
புகழ் பெற்ற பத்திரிகை ஆசிரியர் புலிட்சர் தனது இளம் வயதில் ஒரு பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் இதழின் ஆசிரியரிடம், 'சுருக்கமாக எழுதுவது எப்படி?' என்று கேட்டார். அதற்கு ஆசிரியர், 'கூற வேண்டியதையெல்லாம் எழுதிக் கொள். அதை இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு உன் சொந்தச் செலவில் தந்தி அனுப்புவதாக வைத்துகொள். தானே செய்தி சுருங்கிவிடும்' என்றார்.
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையிடம் திரு.வி.க, , 'ஐயா எந்த நிலையிலும் மன அமைதியை இழந்துவிடாமல் நடக்கிறீர்களே... எந்தப் பள்ளியில் பயிற்சி பெற்றீர்கள்?' என்றார்.
அதற்கு சுந்தரம் பிள்ளையோ, 'என் வீட்டை விடவா ஒரு பள்ளி. மனைவி, மாமியார், ஏழு குழந்தைகள், இரண்டு மாடுகள், ஒரு நாய், ஒரு வாயாடி வேலைக்காரன்' என்றார்.
லெனினுக்கு கால்கள் குட்டையானவை. அதைக் கேலி செய்த ஒருவர் லெனினிடம், 'நீங்கள் நாற்காலியில் அமரும்போது உங்கள் கால்கள் தரையைத் தொடவில்லையே என்று வருந்துவீர்களா?' என்றார்.
அதற்கு லெனின், 'கால்கள் தரையைத் தொடாவிட்டால் என்ன? கைகளால் நான் வானத்தைத் தொட்டுக் காட்டுவேன்' என்றார்.
பழசு என்று அலட்சியம் செய்பவர்களுக்கு நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை பாடிய பாடலால் நாசுக்காகப் பதில் அளிக்க முடியும். 'சூரியன் பழசு. சந்திரன் பழசு. தாயார் பழசு. எனவே இவர்கள் நமக்கு வேண்டாமா?' என்பார் அவர்.
ஐஸ்லாந்து நாட்டின் வரலாற்றிலேயே ஒரு வெளிநாட்டுத் தலைவருக்காக சைவ உணவு பரிமாறப்பட்டது. அது இந்திய குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம்தான்.
முதல் பூச்செண்டை வழங்கியவர் இங்கிலாந்து அரசி விக்டோரியா மகாராணி. தன்னை மணந்துகொண்ட ஆல்பர்ட்டுக்காக அவர் முதன்முதலில் பூச்செண்டை அன்பளிப்பாக அளித்தார். அந்தப் பழக்கமே பின்னர், உலகம் முழுவதும் பரவியது.
- நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.
ஈசாப் கதைகள் என்பது உலகப் பிரசித்தி பெற்றவை. மிகவும் பழமை வாய்ந்தவை. சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டில் வசித்தவர்தான் ஈசாப். அவர் மக்களுக்கு ஒழுக்க நெறிகளைக் கூற விரும்பினார். அதனால் ஒவ்வொரு ஊராகச் சென்று சிறுசிறு கதைகள் வாயிலாக நீதியைப் புகட்டினார். அதுவே 'ஈசாப் கதைகள்'. உலகில் அனைத்து மொழிகளிலும் வெளிவந்துள்ளன.
இந்தியாவின் நுழைவுவாயில் என்ற சிறப்பு கொண்டது 'இந்தியா கேட்'. அரபிக் கடற்கரையில், மும்பை அப்போலா பந்தர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. 1911-ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் ஜார்ஜ் இந்தியாவுக்கு வருகை புரிந்ததன் நினைவாக
உருவானது. 1924-இல் இது திறந்துவைக்கப்பட்டது.
-முக்கிமலை நஞ்சன்
முன்பெல்லாம் ரயில்களில் மூன்றாம் வகுப்புகள் உண்டு. பெரியார் ஈ.வெ.ரா. ரயிலில் செல்லும்போது, மூன்றாம் வகுப்பில்தான் பயணிப்பார்.
அவரை அறிந்த பிரபலம் ரயிலில் சந்தித்தபோது, 'ஐயா நீங்கள் ஏன் மூன்றாம் வகுப்பில் சிரமப்பட்டு செல்கிறீர்கள். உங்கள் தகுதிக்கு முதல் வகுப்பிலேயே பயணிக்கலாமே..' என்று கேட்டார்.
அதற்கு அவர், 'நான்காம் வகுப்பு இல்லாததால், மூன்றாம் வகுப்பில் பயணிக்கிறேன். சராசரி மனிதன் அனுபவிப்பதைவிட அதிகம் அனுபவிப்பது சரியில்லை என்பதே என் சித்தாந்தம்' என்றார்.
