கண்டது
(வேலூர் அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)
'வளத்தி'
(திருநெல்வேலி அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)
'குள்ளம்'
-எஸ்.சாந்தி சாமிநாதன், பட்டீஸ்வரம்.
(சேலம் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
'தீவட்டிப்பட்டி'
-வ.மீனாட்சிசுந்தரம், உலகம்பட்டி.
(ஈரோடு- சிவகிரி இடையே உள்ள ஊரின் பெயர்)
'விளக்கேத்தி'
-பி.மோகன்ராஜூ, சென்னை-123.
கேட்டது
(நீடுர் கடை வீதியில் இருவர்..)
'என்னங்க? பஸ் வருமா?, வராதா?'
'வரும்.. ஆனா வராது..?'
-க.பன்னீர்செல்வன், மயிலாடுதுறை.
(திருச்சி பேருந்து நிலையம் அருகேயுள்ள ஓர் உணவகத்தில்...)
'ஓட்டல் முதலாளிக்கும் உனக்கும் ஏதாச்சும் பிரச்னையா?'
'ஏன் கேக்கறீங்க?'
'கேட்காமலேயே சட்னி- சாம்பார் ஊத்தறே.. பில் தொகையில் பணமும் குறைச்சிப் போட்டிருக்கே..?'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
(கோவை சாயிபாபா காலனி பூங்காவில் இருவர் பேசியது)
'வீட்டில் எல்லா கண்ட்ரோலும் உங்ககிட்ட இருக்கிறதால உங்களுக்கும் உங்க மனைவிக்கும் சண்டையே வராதா? எப்படி?'
'வீட்டுல சமைக்கிறது, துவைக்கிறது, கூட்டுவது, பெருக்கிறதுன்னு எல்லா கண்ட்ரோலும் என்கிட்டதானே கொடுத்திருக்கா'
-எம்.பி.தினேஷ், கோவை- 25.
யோசிக்கிறாங்கப்பா!
கந்தை துடைக்க உதவும்.
அகந்தை எதற்கும் உதவாது.
-இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.
மைக்ரோ கதை
தனியார் நிறுவனத்தில் உயர்பதவியில் வகிக்கும் கணவன்- மனைவிக்குள் அடிக்கடி வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்படும். கல்லூரியில் படிக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் சங்கடமாய் இருந்தது.
ஒருமுறை இருவருக்கும் வாக்குவாதம் முற்றியபோது கணவன், 'நீ என்னிடம் பேசுவதற்குத் தகுதி உண்டா? நான் சிபாரிசு பண்ணிதானே உனக்கு வேலை வந்தது? இந்தத் திமிர் உனக்குத் தேவையா?' என்றான்.
மனம் உடைந்த மனைவி சண்டையை நிறுத்தி, 'நம் பெண்ணுக்கு உயர்ந்த இடத்தில் வரன் வந்தது. இந்த இடம் வேண்டாம். அவள் காலமெல்லாம் கஷ்டப்பட வேண்டாம். அவள் சுயத்தில் வேலைக்குச் சென்றவுடன் திருமணத்தை நடத்துவோம்' என்றாள்.
பி.ஜெகநாதன், கோவில்பட்டி.
எஸ்எம்எஸ்
கோழியோட செல்லோ அரிக்கும்.
மனிதர்கள் வைத்திருக்கும் செல்லோ சிணுங்கும்.
-தா.முருகேசன், திருத்துறைப்பூண்டி.
அப்படீங்களா!
உலகம் முழுவதும் சுமார் 300 கோடி பயனர்கள் பயன்படுத்தும் பிரபல வாட்ஸ் அஃப்பை மெட்டா நிறுவனம் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. இவை புதிதாக அறிமுகமாகும் அறிதிறன்பேசிகளுக்கு மட்டுமல்ல; வாட்ஸ் அஃப் புதிய சேவைகளை பழைய பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படுகிறது. இதனால்தான் அனைத்து வாட்ஸ் அஃப் சேவைகளும் அனைத்து வகையான அறிதிறன் பேசிகளிலும் எளிதாகப் பயன்படுத்த முடிகிறது.
எனினும், சேமிப்பு இட பற்றாக்குறை, தேவையான வன்பொருள் இல்லாததால் சில பழைய அறிதிறன்பேசிகளுக்கு வாட்ஸ் அஃப் சேவை ஆண்டுதோறும் நிறுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஐபோன் 5எஸ், ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ் போன்களைப் பயன்படுத்துபவர்களுக்கு வாட்ஸ் அஃப் செயலி 2025 மே 5-ஆம் தேதிக்கு பிறகு வேலை செய்யாது.
குறைந்தபட்சம் 'ஐஓஎஸ் 12.5.7' வெர்ஷனுக்கு உள்ள ஐ போன்கள் மட்டும்தான் வாட்ஸ் அஃப் செல்லும். பழைய ஐ போன்களை தொலைபேசி அழைப்புக்கு மட்டும் வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம்.
-அ.சர்ப்ராஸ்