

நல்ல கடும் குளிர். ரயில் பயணத்தில் தூக்கம் வரவில்லை. போஃபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்த குற்றச்சாட்டும், அது ஏற்படுத்திய விவாதமும் நினைவில் நிழலாடின. ராஜீவ் காந்தி அரசுக்கு களங்கம் ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், 1989 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியதற்கும் போஃபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு மிகப் பெரிய காரணமாக அமைந்தது என்பது குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தேன்.
போஃபர்ஸ் ஆவணங்களைப் பெறுவதற்கு கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்த நீதிமன்றப் போராட்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல, வங்கிக் கணக்குகள் குறித்த ரகசியங்களை வேறு நாடுகளுக்கு வழங்கக் கூடாது
என்கிற சர்வதேச விதிமுறையே இருந்தது. 1989இல் இந்தியாவும், சுவிட்சர்லாந்தும் ஓர் இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் அடிப்படையில் ஆவணங்களை வழங்க வேண்டும் என்று இந்தியா கோரியது.
போஃபர்ஸ் குறித்த ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைக்கும்படி சுவிஸ் நீதிமன்றத்துக்கு இந்தியாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 1990இல் கோரிக்கை விடுத்தது. ஆனால், இன்னொரு வெளிநாட்டு நீதிமன்றக் கோரிக்கையை ஏற்க முடியாது என்று சுவிஸ் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதனால், போஃபர்ஸ் ஆவணங்கள் எதுவும் பெற முடியாது என்கிற கருத்து இதுவரையில் நிலவியது.
1990 முதல் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தியது சிபிஐ நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் போஃபர்ஸ் தொடர்பான ஆவணங்களைப் பெறுவதில் முனைப்புக் காட்டப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. பாஜக அல்லாத ஏனைய எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதே போஃபர்ஸ் விவகாரம் கிடப்பில் போடப்பட வேண்டும் என்பதற்காகத்தான் என்கிற விமர்சனம் உயர்ந்தது.
அந்தப் பின்னணியில்தான் சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங் போஃபர்ஸ் ஆவணங்களை சுவிஸ் நாட்டிலிருந்து பெறுவதற்கான முயற்சியில் முழு மூச்சாக இறங்கினார். அதற்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று பிரதமர் தேவே கெளடா பலமுறை தெரிவித்தாலும் அதில் உண்மையில்லை என்பது அனைவருக்கும் தெரியும். உள்துறை அமைச்சராக இருந்த இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இந்திரஜித் குப்தாவின் அழுத்தம்தான் ஜோகிந்தர் சிங்கை இயக்கியது என்கிற குற்றச்சாட்டும் உண்டு.
தில்லி ரயில் நிலையத்தில் அதிகாலையில் வந்து இறங்கியதும், போஃபர்ஸ் ஆவணங்கள் திருப்பிக்கொடுப்பது குறித்த செய்திதான் அனைத்து நாளிதழ்களிலும் தலைப்புச் செய்தியாக வெளிவந்திருந்தது. சுமார் 11 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். ஆவணங்கள் திரும்பப் பெறுவது குறித்த எல்லா விவரங்களும் அடங்கிய பத்திரிகைக் குறிப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அந்த பத்திரிகை குறிப்பில் எல்லா விவரங்களும் தரப்பட்டிருந்தன. சுவிஸ் நாட்டின் போலீஸ் விவகாரத் துறை அலுவலகத்தில் நடந்த விழாவில் அந்த நாட்டுக்கான இந்திய தூதரான கே.பி.பாலகிருஷ்ணனிடம் சுமார் நான்கு கிலோ எடையுள்ள ஆவணங்கள் அடங்கிய பெட்டி ஒப்படைக்கப்பட்டதாக அந்தக் குறிப்பு தெரிவித்தது.
அந்தப் பெட்டியில் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலை வெளிப்படுத்தும் சுமார் 1,000 பக்கங்கள் அடங்கிய ரகசிய சுவிஸ் வங்கி ஆவணங்கள் இருந்தன. 'லோட்டஸ்', 'துலிப்' மற்றும் 'மெளன்ட் பிளாங்க்' உள்ளிட்ட சங்கேத மொழிப் பெயர்களில் ஐந்து வங்கிக் கணக்குகளில் லஞ்சப் பணம் செலுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் அதில் அடக்கம்.
'ஆவணங்கள் அடங்கிய சீலிட்ட பெட்டி சிபிஐ அலுவலகத்தில் வைக்கப்படும். அதன் பிறகு சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். சிறப்பு நீதிபதி அனுமதி அளித்த பிறகுதான் ஆவணங்கள் அடங்கிய பெட்டியைத் திறந்து சிபிஐ விசாரணையைத் தொடங்கும்' என்று அந்த அதிகாரி விளக்கினார்.
