அண்மையில் நடந்தவைகள்கூட நம் நினைவைவிட்டு மறந்து போகும் நிலையில், நூற்றாண்டுக்கு முந்தைய தேதியை மட்டுமின்றி, அடுத்துவரும் இரண்டரை நூற்றாண்டுக்கும் மேலான தேதிகளையும் கூறினால் அதன் கிழமையை நொடிப் பொழுதில் கூறி அசத்துகிறார் சிறுமி ஸ்ரீகா.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட மார்த்தாண்டம் அருகே தேங்காய்ப்பட்டனம் காப்பிக்காட்டுவிளையைச் சேர்ந்த கிரானைட் கல் பதிக்கும் தொழிலாளி ஸ்ரீகுமார்- இல்லத்தரசி ராஜேஸ்வரி தம்பதியரின் மகள் ஸ்ரீகா, கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தானம் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் இவருக்கு பன்னிரெண்டு வயதாகிறது.
இவரிடம் 1900-ஆம் ஆண்டு முதல் 2300 வரையிலான 400 ஆண்டுகளுக்கான தேதியை கூறினால் கண நேரத்திலேயே, அதற்கான கிழமையை கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். அதேபோன்று 2020 முதல் 2030- ஆம் ஆண்டுகளில் முக்கிய பண்டிகை தினங்கள் குறித்தும் கூறி ஆச்சரியப்படுத்துகிறார்.
அவரிடம் பேசியபோது:
'எனக்கு நாள்காட்டி மீது அதீத ஆர்வம். நாள்காட்டியில் தேதியை, கிழமையை பார்ப்பேன். விளையாட்டு, ஒவியம், நடனம் உள்ளிட்ட வேறு எந்த பொழுதுபோக்கிலும் எனக்கு நாட்டமில்லை.
எனக்கு இறைநம்பிக்கை அதிகம் உள்ளது. எனக்கு கிடைத்த இந்தத் திறமையை இறை அருளாலேயே கிடைத்ததாக உணர்கிறேன். பெற்றோர், தங்கை ஸ்ரீநிகா, ஆசிரியர்களின் ஊக்கமும் ஞாபகச் சக்தித் திறன் அதிகரிக்கவே காரணமாக
உள்ளது. படித்து எதிர்காலத்தில் ஆசிரியையாக ஆசை. இந்த தனித் திறமையை மேலும் மெருகேற்றி வருகிறேன். மாணவர்கள் மத்தியில் இதை பயன்படுத்துவேன்'' என்கிறார் ஸ்ரீகா.
இவரது தாய் ராஜேஸ்வரியிடம் பேசியபோது:
'எனது மூத்த மகள் ஸ்ரீகாவுக்கு ஐந்தாவது வயதில்தான் பேச்சு வந்தது. அவளுக்கு படிப்பு வராது என பலரும் எனது கூறினர்.
அப்படிப்படவள் தற்போது வகுப்பில் முதல், இரண்டாம் மதிப்பெண் எடுத்து வருகிறாள். சிறுவயது முதல் காலண்டர் மீது ஈடுபாடு உண்டு. உறவினர் வீட்டுக்குச் செல்லும்போதும் காலண்டரையே பார்ப்பாள்.
மூன்றாம் வகுப்பு படிக்கும்போது. வீட்டுச் சுவரில் தொங்க விட்டிருக்கும் காலண்டரை பார்ப்பதும், அதில் பிரதோஷம், திருவாதிரை உள்ளிட்ட நாள்களை கூறுவதும் வழக்கம். நானும் எனது கணவரும் ஒரு பண்டிகை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, அதன் கிழமை தவறு என்று ஸ்ரீகா சொன்னாள். அப்போது தான் அவளிடம் உள்ள நினைவாற்றலை அறிந்தோம்.
வீட்டில் உறவினர்கள், நண்பர்களின் பிறந்த நாள், விசேஷ நாள்கள் குறித்து பேச்சு வரும்போது, அந்த நாளுக்கான கிழமையை கூறுவாள். பெரும்பாலும் எனது இளைய மகள் ஸ்ரீநிகாவிடம் தேதியை கூறக் கேட்டு அதற்கான கிழமையை கூறுவாள்.
2020 முதல் 2030-ஆம் ஆண்டு வரையிலான முக்கிய பண்டிகை நாள்கள் உள்ளிட்ட விவரங்களை அச்சுபிசகாமல் தெரிவிக்கிறாள்.
அண்மை நாள்களாக நூறு ஆண்டுகளுக்கான காலண்டரை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள லீப் ஆண்டுகள் குறித்து குறிப்பெடுத்து நூற்றாண்டுக்கான கிழமையை மனதில் பதிவு செய்வதற்காக தினம்தோறும் வீட்டில் தொடர்ந்து எழுதி பழகிக் கொண்டிருக்கிறாள். இந்த நினைவாற்றல் எப்படி வந்தது என்பது புரியாத புதிராகவே உள்ளது. திறமையும் வியக்க வைக்கிறது. ஒருவகையில் சந்தோஷமாகவும் உள்ளது.
வரும் நாள்களில் மேலும் பல நூற்றாண்டுகளுக்கான நாள், கிழமைகள் குறித்து மனதில் பதிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாள். எதிர்காலத்தில் உலக சாதனை புத்தகங்களில் எனது மகளின் பெயர் இடம்பெற வேண்டும் என்ற ஆவல் உள்ளது'' என்கிறார் ராஜேஸ்வரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.