சிறை...
அரசன் ஒருவன் ஆராயாமல் இரண்டு துறவிகளைச் சிறையில் அடைத்துவிட்டான். பின்னர், உண்மை தெரியவந்ததும் மனம் மாறி, இருவரையும் விடுதலை செய்தான்.
வெளியே வந்த முதல் துறவி மற்றொரு துறவியிடம், 'நீ அரசனை மன்னித்து விட்டாயா?' என்றார்.
'இல்லை' என்றார் இரண்டாமவர்.
உடனே முதல் துறவி மெதுவாக, 'அப்படியானால் நீ இன்னமும் அரசனின் சிறையில்தான் இருக்கிறாய்?' என்றார்.
-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.
வாழ்வு...
ஒரு குரு தனது சீடர்களிடம் ஒரு தேக்கு மரத்தைக் காட்டி, 'இதில் என்னென்ன செய்யலாம்' என்று கேட்டார்.
கட்டில், கதவு, பீரோ... என்று பதில்கள் பல வந்தன. ஒரு சீடர் மட்டும் அமைதியாக இருந்தார்.
'உனக்கு எதுவும் தோன்றவில்லையா?' என்றார் குரு.
'இந்த மரத்தை இழைத்தால் பல மரச்சாமான்கள் செய்யலாம். பிளந்தால் விறகுகள். எரித்தால் சாம்பல்' என்றார் சீடர்.
'இழைப்பதும் பிளப்பதும் அவரவர் கையில்தான் உள்ளது. வாழ்வின் உன்னதமும் அவரவரிடமே உள்ளது' என்றார் குரு.
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
திகைப்பு...
ஒரு கட்டடத்தில் முப்பதாவது மாடியில் இருந்த முதலாளி வேணு முதல் மாடியில் இருந்த குமஸ்தா சுப்புவை அவசரமாக செல்போனில் அழைத்து, முக்கியமான கோப்பை உடனே எடுத்து வருமாறு பணித்தார் .
அரை மணி நேரமாகியும் சுப்புவை காணோம். பின்னர், மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஆஜரானார் சுப்பு .
திகைத்து போன முதலாளி தாமதத்துக்கான காரணத்தை கேட்டார்.
'சார் வேகமாக வந்துவிடலாம் என்று நான் கோப்புகளோடு லிஃப்டுக்கு போனேன். அங்கே பார்த்தா, 'அவசரக் காலங்களில் படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள்'-ன்னு எழுதி இருந்துச்சு.. நான் என்ன பண்ணட்டும்' என்றார் சுப்பு .
-ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.