கல்லின் மேல் விழுந்த கலம்

சொந்தங்கள், 'மனசை தேத்திக்கோ' என்று ஆறுதல் கூறுவதாக நினைத்துச் சொன்னது. அக்காவுக்கு இன்னும் துயரத்தையே கூட்டியது.
சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது
Published on
Updated on
5 min read

சொந்தங்கள், 'மனசை தேத்திக்கோ' என்று ஆறுதல் கூறுவதாக நினைத்துச் சொன்னது. அக்காவுக்கு இன்னும் துயரத்தையே கூட்டியது.

திருவாரூரில் திடீரென விபத்தில் இறந்து போன சம்பத் மாமா காரியங்களுக்குப் பிறகு, சுபசுவீகாரம் முடிந்த மறுநாள் உறவினர்கள் எல்லோரும், கிளம்பி போய்விட்டார்கள்.

இந்த நேரத்தில், 'நானும் கிளம்பறேன்' என்று கிளம்பும் சமயம், அக்கா அழுதுகொண்டே, தன்னிடம் உள்ள சேமிப்புக் கணக்குப் புத்தகங்களைக் கொண்டு வந்து காண்பித்தாள்.

'இதிலிருந்து பணம் எடுக்க வேண்டும். எப்படி எடுப்பது? சொச்ச நாளைக்குக் குடும்பம் நடத்தணும். ஒவ்வொரு மாதமும் மாசியம், தொடங்கி , வருஷாப்திகம் வரை நடக்கணும். அதற்குப் பணம் வேணும்! பென்ஷன் பணம் வேறே வாங்கணும்! மாமா என்னையோ இல்லை; இந்த அசட்டு பிள்ளையையோ இவ்வளவு வருஷத்தில், ஒரு நாள் கூட பாங்க் அழைச்சுட்டு போனது கிடையாது'' என்று விசனப்பட்டாள்.

பாஸ்புக்கை பார்த்தபோது தேசியமயமாக்கப்பட்ட அந்த வங்கிக் கணக்கில், கிட்டத்தட்ட இருபது லட்சம் ரூபாய்க்கு மேல் தொகை இருப்பில் இருந்தது.

இன்னொன்று அவருடைய பென்ஷன் பாஸ் புக். அதிலும் அஞ்சு லட்சம் ரூபாய் இருப்பு இருந்தது.

மாமா பள்ளிக்கூட வாத்தியாராக இருந்தும், ஒரு சேமிப்புக் கணக்கு துவங்கும் போது, நாமினியாக மனைவி பெயர் மட்டுமல்ல; ஒரே பையன் பெயரையும் ஏன் போடவில்லை என்பது புரியாத புதிராக இருந்தது. அது ஜாயின்ட் அக்கவுண்டாக இருந்தாலும் பணம் எடுக்கலாம்; மனுஷன் அதையும் செய்யலை.

'அவர் கணக்கிலிருந்து பணம் எடுப்பது அவ்வளவு எளிதான வேலை கிடையாது அக்கா. இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ,நோட்டரி பப்ளிக்கிட்ட அட்டேஸ்டேஷன்... இப்படி ஏகப்பட்ட டாக்குமெண்ட் வாங்கணும் . அதற்கெல்லாம் அலையணும்; அரசாங்க வேலைகள் அவ்வளவு சீக்கிரம் நடக்காது. அலைய விடுவாங்க?''

'பென்ஷன் ஆபீஸில் ஃபேமிலி பென்ஷன் வாங்கணும்.அரியர்ஸ் வாங்கணும்..''

'இங்கே இருக்குறவங்கதான் இதெல்லாம் செய்ய முடியும்; நான் எப்படி அக்கா. சென்னையிலிருந்து வரமுடியும்?''

'உன் மச்சினர் பையன் கிராம நிர்வாக அலுவலர்தானே? அவன்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணலாமே..'' என்றேன்.

என் கண்ணெதிரே அவனுக்கு ஃபோன் செய்தாள். எதிர் முனையில் அவன் மறுத்திருக்க வேண்டும்.

