'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 222

பிரணாப் முகர்ஜி காரிலிருந்து இறங்கினார். வராந்தாவுக்கு வெளியே சற்று ஓரமாக நின்று கொண்டிருந்த என் மீது அவரது பார்வை பட்டது.
பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி
Published on
Updated on
4 min read

பிரணாப் முகர்ஜி காரிலிருந்து இறங்கினார். வராந்தாவுக்கு வெளியே சற்று ஓரமாக நின்று கொண்டிருந்த என் மீது அவரது பார்வை பட்டது. இரவு நேரத்தில் அவரைப் பார்வையாளர்கள் சந்திக்க வருவது என்பது புதிதல்ல. ஆனால் அன்றைய சூழலில், அந்த நேரத்தில் நான் அங்கே வந்து அவருக்காகக் காத்திருப்பதை அவர் ரசிக்கவில்லை என்பது தெரிந்தது.

எதுவுமே பேசாமல், நான் இருப்பதை சட்டையே செய்யாமல் வீட்டுக்குள் போய் விட்டார். அவரது கார் ஓட்டுநர் என்னிடம் ஓடிவந்து, 'சூழ்நிலை தெரியாமல் ஏன் இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறீர்கள்? பிரணாப்தா காலையில் இருந்து முக்கியமான கலந்தாலோசனையில் ஈடுபட்டு இப்போதுதான் களைத்துப்போய் வீடு திரும்புகிறார். இங்கிதம் தெரியாமல் இப்படி நடந்து கொள்கிறீர்களே...' என்று என்னை உரிமையுடன் கடிந்து கொண்டார்.

அங்கே காத்துக் கொண்டிருப்பது பிரணாப் முகர்ஜியை மேலும் கோபப்படுத்தக்கூடும் என்ப தால், கிளம்பி விடுவது என்று முடிவெடுத்து இரண்டெட்டு நடந்து விட்டேன். அந்த வீட்டின் ஒரு பகுதியில் அலுவலகமாகப் பயன்படுத்தப்படும் அறைக் கதவைத் திறந்து கொண்டு பிரணாப்தாவின் உதவியாளர் வெளியே வந்தார். என்னை கை காட்டி அழைத்தார்.

'இரவு உணவு சாப்பிட்டீர்களா? இல்லையென்றால் உங்களை உள்ளே அழைத்து சாப்பிடச் சொல்லி இருக்கிறார்' என்று அவர் சொன்னபோது எனது கண்கள் கலங்கிவிட்டன. ஒருபுறம் கோபம் இருந்தாலும், என்மீது அவர் காட்டும் அக்கறையை நினைத்தபோது, நான் உணர்ச்சிவசப் பட்டதில் வியப்பில்லைதானே...

உணவருந்திய பிறகு காத்திருப்பதா, புறப்படுவதா என்கிற அடுத்த கேள்வி எனக்குள் எழுந்தது. ஓட்டுநரின் ஸ்கூட்டரில் கரோல்பாக் சென்று இறங்கிக் கொள்ளலாம். அவர் கிளம்பி விடாமல் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் சிந்தித்தபடி அங்கிருந்த நாற்காலியில் நான் உட்கார்ந்திருந்தேன். ஓட்டுநர் உள்ளே வந்தார்.

'என்னைக் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஒருவேளை உங்களை அழைத்துச் செல்வதற்காக இருக்கக் கூடும்' என்று அவர் சொன்னபோது, எனது பதற்றம் தணிந்தது. பத்தரை மணி அளவில், அவர் தனது அலுவலக அறைக்கு வந்ததும், பிரணாப் முகர்ஜியின் உதவியாளர் என்னை உள்ளே அனுமதித்தார்.

நாற்காலியில் உட்காரக் கூடச் சொல்லாமல், சற்று கடுமையாகப் பேசத் தொடங்கினார் பிரணாப் முகர்ஜி.

