பதவிக்காகச் சேவைத் திட்டங்களைத் தொடங்கினேன். அவை வெற்றியடையும்போதும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது. ஆகவே, எனது வாழ்நாள் முழுவதும் சேவைப் பணியாற்றுவேன்' என்கிறார் ரோட்டரி சங்க மாவட்டம் 3212-இன் முன்னாள் ஆளுநரும் ரோட்டரி அறக்கட்டளையின் துணை ஒருங்கிணைப்பாளருமான வி.ஆர்.முத்து.
விருதுநகரைச் சேர்ந்த இவர், 'இதயம்' நல்லெண்ணெய் போன்ற உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் 'இதயம்' குடும்பத் தலைவர். முன்னணித் தொழிலதிபரான இவர், தனது அன்றாடப் பணிகளுக்கு இடையே மக்கள் நலப் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார்.
வளர்இளம்பெண்களுக்கான 'யாதுமானவள்' என்ற நிகழ்ச்சியை தன்னம்பிக்கை நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வருவதோடு, 1.10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சிறந்த வழிகாட்டுதல்களை அளித்துள்ளார்.
அவரிடம் பேசியபோது:
'நான் விருதுநகர் ரோட்டரி சங்கத்தில் 1982இல் சேர்ந்தேன். பின்னர், 198990இல் சங்கத் தலைவரானேன். ஓய்வு நேரத்தில், ரோட்டரி சங்கம் வாயிலாக சமூகச் சேவையில் ஈடுபடுகிறேன்.
202223ஆம் ஆண்டில் நான் ரோட்டரி சங்க ஆளுநராகப் பதவியேற்றேன். இந்த நேரத்தில், ரோட்டரி சங்க உலகத் தலைவராக கொல்கத்தாவைச் சேர்ந்த சேகர் மேத்தா பதவியேற்றார். அவர், 'பெண்களுக்கு சக்தி கொடு. ஆற்றலை மேம்படுத்து' என்று முழக்கமிட்டார். இதைக் கருத்தில் கொண்டு, 'யாதுமானவள்' என்ற வளர்
இளம்பெண்கள் உடல், மன ரீதியில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சியை அளிக்க முடிவெடுத்தேன். இதற்காக, தலைசிறந்த பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனும் முன்வந்தார்.
கிராமப்புற மாணவிகள், அதிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவிகளைத் தேர்வு செய்து, ஒரு மணி நேரம் தன்னம்பிக்கை, தைரியம், கல்வியின் அவசியம், வாழ்க்கையை துணிவுடன் எதிர்கொள்ளுதல், பயத்தை விட்டொழித்தல், தடைகளைத் தகர்த்தெறிந்து லட்சியத்தை வெல்லுதல் உள்ளிட்ட வகையில் நல்லதொரு கருத்துகளை ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் விளக்குவார். பின்னர், அவர் மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பார். இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் மாணவிகள், எதிர்காலத்தில் தங்களது வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்கும் வகையில் முன்னேற வேண்டும் என்ற உத்வேகத்தை நிச்சயம் அளிக்கும். சாதிக்க வேண்டும் என்ற வேட்கை ஆழ்மனதில் வாழ்நாள் முழுவதும் இருக்கும்.
மாதத்துக்கு மூன்று நிகழ்ச்சிகள் என எனது பதவிக்காலமான 12 மாதங்களில், சுமார் 40 நிகழ்ச்சிகளை நடத்தினேன். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் என ஏழு மாவட்டங்களில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மகளிர் கல்லூரிகள், பள்ளிகளைத் தேர்வு செய்து நிகழ்ச்சிகளை நடத்தினோம். இதன்பின்னர், பிற ரோட்டரி சங்கங்களின் வேண்டுகோளின்படி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்திவருகிறோம். தற்போது 87 நிகழ்ச்சிகளைக் கடந்து, 1.10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு நல்லதொரு வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. இலங்கை நாட்டில் உள்ள யாழ்ப்பாணத்திலும் இலங்கைத் தமிழ் மாணவிகளுக்காக ஒரு நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளோம்.
ஜெயந்தஸ்ரீயோடு, அவருடைய கணவர் பாலகிருஷ்ணன், ரோட்டரி சங்க நிர்வாகி விஜயகுமாரி ஆகிய மூன்று பேர் இந்தத் திட்டத்துக்குப் பேருதவியாக இருக்கின்றனர்.
இந்தத் திட்டத்தைத் தவிர வேறு சில திட்டங்களையும் செயல்படுத்திவருகிறேன்.
ரைலா: 'ரைலா' (இளைஞர்களை முன்னேற்றம் அடையச் செய்தல்) என்ற திட்டத்தின்படி, 20 முதல் 28 வயதுடைய இளைஞர்கள் 32 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மூன்று நாள் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாதத்துக்கு ஒன்று வீதம் தொடர்ந்து நடக்கும் பயிற்சி முகாம்களில், தொழில் முனைவோருக்கு தேவைப்படும் பொருளாதார வசதி, சந்தைப்படுத்துதல், வெற்றி அடையச் செய்தல்.. என்று பல்வேறு தலைப்புகளில் உரிய நிபுணர்கள் பயிற்சிகளை அளிப்பர். பயிற்சியின் நிறைவில் ஐந்து நாள்கள் சிங்கப்பூருக்கு தொழில்ரீதியான சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். சுற்றுலாவின் முடிவில், தொழில்துறை சார்ந்து அவர்கள் பெற்ற அனுபவத்தை அறிக்கையாகப் பெறுவோம். இந்தத் திட்டத்தை இந்திய அரசின் வெளியுறவுத் துறையே பாராட்டியது. இந்தத் திட்டத்துக்காக, பயிற்சியாளர்கள் ஜெயராம், குருசாமி, தணிகைவேல், சீனிவாசன் போன்றோர் உதவுகின்றனர்.
'பஞ்ச்': இளைஞர்கள், இளம்பெண்கள், கல்லூரி மாணவமாணவிகளுக்காக ஆங்கிலப் பேச்சுத்திறன் பயிற்சி அளிப்பதே 'பஞ்ச்' திட்டத்தின் நோக்கம். மாதம்தோறும் மூன்று நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். இதுவரையில் 89 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். முக்கியமாக, கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சுத்திறன்பயிற்சியை நடத்துகிறோம். நாங்கள் பயிற்சி அளிக்கும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் வளாக நேர்காணலில் தேர்ச்சி பெறுவதே எங்கள் பயிற்சிக்கு கிடைத்த சாதனையாகப் பார்க்கிறோம். திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த பஞ்சநாதன் வழியில், இந்தப் பயிற்சியை நாங்கள் நடத்துகிறோம். பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சிகளால் பயன்பெற்றுள்ளனர். ரோட்டரி சங்க நிர்வாகி ஷியாம் என்பவர்தான் இந்த நிகழ்ச்சியை வழிநடத்துகிறார்.
விஞ்ஞான ரதம்: பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் மீது ஒரு கசப்பான அனுபவம் இருக்கும். அவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கில் பள்ளிகளில் அறிவியல் ஆர்வலர்களைக் கொண்டு, எளிய முறையில் நல்லதொரு புரிதலை உருவாக்குகிறோம். மாதம்தோறும் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிற்சிகள் நடக்கின்றன. இதுவரை 1.70 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். டாக்டர் பசுபதி என்பவர் நல்ல முறையில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்' என்கிறார் வி.ஆர்.முத்து.