

பிரதமர் தேவே கௌடா எதற்காக இப்போது ஸ்விட்சர்லாந்து செல்ல வேண்டும் என்கிற கேள்வியைக் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலர் வெளிப்படையாகவே எழுப்பினர். ஒருபுறம், இன்னும் பல ஆவணங்கள் பெறப்பட வேண்டும் என்றும், இன்னொருபுறம், ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் போஃபர்ஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங் ஒன்றுக்கொன்று முரணாகப் பேசுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஸ்வீடனைச் சேர்ந்த ஏ.பி. போஃபர்ஸ் என்கிற நிறுவனத்திடமிருந்து 1986ஆம் ஆண்டு ஹோவிட்சர் பீரங்கிகளை வாங்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதனடிப்படையில், ரூ.1,437 கோடி மதிப்பில் 410 பீரங்கிகள் போஃபர்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டன. சில முக்கியமான அரசியல்வாதிகள் சார்பாக, பாதுகாப்புத் துறை மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் போஃபர்ஸ் நிறுவனத்திடம் பேரம் பேசினார்கள் என்பது முதல் குற்றச்சாட்டு.
அந்தப் பேரத்தில் ரூ.65 கோடி கமிஷனாக கைமாறியுள்ளதாகப் புகார் எழுந்தது. அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், ஸ்வீடன் பிரதமர் ஓலோஃப் பாமேக்கும் இடையே கையெழுத்தான ஹோவிட்சர் பீரங்கிகள் ஒப்பந்தத்தின்படி இடைத்தரகர்கள் இருக்கக் கூடாது, யாருக்கும் கமிஷன் தரப்படாது என்கிற ஷரத்துக்கள் இணைக்கப்பட்டிருந்தன.
ஜனவரி 1986இல் இரண்டு நாட்டுப் பிரதமர்களும் விமானத்தில் ஒன்றாகப் பயணிக்கும்போது, மேலே குறிப்பிட்ட ஷரத்துக்கள் மீறப்படாமல், கமிஷன் தொகையைப் பங்கிடுவது என்கிற முடிவு எட்டப்பட்டது என்பது, போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக ஸ்வீடன் நாட்டு காவல் துறை நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக, அந்த நாட்டின் காவல் துறை அதிகாரி ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம் தெரிவித்ததில் இருந்து பரபரப்பானது போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல்.
ஸ்வீடனில் உள்ள ஓர் அறக்கட்டளைக்கு, போஃபர்ஸ் பீரங்கித் தொழிற்சாலை அமைந்திருக்கும் பகுதியின் வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் போஃபர்ஸ் நிறுவனம் கமிஷன் தொகையை நன்கொடையாக வழங்கும். அதிலிருந்து வெளியில் தெரியாத வகையில் கமிஷன் தொகை, இந்திய அரசியல்வாதிகளின் வெளிநாட்டு வங்கிக் கணக்கில் போலியான பெயர்களில் போடப்படும்.
எப்படியாவது ஹோவிட்சர் பீரங்கிகளுக்கான ஒப்பந்தத்தை போஃபர்ஸ் பெற வேண்டும் என்பதில் ஸ்வீடன் அரசு குறியாக இருந்தது. அதற்கு ஒரு காரணம் உண்டு. பீரங்கிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக பிரெஞ்சு நிறுவனம் ஒன்றும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அதை முறியடிப்பதற்காக போஃபர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக இருந்த மார்டின் ஆர்ட்போ, ஸ்வீடன் பிரதமர் ஓலோஃப் பாமேயின் உதவியை நாடி இருந்தார். போஃபர்ஸ் பீரங்கி பேரம் குறித்த முழு விவரமும் தெரிந்த ஒரே மனிதர் மார்டின் ஆர்ட்போ மட்டும்தான்.
