அலுவலகத்தில் இருந்து வந்ததும் முகம் கழுவி, முகத்தை துடைத்தவாறே சோபாவில் வந்து அமர்ந்தேன். டீபாயின் மீது இருந்த திருமண அழைப்பிதழை எடுத்துப் பிரிக்கவும் மேகலா வந்து பக்கத்தில் நிற்கவும் சரியாக இருந்தது. அவளை பொருள்படுத்தாமல் அழைப்பிதழை பிரித்தேன். ஆர்வமாக கண்கள் பத்திரிகையில் மேய்ந்தது.
'என்ன உங்கப் பெயர் போட்டு இருக்காங்களான்னு பார்க்கிறீங்களா?' என்று நக்கலுடன் கேட்டாள் மேகலா.
மேகலா எப்போதும் நாம் ஆர்வம் காட்டும் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இப்படிதான் ஏதாவது நக்கல் அடிப்பாள். இது திருமணமான நாள் முதல் இன்றுவரை பழகிப் போன விஷயம்தான்!
சமையலறைக்குச் சென்று மேகலா காபி போட்டு கொண்டு வந்து கொடுத்தாள்.
' வசந்தி பொண்ணுக்கு கல்யாணமாம்! வந்தா இருடி அவர் வந்திடுவார்ன்னு சொன்னேன். அவதான் எனக்கு கல்யாண வேலை நிறைய இருக்குன்னு சொல்லி புறப்பட்டுட்டா?'
'அப்படியா..' என்றேன் ஆர்வமில்லாமல்..?
'திருமண நாள்? எங்கே திருமணம்?' என்று கவனமாகப் பார்த்தபோது, திருமணம் அடுத்த ஞாயிற்றுக்கிழமை தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில்..!
'இது சாத்தியமா ?அவ்வளவு தூரம் சென்று வர வேண்டுமே!' என்றது என் மனம். இங்கிருந்து 600 கிலோ மீட்டர் தூரம் போக வேண்டும்.
'வசந்தி எதற்கு அவ்வளவுத் தூரத்தில் பெண்ணை கட்டிக்கொடுக்கிறாள்?' என்ற கேள்வி என்னை ஒரு கணம் சிந்தனையில் ஆழ்த்தியது. மனது மட்டும் எப்படியாவது திருமணத்துக்குச் சென்று விட வேண்டும் என்று துடித்தது.
வசந்தி மனைவியின் தோழி மட்டுமல்ல; என்னுடைய வகுப்புத் தோழியும்தான். நான், என் மனைவி மேகலா, வசந்தி மூவரும் முதல் வகுப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒன்றாகத்தான் படித்தோம். வசந்தி சுமாராகப் படிப்பாள். படிக்க வசதி இல்லாததால், பன்னிரண்டாம் வகுப்புக்கு மேல் தொடரவில்லை. நானும் மேகலாவும் வெவ்வேறு கல்லூரியில் சேர்ந்தோம்.
மனதில் பசுமையான பழைய நினைவுகள்... டி.வி.யில் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது. பார்வை டி.வி. மீதிருந்தாலும் மனம் முழுவதும் பள்ளி நாள்கள் பற்றிய நினைவலைகளில் நீந்தத் தொடங்கியது. என்னுடைய நினைவுகள் பின்னோக்கிச் செல்வதை கணித்துவிட்ட மேகலா, சுயநினைவுக்கு என்னைக் கொண்டு வர சத்தமாகக் கேட்டாள்.
'என்ன மேரேஜுக்கு போகப் போறீங்களா?'
அவள் என்னிடம் சண்டையிட தோதாக ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். படிக்கும் காலத்தில் மேகலாவும் வசந்தியும் ஏட்டிக்குப் போட்டியாக சண்டையிட்டுக்
கொள்வார்கள். நான்தான் அவர்களைச் சமாதானம் செய்து வைப்பேன். சில சண்டைகள் நாள் கணக்கில், சில சண்டைகள் சில மணி நேரம் அவர்களுக்குள் பேசாமல் இருக்கச் செய்து விடும். சாடை பேச்சு என்னை வைத்து பேசிக் கொள்வார்கள். அவர்களை சமாதானம் செய்து பேச வைப்பது எனக்கு வாடிக்கையான விஷயம் .
