'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 223

எந்தவொரு அரசியல் தலைமையும் அதிகாரவர்க்கம் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதையோ, அவர்களுக்குப் பேட்டி அளிப்பதையோ விரும்பாது.
பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி
Published on
Updated on
4 min read

எந்தவொரு அரசியல் தலைமையும் அதிகாரவர்க்கம் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதையோ, அவர்களுக்குப் பேட்டி அளிப்பதையோ விரும்பாது. சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங் அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசுவது அரசியல் வட்டாரங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது. பிரதமரின் அனுமதியோ அல்லது தூண்டுதலோ இல்லாமல் இயக்குநர் ஜோகிந்தர் சிங்,

போஃபர்ஸ் விசாரணை குறித்து கருத்துத் தெரிவிக்க மாட்டார் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலர் வெளிப்படையாகவே அவரது செயல்பாட்டை விமர்சித்திருந்தார்கள்.

போஃபர்ஸ் விவகாரத்தில் தங்களது தரப்பு விசாரணை இன்னும் ஒரே மாதத்தில் முடிந்துவிடும் என்று குஜராத் தலைநகர் காந்திநகரில் சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங் நிருபர்களை அழைத்துப் பேட்டி அளித்தது, தில்லியில் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது. அரசு வெளியிட வேண்டிய தகவல்களை, சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங் எப்படி வெளியிடலாம் என்று காங்கிரஸோ, பாஜகவோ அல்ல, இடதுசாரிகள் கேள்வி எழுப்பினார்கள்.

சிபிஐ புதிதாக இன்னொரு விமர்சனத்துக்கும் உள்ளானது. எல்லோரும் அநேகமாக மறந்தே போயிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மாதவ்சிங் சோலங்கி, சிபிஐ தலைமையகத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தார். அந்தத் தகவல் காட்டுத் தீயாகப் காங்கிரஸ் வட்டாரங்களில் பரவியது.

1991-இல் நரசிம்மராவ் அரசு பதவி ஏற்றபோது, மாதவ்சிங் சோலங்கி வெளிவிவகாரத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். மூன்று முறை குஜராத் முதல்வராக இருந்த மூத்த தலைவர் என்பது மட்டுமல்ல, இந்திரா காந்தியின் முழு நம்பிக்கைக்குப் பாத்திரமான நேரு குடும்ப விசுவாசி என்று கருதப்படுபவர் அவர்.

1992-இல் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரத்தில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டுக்கு மாதவ்சிங் சோலங்கி சென்றதன் பின்னணியில் அப்போது ஒரு பிரச்னை வெடித்தது. பிரதமர் நரசிம்ம ராவின் தனிப்பட்ட கடிதம் ஒன்றை மாதவ்சிங் சோலங்கி தன்னுடன் எடுத்துச் சென்றதாகவும், அதில் போஃபர்ஸ் தொடர்பான தகவல்களை இந்தியாவுக்கு அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் தகவல் கசிந்தது.

சோனியா காந்தியின் வற்புறுத்தலுக்கு இணங்க, போஃபர்ஸ் விவகாரத்தை மறைக்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் மாதவ்சிங் சோலங்கி முயற்சித்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.

டாவோஸ் நகரத்தில் அவர் சுவிட்சர்லாந்தின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ரெனி ஃபெல்பரை சந்தித்தார் என்பது உண்மை. அவரிடம் என்ன பேசினார், உண்மையிலேயே கடிதம் எடுத்துச் சென்றாரா என்பது குறித்து ஆதாரப்பூர்வமான எந்தத் தகவலும் வெளிவரவில்லை. அரசியல் காரணங்களால் போஃபர்ஸ் பிரச்னை இந்தியாவில் பெரிதுபடுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

1992 மார்ச் மாதம், வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது டோவோசுக்கு ரகசியக் கடிதம் கொண்டு சென்றார் என்கிற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து தனது பதவியை ராஜிநாமா செய்தார் சோலங்கி. அதற்குப் பிறகு அவர் அரசியலில் தலைதூக்கவே முடியவில்லை. தனது செயலுக்கு மிகப்பெரிய விலை தர வேண்டியிருக்கும் என்பதுகூடத் தெரியாதவரல்ல அவர். அது தெரிந்தும் தனது விசுவாசத்தை அவர் காட்டினார் என்பதைக் காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

சோலங்கி பிரச்னையின் பின்னணி இன்றுவரையில் மர்மமாகவே தொடர்கிறது. தனது 94-வது வயதில் மரணமடையும்வரை அதுகுறித்து அவர் வாய் திறக்கவில்லை.

மாதவ்சிங் சோலங்கியை மத்திய புலனாய்வுத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று நான்கு மணி நேரத்துக்கும் மேலாக பல அதிகாரிகள் சுற்றி அமர்ந்து விசாரணை நடத்தினார்கள் என்பது மட்டும்தான் வெளிவந்த தகவல். அவரிடமிருந்து ஏதாவது தகவல் கிடைத்ததா, அவர் கடிதம் எடுத்துச் சென்றது உண்மைதானா, யாரிடம் அதைக் கொடுத்தார், போஃபர்ஸ் விசாரணையை முடக்க அவர் முயற்சித்தாரா உள்ளிட்ட கேள்விகளுக்கான விடை, சிபிஐ அமைப்புக்கே கிடைக்கவில்லை எனும்போது வெளியுலகுக்கு எப்படித் தெரியவரும்...

