சாதனை சிறுவன்
சாதனை சிறுவன்

சாதனை சிறுவன்..!

முயற்சியும் , பயிற்சியும் இருந்தால் வெற்றி எட்டும் தூரத்தில்தான் என்பதை உலகுக்கு உணர்த்தி வருகிறார் ஏழு வயது சிறுவன் எஸ். ஷகீம் ஷேக்.
Published on

முயற்சியும் , பயிற்சியும் இருந்தால் வெற்றி எட்டும் தூரத்தில்தான் என்பதை உலகுக்கு உணர்த்தி வருகிறார் ஏழு வயது சிறுவன் எஸ். ஷகீம் ஷேக்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட களியக்காவிளையைப் பூர்விகமாகக் கொண்ட ஷேக் முகம்மது சபீரா தம்பதியினர் தொழில் நிமித்தமாக நாகர்கோவில் அருகேயுள்ள திட்டுவிளையில் வசிக்கின்றனர். துவரங்காடு கரோல் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் இவர்களது மகன் ஷகீம் ஷேக், ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற 23 ஆவது தேசிய சப் ஜூனியர் வூசு குங்பூ தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார்.

இதுகுறித்து சபீராவுடன் பேசியபோது:

'வூசு குங்பூ தற்காப்புகலை விளையாட்டு வாள்வீச்சு, சிலம்பம், வெறுங்கை தாக்குதல் என 3 பிரிவுகளைக் கொண்டது. எனது கணவர் ஷேக் முகம்மது, வூசு விளையாட்டின் தமிழக அணிக்கான பயிற்சியாளராக உள்ளார். இதனால் ஷகீம் ஷேக் நான்கு வயதில் இருந்தே பயிற்சி பெறுகிறார். ஏற்கெனவே மாவட்ட அளவிலான போட்டிகளில் ஷகீம் ஷேக் 3 தங்கப் பதக்கங்களையும், பல விருதுகளை பெற்றுள்ளார்.

தேசிய சப் ஜூனியர் போட்டிக்கான மாநில அளவில் தகுதி தேர்வில் விளையாடியபோது, முதலிடம் பிடித்தார்.

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற 23 ஆவது தேசிய சப் ஜூனியர் போட்டியில் 7 வயதிலிருந்து 12 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் தனித்திறன் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார். சப் ஜூனியர் போட்டிக்கு வெற்றி இலக்கு அதிகபட்சம் 8 புள்ளிகள் என்ற நிலையில் 7.8 புள்ளிகள் பெற்று சாதித்தது மகிழ்ச்சியாக உள்ளது. மணிப்பூரைச் சேர்ந்த வீரர் 7.7 புள்ளிகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார். ஜூனியர், சீனியர் போட்டிக்கு வெற்றி இலக்கு அதிகபட்சம் 10 புள்ளிகளாகும்.

இந்தச் சாதனைக்காக, ஷகீம் ஷேக் தினமும் காலை 5.30 மணியிலிருந்து காலை 7 மணி வரை தொடர் பயிற்சி மேற்கொண்டு வந்தார். பயிற்சியானது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. விளையாட்டின் மீதான ஆர்வமே ஷகீம் ஷேக்கை சாதிக்க வைத்தது.

இவர் விளையாட்டில் மட்டுமின்றி படிப்பிலும் படுசுட்டியாகவே திகழ்கிறார். சீன நாட்டில் அக்டோபரில் குயான்ஹெவி என்ற இடத்தில் நடைபெற உள்ள சர்வதேச போட்டியில் ஷகீம் ஷேக் பங்கேற்க உள்ளார். இதுதவிர, அக்டோபர் மாதம் நடைபெற உள்ள முதல்வர் கோப்பைக்கான போட்டியிலும் விளையாட உள்ளார்.

தமிழக அணியின் பயிற்சியாளர் என்ற முறையில், ஷேக் முகம்மது ஒவ்வொரு போட்டிகளுக்கும் ஷகீம் ஷேக்கை அழைத்து செல்கிறார்.

எனது மகன் ஷகீம் ஷேக் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்று தருவார் என்று நம்புகிறேன்.

எனது மகள் ஷிபா ஷேக்கும் வூசு விளையாட்டில் ஆர்வம் அதிகம் கொண்டவர். கன்னியாகுமரி மாவட்ட அளவிலான போட்டிகளிலும், கேரள மாநிலத் ஏற்கனவே பாலப்பள்ளத்தில் நடந்த போட்டியில் பங்கேற்று 2 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்'' என்கிறார் சபீரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com