மேகலா சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபித்துக் கொள்வாள்.அவள் சொல்வதை நானும் வசந்தியும் கேட்டு தலையாட்ட வேண்டும் என நினைப்பாள்.
நாங்கள் இருவரும் விட்டு கொடுத்து போவோம்.
எனக்கு மேகலா முறைப்பெண். வசந்தி எனக்கு தூரத்துச் சொந்தம். அவளும் நான் கட்டிக் கொள்ளும் உறவு முறைதான். மூவர் வீடும் ஒரே தெருவில் இருந்ததால் பெண்பிள்ளைகளுக்குத் துணையாக நான் இருப்பதை பெரியவர்கள் விரும்பினார்கள்.
திடீரென என் தந்தை நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையில் விழுந்தார். அவர் என் திருமணத்தை இறப்பதற்கு முன்னர் பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
பொறுமையாகப் பெண் தேடும் அளவுக்குக் காலமில்லை. வேறு வழியில்லாமல் மேகலாவைப் பெண் கேட்டு, அம்மா அவர்கள் வீட்டுக்குச் சென்றாள்.
ரொம்ப பிகு பண்ணிக் கொண்டதாக அம்மா வந்து சொன்னார்கள்.
'என் ஒன்றுவிட்ட தம்பி அவனே பொண்ணு கொடுக்க யோசனை பண்றான்..' என்று புலம்பி அம்மா செம கடுப்பானார்கள்.
'பெண் தரவில்லை என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை. உன் பையன் இருக்கிற லட்சணத்துக்கு என் பெண்ணைக் கேட்டு வர உங்களுக்கு எப்படி மனசு வந்தது' என்று மேகலாவின் அம்மா கேட்டது அம்மாவுக்கு கோபத்தை அதிகப்படுத்தியது.
'என் பையனுக்கு என்னடி குறை கண்டீங்க? கொஞ்சம் கலர் கம்மி.. ஆனா.. என் பையன் கை நிறைய சம்பாதிக்கிறான். கார் வச்சிருக்கான். அப்புறம் என்ன?' என்று அம்மா வெடுக்கென கேட்டுவிட்டு வந்துவிட்டாள்.
அப்புறம் அம்மாவுக்கு வசந்தி ஞாபகம் வந்தது.
அம்மா மறுநிமிடமே வசந்தியின் வீட்டுக்குச் சென்றாள். வசந்தி படிப்பு கம்மி. கலரும் கம்மி. சுமாராகத்தான் இருப்பாள். நானும் கருப்பாக சுமார் ரகம்தான். அம்மாவுக்கு தம்பி பெண் செவத்த மேகலாவை எப்படியாவது எனக்கு கட்டி விட வேண்டும் என்ற ஆசை நெடு நாள்களாக இருந்தது.
தம்பி மேல் உள்ள கோபத்தில் தான் வசந்தி வீட்டின் படிக்கட்டுகளை மிதித்தாள் அம்மா. அதிகமான கோபம் சரியான முடிவை செய்ய விடாமல் தடுத்து விடும் என்பது நிதர்சனமான உண்மை. அதன் விளைவு உடனடியாக வசந்தி வீட்டுக்குப் பெண் கேட்டு சென்று விட்டாள் அம்மா. வசந்தியின் வீட்டில் அனைவருக்கும் முழு சம்மதம்.
எனக்கும் மேகலாவைவிட வசந்தியைத்தான் பிடிக்கும். அதற்கு பல காரணங்கள் சொல்லலாம்.
வசந்தி மென்மையான பயந்த சுபாவம் கொண்டவள். யாருக்கும் தீங்கு இழைக்காத குணம் அவளை மேகலாவைவிட உயர்வாகக் காட்டியது. எதையும் விட்டுக் கொடுத்துப் போவாள் வசந்தி.