அழுது கொண்டே, 'யாரும் என் பிரச்னையைக் காது கொடுத்து கேட்கக்கூட விரும்பவில்லை.சொந்தங்கள் சுயரூபம் இப்போ தெரிஞ்சு போச்சு. நீ படிச்சவன். விவரம் தெரிஞ்சவன்; உத்யோகத்தில் வாய்ஸ் இருக்கு. கொஞ்சம் மெனக்கிட்டு எனக்கு உதவி செய்'' என்று மீண்டும் அழுதுகொண்டே சொன்னாள். எனக்கு இரக்கம் பிறந்தது. அக்காவை பார்த்தால் பாவமாகத் தான் இருந்தது .

மேலும் ஒரு வாரம் லீவ் எக்ஸ்டெண்ட் பண்ணிவிட்டு, வங்கியில் கேட்ட போது, 'இறந்தவரின் பணம் இந்தப் பிராஞ்சில் 7.5 லட்சம் ரூபாய் வரைக்கும் தான் சாங்சன் செய்யமுடியும்.;ஆனால் அக்கவுன்ட்டில் கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் இருக்கு; நாங்க கிளைம் சாங்சன் பண்ண முடியாது. நீங்க மண்டல அலுவலகம் கும்பகோணம் போய்த் தான் பார்க்கணும்'' என்றார்! அந்த வங்கி மேலாளர்.

மறுநாள் தாலுகா ஆபிஸ் சென்று கேட்டபோது, 'நீங்க நினைக்கிற மாதிரி உடனடியாக இந்த காரியம் நடக்காது'' என்று சொன்னதும் நான் புரிந்து கொண்டேன்.

அந்த செக்சன் கிளார்க்கை, 'வாங்க கேன்டீன் போய் டீ சாப்பிடலாம்'' என்று அழைத்துப் போய் பேச வேண்டிய விதத்தில் பேசியவுடன், 'இரண்டு நாள் கழிச்சு வாங்க .இப்ப எல்லாம் ஆன்லைன்தான். நான் எல்லாத்தையும் ரெடி பண்ணி வைக்கிறேன்'' என்று முக மலர்ச்சியுடன் சொல்லி அனுப்பி வைத்தார்.

இதனிடையில் மாமா காரியத்துக்கு வந்த கசின், 'தனக்கு அரசு பேருந்தில் பயணம் செய்த போது நடந்த விபத்துக்கு நஷ்டஈடு கிடைத்தது. அதே மாதிரி மாமா விபத்தில் இறந்ததால், மோதிய காரின் ஓனர்கிட்ட இருந்து நஷ்ட ஈடு பெறலாம்'' என்றான்.

அந்த வக்கீல் அட்ரஸ் கொடுத்து பேச சொல்லியிருந்தான் .

ஆரம்ப காலத்தில் கற்றுக் கொண்ட வேதம், மாமாவின் பணி ஓய்வுக்குப் பிறகு கை கொடுத்தது. சொந்த கிராமத்தைவிட்டு இங்கே குடியேறி கிட்டத்தட்ட 10 வருடம் நல்ல வருமானம் வைதீகத்தின் மூலம். கொடுத்ததை வாங்கிக் கொள்வார்; இவ்வளவு வேண்டும் என்று நிர்பந்திக்க மாட்டார். ஆனால் அதே சமயம் அம்மாவாசை தர்ப்பணம் மந்திரத்தையோ, திவசம்போது அல்லது கல்யாணத்தின் போது சொல்லவேண்டிய மந்திரங்களை யாராவது சரியாக உச்சரிக்கவில்லை என்றோ, 'ஆபீஸ் போகணும் சீக்கிரம் மந்திரத்தை சொல்லும்' என்று அவசரப்படுத்தினால், 'அரங்கேற்றம்' படத்தில் வரும் சுப்பையா மாதிரி கோபம் வந்து விடும். 'என்னை அடுத்தத் தடவை கூப்பிடாதே!'' என்று கோபமாகப் போய் விடுவார் .

சுற்று வட்டார பகுதி மக்கள் எல்லோருக்கும், நல்லதுக்கும் கெட்டதுக்கும் இவர்தான் 'வைதீக வாத்தியார்' என்கிற நிலைமை.