1986 பிப்ரவரி 28ஆம் தேதி, அதாவது பிரதமர் ராஜீவ் காந்தியுடனான போஃபர்ஸ் ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்ட சில வாரங்களில், ஸ்வீடன் பிரதமர் ஓலோஃப் பாமே, ஸ்டாக்ஹோமில் தனது மனைவியுடன் சினிமா பார்த்துவிட்டு வீட்டுக்குப் பொடி நடையாகத் திரும்பிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி 1991 மே 21ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அப்படிப்பட்ட நிலையில், போஃபர்ஸ் குறித்த ஆதாரப்பூர்வ சாட்சி மார்டின் ஆர்ட்போ மட்டும்தான்.
மார்டின் ஆர்ட்போ 2004இல்தான் காலமானார். விசாரணை அதிகாரியான ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம் அவரை சந்தித்துச் சில உண்மைகளைத் தெரிந்து கொண்டபோது, ஆர்ட்போ உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். எந்த நிலையிலும், எந்தக் காரணத்துக்காகவும் உண்மையை வெளியிட மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார் ஆர்ட்போ என்று தெரிவித்தார் ஸ்டென்.
மார்டின் ஆர்ட்போவின் டைரிக் குறிப்புகளும் தெளிவாக எதையும் வெளிப்படுத்தவில்லை. சில சங்கேத வார்த்தைகள் காணப்படுகின்றன என்றாலும், அவற்றில் இருந்து தெளிவான முடிவுக்கு வர முடியாது. பிரதமர்கள் ராஜீவ் காந்திக்கும், ஓலோஃப் பாமேக்கும் இடையில் நடந்த தனிப்பட்ட பேச்சுவார்த்தை குறித்து தெரிந்து வைத்திருந்த இன்னொரு நபர் ஸ்வீடன் நாட்டின் வெளியுறவுச் செயலர்.
போஃபர்ஸ் ஊழல் என்று இன்று வரை பேசப்படும் பிரச்னை குறித்து இந்தியாவில் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. ஸ்வீடன் தேசிய வானொலியில் இப்படியொரு ஊழல் நடந்திருப்பது குறித்த குற்றச்சாட்டு வெளியானது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டு, நாடு தழுவிய அளவில் விவாதப் பொருளானது.
இடைத் தரகர்கள் பலருக்கும் கமிஷன் வழங்கப்பட்டிருப்பது வெளிவந்தன என்றாலும், சோனியா காந்தியின் நெருங்கிய உறவினரான ஒட்டாவியோ குவாத்ரோச்சியும் கமிஷன் தொகை பெற்றார் என்கிற தகவல்தான், போஃபர்ஸ் பேர ஊழல் அரசியல் புயலைக் கிளப்பக் காரணமாக அமைந்தது. ஏ.இ.சர்வீசஸ் என்கிற நிறுவனம் குவாத்ரோச்சியுடன் தொடர்புடையது. அதுதான் போஃபர்ஸ் ஒப்பந்தம் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேறத் துணை புரிந்தது என்பதும் குற்றச்சாட்டுகளில் ஒன்று.
ஆர்ட்போவின் டைரிக் குறிப்புகளில் குவாத்ரோச்சியை "க்யூ' என்றும், ராஜீவ் காந்தியை "ஆர்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 2004இல் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வருவது வரை, போஃபர்ஸ் பேரத்தில் குவாத்ரோச்சிக்கு வழங்கப்பட்ட லஞ்சப் பணம் லண்டன் வங்கியில் முடக்கப்பட்டிருந்தது. ஆட்சிக்கு வந்ததும், முடக்கம் அகற்றப்பட்டு, அவர் அந்தப் பணத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டார்.
1997இல் ஜோகிந்தர் சிங் அரும்பாடுபட்டு ஆவணங்களை வாங்கி வந்து தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையும், அதனடிப்படையில் ஐக்கிய முன்னணி அரசு தொடுத்த வழக்கும் 2004 மன்மோகன் சிங் அரசால் முடித்து வைக்கப்பட்டது. முடித்து வைக்கப்பட்டதே தவிர இன்றுவரை ஹோவிட்சர் பீரங்கி பேரம் பற்றிய முழு உண்மையும் வெளிவரவில்லை.
