வழக்குகளும் தேர்தல்களும் மோதல்களும் அன்றாட வாழ்வில் இடம் பெற்றுவிட்டன. வழக்கு, சிறைப் பிடித்தல், அடுத்த கட்டம் ஜாமீன். இதற்குச் சரியான தமிழ்ச் சொல் பிணை. சில வழக்குகளில் நஷ்ட ஈடு கேட்கிறார்கள். இதற்குச் சரியான தமிழ்ச் சொல் இழப்பீடு. சிலர் போட்டியாளர் இன்றியே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதனை அன்னப்போஸ்ட்' (un opposed) என்போம். இதற்குச் சரியான தமிழ்ச் சொல் எதிரிலி.
நாளிதழ்களில் அடிக்கடி வரும் ஒரு சொல் குளறுபடி. ஒன்றும் புரியாமல் குழப்பங்கள் நிறைந்த ஒரு நிலையை இப்படிச் சொல்கிறோம் (தெளிவில்லாமல் இருப்பது.) இச்சொல் பேச்சு வழக்கில் திரிந்த ஒன்று. சரியான சொல் குழறுபாடு. செயற்பாடு போன்றதொரு சொல்லாக்கம் இது. குழப்பம் - ழ தானே? மருத்துவ விளம்பரங்கள் சிலவற்றில் தலைச்சுற்றல் என்னும் சொல் பார்க்கிறோம். பல சுற்றுகள் (ரவுண்டுகள்) இருக்கும் ஒரு விளையாட்டில் முதல் கற்றைத் தலைச்சுற்று எனலாம். ஆனால் இங்கு அந்தப் பொருளில் வரவில்லையே. உங்களுக்குத் தலைச் சுற்றல் இருக்கிறதா? நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்பது விளம்பரம். அதாவது தலை சுற்றுகிறதா? மயக்கம் வரும்போல் இருக்கிறதா? என்பதே இதன் பொருள். சில சிக்கல்கள் வரும் போது, 'அப்பா ஒன்றுமே புரியவில்லை, தலைசுற்றும் போல் இருக்கிறதே என்பதும் கேட்டிருக்கிறோம். ஆகத் தலைசுற்று என்பதை தலைச் சுற்று ஆக்க வேண்டாம்; அது பிழை.
என்னதான் சொல்லுவதோ?
'நீங்கள் கேட்டவை', 'தேன்கிண்ணம்', 'சான்றோர் வீதி' என்றெல்லாம் பார்த்துக் கேட்டவர்கள் நாம். இப்போது கூட, 'காலைத் தென்றல்', 'வணக்கம் தமிழகம்', 'நமது விருந்தினர்', 'சந்தித்தவேளையில்' போன்றவை வந்துகொண்டுதான் உள்ளன. ஆனால் இவை குறைவே. தொலைக்காட்சி ஊடகத்தார் உரையாடல்கள், வருணனைகள் எல்லாம் முக்கால் ஆங்கிலம் ஆகிவிட்டதை முன்னரே எழுதினோம். படபடவென விரைந்து பேசி அடித்து நொறுக்கிவிடுகிறார்கள். நிகழ்ச்சிகளின் தலைப்பிலாவது தமிழ் உள்ளதா? 'கிங்ஸ் Of காமெடி', Beach Girlz இப்படிச் சில தலைப்புகள்.
எழுத்திலும் தமிழ் ஆங்கிலம் இரண்டையும் கலப்பதில் என்ன மகிழ்ச்சியோ? ஆங்கில எழுத்தில் கூடப் புரட்சி செய்கிறார்கள்; S க்குப் பதில் z போட்டு! எல்லாம் புதுமை என்னும் பெயரால் நடக்கும் மொழிச் சீரழிவு. 'சூப்பர் சிங்கர்' Just Dance, ஹோம் ஸ்வீட் ஹோம் என்றெல்லாம் (இன்னும் பலப்பல) ஆங்கிலத் தலைப்புகளை அள்ளி விடுகிறார்கள். ஆங்கில வார்த்தை, தமிழ் எழுத்தில் அல்லது ஆங்கிலத்திலேயே. தமிழ்நாட்டில், தமிழ் மக்களுக்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகள் இவை. தமிழர்கள்தாம் பெரிய மனம் கொண்டவராயிற்றே. மொழித் தூய்மை பற்றிப் பேசினால் 'சின்னபுத்தி' என்பார்கள்.
தமிழுக்காக - தமிழ் பற்றியே நடக்கும் விவாதங்களில் கருத்துப் போர்களிலாவது தமிழ் முழுமையாகச் சரியாக இடம் பெறுகிறதா? அங்கும் தமிழ்ச் சிதைவுகள் - ஆங்கிலக் கலப்பு உரையாடல்கள். ஆங்கிலம் சார்ந்த பின்புலம்.
விளக்கம் ஆங்கிலத்தில், ஆப்பக்கடை விளம்பரம்கூட ஆங்கிலத்தில்தான் செய்யப்படுகிறது. உண்ண வருபவர்கள் தமிழே அறியாதவர்கள் அல்லவா? அதனால்தான். அழகான தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டு அதையும் ஆங்கிலத்தில் எழுதி மகிழும் தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழரசன் - தமிழ் நம்பி - திருமாறன் போன்ற பெயர்களையும் Tamilarasan, Tamilnambi, Tirumaran என்று எழுதுகிறார்கள். கையொப்பம் இடுகிறார்கள். இந்தக் கொடுமை மாற்றப்பட வேண்டாமா? கந்தசாமிக்குப் பிறந்த நல்ல தம்பி, க. நல்லதம்பி என்றுதானே கையொப்பமிட வேண்டும்? ஏன் K. நல்லதம்பி ஆகிறார்? எப்படி வந்தது இந்தப் பழக்கம்? இதை முற்றிலும் களைந்திட வேண்டாமா?
(தமிழ் வளரும்)
இதையும் படிக்க.. ட்ரிப்ளிக்கேனும் எக்மோரும் - பிழையற்ற தமிழ் அறிவோம்! – 53
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.