வாரணாசி என்ற காசியில் உள்ள நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சத்திரம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது. இங்கு குறைந்தக் கட்டணத்தில் தமிழர்களுக்கு அறைகள் அளிக்கப்படுகின்றன. இந்த வருவாய் முழுவதும் காசி விசுவநாதர் கோயிலுக்குத் தரப்படுகிறது. மூன்று வேளைகளும் குறைந்த விலையில் தென்னிந்திய உணவும் வழங்கப்படுகிறது. திங்கள்கிழமைகளில் அன்னதானமும் நடைபெறுகிறது.
இதுதவிர சத்திரத்துக்கு அனுப்பப்படும் அஸ்திகள் உரிய முறையில் மரியாதை செய்யப்பட்டு கங்கையில் கரைக்கப்படுகிறது. இதற்காக ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அஸ்தி கரைக்கப்பட்டவுடன் பிரசாதமும் அனுப்புகின்றனர்.
'ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. ஆறடி நிலமே சொந்தமடா..'' என்றார் கண்ணதாசன். ஆனால் இப்போது மின் மயானம் வந்தவுடன் இந்தப் பிரச்னையே இல்லை. ஒரு மண் சட்டிக்குள் உடல் சாம்பலாக அடங்கி விடுகிறது. இறந்தவர்களின் அஸ்தியை புண்ணியத் தலமான வாரணாசி, ராமேசுவரத்தில் கரைக்க வேண்டும் என ஹிந்துக்கள் விரும்புவார்கள்.
சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகம் வசிக்கும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இன்று உலகம் முழுவதும் வணிகத்தைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து
வருகின்றனர். 1800களில் வணிகத்துக்காக மியான்மர் சென்ற இவர்கள் வாரணாசியில் தங்கி, கொல்கத்தா வழியாக வெளிநாடுகள் செல்வர்.
அவ்வாறு தங்கியோர் தமிழக மக்களின் நம்பிக்கையை 150 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றி வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் இருந்து செல்வோர் மிகக் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கும் சத்திரம் எனப்படும் விடுதிகளைக் கட்டி, குறைந்த வாடகைக்கு அளித்துவருகின்றனர். இதில் வரும் வருமானம் முழுவதையும் வாரணாசி விசுவநாதர் கோயிலுக்கும், அன்னபூரணி கோயிலுக்கும் வழங்குகின்றனர்.
கோயில்களுக்குத் தேவையான பூஜைப் பொருள்களை வழங்க, நாட்டுக்கோட்டை செட்டியார்களை வழங்கும்படி அப்போதைய மன்னர்கள் அனுமதித்துள்ளனர். பின்னர், சிறப்பாக நடத்தியதால் நகரத்தார் வசமே பூஜைகளைச் செய்ய ஒப்படைத்துள்ளனர்.
அதன்பின்னர் நான்கு கால பூஜைகளில் மூன்று காலத்துக்குத் தேவையான பொருள்களை நாட்டுக்கோட்டை நகரத்தார்தான் இன்று வரை வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து செல்வோர் தங்கி இளைப்பாறுவதற்காக, "நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்' என்ற பெயரில் வாரணாசியில் உள்ள குதோலியாவில் தங்கும் விடுதி 1863இல் கட்டப்பட்டது. இங்குள்ள 64 அறைகளிலும், பெரிய ஓய்விடங்களிலும் மிகக் குறைந்தக் கட்டணத்தில் தங்கிக் கொள்ளலாம்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், முன்னாள் முதல்வர் காமராஜர் உள்ளிட்டோரும் இங்கு தங்கியுள்ளனர். ஒவ்வொரு திங்கள்கிழமைகளில் அன்னதானமும் நடைபெறுகிறது.
இதுதவிர காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்துக்கு அனுப்பப்படும் அஸ்திகள் உரிய முறையில் மரியாதை செய்யப்பட்டு கங்கையில் கரைக்கப்படுகிறது. இதற்காக ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அஸ்தி கரைக்கப்பட்ட பின் விபூதி, பிரசாதம் அனுப்புகின்றனர்.
