
ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு நடத்திய ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வில் தேர்வர்களைச் சிந்திக்கத் தூண்டும் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அந்தக் கேள்விக்கு அடிப்படையாக அமைந்தது. இசைத்தட்டில் தோன்றிய ஒரு நாயின் வரைபடம்தான்.
அந்தக் காலத்தில் நெகிழியிலான இசைத்தட்டுகள், ஒளிநாடாக்கள், பென்டிரைவ், குறுந்தகடுகள் என்பன கண்டுபிடிக்கப்படவில்லை. அரக்கினாலான இசைத்தட்டுகளே புழக்கத்தில் இருந்தன. சிவப்பு வண்ண வில்லைகள் ஒட்டப்பட்ட 'ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ்', நீல வண்ண வில்லைகள் ஒட்டப்பட்ட 'கொலம்பியா' என்ற இசைத்தட்டுகள் பிரபலமானவை.
திரைப்படப் பாடல்கள், பக்திப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், நாடகங்கள், ஆன்மிகப் பேரூரைகள், பெரும் அரசியல் தலைவர்களின் உரைகள் போன்றவை அத்தகைய இசைத்தட்டுகளில் பதிவு செய்யப்பட்டு, பெருமளவில் விற்பனையாயின. பதிவுகளின் மீதான, ஸ்டீல் ஊசியின் கீறலால் இசை வெளிப்படும்.
ஒவ்வொரு இசைத்தட்டு நிறுவனத்தின் விளம்பரக் குறியீடு (டிரேட் மார்க்) வில்லையும் இசைத்தட்டும் மையப் பகுதியில் வட்டவடிவில் ஒட்டப்பட்டிருக்கும்.
'ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்' (ஹெச்.எம்.வி.) என்ற பெயரிலான இசைத்தட்டின் குறியீடு சற்று வித்தியாசமானது. 'ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்' என்று, அதில் வளைத்து எழுதப்பட்ட அந்த ஆங்கிலச் சொற்றொடர்களுக்குக் கீழே வளர்ப்பு நாய் ஒன்று, தனது முன்னிரண்டு கால்களைத் தரையில் ஊன்றியவாறு அமர்ந்திருக்கும். அதன் காதுமடல், அதனருகே இருக்கும்.
பழங்கால 'கிராம ஃபோன்' என்ற இசை எழுப்பும் கருவிகள் ஒலிக்கூம்பிலிருந்து ஒலிக்கும், தனது எஜமானனின் குரலைக் கேட்டு கொண்டிருப்பதுபோல, அந்தச் சித்திரம் இருக்கும். அந்த நாயை அது ஆண் நாயா? அல்லது பெண் நாயா? என்று அறிய முடியாதவாறு, அதன் அமர்வு இருக்கும்.
குறிப்பிட்ட அந்த வினாத்தாளில் இருந்த, பல வினாக்களுள் ஒன்றாக, அந்த நாய் பற்றிய வினா ஒன்றும் இருந்தது. தேர்வர்கள் அந்த வினாவைப் படித்ததும் குழம்பிப் போயினர். எளிய, ஆனால் அதே சமயம் சிந்திக்க வைத்தது அந்த வினா.
அதாவது, 'தற்காலத்தில புழக்கத்திலுள்ள ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ் என்ற இசைத்தட்டில் காணப்படும் நாய் ஆணா? அல்லது பெண்ணா? என்பதுதான் அது.
சிலர் 'ஆண் நாய்' என்றும் சிலர் 'பெண் நாய்' என்றும் விடையளித்தனர். சிலர் விடையே எழுதவில்லை.
தேர்வு முடிந்து வெளியே வந்ததும் விவாதமும் நடைபெற்றது. 'ஆண் நாய்' என்பதுதான் சரியான விடை என்று பலர் ஒப்புக் கொண்டனர். ஏனெனில், அந்த நாய் தன்னுடைய எஜமானனின் குரலைக் கேட்டுக் கொண்டிருந்தது என்ற பொருளுடைய அந்த ஆங்கிலத் தொடரான 'ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்' என்பதிலுள்ள 'ஹிஸ்' என்பது அந்த நாய் 'ஆண்' என்பதைத் தானே குறிக்கும். வினாவைத் தயாரித்த அந்தக் கல்வியாளரின் திறமையை வியந்தனர்.
காலம் கடந்தும் நினைவில் நிற்கிறது அந்த வினாவும், அதற்கான விடையும்!
ச.சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.