'நீ நடத்துவது ஒன்றும் தினசரி நாளிதழ் அல்ல. பி.டி.ஐ., யு.என்.ஐ. போன்ற பெரிய செய்தி நிறுவனமும் அல்ல. எல்லோருக்கும் முன்னால் உனக்குத் தகவல் கிடைத்து என்ன ஆகப் போகிறது? ஏன் இப்படி உடம்பைக் கெடுத்துக் கொண்டு இரவு, பகல் பாராமல் அலைகிறாய் என்றுதான் எனக்குத் தெரியவில்லை...' பொரிந்து தள்ளினார்.

நான் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தேன். உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். சற்று நேரம் எதுவும் பேசாமல் சாவகாசமாகத் தனது பைப்பில் புகையிலையை நிரப்பிப் பற்ற வைத்து இரண்டு, மூன்று முறை புகைத்தார். பிறகு நிமிர்ந்து பார்த்தார்.

'உள்கட்சி விவகாரங்களையும், கட்சித் தலைவருடனான ஆலோசனை குறித்தும் உன்னிடம் எதுவும் பகிர்ந்து கொள்ள முடியாது. இப்போது நாம் பேசுவது எதுவாக இருந்தாலும் அது தனிப்பட்ட உரையாடலாகத்தான் இருக்க வேண்டும். செய்திக்கானதல்ல...'

நான் தலையாட்டினேன். அவரே தொடர்ந்தார்.

'உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியை முதல்வராக்கி, காங்கிரஸ் - பகுஜன் சமாஜ்வாதி கூட்டணி ஆட்சி அமைக்க எல்லா வாய்ப்புகளும் இருந்தன. ஆனால், காங்கிரஸ் ஆதரவுடன் மத்திய ஆட்சியில் இருக்கும் கட்சிகள், காங்கிரஸ் உத்தரப்பிரதேச ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதை விரும்பவில்லை. இப்போது மாயாவதியை முதல்வராக்கி பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ்காரர்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். இதற்கு மேலும் தேவே கௌடா அரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்ந்தால், மக்கள் சிரிப்பார்கள்'

அவரது மனதில் இருந்த ஆத்திரத்தை என்னிடம் ஒருசில வார்த்தைகள் மூலம் கொட்டித் தீர்த்துவிட்டார் என்று நான் நினைத்துக் கொண்டேன்.

'தலைவர் (சீதாராம் கேசரி) வீட்டில் உன்னுடன் காத்திருந்த பத்திரிகையாளர்கள் என்ன பேசிக் கொண்டார்கள்?'

'தேவே கௌடா தலைமையிலான அரசைக் கவிழ்ப்பதில் பெரும்பாலான காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு விருப்பமில்லை என்பதுதான் அவர்கள் கணிப்பு. அப்படியே, ஆதரவை விலக்கிக் கொண்டால் அந்த அரசுக்கு மாற்றாக இன்னொரு அரசை அமைக்கக் காங்கிரஸ் தயாராக வேண்டும். அதற்கான எண்ணிக்கை பலம் காங்கிரஸிடம் இல்லை.

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவளிக்காதவர்கள், மத்தியில் ஆட்சி அமைக்க எப்படி சம்மதிப்பார்கள்? பாஜகவைத் தவிர, வேறு எந்தக் கட்சியும் மக்களவைக்குத் தேர்தல் வருவதை விரும்பவில்லை'

'இது உன்னுடைய கருத்தா, இல்லை அங்கே குழுமியிருந்த பத்திரிகையாளர்களின் கருத்தா?'

'அங்கிருந்த பத்திரிகையாளர்களின் கருத்து மட்டுமல்ல, டி.வி.ஆர். ஷெனாய் போன்ற மூத்த அரசியல் விமர்சகர்கள், நான் சந்தித்த ஸ்ரீகாந்த் ஜிச்கர், ராஜேஷ் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், அஜித் சிங் போன்றவர்கள் எல்லோருமே வெளிப்படுத்திய கருத்து. 'காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தால் சரி. அப்படியில்லாமல் ஆட்சியைக் கவிழ்த்தால் காங்கிரஸில் பிளவு ஏற்படலாம்' என்பது ராஜேஷ் பைலட்டின் அபிப்பிராயம்'

நான் பேசுவதை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். 'சரி, பார்ப்போம். குட் நைட்' என்று சொல்லியபடி, எழுந்து வீட்டுக்குள் போய்விட்டார். எதிர்பார்த்ததுபோலவே என்னை அழைத்துச் செல்ல அவரது கார் ஓட்டுநர் தனது ஸ்கூட்டருடன் காத்திருந்தார்.

