
இடைவெளி குறைவு - சம்யுக்தா
தமிழில் 'களரி' படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு, தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' படத்தின் மூலம் அதிக அளவில் கவனம் பெற்றார் சம்யுக்தா. அதன்பிறகு, 2023- ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'விருபாக்ஷô' படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றார்.
தற்போது பாலிவுட்டில் கால் பதித்து, 'மஹாராக்னி' படத்தில் நடிக்க இருக்கிறார். சரண்தேஜ் இயக்குகிறார். இதில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவாவும், கஜோலும் இணைந்து நடிக்கின்றனர். நசுருதீன் ஷா, ஜிஷு சென் குப்தா, சாயா கதம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இதுகுறித்து சம்யுக்தா பே, 'நான் கேரளாவைச் சேர்ந்தவள்தான். ஆனால் தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கிறேன். மொழி தடைகள் எல்லாம் விலகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். இன்றைய சூழலில் பார்வையாளர்கள் மொழிகளைக் கடந்து படங்களைப் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
தெலுங்கு நடிகர்கள் ஹிந்தியிலும், ஹிந்தி நடிகர்கள் மற்ற மொழிகளிலும் நடிக்கின்றனர். பாலிவுட்டுக்கு வரும்போது உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். அங்கு ஆரோக்கியமான போட்டி அதிகம் இருக்கிறது. ஹிந்தி சினிமாவுக்கும் தென்னிந்திய சினிமாவுக்குமான இடைவெளி குறைந்து வருகிறது. 'மஹாராக்னி' படத்தில் கஜோலின் தங்கையாக நடிக்கிறேன். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமாக இருக்கும். ஆக்ஷன், பாடல்கள் என இப்படத்தில் அனைத்தும் நன்றாக இருக்கும்' என்று தெரிவித்திருக்கிறார்.
காதலால் ஏமாறாதீர்கள்- ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகையான வலம் வருகிறார். 2018-ஆம் ஆண்டு 'டகாத்' திரைப்படம் மூலமாக ஆரம்பித்த இவரது பாலிவுட் திரையுலகப் பயணம், இன்று பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஜான்வி கபூர், சாதி குறித்து அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையேயான விவாதங்களையும், முரண்களையும் அறிந்து கொள்வதில் ஆர்வமிருப்பதாகவும், வரலாற்றை அறிந்து கொள்வதில் தனக்கு ஆர்வம் அதிகமிருப்பதாகவும் கூறியது பேசு பொருளாகியது.
இந்நிலையில் இன்றைய இளம் தலைமுறையினர் எந்தவித கமிட்மென்ட்டும் இல்லாமல் குறுகிய காலத்துக்கு மட்டுமே காதல் செய்யும் விஷயம் பற்றிப் பேசியிருக்கும் ஜான்வி கபூர், 'இது மிகவும் முட்டாள்தனமான உறவுமுறை. ஒருவருடன் நீங்கள் பழகினால் நேர்மையாக, அர்ப்பணிப்புடன் பழகுங்கள்.
அதை விட்டுவிட்டு அவர்களுடன் பழகி, அவர்களைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்காதீர்கள். ஒரு உறவில் குறுகிய காலம்தான் பழகப்போகிறோம் என்று நன்கு தெரிந்து கொண்ட பிறகும், ஒருவருடன் பழகி எல்லாம் முடிந்ததும் பிடிக்கவில்லை என்று ஓடிவிடுவது முட்டாள் தனமான உறவுமுறை இல்லையா?
எந்தவொரு உறவையும் கவனத்துடன் சரியாக எல்லைகள் வகுத்துப் பழகுங்கள். குறிப்பாக, பெண்களே இது போன்ற உறவுகளில் ஏமாந்துவிடாதீர்கள். அப்படி உங்களை ஏமாற்றுபவர்களாக இருந்தால் உடனே அவர்களை உறவிலிருந்து உதைத்துத் தள்ளிவிட்டு விடுங்கள். அவர்களுடனான பழக்கத்தை நிறுத்திவிடுங்கள். நானும் இதில் ஏமார்ந்து உடைந்து போயிருந்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக என்னை ஏமாற்றிய அதே நபரே, மீண்டும் என்னிடம் வந்து உடைந்த என் மனதைச் சரிசெய்துவிட்டார்' என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.
செல்லாதது ஏன்? - டாப்ஸி
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற திருமணத்தில், உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக மணமக்களை ஆசிர்வதிக்கும் 'சுப் ஆசிர்வாத்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து வாழ்த்தினார். இங்கிலாந்து முன்னாள் பிரதமர்கள் டோனி பிளேயர், பாரிஸ் ஜான்சன் உள்ளிட்டோரும், பாலிவுட்டை சேர்ந்த ஆலியா பட், ரன்பீர் கபூர், மாதுரி தீட்ஷித், நடிகர் ஷாருக்கான், கௌரி கான், சுஹானாகான், நடிகைகள் ராஷ்மிகா, ஐஸ்வர்யா ராய், ஜான்வி கபூர், விக்கி கௌஷல், கேத்ரீனா கைஃப், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, ஹேமமாலினி, பவன் கல்யான், சிராக் பஸ்வான், சந்திரபாபு நாயுடு, அனன்யா பாண்டே உளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை டாப்ஸியிடம் திருமண விழாவுக்குச் செல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த டாப்ஸி, 'எனக்கு அவர்களைத் தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர்கள் குடும்பத்தினருடன் எனக்கு தொடர்பு இல்லை. திருமணம் என்பது எத்தனையோ உறவுகளோடு கூடியது. விருந்தளிக்கும் குடும்பத்துக்கும், விருந்தினர்களின் குடும்பத்துக்கும் இடையே ஏதோ ஒருவிதமான உறவு பந்தம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட திருமணங்களுக்கு மட்டுமே நான் செல்வேன்' என்று கூறியிருக்கிறார். டாப்ஸியின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.