மாதவ்சிங் சோலங்கியிடமான புலனாய்வுத் துறையின் விசாரணைதான் தேவே கௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சி கவிழ்வதற்கு உடனடிக் காரணம் என்று சொல்லலாம். அதுவரையில் வேண்டுமா, வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்த பல தலைவர்களும், காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியின் முடிவை ஆதரிக்க முற்பட்டனர். தங்களது நேரு குடும்ப விசுவாசத்தை, சோனியா காந்திக்குத் தெரிவிக்க அதை ஒரு வாய்ப்பாக அவர்கள் கருதினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தொடர்ந்து கட்சித் தலைமையை அவமானப்படுத்துவது, குற்றச்சாட்டுகளைச் சுமத்தி விசாரிக்க முற்படுவது என்று தேவே கௌடா அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் காரணமாக, ஐக்கிய முன்னணி அரசுக்குக் காங்கிரஸ் அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற முடிவைக் கட்சி எடுத்ததே தவிர, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை ஆதரித்தனரா என்று யாருமே கவலைப்படவில்லை.

சீதாராம் கேசரியின் வீட்டில் அவசர அவசரமாக சில முக்கியத் தலைவர்கள் கூடினார்கள். சீதாராம் கேசரியின் அழைப்பின்பேரில்தான் அந்தக் கூட்டம் நடந்ததா, இல்லை அந்தத் தலைவர்களின் வற்புறுத்தல் காரணமாக நடந்ததா என்று தெரியவில்லை.

நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சரத் பவார், ஜிதேந்திர பிரசாதா, பிரணாப் முகர்ஜி, அர்ஜூன் சிங், தாரிக் அன்வர் உள்ளிட்டோர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள். அவர்கள் என்ன பேசினார்கள், என்ன முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், காங்கிரஸ் காரியக் கமிட்டி (செயற்குழு) அன்று மாலையே கூடியது.

செயற்குழு உறுப்பினர்கள் 12 பேர் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்துக்கு சரத் பவாரும், ராஜேஷ் பைலட்டும் ஏனோ வரவில்லை. செயற்குழுக் கூட்டத்தில், தேவே கௌடா அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்கிற தலைவர் சீதாராம் கேசரியின் கோரிக்கை விவாதிக்கப்பட்டது என்பது மட்டும்தான் தெரியும்.

காங்கிரஸ் காரியக் கமிட்டியில், ஐக்கிய முன்னணி அரசுக்கான ஆதரவை விலக்குவது குறித்த விவாதம் நடக்கிறது எனும்போது, அதிகமாக அதிர்ச்சி அடைந்தது ஐக்கிய முன்னணிக் கட்சிகளோ அல்லது அதன் அமைச்சரவை சகாக்களோ அல்ல. காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள்தான்

பதற்றத்தில் இருந்தனர். அவர்களில் பலர் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் வீட்டில் குவிந்தனர்.

'ஆட்சிக் கவிழ்ப்பு என்று சொன்னால், மாற்று யோசனை இருக்கிறதா? மீண்டும் தேர்தலை சந்தித்தால், வெற்றிபெறுவோம் என்பது என்ன நிச்சயம்? இப்போது இருக்கும் இடங்கள் கூடக் கிடைக்காமல் போகலாம்' என்று அவர்களில் பலர் வெளிப்படையாகவே பேசத் தொடங்கிவிட்டனர். ராஜேஷ் பைலட் சொல்வது போல, மாற்று ஏற்பாடு இல்லாமல் ஆதரவை விலக்கிக்கொள்ள முடிவெடுத்தால் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படும் என்பது உறுதியாகவே தெரிந்தது.

'சீதாராம் கேசரி, ஜிதேந்திர பிரசாதா, அர்ஜூன் சிங், கருணாகரன், பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் எல்லோரும் மாநிலங்களவை உறுப்

பினர்கள். தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. நாங்கள் அப்படியல்ல. ஒரு வருடத்தில் மீண்டும் தேர்தல் என்றால், அதை எதிர்கொள்ளும் நிலையில் நாங்கள் இல்லை. அப்படியே எதிர்கொண்டாலும் வெற்றி வாய்ப்பு உறுதி இல்லை. அப்படி இருக்கும்போது எந்தவிதத் திட்டமோ, முன் யோசனையோ இல்லாமல் தேவே கௌடா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை நாம் விலக்கிக் கொள்ளக்கூடாது' என்பதுதான் சரத் பவார் வீட்டில் கூடியிருந்த பெரும்பாலான எம்.பி.க்களின் கருத்தாக இருந்தது.

