
'தாங்கள் எழுதி அனுப்பியிருந்த 'சரித்திரஹீன்' (ஒழுக்கம் குன்றியவள்(ன்) என்ற நவீனத்தைப் படித்துப் பார்த்தோம். ஆரோக்கியமான சமூக ஒழுக்கத்துக்கு ஏற்ற மாதிரி உங்கள் கதை இல்லை. சமூக ஒழுக்க முறைகளுக்கு ஊறுவிளைவிக்கும் கருத்துகளையும் கதாபாத்திரங்களையும் கொண்டிருப்பதாகப்படுவதால், உங்கள் நவீனத்தை எங்கள் பத்திரிகையில் தொடராக வெளியிடுவதற்கு இல்லை. எனவே, தாங்கள் அனுப்பிய 'சரித்திரஹீன்' நவீனத்தைத் திருப்பியனுப்பி உள்ளோம். மன்னிக்கவும்!'
இவ்விதமாக பிரபல பத்திரிகை ஆசிரியர் தனது குறிப்புடன் அவருக்கு அந்தக் கையெழுத்துப் பிரதியாக எழுதி அனுப்பியிருந்த கதை திரும்பி வந்தது.
அவருக்கு என்றால் யாருக்கு? இந்திய இலக்கிய வானில் நாவல் துறையில் கொடிகட்டிப் பறந்தவரும் பூர்ணச் சந்திரனாகத் திகழந்தவருமான பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான சரத்சந்திரர் என்பவருக்குதான்.
வங்க இலக்கியத்தில் முடிசூடா மன்னராக விளங்கிய மாபெரும் எழுத்தாளர் சரத்சந்திரரருக்கே இந்த நிலை என்றால், ஆரம்ப எழுத்தாளர்களின் நிலை என்னவாகும்.
கதையை அனுப்பச் சொல்லி கேட்ட பத்திரிகை மேற்கு வங்கத்தில் புகழ்வாய்ந்த 'பாரத் வர்ஷ்' என்ற பத்திரிகையாகும்.
சரத் சந்திரர் திரும்பிவந்த நவீனத்தை மௌனமாகப் பெற்றுக் கொண்டார். இடிந்துப் போகவில்லை. இரவும் பகலுமாக எண்ணற்ற நாள்கள் உழைத்து 'சரித்திரஹீன்' என்ற அந்தக் கதையை உருவாக்கியிருந்தார். அந்தக் கதை தொடராக வெளிவருவதைத் தவிர்த்தார். முழுக் கதையாக ஒரே நூலாகப் புத்தக வடிவில் கொடுக்க முனைந்தார். மிகுந்த பொருள்செலவில் அந்த நவீனத்தை அழகிய நூலாக்கி வெளியிட்டார். அந்த நூல் விற்பனையில் சாதனையைப் படைத்ததோடு, எல்லோராலும் பாராட்டப் பெற்றது.
அந்த நவீனம் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்தது. அச்சடித்தப் பிரதிகள் தீர்ந்துப் போகவே மறு அச்சுக்கும் வழிகாட்டியது.
சரித்திரம் படைத்த 'சரித்திரஹீன்' நவீனம் வாசகர்களின் கைகளை அடைந்தவுடன் சரத் சந்திரருக்கு ஒரு கடிதம் வந்தது. வாசகர் கடிதம். அதுவும் ஒரு இளம்பெண் எழுதிய கடிதம். அதில், 'ஐயா. தங்களது அற்புதமான படைப்பான நவீனத்தை ஆர்வத்துடன் படித்தேன். அது ஒருவகையில் என்னைக் காப்பாற்றியதாகவே கருகிறேன். அந்த நூலைப் படித்ததன் விளைவாக, நான் நூலிழையில் தப்பினேன். விஷயம் இதுதான். நான் ஒருவனைக் காதலித்தேன். அவனையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன்.
யாரிடமும் சொல்லாமல் அவருடன் எங்காவது தொலைதூரம் ஓடிப் போகலாம் என்று திட்டமிட்டேன். என் இளமைவேகமும், பெற்றோரின் மறுப்பும்தான் இதற்கு காரணம். எனக்கு பெற்றோர் உரிய காலத்தில் திருமணம் வைக்க நல்ல சூழ்நிலையும் இல்லை.
நான் என் காதலருடன் ஓடிப் போவதாக இருந்த அன்று இரவு நடுநிசிக்கு மேல் ஐந்து முறை விசில் சமிக்ஞை கொடுப்பதாகக் கூறியிருந்தார். எனவே அதுவரை விழித்திருக்க வேண்டுமே? என்ன செய்வது என்று யோசித்தேன்.