வசந்தியை திருமணம் செய்து கொள்ள என் மனம் ஒப்புக் கொண்டிருந்த வேளையில், விஷயம் கேள்விப்பட்ட மேகலா பொறாமையில் எப்படியாவது என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்தாள்.
மேகலா வீட்டில் அடம்பிடித்து, தற்கொலைக்கு முயற்சி செய்து, கடைசியில் என் அம்மா காலில் மேகலா குடும்பமே விழுந்து, மன்னிப்பு கேட்டதில் அம்மா உச்சி குளிர்ந்து போனார்கள்.
அம்மா மனதில் மேகலாவே இருந்ததால் பட்டென்று தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டாள்.
அம்மாவின் முடிவால் பாதிக்கப்பட்டது நானும் வசந்தியும்தான்!
மேகலா, வசந்தி என அம்மா மாற்றி, மாற்றி முடிவை எடுக்க இருவீட்டாருக்கும் சண்டை. சண்டை கைகலப்பு வரை சென்று விட்டது. நான்தான் ஒரு வழியாக சமாதானம் செய்தேன். அப்பொழுதும் வசந்திதான் மேகலாவுக்காகத் தன் வாழ்க்கையை விட்டு கொடுத்தாள்.
மேகலாவை ஐம்பது பவுன் போட்டு கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அது அம்மாவின் சாதனையாகவே கருதினாள். அதனால் அம்மாவும் மேகலாவின் விருப்பங்களை நிறைவேற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தாள்.
சின்ன வயதில் அப்பாவைப் பறிகொடுத்து எந்தச் சுகத்தையும் அனுபவிக்காதவள் என்பதால் அம்மாவை மீறி எந்த ஒரு செயலையும் செய்ய என் மனம் விரும்பவில்லை. வேறு வழியில்லாமல் என் மனதை மாற்றிக் கொண்டு மேகலாவை திருமணம் செய்து கொண்டேன்.
வசந்தி பெரிதாக எதுவும் எதிர்பார்க்காதவள். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தது. அப்போதுதான் என் மனம் தெளிவடைந்தது. அதுவரை ஒரு குற்ற உணர்வு என்னை உறுத்திக் கொண்டே இருந்தது.
வசந்தியை அவ்வப்போது ஏதேனும் விசேஷங்களில் பார்த்தால் பேசிக் கொள்வது உண்டு. மகளுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறாள். வசந்தி வந்ததும் எனக்கு போனில் மேகலா சொல்லி இருக்கலாம் . ஆனால் அவள் சொல்லவில்லை இன்னமும் மேகலா வசந்தியைப் போட்டியாகவே கருதுகிறாள். நான் வெளியூர் சென்று இருப்பதாக பொய் சொல்லி பத்திரிகையை வாங்கிக் கொண்டிருக்கிறாள்.
'காபி சாப்பிடு' என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்பதை நான் அலுவலகத்திலிருந்து வரும் வழியில் வசந்தியை சந்தித்து பேசும்போது சொன்னாள். மேகலாவின் செயல்பாட்டுக்கு வசந்தி வருத்தப்படவில்லை.அது அவளின் குணம் என்பது எனக்கும் வசந்திக்கும் நன்றாகவே தெரியும்.
'கண்டிப்பா வந்துடு சிவா..' என்று மகளின் திருமணத்துக்கு வருமாறு அன்போடு கேட்டுக் கொண்டாள். நானும் வருவதாக வாக்குறுதி கொடுத்தேன்.
'வசந்தி !ஏன் ரொம்ப தொலைவுல பெண்ணை கட்டிக் கொடுக்கிற?' என்றேன்.
'மாப்பிள்ளை பையன் உன்னை மாதிரி நல்ல பழக்க ,வழக்கம் உள்ளவன். அதுமட்டுமில்லை. பையன் உன்னை மாதிரி பார்க்கவும் இருப்பான். அதான் தூரம் பார்க்கலை..' என்று அவள் சொல்லி முடித்ததும் என் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தாள். அந்தப் பார்வையில் இன்னமும் என் மீதான காதல் மீதியிருந்தது.