பிரணாப்தாவிடம் இருந்து தகவல் தெரிந்து கொள்ளச் சென்ற நான், எனக்குத் தெரிந்த தகவல்களை அவரிடம் சொல்லி விட்டு, கொட்டாவி விட்டபடி நடுநிசிக்கு மேல் எனது கரோல்பாக் அறைக்கு வந்து சேர்ந்தேன்.

ஒருபுறம் மிகப்பெரிய அரசியல் சர்ச்சை நடந்து கொண்டிருந்தது என்றால், இன்னொருபுறம் நீதித் துறை, உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியின்

நியமனம் காரணமாகப் பரபரப் பாகிக் கொண்டிருந்தது. புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.வர்மா என்று பரவலாக அறியப்படும் ஜகதீஷ் ஷரண் சர்மா பதவி ஏற்றுக் கொண்டபோது, பிரதமர் தேவே கௌடா மாஸ்கோவில் ரஷிய அதிபர் யெல்ட்சினுடன், இரண்டு உலைகளுடன் தமிழகத்தின் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் நிறுவுவதற்கான உடன்பாட்டில் கையொப்பம் இட்டுக் கொண்டிருந்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அசோகா மண்டபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவின் பதவியேற்பு விழா நடந்தது. 27-ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட இருந்த ஜே.எஸ்.வர்மாவின் பதவிக்காலம் பத்து மாதங்கள் மட்டும்தான். ஆனால், அந்தப் பத்து மாதங்களில் அவர் பதித்துச் சென்ற முத்திரைகளும், எழுதிய தீர்ப்புகளும் இன்றுவரை பேசப்படுகின்றன.

பதவி மூப்பு அடிப்படையிலான நியமனம் என்பதால், உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்க இருக்கிறார் என்பது பிரதமருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும். அப்படி இருந்தும் பிரதமர் தேவே கௌடா ரஷியாவுக்கான

தனது அரசுமுறைப் பயணத்தை அந்த நேரத்தில் ஏன் திட்டமிட்டார் என்கிற கேள்வி அப்போது பரவலாக எழுந்தது.

இந்திய நீதித் துறை வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனை என்று கருதப்படும் மூன்றாவது நீதிபதிகள் வழக்கின் நாயகன் நீதிபதி ஜே.எஸ்.வர்மா. முதலாவது நீதிபதிகள் வழக்கின் தீர்ப்புப்படி, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில், தலைமை நீதிபதி கலந்தாலோசிக்கப்பட வேண்டுமே தவிர, இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டிருந்தது.

1993-இல் வழங்கப்பட்ட இரண்டாவது நீதிபதிகள் தீர்ப்பில்தான் இப்போதைய 'கொலீஜியம்' நியமன முறை உருவானது. இந்திய அரசமைப்புச் சட்டத்திலோ, அதற்குப் பிறகான திருத்தங்களிலோ 'கொலீஜியம்' என்கிற வார்த்தையும் கிடையாது, அந்த விதிமுறை பரிந்துரைக்கப்படவும் இல்லை.

மூன்றாவது நீதிபதிகள் வழக்கு என்பது நிஜத்தில் வழக்கல்ல. குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணனின் கேள்வியைத் தொடர்ந்து, கொலீஜியம் முறை குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்து அல்லது விளக்கம் என்றுதான் கூற வேண்டும். கொலீஜியம் முறையை வடிவமைத்து, முறைப்படுத்தியது தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா என்று சொன்னால் தவறில்லை. ஜே.எஸ்.வர்மாவின் பதவியேற்பு விழாவின்போதும் சரி, அதற்குப் பிறகு நடந்த விருந்தின்போதும் சரி, எல்லோருடைய கேள்வியும், தேவே கௌடா அரசின் ஆயுட்காலம் குறித்ததாகத்தான் இருந்தது.

