பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 208

செங்கல்பட்டிலுள்ள ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணஸ்வாமி சுந்தர்ராஜன் என்கிற ஜெனரல் சுந்தர்ஜி, இந்திய ராணுவத் தளபதிகளில் குறிப்பிடத்தக்கவர்.
பிரணாப்
பிரணாப்
Published on
Updated on
4 min read

செங்கல்பட்டிலுள்ள ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணஸ்வாமி சுந்தர்ராஜன் என்கிற ஜெனரல் சுந்தர்ஜி, இந்திய ராணுவத் தளபதிகளில் குறிப்பிடத்தக்கவர். சுதந்திர இந்தியாவில் ஃபீல்ட் மார்ஷல் ஜெனரல் கரியப்பா, ஜெனரல் திம்மய்யா, ஃபீல்ட் மார்ஷல் ஜெனரல் சாம் மனேக்ஷாவுக்கு அடுத்தபடியாக, இன்றுவரையில் குறிப்பிடத்தக்க இந்திய ராணுவத் தலைமைத் தளபதிகளில் ஒருவராகத் திகழ்பவர் ஜெனரல் சுந்தர்ஜி.

ஜெனரல் சுந்தர்ஜியின் பின்னணி அசாதாரணமானது. இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பதவி வகித்த, பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் கடைசி அதிகாரி ஜெனரல் சுந்தர்ஜி தான். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பட்டப் படிப்புப் பயின்று கொண்டி ருக்கும்போது, ராணுவத்தில் சேர்வதற்காகப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்.

பின்னாளில் சர்வதேச ராணுவப் பள்ளி களிலும், கல்லூரிகளிலும் பல பட்டங்கள் உள்பட அலகாபாத், சென்னைப் பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டங்களும் பெற்றிருக்கிறார்.

இரண்டாவது உலகப் போரின்போது தனது 17-ஆவது வயதில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சேர்ந்தவர் சுந்தர்ஜி. 1946-இல் மஹர் ரெஜிமென்டில் செகண்ட் லெஃடினென்டாக பதவி உயர்வுபெற்றபோது, பிரச்னைக்குரிய வடமேற்கு எல்லைப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.

இந்தியா விடுதலை பெற்றதைத் தொடர்ந்து, 1947-48 பிரிவினைக் கலவரத்தின்போது கார்கில் மாவட்டத்திலும், ஜம்மு காஷ்மீரின் ஏனைய பகுதிகளிலும் நடந்த ராணுவ நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. 1963-இல் ஐ.நா.வின் சமாதானப் படையில் பணிபுரிய இந்தியா சார்பில் அவர் அனுப்பப்பட்டார்.

1962 இந்திய-சீனப் போரின் போதும், 1965 இந்தியா - பாகிஸ்தான் போரின்போதும் முக்கியமான இன்ஃபான்டரி பட்டாலியன்களை தலைமை தாங்கி நடத்தியவர் ஜெனரல் சுந்தர்ஜி. 1971-இல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரிலும், அதைத் தொடர்ந்து நடந்த வங்கதேச விடுதலைப் போரிலும் ஜெனரல் சுந்தர்ஜியின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது.

அவரது திறமையும், அனுபவமும், ராணுவ பட்டாலியன்களை மிக சாதுர்யமாக நகர்த்தி எதிரிகளைக் கலங்கடிக்கும் சாமர்த்தியமும் அப்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் கவனத்தை ஈர்த்ததில் வியப்பில்லை. ராணுவத் தலைமையகத்தின் துணைச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.

அடுத்த ஆண்டே, 1974 ஜூலை மாதத்தில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார் சுந்தர்ஜி. முதல் முறையாக இன்ஃபான்டரி அதிகாரி ஒருவர், ஜெனரல் ஆபிஸர் கமாண்டிங்காக நியமிக்கப்பட்டது இந்திய ராணுவ வரலாற்றில் அதுதான் முதலாவது முறை. அவரது செயல்திறமை ராணுவத்தாலும், அரசு வட்டாரத்திலும் மிக உயர்வாக மதிக்கப்பட்டது.

