
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டும், தண்டனைக்குள்ளாகியும் 32 ஆண்டுகள் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள இரா. பொ.ரவிச்சந்திரன், தற்போது, 'காரா பதிப்பகம்' தொடங்கியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்குப் பிறகு, பலரும் குற்றம்சாட்டப்பட்டு, 26 பேருக்கு தண்டனை 1998இல் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் மரணத் தண்டனை பெற்ற ரவிச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
தொடர்ச்சியாக, 32 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு 2022ஆம் ஆண்டு நவம்பரில் அவர் விடுவிக்கப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, 2024 மார்ச் 10இல் மதுரையில் 'காரா பதிப்பகம்' ஐ அவர் தொடங்கினார். அதன்பிறகு முதல் புத்தகக் கண்காட்சியாக, புதுக்கோட்டையில் கடந்த ஜூலை 27ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழாவில் பங்கேற்றது 'காரா பதிப்பகம்'.
இதுதொடர்பாக ரவிச்சந்திரனிடம் பேசியபோது:
'மதுரைதான் எனக்கு பூர்விகம். நான் சிறைக்குச் செல்லும்போது வயது இருபத்து ரெண்டு. இப்போது எனக்கு வயது ஐம்பத்து ஐந்து.
32 ஆண்டுகள் வேலூர் மத்திய சிறையில் இருந்தபோது, எம்.ஏ., வரலாறு முதுநிலைப் பட்டமும், ஊட்டச்சத்து, கணினிப் பயன்பாட்டியல் போன்றவற்றில் பட்டயப் படிப்புகளும் முடித்தேன்.
'சிறை மொழி' என்ற கவிதைத் தொகுப்பும், மற்றும் சில கட்டுரை நூல்களையும் சிறையில் இருந்த போதே எழுதினேன். அவற்றை மறுபதிப்பு செய்து மீண்டும் வெளியிட்டிருக்கிறோம். மேலும் 6 புதிய நூல்கள் அச்சில் இருக்கின்றன.
தமிழ் இன விழிப்புணர்வுக்காகவே காரா பதிப்பகம் செயல்படும்.
காரா என்பது தமிழ்நாட்டின் பழைமையான நீலகிரி மலைப்பகுதியில் செறிவாக இருந்த எருதின் பெயரும். கருப்பு நிறத்தைக் குறித்தும் பெயர் காராதான்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாதான் எங்களின் முதல் பங்கேற்பு. திறந்த மனதுடன்தான் ஒத்தக் கருத்துள்ள நூல்களை வாங்கி புத்தகத் திருவிழா அரங்கில் பங்கேற்றோம். ஏமாற்றமில்லை. அடுத்த கட்டத்தை நோக்கி பதிப்பகத்தை கொண்டு செல்லும் நம்பிக்கை கிடைத்திருக்கிறது'' என்கிறார் ரவிச்சந்திரன்.
-சா.ஜெயப்பிரகாஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.