சொந்தமாக வீடு வாங்கிக்கொண்டு, பாங்க் பேலன்ஸ் என நிம்மதியான வாழ்க்கை. பையன் சாமர்த்தியம் கிடையாது. எட்டாம் வகுப்புக்கு பிறகு படிப்பு ஏறவில்லை. அக்கா ஒரு அப்பாவி. சுத்தமா படிப்பறிவு கிடையாது.

அன்று கொராடசேரி பக்கம் உறவினர் வீட்டுக்கு, திவசம் செய்து விட்டு, பஸ் ஸ்டாண்ட் வரும் வழியில், ஒரு அம்பாசிடர் கார் ,இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நல்ல வேளை கார் நம்பர், டிரைவரை கிராம மக்கள் பிடித்து, அதே காரில் திருவாரூரில் உள்ள மருத்துவ

மனைக்கு அழைத்துப் போனபோது தான் தெரிந்தது அவருக்கு மூளைச் சாவு என்று!

தஞ்சாவூரில் உள்ள அந்த வக்கீலிடம் பேசும்போது, 'நிச்சயமாக இழப்பீடு இருபது லட்சம் வாங்கிடலாம். சார் இது மாதிரி வழக்குகளில் நான் எக்ஸ்பெர்ட் சார். நீங்க ,நான் சொன்ன பேப்பர்களைக் கலெக்ட் பண்ணிக்கிட்டு , உங்க அக்காவையும் நேரே அழைச்சிட்டு வாங்க? வாங்கிக் கொடுக்கிற காப்பீட்டுத் தொகையில் பத்து பெர்சென்ட ஃபீஸ் தரணும். ஒரு மாதத்துக்குள் வழக்கை முடித்து விடுவேன்'' என்றார்.

வக்கீலிடம் பேசியதை வீட்டுக்கு வந்து அக்காவிடம் சொன்னேன்.

'இதெல்லாம் நடக்கிற காரியமா? எப்படியும் அப்படி இப்படின்னு ஒரு வருஷம் ஆகிடுவாங்க. கார் உரிமையாளர் வக்கீல் மூலம் பதில் வரணும் . அப்புறம் வாய்தா ,வாய்தான்னு அலைய விடுவாங்க. விபத்து நடந்தபோது பார்த்த சாட்சி இரண்டு பேரும் வந்து சாட்சி சொல்லணும் . பிறகு ஜட்ஜ் உன்னைக் கூண்டில் ஏற்றி நடந்ததைச் சொல்ல சொல்வார். நீயோ படிக்காததால் சூதனமா நடக்கணும். பயத்திலே உளரக் கூடாது. அப்புறம் தான் பணம் கைக்கு வரும்'' என்றேன்.

அக்காவோ, 'பரவாயில்லை, பணம் கொடுத்துடலாம்'' என்று சம்மதம் சொல்லவே. அந்த வேலைக்கான முயற்சிகளை ஆரம்பிக்கச் சொன்னாள்.

அடுத்த சில நாள்களில், சான்றிதழ்களைப் பெற்று நோட்டரி பப்ளிக் அட்டேஸ்டே சன் வாங்கப்பட்டன.

ஏற்கெனவே போலீஸ் தரப்பில் விவரத்தைப் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலம் எல்லாவற்றையும் சேகரித்து முதல் தகவல் அறிக்கையும் வாங்கப்பட்டது.

இன்னொரு நாள் ஏற்கெனவே வங்கியின் கிளை அலுவலகத்தில், சொன்னபடி அக்காவையும் அழைத்துக் கொண்டு கும்பகோணம் மண்டல அலுவலகம் போனபோது அங்கு என்னுடன் படித்த மணி இருந்தது செளகரியமாகப் போனது. எல்லாம் உதவிகளும் செய்து கொடுத்தான் .

தாலுகா ஆபீஸில் சான்றிதழ்களை வாங்கித் தயாராக வைத்து இருந்ததால், கிளை அலுவலத்தில் அளித்த கடிதத்தின்பேரில் செக் போட்டு கொடுத்தனர்.