'வீட்டுக்கு வாயேன்..' என்று கெஞ்சும் குரலில் நான் கூப்பிட அவள் மறுத்துவிட்டாள்.
'உன் பொண்டாட்டி முகம் கொடுத்து கூட பேசமாட்டேன்றா? பழைய மாதிரி என்னால பொறுமையா இருக்க முடியலை. இப்போ எல்லாம் கோபம் அதிகம் வருது. வயசு ஆகுது இல்லை' என்றாள் பரிதாபமாக வசந்தி.
'நல்ல பையனுக்கு தானே வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறே?' என்றேன் மீண்டும்.
' மாப்பிள்ளை வீட்டுல சில குறைபாடுகள் இருக்கு.. அதெல்லாம் சரிப்படுத்திடலாம்ற நம்பிக்கை இருக்கு. என் பொண்ணுக்கு சாமர்த்தியம் அதிகம்.. அவ என்னை மாதிரி ஏமாளி இல்லை. நல்ல பையனுக்கு பெண்ணை கட்டி கொடுக்கபோறோம்ன்ற திருப்தி எனக்கு இருக்கு..'
வசந்தியுடன் என்னுடைய வாழ்க்கையை தொடங்கியிருந்தால் மிகச் சிறப்பாக தான் இருந்திருக்கும். 'ம்.. கடவுள் அந்த கொடுப்பினையை எங்க ரெண்டு பேருக்கும் கொடுக்கலை' என்று பல நாள் நான் நினைத்திருக்கிறேன்.
வசந்தியின் மீதான காதல் என்னுள்ளும் இன்றும் நீரு பூத்த நெருப்பு போல புகைந்து கொண்டுதான் இருக்கிறது.
'வா.. உன்னை பஸ் ஏத்திட்டு நான் புறப்படுறேன்' என்றதும், வசந்தி மறுத்தாள்.
'எதுக்கும் சங்கோஜப்படாதே.. நம்ம ரெண்டு பேருக்கும் வயசாயிடுச்சு ..'
'யாரும் நம்மளை தப்பா நினைக்க மாட்டாங்க. கார்ல ஏறி உட்காரு. பஸ் ஸ்டாண்ட் இங்க இருந்து மூணு கிலோ மீட்டர் போகணும். நீ ஊருக்கு போறதுக்கு லேட் ஆயிடும்.' என்று நான் சொன்னவுடன் வசந்தி சிரித்துக் கொண்டே பின் சீட்டில் ஏற முற்பட்டாள்.
'வசந்தி.. முன்னாடி சீட்டுக்கு வா..' என்று சொல்லி நான் கார் கதவை திறந்து விட்டேன். ஒரு சிறிய கூச்சத்துடன் அவள் ஏறி அமர்ந்தாள்.
நான் காரை கிளப்பி, அவள் பேசும் விஷயங்களை ரசித்து கேட்டவாறு காரை ஓட்டி, பஸ் ஸ்டாண்டில் அவளை பஸ் ஏற்றினேன்.
வீட்டுக்கு வந்ததும், கைகள், கால்கள், முகத்தைக் கழுவி ஏதும் தெரியாதது போல் டீப்பாயின் மீது இருந்த பத்திரிகையை எடுத்து புரட்டிக் கொண்டிருந்தேன்.
வசந்தியுடன் பயணித்த அந்த பத்து நிமிடம் சுகமாக இருந்தது. எந்த ஒரு பொருளும் கிடைக்காதவனுக்கு தான் அந்தப் பொருளின் அருமை தெரியும். எளிதாக கிடைக்கும் எதற்கும் எப்பொழுதும் மரியாதை கிடையாது என்பது எனக்கு நன்றாக புரிந்தது.
அம்மாவின் ஆசையை நிறைவேற்ற நான் போட்டுக் கொண்ட சூடு தான் மேகலா.
'இப்போது வருந்தி என்ன செய்வது? இருக்கும் குறை காலத்தை எப்படியாவது சமாளித்து ஓட்ட வேண்டியதுதான்' என்றது என் மனம்.