ஜெனரல் கே.வி. கிருஷ்ணா ராவ் தலைமைத் தளபதியாக இருந்தபோது, தொழில்நுட்ப ரீதியாக இந்திய ராணுவத்தைப் பலப்படுத்த முனைந்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த நபர் ஜெனரல் சுந்தர்ஜிதான். பல்வேறு பட்டாலியன்களை இணைத்து "மெக்கனைஸ்ட் இன்ஃபான்டரி ரெஜிமெண்ட்' என்கிற புதிய ராணுவப் பிரிவை உருவாக்கிய பெருமை ஜெனரல் சுந்தர்ஜியைத்தான் சாரும்.

பிரதமர் இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளையாக மாறியிருந்தார் ஜெனரல் சுந்தர்ஜி. லெஃப்டினென்ட் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றிருந்த சுந்தர்ஜி, பிரதமர் இந்திரா காந்தியால் அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு மிக முக்கியமான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஜெனரல் சுந்தர்ஜி
ஜெனரல் சுந்தர்ஜி

பிரதமருடன், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ஏ.எஸ். வைத்யாவும் மட்டும்தான் பிரதமரின் அறையில் அப்போது இருந்தனர். அவர்கள் ஜெனரல் சுந்தர்ஜியிடம் ஒப்படைத்த பொறுப்பு - "ஆபரேஷன் ப்ளூஸ்டார்'. சீக்கியர்களின் அமிர்தசரஸ் பொற்கோயிலில் இருந்து, அதற்குள் அடைக்கலம் பெற்றிருந்த

ஜெர்னெயில் சிங் பிந்தரன்வாலே தலைமையிலான பயங்கரவாதிகளைப் பிடிப்பது, அகற்றுவது அல்லது அழிப்பது என்பதுதான் அவருக்குத் தரப்பட்ட கட்டளை.

அமிர்தசரஸ் பொற்கோயில் சம்பவம் அனைவருக்கும் தெரிந்ததுதான். 1986-இல் சுந்தர்ஜி ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டபோது, ராஜீவ் காந்தியின் முடிவுக்கு, குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கிடமிருந்து எதிர்ப்பு வந்தது. ராஜீவுக்கும், ஜெயில்சிங்குக்கும் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடு தொடங்கியிருந்த நிலையில், இது இன்னொரு பிரச்னையாக உருவெடுத்தது.

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக ஜெனரல் சுந்தர்ஜி எடுத்த பல முடிவுகளும், நடவடிக்கைகளும் வெளியுலகத்துக்குத் தெரியாவிட்டாலும் இன்றுவரை இந்திய ராணுவத்தினர் மத்தியில் பாராட்டி சிலாகிக்கப்படுகின்றன. பதவி ஏற்றுக்கொண்டபோது அவர் ராணுவ வீரர்கள் அனைவருக்கும் விடுத்த கடிதம் மிகவும் முக்கிய

மானது. ராணுவத்தில் காணப்படும் கட்டுப்பாட்டுத் தளர்ச்சியும், மேலதிகாரிகளைத் துதிபாடும் போக்கும் அகற்றப்பட வேண்டும் என்கிற அவரது வேண்டுகோளை சிப்பாய்கள் வரவேற்றனர்.

1986-இல், ஆக்கிரமிப்பு முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சீன ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் அவர் நடத்திய "ஆபரேஷன் ஃபால்கன்', பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனை முயற்சிகளைத் தடுக்கும் விதத்தில் ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் அவர் நடத்திய "ஆபரேஷன் பிராஸ்டாக்ஸ்' ஆகிய இரண்டுமே விமர்சனத்துக்கு ஆளானவை என்றாலும், இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரை அதன் வலிமையை உணர்த்தியவை.

இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்படுவதிலும், இந்தியாவில் அணு ஆயுதத் திட்டம் உருவாக்கப்பட்டதிலும் அவர் வகித்த பங்கு மிகவும் அதிகம். இந்திய ராணுவத்தின் விமானப் படையையும், கடற்படையையும் இணைத்து பயிற்சிகளை முன்னெடுக்கும் முயற்சியை அவர்தான் தொடங்கி வைத்தார்.

அதேபோல, ராணுவ தளவாடங்களில் அதிக அளவில் டாங்குகளை இணைப்பது என்பது அவரது தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்று. அதனடிப்படையில்தான் ஹோவிட்சர் பீரங்கிகள் வாங்குவது என்கிற முடிவு எட்டப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சராக ஆர்.வெங்கட்ராமன் இருந்தபோது, அவரது வீட்டில் நடந்த விருந்தில் நான் முதல் முறையாக ஜெனரல் சுந்தர்ஜியை சந்தித்தேன். அப்போது அவர் லெஃப்டினென்ட் ஜெனரல். அமிர்தசரஸ் பொற்கோயிலில் "ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' நடைபெறுவதற்கு முன்பு அந்தச் சந்திப்பு நடந்தது. நானே வலியப்போய் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்பதால் அந்த முதல் சந்திப்பிலேயே அவருக்கு என்னைப் பிடித்து விட்டது என்று நினைக்கிறேன். பல மூத்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், ராணுவத் தளபதிகளும், பத்திரிகையாளர்களும் அங்கே இருந்தும்கூட என்னிடம் அவர் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தார். தன்னை நடிகர் சிவாஜியின் பரம ரசிகன் என்றும், எழுத்தாளர்களில் கல்கி, ஜெயகாந்தன், சாவி, சுஜாதா ஆகியோர் பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.

அதற்குப் பிறகும்கூட, நான் அவரை ஐந்தாறு முறை சந்தித்திருக்கிறேன்.

சென்னைக்கு அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு ஒருமுறை தொடர்பு கொண்டேன். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் தரிசனத்

துக்குத் தனது மனைவியுடன் கிளம்பிக் கொண்டிருப்பதாகவும், அங்கே வந்து சந்திக்கும்படியும் கூறினார்.

இன்னொரு முறை அவர் வந்திருக்கும்போது பரங்கிமலையில் உள்ள ராணுவ கண்டோன்மென்டில் அவரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு சந்திப்பின்போதும் என்னிடம் தமிழில் பேசி மகிழ்ந்ததுடன், தமிழ் சினிமா, ஆன்மிகப் பேச்சாளர்கள் குறித்த தகவல்கள் போன்றவை குறித்து கேட்டுத் தெரிந்து கொண்டார்.

1988-இல் அவர் பதவி ஓய்வு பெற்ற பிறகும்கூட, அவரை நான் ஓரிருமுறை சந்தித்திருக்கிறேன். இப்போது சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்க விரைந்து கொண்டிருந்தேன்.

நான் அங்கே போகும்போது ஏற்கெனவே பல நிருபர்கள், அவரது செய்தியாளர் சந்திப்புக்காகக் காத்திருந்தனர். அவர்களிடையே கடுமையான வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. அருகில் சென்று கூர்ந்து கவனித்தபோதுதான் விவரம் தெரிந்தது.

சில மணி நேரங்களுக்கு முன்னால், பிபிசி செய்தி நிறுவனத்தின் ஹிந்தி பிரிவுக்கு அவர் ஒரு பிரத்யேகப் பேட்டிஅளித் திருக்கிறார் என்கிற விவரம்தான், கூடியிருந்த நிருபர்களின் ஆத்திரத் துக்கு காரணம். குறிப்பாக, பி.டி.ஐ., யு.என்.ஐ. உள்ளிட்ட செய்தி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழ்களின் நிருபர்களும் அவரது செய்தியாளர் சந்திப்பைப் புறக்கணிக்கலாமா என்றுகூடப் பேசிக் கொண்டிருந்தனர்.