இதுதொடர்பாக நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கத் தலைவர் லேனா நாராயணன், செயலர் கதிரேசன் ஆகியோர் கூறியதாவது:
' சத்திரத்தில் இப்போது யார் வேண்டுமானாலாம் குறைந்த கட்டணத்தில் தங்கிக் கொள்ளலாம். பலரும் நவீன வசதிகள், வசதியான அறைகள், குளிர்சாதன வசதி இல்லை என்றனர்.
இதற்காக, சிகரா என்ற இடத்தில் 1894இல் விசுவநாதருக்குத் தேவையான மலர்களைப் பயிரிட நந்தவனம் உருவாக்குவதற்காக 65 ஆயிரம் சதுர அடி நிலம் வாங்கப்பட்டிருந்தது.
ஆக்கிரமிப்புக்குள்ளான அந்த இடத்தை மீட்டு அதில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 10 மாடிகளுடன் 135 நவீன வசதிகள் கொண்ட அறைகளை ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்ட கடந்த ஏப்ரல், 21இல் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, ஸ்பிக் தலைவர் ஏ.சி. முத்தையா, தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் திரையரங்க சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..
2025 அக்டோபர் 31ஆம் தேதி கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இங்குள்ள நந்தவனத்தில் பூக்கும் பூக்கள் தினமும் விசுவநாதர் கோயிலுக்கு அனுப்பப்படுகிறது. கண்டிப்பாக பிற தங்கும் விடுதிகளைவிட எங்கள் விடுதியில் கட்டணம் மிகக் குறைவாக இருக்கும்.
பூஜைப் பொருள்கள். சந்தனம், வாசனைத் தைலம், தேன், பன்னீர், ஊதுவத்தி, சூடம், அத்தர், தேசிச்சீனி, திருநீறு, வில்வம், சவ்வாது, பட்டு, பூமாலை, பால், தயிர்புனுகு, அரிசி உள்ளிட்டவை தினமும் கோயிலுக்கு நகரத்தார் சார்பில் வழங்கப்படுகின்றன.
ஒரு மனிதன் இறந்தபின்பும் அவர்களின் ஆன்மா சாந்தியடையத் தேவையான அஸ்தி கரைப்பதை சேவையாகக் கருதிச் செய்யும் நகரத்தாரின் பணி மிகவும் உன்னதமானது.
அப்போதிருந்து தமிழகத்தில் யாராவது நகரத்தார் இறந்தால் அவர்களின் அஸ்தி வாரணாசிக்கு வந்தடையும். இறந்தவர்களின் உறவினர்கள் வாரணாசிக்கு வரும்போது, அஸ்தி கரைக்கும் வரை அஸ்தியை வைத்திருப்பார்கள். இப்போது தமிழகத்தில் இருந்து யார் இறந்து அஸ்தி அனுப்பினாலும் அதை முறைப்படி பூஜை செய்து கங்கையில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு பல லட்சம் பேர் அஸ்தி அனுப்புகின்றனர். அதைக் கரைத்து அனைவருக்கும் பிரசாதம் அனுப்பப்படுகிறது. எங்கள் முன்னோர்களால் தொடங்கப்பட்ட அஸ்தி கரைக்கும் நிகழ்ச்சி எப்போதும் தொடரும். இது முழுக்க முழுக்க சேவை மட்டுமே.
நகரத்தார் சத்திரங்கள் அலகாபாத், அயோத்தி, கயா, நாசிக், கொல்கத்தா நாராகேஷ்வர், தமிழகத்தின் காரைக்குடி, தேவிபட்டினம், பழனி, சென்னை ஆகிய இடங்களிலும் உள்ளன'' என்றனர் லேனா நாராயணன், கதிரேசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.