'ஆவணங்களை இந்தியாவுக்குப் பாதுகாப்பாக எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளை இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். போஃபர்ஸ் பேரத்தில் ரூ.250 கோடி லஞ்சம் வாங்கியவர்களின் பெயர்கள் இதில் இருப்பதால் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் ஆவணங்களைக் கொண்டு வந்தாக வேண்டும்' என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். இப்படி சர்வதேச விதிமுறைகளுக்கு எதிராக சுவிஸ் வங்கியிடம் இருந்து ஆவணங்களைப் பெறும் முதல் நாடு இந்தியாதான் என்பதையும் குறிப்பிட்டார் அவர்.
இதற்கிடையில் ஆவணங்களை சர்வதேச விதிமுறைகளை மீறி இந்தியாவிடம் ஒப்படைக்கக் கூடாது என்று கூறி சுவிஸ் நீதிமன்றத்தில் ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் ஐந்து மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்றாலும், நிலுவையில் ஒரு மனு பைசல் செய்யப்படாமல் இருந்தது. அந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பானதால்தான், பீரங்கி பேரம் குறித்த வேறு சில ஆவணங்களைப் பெற முடியும் என்கிற தகவலும் அதிகாரியால் பத்திரிகையாளர்களிடம் பகிந்துகொள்ளப்பட்டது.
போஃபர்ஸ் ஆவணங்கள் கிடைத்துவிட்டன என்கிற செய்தி மிகுந்த பரபரப்பை அரசியல் வட்டாரங்களில் எழுப்பியது. போதாக்குறைக்கு இந்த நேரம் பார்த்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியிடம் விசாரணை நடத்த முற்பட்டது, வரவிருக்கும் அரசியல் பூகம்பங்களுக்கு காரணமாக அமையும் என்று எல்லோரும் பேசத் தொடங்கிவிட்டனர்.
சீதாராம் கேசரியிடம் தனிச் செயலாளராக இருந்த, பிகாரைச் சேர்ந்த பத்திரிகையாளரான மதுரேஷ் குமார் காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி தனது வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார். அதுகுறித்து வழக்கும் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை வலியப் போய் மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க முற்பட்டபோதே, காங்கிரஸ் கட்சி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது.
மதுரேஷ் குமார் சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங்கை சந்தித்துப் பேசினார். ஒரு மனுவை அவரிடம் அளித்தார். அது தொடர்பாகத்தான் சீதாராம் கேசரியிடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது சிபிஐ தரப்பு விளக்கம். அது தொடர்பாக சுமார் இரண்டு மணி நேரம் சீதாராம் கேசரியின் வீட்டில் விசாரணை நடத்தப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் விசாரணை விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேசரியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
'காங்கிரஸ் தலைவர் கேசரியிடம் நாங்கள் விசாரணை நடத்தப்போவது குறித்தோ, நடத்தியது குறித்தோ பிரதமருக்கோ, அவரது அலுவலகத்துக்கோ தெரியாது. நாங்கள் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. சட்டம் தனது கடமையைச் செய்கிறது' என்கிற சிபிஐ அதிகாரிகளின் விளக்கம் காங்கிரஸ் தலைவர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
சிபிஐ அதிகாரிகள் மட்டுமல்ல, ஐக்கிய முன்னணி அரசில் முக்கியப் பங்குவகிக்கும் ஜனதா தளத்தின் தலைவரான சரத் யாதவ் வெளியிட்ட அறிக்கையும் காங்கிரஸாரை மேலும் ஆத்திரப்படுத்தியது. 'விசாரணைக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை' என்கிற அவரது கூற்றை எள்ளி நகையாடினார்கள் காங்கிரஸின் மூத்தத் தலைவர்கள்.
'பிரதமருக்கு வாயில்லையா? அவர் சார்பில் சரத் யாதவ் எதற்காகப் பின்னணிக் குரல் கொடுக்கிறார்?' என்று நையாண்டி செய்தார் ஜி.வெங்கடசாமி.
'காங்கிரஸிலிருந்து பிரிந்து போன தலைவர்களும், கட்சிகளும் மீண்டும் இணையத் தொடங்கியிருக்கின்றன. இதனால் ஐக்கிய முன்னணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்கிற பயத்தில்தான் சிபிஐ விசாரணை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன' என்று அவரை வீட்டில் பார்த்தபோது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், மூத்தத் தலைவருமான வி.என்.காட்கில் என்னிடம் தெரிவித்தார்.