சரத் பவார் வீட்டு வாசலில் ஏனைய சில பத்திரிகை நிருபர்களுடன் நானும் இருந்தேன். பெரும்பாலான எம்.பி.க்கள் உள்ளே சரத் பவாருடன் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். சில எம்.பி.க்கள் வாசல் புல்தரையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். நாங்கள் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது யாருமே எதிர்பார்க்காத விதத்தில், பிரணாப் முகர்ஜியின் அம்பாசிடர் கார் அந்த பங்களாவுக்குள் நுழைந்தது. காரில் இருந்து பிரணாப் முகர்ஜி இறங்கினார். பிரணாப் முகர்ஜியைத் தொடர்ந்து, எங்களுடன் பேசிக்கொண்டிருந்த எம்.பி.க்களும் சரத் பவாரின் வீட்டுக்குள் விரைந்தனர். நாங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதனால் வெளியில் காத்திருந்தோம். அடுத்த அரை மணி நேரத்தில், பிரணாப் முகர்ஜி கிளம்பிச் சென்று விட்டார்.

சீதாராம் கேசரி சார்பிலும், ஏனைய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் சார்பிலும் பிரணாப் முகர்ஜி தங்களது நிலைப்பாட்டை அவர்களுக்கு விளக்கியதாக அங்கே கூடியிருந்த எம்.பி.க்கள் சிலர் எங்களிடம் பகிர்ந்து கொண்டனர். சரத் பவாரின் அழைப்பின் பேரில்தான் பிரணாப்தா வந்தார் என்று அப்போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது.

'காங்கிரஸ் தலைமை குறித்து ஒருபுறம் விமர்சிப்பதும், இன்னொருபுறம் தேவையில்லாமல் போஃபர்ஸ் பிரச்னையை அவ்வப்போது கசியவிட்டுக் காங்கிரஸை பயமுறுத்துவதும் தேவே கௌடா அரசுக்கு வாடிக்கையாகிவிட்டது. தங்களை அண்டி, அவமானத்துடன் தொடர்வதைத் தவிர காங்கிரசுக்கு வேறு வழியில்லை என்று ஐக்கிய முன்னணி அரசு நினைத்தால் அதை எப்படி ஆதரிப்பது?' என்பதுதான் பிரணாப் முகர்ஜி அவர்களிடம் தந்த விளக்கம் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு நாங்கள் பிரிந்தோம்.

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திலும், சரத் பவார் வீட்டில் கூடிய கூட்டத்திலும் கலந்து கொள்ளாதவர்கள் இருவர். ஒருவர் கே.கருணாகரன். மற்றொருவர் ராஜேஷ் பைலட். காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முன்னணி ஆட்சி அமைய வேண்டும் என்பது ராஜேஷ் பைலட்டின் கருத்து என்றால், மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் கட்சியும், அரசில் பங்கேற்கும் விதத்தில் ஐக்கிய முன்னணி அரசு என்பது கருணாகரனின் நிலைப்பாடு.

கருணாகரன் என்னதான் சொல்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அவரது சுநேரிபாக் சாலை வீட்டுக்குச் சென்றபோது, வீடு அமைதியாக இருந்தது. ஒருவேளை கருணாகரன் ஊருக்குச் சென்றுவிட்டாரோ என்றுகூட நான் சந்தேகப்பட்டேன். உள்ளே தனியாக அமர்ந்திருந்தார் அவர். ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார் என்று நினைக்கிறேன். நான் அறைக்கு வெளியே தயங்கி நின்றேன். பார்த்ததும் உள்ளே அழைத்தார்.

'மூப்பனார்ஜி ஏன் தயங்குகிறார் என்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை கருணாநிதி அவர் மீண்டும் காங்கிரஸூடன் இணைவதைத் தடுக்கிறாரோ என்று சந்தேகமாக இருக்கிறது...' என்று என்னிடம் அவராகவே சொன்னார்.

நான் தயக்கத்துடன் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன். அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

'நீங்கள் விரும்புவதுபோல, மூப்பனார் தலைமையில் ஐக்கிய முன்னணி அரசு அமைந்து, அதில் காங்கிரஸூம் அங்கம் வகிக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். அந்த அமைச்சரவையில் திமுகவும் இருப்பதைக் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளுமா? காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணியை ஆதரிக்க இடதுசாரிகள் தயாராக இருப்பார்களா? 52 உறுப்பினர்கள் கொண்ட இடது முன்னணியும், 17 உறுப்பினர்கள் கொண்ட திமுகவும் இல்லாமல் அந்தக் கூட்டணிக்கு எப்படி பெரும்பான்மை கிடைக்கும்?'

'நான் அதை யோசிக்காமல் இல்லை. இப்போது காங்கிரசும், மார்க்சிஸ்ட்டும் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதுபோல, அவர்கள் ஆதரவு அளிக்கட்டும். மதச்சார்பின்மையில் அவர்களுக்கு அக்கறை இருந்தால் அதற்குத் தயாராக வேண்டும்' என்றார் கருணாகரன்.

கருணாகரன் என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, சீதாராம் கேசரி ரகசியமாகக் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு விரைந்து கொண்டிருந்தார்...

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com