வட்டியுடன் சேர்த்து இருபத்தைந்து லட்சம் ரூபாய் கிடைத்ததை வீட்டின் எதிரில் உள்ள தபால் அலுவலகத்தில் வைப்புத் தொகையாக அக்கா பேரில் முதலீடாகப் போட்டுவிட்டு நாமினியாக அவள் பையன் பெயரை ரெஜிஸ்டர் செய்து பாஸ் புக்கை அவளிடம் கொடுத்தேன்.

ஃபேமிலி பென்ஷன் வாங்க தாமதமானது .அன்று .

பென்ஷன் செக்ஷனிலிருந்து, 'சார் வந்து அக்காவை அழைச்சிட்டு வாங்க?'' என்ற தகவல் கிடைக்கவும் அரியர்ஸ், அடுத்த மாதம் முதல் ஃபேமிலி பென்ஷன் ஆர்டர் கிடைத்தது. பென்ஷன் அரியர்ஸ் அஞ்சு லட்சம் ரூபாயையும் தபால் அலுவலகத்திலேயே முதலீடும் செய்தேன்.

'ஃபேமிலி பென்ஷன் பணத்தை மாதா மாதம் 5ஆம் தேதி வங்கிக்கு வந்து 'வித்டிராவல் ஃபார்ம்' கொடுத்து, பணத்தை வாங்கிச் செலவுக்குப் பயன்படுத்திக்கோ?'' என்று அறிவுத்தினேன்.

தஞ்சாவூர் போய் அந்த வக்கீலை பார்த்து அவர் கேட்ட எல்லா பேபர்களையும் கொடுத்துவிட்டு, அக்காவுடன் திருவாரூர் வந்தவுடன்,அக்காவுக்கு ரொம்பச் சந்தோஷம்.

'அரியர்ஸ், ஃபேமிலி பென்ஷன், வக்கீல் விஷயம் இவ்வளவு சீக்கிரம் முடியும் என எதிர்பார்க்கலை. ராகவா ரொம்ப தேங்க்ஸ்'' என்றாள் .

ஒரே வாரத்தில் இவ்வளவு வேலையும் நடந்ததை எண்ணி நானும் ஆச்சரியப்பட்டேன். அன்று இரவே சென்னைக்குப் பயணமானேன்.

நான் ஒரு வாரத்தில் அங்கு இருந்தபோது,ஒரு நாள் கேசவமூர்த்தி வயது ஐம்பது இருக்கும். மிகவும் ஸ்வாதீனமாக வீடு உள்ளே ஹால் வரை வந்து, 'மாமி காபி கொடுங்க?''என்று கேட்டு வாங்கிக் குடித்து விட்டுப் பேசிக்கொண்டு இருந்தார்.

அக்கா என்னிடம் அறிமுகப்படுத்தும் போது , 'இவர் நாங்க இந்த ஊருக்கு வந்தபோது தங்க வீடு கொடுத்தவர். அவர் வீட்டில் இரண்டு வருஷம் இருந்தோம். அப்புறமா இந்த வீடு வாங்கி வந்தோம். ரொம்ப நல்லவர் அவர் ஒரு பிரைவேட் நிதி கம்பெனிக்கு டெபாசிட் கலெக்ஷன் ஏஜென்டாக இருக்கார். மாமா உயிரோடு இருக்கும்போதே அடிக்கடி வந்து போவார்'' என்று சொல்லிவிட்டு, 'இவன் மூலம் தான் எல்லாம் நடந்தது'' என்று என்னைப் பற்றியும் சொன்னாள்.

அவர் சென்ற பிறகு, ' நீ ஏதும் அது மாதிரி செஞ்சுடாதே? தபால் அலுவலகம் சேமிப்பில் இருப்பது தான் என்னிக்கும் பாதுகாப்பு. இது மாதிரி பிரைவேட் நிதி நிறுவனம் அதிக வட்டி ஒரு வருஷம் கொடுப்பான் . சீட்டு கம்பெனி திவாலாகி விடும். இல்லாட்டி ஊரை விட்டு ஓடிடுவான். வேண்டாம் விஷ பரிட்சை?'' என்று எச்சரித்து விட்டுப் புறப்பட்டேன்.