மத்திய சட்டத் துறை அமைச்சர் ரமாகாந்த் கலாப்பும், ஏனைய சில அமைச்சர்களும் பதவியேற்புக்கு வந்திருந்தனர். முக்கியமான அமைச்சர்களில் ஒருவர்கூட வந்திருக்கவில்லை.

மாநிலங்களவைத் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா வந்திருந்தார். விருந்தின்போது மெதுவாக அவரை நெருங்கிப் பேச்சுக் கொடுத்தேன். பேச்சுவாக்கில், சிரித்துக்கொண்டே அவர் சொன்ன வார்த்தைகள் இவை - 'விரைவிலேயே ராஷ்டிரபதி பவனில் அடுத்த பதவிப் பிரமாணம் நடந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. சர்மாஜிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் ராசி இருக்கும் போலிருக்கிறது...'

இப்போது எதற்காக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவின் பதவி ஏற்பு குறித்த பதிவும், அவர் குறித்த தகவல்களும்? மிக முக்கியமான பதவியேற்பு நடைபெறும்போது, அதோடு இணைந்த பரபரப்பும், உற்சாகமும்தான் ஓர் ஆட்சியின் செல்வாக்குக்கான அளவுகோல். அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் முக்கியப் பிரமுகர்கள் கூடியிருந்தனர். ஆனால், நிகழ்வு களையிழந்து காணப்பட்டது.

காங்கிரஸில் மட்டுமல்ல, ஐக்கிய முன்னணி அரசிலும் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கக் காத்திருந்தது. மாயாவதி தலைமையில் பாஜக-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து மத்திய அரசின் உளவுப் பிரிவு ஏன் கணிக்கத் தவறியது என்பதுதான் பிரச்னையின் அடித்தளம்.

கான்ஷிராம்-வாஜ்பாயி-அத்வானி மூவரும் சந்தித்து இறுதி முடிவு எடுத்த தகவலைப் பிரதமரிடம் உளவுத் துறை தெரிவித்திருந்தது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சரகத்தின் கீழ் செயல்பட்டாலும்கூட, உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தாவுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

'உளவுத் துறையினர் என்னை மீறி, பிரதமரிடம் நேரிடையாகத் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கிய விஷயங்களைக்கூட பத்திரிகைகள் மூலமாகவும், வேறு வழியாகவும்தான் நான் தெரிந்துகொள்ள வேண்டு

மென்றால், நான் உள்துறை அமைச்சராக இருப்பானேன்?' என்று பிதமரிடமே தோழர் இந்திரஜித் குப்தா கேட்டார் என்றுகூடத் தகவல்கள் கசிந்தன.

உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா மட்டுமல்ல, ஜனதா தளத்தைச் சேர்ந்த பல அமைச்சர்களும் கடும் அதிருப்தியில் இருந்தனர். மாநிலக் கட்சியினரிடம் முக்கியமான துறைகள் இருப்பதாகவும், அவர்கள் எவ்விதக் கட்டுப்பாடோ, கண்காணிப்போ இல்லாமல் ஊழலில் ஈடுபடுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினர்.

'ஆட்சி கவிழக்கூடாது; அதேநேரத்தில் பிரதமர் மாற வேண்டும்' என்று அவர்களில் பலரும் வெளிப்படையாகப் பேசத் தொடங்கி இருந்தார்கள்.

இந்தப் பின்னணியில்தான், தேவேகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசுக்கு வழங்கியிருந்த ஆதரவை விலக்கலாமா, கூடாதா என்று காங்கிரஸ் விவாதித்துக் கொண்டிருந்தது. ஆதரவை விலக்கிக் கொள்வதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. ஆட்சி கவிழ்ந்தால் அடுத்து என்ன என்பதுதான் காங்கிரஸ், ஐக்கிய முன்னணி கட்சிகள் இரண்டின் முன்னால் எழுந்த கேள்வி.

அப்போது, சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங் தூக்கி எறிந்த சரவெடி, பிரதமர் தேவே கௌடாவின் ஆட்சிக்கு அணுகுண்டாக மாறியது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com