என் நினைவுகளை களைப்பது போல் சோபாவின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் மேகலா.
'என்ன பழைய காதல் நினைவுகளா?' என்று மேகலா சொல்ல, எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
'எப்படி சரியாக கணித்து விட்டாள்?' என்று நினைத்தேன்.
முகத்தை கொஞ்சம் சிரித்தவாறு மாற்றிக் கொண்டு பேச்சை வேறு திசையில் திருப்பினேன்.
'உன் மகன் வந்துட்டானா? ஸ்கூல்ல இன்னைக்கு ஏதோ ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சொன்னானே..' என்றேன்.
'நல்லா தான் பேச்சை மாத்துறீங்க! ம்.. பழைய காதலியின் நினைவோடயே இருங்க? நான் என் அம்மாக்கு போன் பண்ணனும் வரேன்!' என்று சொல்லி தன்னுடைய அறைக்குச் சென்று விட்டாள்.
'சரியான எமகாதகி' என்று மேகலாவை வசை பாடியவாரே டி.வி. நியூஸில் முழுகிப் போனேன்.
வசந்தியின் மகள் திருமணத்துக்கு இன்னும் இரண்டு நாள்கள் தான் இருந்தது. திடீரென எனக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது .
இரண்டு நாள்களாக சுகரின் அளவு தாறுமாறாக ஏறி அடிக்கடி சோர்வு, மயக்கம் என வந்து படுக்கையில் வீழ்த்தியிருந்தது. எப்படியாவது திருமணத்துக்குச் சென்று விட வேண்டும் என்ற முனைப்பில் நான் உடலை சீர் செய்ய சரிவர மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன்.
'வசந்தி பொண்ணு மேரேஜுக்கு அவ்வளவுத் தூரம் உங்களால போக முடியாது! உங்க உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு.நீங்க போகலைன்னா மேரேஜ் ஒண்ணும் நடக்காம போயிடாது!இந்த மேரேஜ்க்கு போகணும்னு கட்டாயம் இல்லை. புரிஞ்சுதா?' என்று ஏறக்குறைய மேகலா என்னை மிரட்டினாள்.
நானும் பதிலுக்கு , 'எனக்கு உடம்பு முடியலை. அவ்வளவு தூரம் என்னால போக முடியாது. ஊருக்கு வந்தாங்கன்னா நேரில போய் பாத்துக்கலாம்' என்று சொல்லி சமாளித்தேன்.
இப்படி சொல்லவில்லை என்றால் வீட்டில் ஒரு பூகம்பம் வெடிக்கும். அதை தவிர்க்கத் தான் அப்படி சொன்னேன். ஓரளவுக்கு உடம்பு சரி ஆகிவிட்டது.
நாளை திருமணம். முகூர்த்தம் ஒன்பது பத்தரை என்பதால், மதியம் ரயில் பிடித்தால் விடிய விடிய சென்று விடலாம் என்று என் மனது கணக்கு போட்டது .
ஒரு வாரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் செய்தாகிவிட்டது. புறப்பட வேண்டியது மட்டுமே பாக்கி. மேகலாவுக்குத் தெரியாமல் எல்லா ஏற்பாடும் செய்து விட்டேன்.
எப்படியும் ஒரு மாதம் புலம்பி தீர்ப்பாள் மேகலா. ஒரு வாரம் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்வாள். பாத்திரங்கள் உருளும். பிள்ளைகளை சகட்டுமேனிக்குத் திட்டுவாள்.
எதையும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற மன உறுதி எனக்கு இருந்தது.
'துணிந்தபின்னர் துயரம் எதற்கு?' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே திருமணத்துக்குப் புறப்பட்டேன்.
மேகலா முதலில் முறைத்தாள். பின்னர் கத்தினாள்.
அவள் பேச்சை ஒரு பொருட்டாகக் கருதாமல் ஒரு செட் டிரஸ் உடன் புறப்பட்டு விட்டேன் திருமணத்துக்கு..!
