்திராஜியுடனும் அந்தக் குடும்பத்துடனும் கழித்தவன் நான். வேண்டாம், வேண்டாம் என்று சொன்னால் காங்கிரஸ்காரர்கள் முன்பைவிட அழுத்தமாக, 'நேரு குடும்பம்தான் வேண்டும், வேண்டும்' என்று அவர்கள் வீட்டு வாசலில் காத்துக் கிடப்பார்கள் என்பது சோனியாஜிக்கு நன்றா

கவே தெரியும். அவர் சரியான நேரத்துக்காகக் காத்திருக்கிறார். அவ்வளவுதான்...'

'தவான்ஜி, இவ்வளவு தீர்மானமாக நீங்கள் சோனியா காந்தி குறித்து சொன்னதற்கு ஏதாவது காரணம் இருக்கும். என்ன அடிப்படையில், என்ன காரணத்தால் அப்படியொரு முடிவுக்கு நீங்கள் வருகிறீர்கள்?'

'எனக்குப் பல உண்மைகள் தெரியும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதை நான் வெளியில் சொல்ல மாட்டேன் என்றும் அனைவருக்கும் தெரியும். அதனடிப்படையில் சொல்கிறேன்...'

'புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டில் இருந்து, இன்னொரு சிகரெட்டை பற்றவைத்துப் புகையை இழுத்துவிட்டார் ஆர்.கே.தவான். அவர் அடுத்தாற்போல சொல்லப்போகும் செய்திக்காகக் காத்திருந்தேன் நான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.