அதற்குப் பிறகு வெளிவந்த ஊழல்களுடன் ஒப்பிடும்போது, போஃபர்ஸ் ஊழலின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. போஃபர்ஸ் ஊழல் மட்டுமல்ல, ஸ்வீடன் பிரதமர் ஓலோஃப் பாமே ஏன் கொல்லப்பட்டார் என்பதும்கூட இன்றுவரை மர்மமாகவே தொடர்கிறது.
பிரதமர் தேவே கௌடாவின் ஸ்விட்சர்லாந்துப் பயணத்துக்கு முன்னர், சிபிஐ சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்தது. பீரங்கி பேர ஊழல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு ஒன்று அறிவிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தவரான சிபிஐ கூடுதல் இயக்குநர் ரேவண்ணா சித்தையா அந்தக் குழுவுக்குத் தலைமை தாங்குவார் என்று அறிவிப்பு வந்தது.
சுவிட்சர்லாந்தில் இருந்து பெற்ற 500 பக்க ஆவணத்தில், ஹிந்துஜா சகோதரர்கள், வின் சத்தா, சோனியா காந்தியின் உறவினரும், இத்தாலிய இடைத்தரகருமான ஒட்டாவியா குவாத்ரோச்சி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன என்கிற தகவல் சிபிஐ அலுவலகத்தால் ஊடகங்களுக்குக் கசியவிடப்பட்டது.
இத்தனையும் இந்தியாவில் நடக்கும் வேளையில், ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், இந்தியப் பிரதமர் தனியார் விருந்தொன்றில் கலந்து கொள்கிறார் என்கிற வதந்தி பரவியது. உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற பிரதமர் தேவே கௌடா, பிரபல தொழிலதிபரும், போஃபர்ஸ் ஊழலில் முக்கியத் தொடர்புடைய இடைத்தரகருமான ஹிந்துஜா அளித்த விருந்தில் கலந்து கொண்டார் என்கிற செய்தி காட்டுத் தீயாகப் பரவத் தொடங்கியது.
'தனிப்பட்ட முறையில் யாரும் விருந்து நடத்தவில்லை. உலகப் பொருளாதார அமைப்புதான் விருந்து அளித்தது'' என்று அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதே தவிர, அந்த விருந்தில் பிரகாஷ் ஹிந்துஜாவும் கலந்து கொண்டாரா, அவரைப் பிரதமர் சந்தித்தாரா என்பது குறித்த விவரம் எதுவும் வெளிவரவில்லை.
காங்கிரஸ் தலைமையும் சரி, சோனியா குடும்பத்தினரும் சரி, ஊடகங்களும் சரி பிரதமரின் ஸ்விட்சர்லாந்து அரசுமுறைப் பயணத்தை சந்தேகக் கண்ணோட்டத்துடன்தான் பார்த்தனர். வின் சத்தாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் தோல்வி அடைந்தன என்பதைவிட, அவரது செல்வாக்கு அதிகாரிகளின் கைகளைக் கட்டிப் போட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
அது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம், மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், போஃபர்ஸ் நிறுவனத்தின் ஹோவிட்சர் பீரங்கிகள் வாங்கியது தொடர்பாக, முக்கியமான ராணுவ அதிகாரிகளை விசாரிக்கத் தொடங்கியிருந்தனர். பீரங்கி பேரம் நடந்தபோது பதவியில் இருந்து, பணி ஓய்வு பெற்றுவிட்ட லெஃப்டினென்ட் ஜெனரல்கள் ஹிருதயநாத் கௌல், கே.பி. மேத்தா இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது பாதுகாப்புச் செயலராக இருந்த எஸ்.கே. பட்நாகர், அமைச்சர்களாக இருந்த அருண் நேரு, அருண் சிங் ஆகியோரிடமும் சிபிஐ சிறப்புக் குழு விசாரணை நடத்தியது.