'அதற்காக ஏன் சிபிஐ மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்? நேரிடையாக சீதாராம் கேசரியையோ, உங்களைப் போன்ற மூத்தத் தலைவர்களையோ அழைத்துப் பேசினாலே போதுமே.. யாராவது வலியப்போய் விரோதத்தை சம்பாதித்துக் கொள்வார்களா?' என்று நான் கேட்டபோது காட்கில் சிரித்தார்.
'அவர்களுடைய அரசியல் புத்திசாலித்தனம் அவ்வளவுதான். காங்கிரஸ் ஏதோ பலவீனமாக இருப்பதாகவும், இப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டால் பயந்துவிடுவோம் என்றும் நினைக்கிறார்களோ என்னவோ...'
'சொத்துக் குவிப்பு குறித்து விசாரிக்கும் அளவுக்கு சீதாராம் கேசரி பெரிய அளவில் ஊழல் செய்திருப்பார் என்று நினைக்கிறீர்களா?'
'தனது சொத்துவிவரங்களை காங்கிரஸ் செயற்குழுவிடம் சீதாராம் கேசரி ஏற்கெனவே கொடுத்திருக்கிறார். இப்போது இவர்கள் விசாரிப்பதற்கு அதுவல்ல காரணம். நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்தவர் கேசரி. அவரைத் தனிப்பட்ட முறையில் விசாரிப்பதுபோல, காங்கிரஸ் கட்சியின் நிதி நிலைமை குறித்தும், காங்கிரஸூக்கு நன்கொடை வழங்குபவர்கள் குறித்தும் விசாரிப்பதுதான் இவர்கள் நோக்கம்.'
'அப்படியானால் காங்கிரஸ் என்னச் செய்ய போகிறது?'
'தலைவர் கேசரியிடம் நடத்தப்பட்ட சிபிஐ விசாரணையின் பின்னணியில் பிரதமரோ, பிரதமர் அலுவலகமோ இருந்ததாகத் தெரிய வந்தால், அதன் பின்விளைவுகள் மோசமானதாக இருக்கும்.'
'மோசமானதாக என்றால்? ஐக்கிய முன்னணி அரசுக்கு அளித்துவரும் ஆதரவை காங்கிரஸ் விலக்கிக்கொள்ளும் என்கிறீர்களா?'
'நான்தான் உங்களிடம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனே. இவர்களது ஐக்கிய முன்னணி என்கிற கூட்டணிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளால் தேவே கெளடா அரசு இந்த ஆண்டின் இறுதிக்குள் கவிழ்ந்துவிடும் என்பது நிச்சயம்.'
காட்கில் சொன்னதுபோல ஓராண்டு காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அடுத்த மூன்று மாதங்களிலேயே தேவே கெளடா அரசு கவிழ்ந்தது. கவிழ்ந்தது என்பதைவிட காங்கிரஸால் கவிழ்க்கப்பட்டது என்பதுதான் உண்மை.
அரசியல் வட்டாரங்களில் சீதாராம் கேசரியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது பெறும் சர்ச்சையாகியிருந்த நிலையில், போஃபர்ஸ் ஆவணங்கள் கிடைத்திருப்பது பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஒருவேளை அதற்காகத்தான் சிபிஐ சீதாராம் கேசரியிடம் விசாரணை நடத்தியதோ, என்னவோ?
'எல்லை மீறி செயல்படுகிறது சிபிஐ. காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஐக்கிய முன்னணி அரசு செயல்படுவது துரதிருஷ்டவசமானது. காங்கிரஸ் கட்சியின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இது பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக அமையும்' என்கிற பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி கருத்தை வழிமொழிந்து பல காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை வெளியிட் முற்பட்டனர்.
குலாம் நபி ஆசாதின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் கூடுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் ஐக்கிய முன்னணி அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு தருவது குறித்து மீள் பரிசோதனை நடத்த வேண்டும் என்று பலர் விரும்பினார்கள்.
மத்தியில் உள்ள மதச்சார்பற்ற அரசை காங்கிரஸ் ஒருபோதும் கவிழ்க்காது என்கிற முந்தைய வாக்குறுதியை எங்களது பலவீனமாக பிரதமர் தேவே கெளடாவும், ஐக்கிய முன்னணியில் இடம் பெற்ற கூட்டணிக் கட்சிகளும் கருதுவதாக குலாம் நபி ஆசாத் குற்றம் சுமத்தினார்.
இத்தனையும் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தபோது ஓர் அசாதாரண அமைதி 10, ஜன்பத்தில் நிலவியது. சிபிஐ ஆவணங்களைப் பெற்றுவிட்டது குறித்தும், அவை விரைவில் கொண்டுவரப்பட இருப்பது குறித்தும் சோனியா காந்தியின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினேன்.
அவருடன் அன்றாடத் தொடர்பில் இருப்பவர் ஒருவரின் வீடு நோக்கி நகர்ந்தேன்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.