1942-இல் 'வெள்ளையனே வெளியே' இயக்க நடவடிக்கையின்போது, ஜவாஹர்லால் நேரு கைதானபோது சிறையில் இருந்தார். அப்போது எந்தவித குறிப்பும் இல்லாமல் எழுதிய புத்தகம்தான் 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா'.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
ராணி விக்டோரியாவின் தாய் மொழி ஆங்கிலம் கிடையாது. அவருடைய தாய் ஜெர்மன் கோமகனுடைய மகள். தாய் வீட்டில் ஜெர்மானிய மொழியில்தான் பேசுவார். அதனால், விக்டோரியா ராணியும் 64 ஆண்டுகள் இங்கிலாந்தை ஆண்டபோதும், ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியாமல் இருந்தார். தாய்மொழி தாயின் மூலமாகவே வருகிறது என்பதற்கு இது ஒரு சான்று.
'என் தம்பி' படத்தில் சிவாஜி கணேசனும் ராஜசுலோச்சனாவும் திரையில் தோன்றுகிற 'கள்ளப்பார்ட்' தெருக்கூத்தில், சிவாஜி கணேசனுக்காக சீர்காழி கோவிந்தராஜன் பாடியது:
'தெக்கத்தி கள்ளனடா
தென்மதுரை பாண்டியண்டா
தென்னாட்டு சிங்கம்டா
சிவாஜி கணேசன்டா..
சிவாஜி கணேசன் அவருடைய பெயரை அவரே திரையில் உச்சரித்த அபூர்வமான திரைப்படம் இது.
1944 அக்டோபர் 2-இல் சென்னை பெரம்பூரில் இந்திய ரயில்வே தொழிற்சாலையை அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு தொடங்கிவைத்துப் பேசியபோது,
'உலகிலேயே மிகப் பெரிய ரயில் பெட்டி தொழிற்சாலை இது. 67.5 கோடி ரூபாய் செலவில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைய வேண்டும். வெளிநாட்டைச் சார்ந்திருப்பர்களாக நாம் இருக்கக் கூடாது' என்று சிறப்புறப் பேசினார்.
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
935-இல் வெளியான 'சதிலீலாவதி' படத்தில்தான் எம்.ஜி.ஆர்., டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர்அறிமுகமாயினர். தயாரிப்பாளர் கந்தசாமி முதலியார் நவீன பாணியில் 'சதிலீலாவதி' படத்துக்கு விளம்பரம் செய்ய விரும்பினார்.
அதன்படி, சீட்டுக்கட்டில் உள்ள ஜோக்கரில் காமெடி நடிகர்களின் உருவங்கள் அச்சிடப்பட்டன. ஒவ்வொரு சீட்டுக்கும் எந்தக் காட்சியின் படம் இடம் பெறுகிறதோ, அதை விளக்கி ஒரு சிறு குறிப்பும் பிரசுரிகப்பட்டது.
ஆயிரக்கணக்கில் சீட்டுக் கட்டுகள் அச்சிடப்பட்டு, ரசிகர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதுதவிர, சட்டையில் குத்திக் கொள்ளும் கொடியையும் தயாரித்தனர். அதில் ஒரு பக்கம் கதாநாயகன் எம்.கே. ராதா படமும், இன்னொரு பக்கம் கதாநாயகி ராட்டையில் நூல் நூற்கும் படமும் அச்சிடப்பட்டிருக்கும். படம் பார்க்க வந்த ஒவ்வொரு ரசிகருக்கும் டிக்கெட்டுடன் கூடிய இந்தக் கொடியும் அளிக்கப்பட்டது.
-அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
1789 பிரெஞ்சு புரட்சிக்கு காரணமாக இருந்தவை வால்டேர், ரூசோவின் நூல்கள். ரூசோ எழுதிய 'எமிலி', 'சமுதாய ஒப்பந்தம்' ஆகிய நூல்கள் 1762-இல் வெளிவந்தன. மூடப் பழக்கங்களில் மூழ்கிய கல்விமுறைக்கு எதிராக இருந்த 'எமிலி' நூலை மட்டுமல்ல; எழுதியவரையும் கொளுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது.
'எமிலி' நூல் வெளிவந்த 21-ஆம் நாள் பாரிஸிலுள்ள நீதிமன்றத்தின் முன் கொளுத்தப்பட்டது. ரூசோ தலைமறைவானார். 1778-இல் அவர் காலமானார். அவர் இறந்து 11 ஆண்டுகள் கழித்து, பிரெஞ்சு புரட்சி ஏற்பட்டது. அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டு, மிகுந்த மரியாதையுடன் பாரீஸ் நோக்கி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. ரூசோவின் நூலை எந்த நாடு ஆபத்து என்று கருதியதோ, அதே நாடு பின்னர் வணங்கி ஏற்றது என்பது வரலாறு.
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.