'சரி'' என்று அக்காவும் தலையாட்டினாள்.

மூன்று மாதம் கழித்து தஞ்சையில் இருந்து, 'சார் கேஸ் நான் ஃபைல் பண்ணிட்டேன். இனி பதில் வந்த பிறகு முடிச்சுடலாம்'' என்ற நம்பிக்கை தரும் விதத்தில் பதில் அளித்தார்.

'எதிர்பார்ப்பு மாதிரி எது நடக்கிறது? டிபென்ஸ் வக்கீல் பதில் கொடுக்கவே இல்லை. அதற்குள் ஆறு மாதம் ஆகிவிட்டது.''

அலுவலக வேலையாக, திருவாரூர் போயிருந்த நான் அக்காவையும் அழைத்துக்கொண்டு, தஞ்சாவூரில் உள்ள அந்த எதிர் வக்கீலை நேரில் பார்க்க, இரவு 7 மணிக்கு தெற்கு வீதி சென்று பார்த்தபோதுஅவர் டேபிளில் மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமியின் ஃபோட்டோ இருந்தது. அதற்கு பூ போட்டு ஊதுபத்தியும் காட்டி விட்டு கும்பிட்டபின் என்னிடம் பேச ஆரம்பித்தார்.

என் வாய் சும்மா இருக்காமால், 'நீங்க இந்தப் போட்டோவை கும்பிட்டு வேலை தொடங்கிறீங்க நீங்க மன்னார்குடியா?'' என்றதும், 'ஆமாம் சார்'' என்றார்.

'அங்கு யாரிடம் நீங்கள் ஜூனியராக பிராக்டீஸ் செய்ய ஆரம்பித்தீர்கள்?'' என்ற கேள்விக்கு, 'மூன்றாம் தெரு முத்தையா வக்கீல்கிட்ட தான்.ஆனா அவரை விட அவர்கிட்ட இருந்த குமாஸ்தா சீனு சார் தான், எனக்கு நிறையக் கத்து கொடுத்தார். இன்னிக்கு இப்படிபட்ட நிலைமைக்குக் காரணமே அவர்தான்'' என்று தன் பர்ஸில் இருந்து போட்டோவை காட்டினார்

'சார் சார் அது என் அப்பா சார்'' என்றதும் மிகவும் சந்தோஷப்பட்டு, 'அவருக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கேன்.'' என்றார் வக்கீல்.

'நான் என்ன செய்யணும் ?''

அக்காவின் நிலையைப் பற்றியும் கவுன்ட்டர் வராதது பற்றிச் சொன்னதும் ,எந்த மறுப்பும் சொல்லாமல் அதே இருபது லட்ச ரூபாய் இழப்பீடுக்குச் சம்மதம் தெரிவித்த காப்பியை என்னிடம் கொடுத்து, 'உங்க வக்கீல்கிட்ட கொடுங்க?'' என்றார்.

அவருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தேன் .

அடுத்த மாதமே வழக்கு விசாரணைக்கு வந்தது. வெளியில் லாட்ஜ் எடுத்துத் தங்கினால் கூடுதல் செலவாகும் என்பதால், என் ஆபிஸ் கெஸ்ட் ஹவுஸை பயன்படுத்திக்கொண்டேன்.

குறுக்கு விசாரணையின்போது அக்காவுக்கு ரிகர்சல் எடுத்து, 'எப்படிப் பதில் சொல்ல வேண்டும்' என்று சொல்லிக்கொடுத்தேன்.

சாட்சிகள் இரண்டுபேரும் சாட்சி சொன்ன பிறகு, அக்காவையையும் கூண்டில் ஏற்றி , குறுக்கு விசாரணை நடத்தவும், ஒரு வழியாக விபத்து இழப்பீடு இருபது லட்சம் ரூபாய் கிடைத்ததும், வக்கீலுக்குக் கொடுக்க வேண்டிய கமிஷன் கொடுத்துவிட்டு, ஊர் வந்து அந்தக் காசோலையை தபால் அலுவலகத்தில் முதலீடாகப் போட்டு ஊர் வந்தேன்.

