பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
பல வருடங்களாக, அலுவலகம் ஒன்றில் டைப்பிஸ்டாக பணிபுரிகிறேன். கை, எலும்பு, பூட்டுகளில் வீக்கம், இடதுதோள் பட்டை, வலி, கை விரல்களை மடக்கி நீட்டினால் கடும் வலியால் அவதியுறுகிறேன். உடல் இளைத்து பலவீனமாக நான் உணர்கிறேன். தூக்கமின்மை எந்த நேரமும் உடல் வலி. இதற்கு ஆயுர்வேத மருந்துகள் என்ன சாப்பிடலாம்.
-உஷா, காஞ்சிபுரம்.
எலும்பு, மஜ்ஜையினுள் வாயுவின் சீற்றத்தையே நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் அறிவிக்கின்றன. அலுவலகத்தில் தொடர்ந்து தட்டச்சு செய்பவர்களுக்கு கைவிரல்கள் கோணுதல், பூட்டுகளில் வீக்கம், வலி, தோள்பட்டையில் வலி போன்ற உணர்வுகள் ஏற்படுவது இயற்கையாகும். உடலில் எந்த ஒரு உறுப்பையும் நாம் வேலை நிமித்தமாகப் பயன்படுத்தினாலும், வாயுவின் கோபத்துக்கு ஆளாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
பரிஷேகம்: கார்ப்பாஸாஸ்த்யாதி, நாராயணதைலம், தான்வந்திரம் தைலம், முரிவெண்ணெய் போன்ற மூலிகைத் தைலங்கலில் ஒன்றிரண்டை உடல் சுமார் பனிரெண்டு அங்குலம் மேலிருந்து தாரையாகக் குறைந்தது அரை மணி நேரம் ஊற்றுவது நல்லதொரு சிகிச்சை முறையாகும்.
அவகாஹம்: வெதுவெதுப்பான மூலிகைத் தைலத்தை ஒரு சட்டியில் நிரப்பி, கைவிரல்களை அதனுள் வைத்து மெதுவாக விரல்களை மடக்கி நீட்டுதல்.
அப்யங்கம்: உச்சந்தலை முதல் பாதம் வரை மூலிகைத் தைலத்தை இளஞ்சூடாகத் தேய்த்து அரை- முக்கால் மணி நேரம் ஊறுதல்.
சிரோவஸ்தி: தலையைச் சுற்றி ரெக்ஸின் பையை வைத்துக் கட்டி, தலையின் மேல் பகுதியில் இரண்டு அங்குலம் இளஞ்சூடான தைலத்தை நிரப்பி சுமார் முக்கால் மணி நேரம் வரை வைத்திருத்தல்.
ஸ்நேக பானம்: தசமூலம், சித்தரத்தை, சித்தாமுட்டிவேர் போன்றவற்றால் கஷாயம் தயாரித்து, அதை நெய்யுடன் சேர்த்துக் காய்ச்சி எடுக்கப்படும் மூலிகை நெய் மருந்து, உள்ளுக்குச் சாப்பிடக் கொடுப்பது. இதனால் உட்புற உறுப்புகளில் ஏற்படும் நெய்ப்பினால் எலும்பு, மஜ்ஜையினுள் பரவியுள்ள வாயு மட்டுப்படும்.
ஸ்வேத சிகிச்சை: உட்புறம் சென்றுள்ள மூலிகை நெய் மருந்து, வழுவழுப்பை ஏற்படுத்திய நிலையில், வியர்வையை உருவாக்கும் மூலிகை இலை, தழை மூட்டைகளை இளஞ்சூடாக ஒத்தி எடுத்தல். இதன்மூலம் உட்புறம் பரவும் வெப்பம், வாயுவுடன் ஓட்டிக் கொண்டிருக்கும் நெய் மருந்தை உருக்கி, குடலுக்குக் கொண்டு வந்து விடுகிறது.
வமன்- விரேசனம்: குடலில் பரவி நிற்கும் உருகிய வழுவழுப்பான திரவப் பொருள்களில் அடங்கியுள்ள வாயுவை வாந்தி, பேதி, எனிமா என்ற சிகிச்சை முறைகளால் முழுவதுமாக வெளியேற்றல்.
இந்தச் சிகிச்சை முறைகளால் குடல், உட்புறக் குழாய்கள், உறுப்புகள் அனைத்தும் சுத்தப்படுத்துவதால், வாயுவின் சீற்றம் அடங்கி நீங்கள் குறிப்பிடும் உடல் உபாதைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளால் பலவீனத்தை மாற்ற, உடல் தன்மைக்கேற்ப பல மூலிகை நெய் மருந்துகள், லேஹியங்கள் ஆயுர்வேதத்தில் உள்ளன.
(தொடரும்)