ஜெனரல் சுந்தர்ஜி சிரித்த முகத் துடன் அனைவருக்கும் வணக்கம் செலுத்தியபடி நுழைந்ததும் சலசலப்பு சட்டென்று அடங்கியது. எடுத்த எடுப்பிலேயே அவர் அனைவரது மனக்குமுறலுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

'பிபிசி ஹிந்திக்கு சற்று முன்னர் பேட்டி அளித்து விட்டேன். தவறு தான். நீண்டநாள் நண்பர் அவர். உடனடியாக விமானத்தில் பம்பாய் செல்ல வேண்டும் என்பதால், பேட்டி எடுத்துக் கொண்டார். பம்பாயிலிருந்து மாலையில்தான் அந்தப் பேட்டியை அலுவலகத் துக்கு அனுப்புவேன் என்று உறுதி அளித்திருக்

கிறார். நமது இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு அதனால் பாதிக்கப்படாது....' - அவர் சொன்னபோது அதுவரையில் இருந்த அழுத்தம் அகன்றது.

ஆனால், அதற்குப் பிறகு அவர் சொன்ன செய்திகள், என்னையே அதிர்ச்சியில் நிமிர்ந்து உட்காரச் செய்தன என்றால், அவை வெளியானபோது மிகப்பெரிய விவாதம் எழும்பியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

'கடைசி நிமிடத்தில் முடிவை மாற்றி, பிரெஞ்சு நாட்டின் சோஃப்மா பீரங்கியை நிராகரித்து போஃபர்ஸ் நிறுவனத்தின் ஹோவிட்சர் பீரங்கியை வாங்கும் முடிவை நீங்கள் எடுத்ததாக லெஃப்டி

னென்ட் ஜெனரல் ஹிருதயநாத் கௌல் உங்களைக் குற்றஞ்சாட்டுகிறாரே, அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?'

'இரண்டு பீரங்கிகளில் நிச்சயமாக ஹோவிட்சர் பீரங்கிதான் மேலானது. தொழில்நுட்ப ரீதியாகவும் சரி, வலிமையிலும் சரி உயர்ந்தது என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது. வேறு ஏதோ காரணத்துக்காக நான் ஹோவிட்சர் பீரங்கியைத் தேர்ந்தெடுத்தேன் என்று சொல்வது தவறு.'

'பிறகு அதில் என்ன பிரச்னை? போஃபர்ஸ் நிறுவன பீரங்கி வாங்கியதில் கமிஷன் பெறப்

பட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'

'நினைப்பதற்கு இதில் ஒன்றுமில்லை. ராணுவத்தின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பது மட்டும்தான் எனது ஒரே கவலையாக இருந்தது. கமிஷன் பெறப்படுகிறது, லஞ்சம் நடைபெறுகிறது என்று தெரிந்தால், ராணுவ வீரர்களின் நம்பிக்கை குலைந்து விடும். தாங்கள் பயன்படுத்தும் கருவிகளின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் எழுந்தால் அவர்களால் எப்படித் துணிவுடன் போரிட முடியும்?'

'போஃபர்ஸ் நிறுவன பீரங்கி வாங்கியதில் கமிஷன் பெறப்பட்டிருக்கிறது என்கிற செய்தி வெளியானபோது நீங்கள் என்ன செய்தீர்கள்?'

'பத்திரிகைகளில் செய்தி வெளியானதும் ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு சிபாரிசு செய்தேன். அப்போதைய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அருண் சிங்கின் ஒப்புதலுடன், அன்றைய பாதுகாப்புச் செயலர் பட்நாகருக்கு அதிகாரபூர்வக் குறிப்பும் அனுப்பினேன்.'

அதற்குப் பிறகுதான், போஃபர்ஸ் ஒப்பந்தம் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவிக்க முற்பட்டார் ஜெனரல் சுந்தர்ஜி...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.