'இவ்வளவு நாள் எனக்காகச் சிரமப்பட்டு உதவி செஞ்சுருக்கே? காசு கொடுத்தா வாங்கமாட்டே! குழந்தைகளுக்கு டிரஸ் வாங்கிக் கொடு'' என்று ஐந்தாயிம் ரூபாய் பணத்தைக் கொடுத்தபோது மறுத்தேன். ஆனாலும், 'இது குழந்தைகளுக்கு..'' என்று கூறி கட்டாயப்படுத்திக் கொடுத்து விட்டார்.

இதெல்லாம் முடிந்து மூன்று மாதம் ஆகியிருக்கும் அன்று மாமா பையனிடமிருந்து

ஃபோன் வரவும் வருஷாப்திகத்துக்கு வர சொல்கிறான் என்று நினைத்த எனக்கு , பேசும்போது அவன் குரலில் ஒரு பதட்டம் தெரிந்தது

அழுதுகொண்டே, 'மாமா நாங்க மோசம் போயிட்டோம்.. கேசவமூர்த்தி மாமா பேச்சை கேட்டு , நீங்க போன மறுநாளே அவங்க சிட்

ஃபண்டில் போட்டால் 15 பர்சென்ட். வட்டி வரும். இந்த ஊரில் நிறைய பேர்கள் போட்டு இருக்கிறார்கள். நல்ல நாணயமான சிட் கம்பனி .

ரொம்ப வருஷமா இருக்கு. நான் ஒரு கோடி டெபாசிட் பண்ணி இருக்கேன்னு மூளை சலவை செய்து தபால் அலுவலகத்தில் இருக்கிற எல்லா பணத்தையும் எடுத்து, அந்த கம்பனியில் போட்டு பதினைந்து சதவீதம் வட்டி மாத மாதாம் வாங்கிக் கொடுத்தார்.

அதில் அம்மாவுக்கு நம்பிக்கை பிறந்தது. திடீர்னு இப்ப அது திவாலாகி எல்லாப் பணமும் போச்சு. அம்மாவுக்கு அதிர்ச்சி தாங்க முடியாம ,ஸ்ட்ரோக் வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருக்கு மாமா. எனக்குப் பயமா இருக்கு..'' என்றான்.

எவ்வளவு அலைச்சல் ! எவ்வளவு மெனக்கெடல் ?

ஒவ்வொரு முறையும் எச்சரிக்கை கொடுத்தும், கேசவமுர்த்தியின் பேச்சை கேட்டு எல்லாப் பணத்தையும் இழந்துதவிக்கும் அக்காவின் செயலைக்கண்டு ஆத்திரப்படுவதா? இல்லை அக்கா நிலைமை இப்படி ஆச்சே? என்று ஆதங்கபடுவதா? எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிப் போய் விட்டதே!

'தவறான அனுதாபம் தீங்கு விளைவிக்கும்' என்று புலிக்கு நோயைக் குணமாக்கிய விஷத்தைப் போக்கும் வைத்தியர் உடனே அதற்கே உணவாவது நிச்சயம், அதைப் போன்றதே நன்றி அறியாத அற்பர்களுக்கு நாம் செய்யும் உதவியும்.

அற்புதமான வேலைப்பாடு அமைந்த மண்கலத்தில் பொருட்களைக் கொண்டு போய்க் கல்லின் மேல் வேகமாக வைத்தால், கல் என்ன செய்யும்? அது கடினமானது; எனவே மண்கலத்தைச் சுக்குநூறாக அது உடைக்கத் தானே செய்யும்! அது அதன் இயல்பு.

கல்லின் மேல் எறியப்பட்ட பானையைப் போல அந்த உதவியும் நம்மையே உடன் அழித்து விடும், என்று ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் தமிழ் வகுப்பில் அவ்வையார் எழுதிய மூதுரை பாடல்கள் பற்றி விளக்கம் சொன்னது இந்தச் சம்பவத்துக்கு ஒத்துப் போனதை என்னால் உணர முடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com