'பிரெஞ்சு நாட்டின் சோஃப்மா பீரங்கியைத்தான் வாங்க வேண்டும் என்று முதலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஜெனரல் சுந்தர்ஜிதான் கடைசி நிமிடத்தில் முடிவை மாற்றி, வேறு ஏதோ காரணத்துக்காக போஃபர்ஸ் பீரங்கியைத் தேர்ந்தெடுத்தார்'' என்று லெப்.ஜெனரல் கௌல் குற்றம் சாட்டியிருந்தார்.
அருண் நேரு, அருண் சிங் இருவரும் என்ன சொன்னார்கள் என்பதை சிபிஐ வெளியிடவில்லை. விசாரணைக்கு வழக்கு வராததால் அவர்களது வாக்குமூலங்கள் கோப்புகளில் ஒளிந்து கொண்டிருக்கின்றன. ராஜீவ் காந்தியுடன் கடுமையான கருத்து வேறுபாடு தோன்றியதால், வி.பி.சிங்குடன் கட்சியிலிருந்து வெளியேறி "ஜன் மோர்ச்சா' என்கிற கட்சியைத் தொடங்கிய நிலையில்கூட, போஃபர்ஸ் குறித்து அதிகம் பேசாதவர் அருண் நேரு.
வி.பி.சிங்கின் பங்கு மிகவும் விசித்திரமானது. போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்குவதற்காகப் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்வீடன் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அவரது நிதியமைச்சராக இருந்தவர் வி.பி.சிங். நிதி அமைச்சகத்தின் ஒப்புதலோ, பரிந்துரையோ, ஆலோசனையோ இல்லாமல், பிரதமர் அளவிலான எந்த ஒப்பந்தங்களையும் மேற்கொள்ள இயலாது. பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத்தின் தேவைக்காக பீரங்கிகளை வாங்குவது என்று முடிவெடுத்தால், அந்தக் கோப்புகள் நிதியமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அனுமதி கோரப்படும்.
போஃபர்ஸ் பேச்சுவார்த்தையின்போதும், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோதும் வி.பி.சிங் நிதியமைச்சராக இருந்தார் என்பது மட்டுமல்ல, 24.01.1987 முதல் 12.04.1987 வரையில் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தவர் அவர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதா, அவரது வாக்குமூலம்தான் என்ன என்பவை குறித்த முழு விவரங்களும் வெளியிடப்படவில்லை.
'போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் எந்தவித ஊழலும் நடைபெறவில்லை'' என்று அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தார். அப்போது நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங் அந்த நிலைப்பாட்டை வழிமொழிந்தார்.
'அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில் பார்த்தாலும், போஃபர்ஸ் பீரங்கியை முன்வைத்து ராஜீவ் காந்திக்கு எதிராக வி.பி.சிங்கும், அருண் நேருவும் பின்னாளில் விமர்சனங்களை முன்வைத்தது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம்'' என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டுவதில் நியாயம் இருக்கிறது.
போஃபர்ஸ் பிரச்னை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி இருந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்திக்க இருக்கிறார் ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி என்கிற தகவல் கிடைத்தது. போஃபர்ஸ் பீரங்கியைப் பரிந்துரைத்தார் என்று சொல்லப்படும் சுந்தர்ஜி என்ன சொல்லப் போகிறார் என்கிற ஆவல் மேலிட்டது. பத்திரிகையாளர் சந்திப்புக்கு விரைந்தேன்.
சோனியா காந்தி தனது மௌனத்தைக் கலைத்து, அரசியலில் தீவிரமாக ஈடுபடப் பிள்ளையார் சுழி போட்டது ஜெனரல் சுந்தர்ஜியின் அந்தச் செய்தியாளர் சந்திப்பு...
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.