அன்றைய நாளுக்கு சில நாள்களுக்கு முன் தாங்கள் எழுதிய 'சரித்திரஹீன்' என்ற நவீனத்தை ஒரு கடையில் வாங்கியிருந்தேன். அது மேஜையின் மீது இருந்தது. நேரத்தைப் போக்க, அந்த நாவலை எடுத்தேன். படிக்கப் படிக்க நான் என்னையே மறந்தேன். மிகுந்த விருப்பத்தோடும் ஆர்வத்தோடும் ஒரே மூச்சில் படித்துவிட்டேன். அதில் வரும் கதாநாயகனின் துயர முடிவு என் மனதை உலுக்கியது. ஒரு திடமான முடிவுக்கு வந்தேன். என் காதலரின் விசில் சமிக்ஞை கிடைத்தாலும், அவருடன் ஓடிப் போவதில்லை என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டேன்.
மணியைப் பார்த்தேன். விடியல் நெருங்கிக் கொண்டிருந்தது. நடுநிசிக்கு மேல் அவர் வந்து விசில் சமிக்ஞை செய்திருக்கக் கூடும். நாவல் படிக்கும் ஆர்வத்தில் கவனிக்காமல் இருந்துவிட்டேன் போலிருக்கிறது. அவர் சமிக்ஞை செய்து பார்த்துவிட்டு அலுத்துப் போய்த் திரும்பிப் போயிருக்க வேண்டும் என்று தோன்றியது. என் பெற்றோர் செய்த புண்ணியம். அறியாமையில் தவறு செய்ய இருந்தேன். நல்ல வேளை. உங்கள் நவீனம் என்பெற்றோருக்குத் துரோகம் செய்யாமல் காத்தது. அது என்னைக் காப்பாற்றியது. உங்களுக்கு என் நன்றி. ஒருவேளை அவரும் இந்த நாவலைப் படித்திருந்தால் இதே முடிவுக்கு வந்ததும் இருக்கலாம் அல்லவா?' என்று கடிதத்தில் எழுதிருந்தது.
இதுகுறித்து ஒரு கூட்டத்தில் சரத்சந்திரர் பேசியதாவது:
'சரித்திரஹீன் பிரபல பத்திரிகையில் தொடராக வெளிவர ஆசைப்பட்டேன். நிறைவேறவில்லை. ஆனால் என் பிராயசை வீண் போகவில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும். என் நூல் ஒருவர் வாழ்க்கையையாவது ஒழுக்கம் தவறாமல் காப்பாற்றியதே என்று மகிழ்ந்தேன். எனக்குத் தெரிந்தவரையில் உலகில் குறைநிறை இல்லாதவன், அப்பழுக்கற்ற வபாழ்க்கை வாழ்பவன் ஒருவன்கூட கிடையாது.
இதிகாச, புராணக் கதைகளில் இருந்து எத்தனையோ உதாரணங்களை எடுத்துக் காட்டலாம். இலக்கிய உலகில் எனக்கு ஏராளமான எதிரிகள் உண்டு. சமுதாய நலன்களுக்கு தீமை விளைவிக்கும் விஷயங்களில் நான் என்னுடைய படைப்பிலக்கியங்களில் அதிகமாகப் படம் பிடித்துக் காட்டுகிறேன் என்று என்னை எதிர்ப்போரின் கருத்தாகவும் கணிப்பாகவும் இருக்கிறது.
என் சொந்த வாழ்க்கை உயர்வு தாழ்வாகவும் இன்பமும் துன்பமும் கலந்தும், கஷ்ட நஷ்டங்களோடும் எப்படி இருந்தாலும் அதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லை. ஆனால், பொதுவாக, சமுதாய வாழ்க்கை சிதறக் கூடாது. அவரவர் அவரவர் ஒழுக்கத்தால்தான் உயர வேண்டும். சமுதாயத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஏராளமான மூட நம்பிக்கைகளுக்கு இலக்கு ஆகாமல் நல்ல சமுதாயத்தைப் படைத்து மேன்மையடைய வேண்டும்.
நல்லவே எண்ணல் வேண்டும். தெளிந்த நல்லறிவு வேண்டும். இவையே என் நோக்கம். என் நவீனத்தைப் படித்து ஒரு இளம்பெண் நல்ல முடிவு எடுத்ததுபோல், எனது மற்ற நவீனங்களையும் படித்து நல்லதோர் முடிவு எடுத்திருந்தாலும் அதுவே என் எழுத்தின் பயன். என் உழைப்பு வீண் போகவில்லை. எனக்கு வெற்றி கிடைத்துவிட்டதாகவே மகிழ்வேன்' என்றார் சரத் சந்திரர்.
பினஅனர், சரத்சந்திரரின் 'சரித்திரஹீன்' அருமையான நாடகமாக உருவம் பெற்று, தொலைக்காட்சிகளிலும் தொடராக வந்து எண்ணற்ற மக்களின் மனங்களை ஈர்த்தது என்பது வரலாறு.
-டி.எம்.இரத்தினவேல், சத்தியமங்கலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.