ஆட்டோ பிடித்து ரயில்வே ஸ்டேஷன் சென்றுவிட்டேன். வழக்கம்போல் அரை மணி நேரம் தாமதமாக ட்ரெயின் வந்தது.
ரிசர்வேஷன் கம்பார்ட்மென்டில் ஓய்வாக அமர்ந்தேன். கண் மூடினேன்.
மனதுக்குள் பழைய நினைவுகள். ஒன்பதாவது படிக்கும் பொழுது பள்ளியில் திடீரென மேகலா மயங்கி விழுந்து விட்டாள். நான் தான் வீட்டுக்கு ஓடி வந்து விஷயத்தை சொல்லி மாமாவை அழைத்து வந்தேன்.
டவுன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஊரில் உள்ள மருத்துவர் பரிந்துரை செய்ய மேகலா அங்கு அழைத்து செல்லப்பட்டாள். மருத்துவர்கள் அவளுடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போயிருப்பதை பல பரிசோதனைகளின் மூலம் உறுதிபடுத்தினர். எனக்கு புரியாத வயது என்பதால் எவ்வளவோ முயற்சித்தும் மாமாவும் மேகலாவின் உடல்நிலை குறித்து சரியாக பதில் கூறவில்லை.
என் நண்பனின் அம்மா அந்த ஹாஸ்பிடலில் நர்ஸாக பணிபுரிந்து வந்தது சௌகரியமாக இருந்தது. நானும் வசந்தியும்தான் அந்த ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று நண்பனின் அம்மாவைப் பார்த்தோம். விஷயம் கேட்டறிந்தோம். அவர்கள் சொன்னது ஒன்று மட்டும் எங்களுக்கு புரிந்தது. இரவல் பெற்று ஒரு சிறுநீரகத்தை பொருத்தினால் அவள் உயிர் பெற்று வாழ வாய்ப்பு அதிகம் என்பது.
நண்பனின் அம்மா உதவியோடு நானும் வசந்தியும் சீஃப் டாக்டரை சந்தித்தோம். அந்த பெண் மருத்துவர் எங்களிடம் கனிவாகப் பேசினார்.
சிறுநீரகம் ஒன்று பொருத்தினால் மேகலாவை காப்பாற்றலாம் என்று டாக்டர் சொன்னதும், விடுக்கென்று வசந்திதான் சொன்னாள்.
' என்னுடைய சிறுநீரகம் பொருந்துமா? பார்க்கறீங்களா டாக்டர்?'
டாக்டர் ஒரு இளநகையுடன், 'அம்மா !நீ சின்ன பொண்ணு இதில் முடிவெடுக்க உனக்கு தெரியாது. இது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை..' என்று டாக்டர் தெளிவாக விளக்கிக் கூறியும் வசந்தி பிடிவாதமாக இருந்தாள்.
வசந்தியும் மேகலாவின் பெற்றோரை நேரில் சந்தித்து பேசினாள். தன்னுடைய பெற்றோரையும் சம்மதிக்கச் செய்தாள். பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஆண்டவன் புண்ணியத்தில் வசந்தியின் ஒரு சிறுநீரகம் மேகலாவுக்குப் பொருந்தியது.
மேகலாவும் உயிர்பிழைத்தாள். அந்த நன்றிக் கடனுக்காக தான் நான் இன்று என் உடல்நிலையும் பொருட்படுத்தாமல் அந்தத் திருமணத்துக்குச் செல்கிறேன். இந்த விஷயத்தை மேகலாவுக்கு என்றாவது புரிய வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
'வசந்தியின் சிறுநீரகத்தைப் பெற்றுத்தான் இன்னும் உயிருடன் இருக்கிறோம்' என்று தெரிந்தால் தன்னை மாய்த்துக் கொண்டாலும் மாய்த்துக் கொள்வாள் என்பதால் இந்த ரகசியம் பரம ரகசியமாகவே இருக்கிறது என்னுள். மேகலா செலுத்த வேண்டிய நன்றிக் கடனை அடைக்க வேண்டிய கடமையில் எனக்கு பங்கிருப்பது நியாயம் தானே?