11ஆண்டு கனவு நனவானது...

'சென்னையில், 2013-இல் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில், மேக்னஸ் கார்ல்சனிடம் விஸ்வநாதன் ஆனந்த் தோற்க நான் சிதைந்தேன்.
குகேஷ்
குகேஷ் Micha? Walusza
Published on
Updated on
3 min read

'சென்னையில், 2013-இல் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில், மேக்னஸ் கார்ல்சனிடம் விஸ்வநாதன் ஆனந்த் தோற்க நான் சிதைந்தேன். மீண்டும் இந்தியா சாம்பியனாக நான் முயலுவேன் என்று தீர்மானித்தேன்.

பதினொறு ஆண்டுகள் கழிந்து அது நனவாகியுள்ளது. எதிராளி டிங் செய்த தவறை நான் புரிந்து கொண்டு, சட்டென்று அந்தத் தவறை வெற்றிப்படியாக மாற்றிவிட்டேன். செஸ் சாம்பியனாதால், நான் உலகின் சிறந்த செஸ் வீரன் என்று அர்த்தமல்ல' என்கிறார் குகேஷ்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக குகேஷுக்கு பயிற்சி அளித்து வருபவர் போலந்து நாட்டுக்காரரான கிரஸிகோர்ஸ் கஜெவ்ஸ்கி. இவர், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கும் பயிற்சி அளித்தவர். ஆந்திராவின் ஹரிகிருஷ்ணா, குகேஷுக்கு இரண்டாவது பயிற்சியாளர்.

சிங்கப்பூரில் டிசம்பரில் நடக்கவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 'குகேஷ் - டிங் லிரென்' போட்டியில் யார் வெற்றி பெறுவார் என சர்வதேச செஸ் கூட்டமைப்பானது ஒரு மாதத்துக்கு முன் நடத்திய கணிப்பின்படியே, குகேஷ்தான் வெற்றி பெற்றுவிட்டார். இதனால், குகேஷிக்கு சுமார் 11.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசும் ரூ.5 கோடியை அறிவித்துள்ளது.

பதிநான்காவது சுற்றில் சுமார் நான்கு மணி நேரம் போராடி வென்றதன் மூலம் தமிழக வீரர் குகேஷ் உலக சாம்பியன் ஆகியிருக்கிறார். ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் தனது இருபத்து இரண்டாம் வயதில் உலக செஸ் சாம்பியனான நிலையில், பதினெட்டு வயதில் குகேஷ் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

குகேஷின் ஆட்டம் குறித்து விஸ்வநாதன் ஆனந்த் கூறுகையில், 'குகேஷ் சிறிதும் சளைக்காமல் எதிர்சவால்களை ஆரம்பம் முதலே கொடுத்துவந்தார். அதிக சுற்றுகள் டிராவில் முடிந்தன. சில சுற்றுகளில் குகேஷ், டிங் வெல்ல வாய்ப்புகள் பளிச்சிட்டன. டிங் இந்த மாதிரி தவறு செய்ய மாட்டார். குகேஷ் சலிக்காமல் சளைக்காமல் தொய்வு இயலாமல் டிங்கைத் தொடர்ந்த வேகம்தான், டிங்கை தவறு செய்ய வைத்திருக்க வேண்டும். குகேஷின் மகத்தான வெற்றியால் பலரும் செஸ் பயில வருவார்கள். குகேஷின் வெற்றி செஸ் ஆர்வலர்களுக்கு உற்சாகம் தரும்' என்கிறார்.

குகேஷ் 2006 மே 29-இல் சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை ரஜினிகாந்த், திறமையான காது-மூக்கு-தொண்டை சிறப்பு மருத்துவர். தாய் பத்மா, சென்னை மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர். குகேஷ் ஏழு வயதில் சென்னையில் தான் படித்து வந்த வேலம்மாள் பள்ளியில் செஸ் கற்கத் தொடங்கினார்.

செஸ் குகேஷின் கவனத்தைக் கவரவே நான்காம் வகுப்புடன் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டார். இதற்காகவே தனது மருத்துவப் பணியை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ரஜினிகாந்த் விட்டுவிட்டார்.

விஜயானந்த் செஸ் அகாதெமியில், குகேஷ் காலை 9.30 மணியளவில் வகுப்பு தொடங்கும். ஆரம்ப நாள்களில், குகேஷுக்கு ஒரு நாளைக்கு 70 சதுரங்கப் புதிர்கள் கொடுக்கப்படும். இரவு 7.30 மணி வரை வகுப்புகள் நடக்கும். செஸ் ஜாம்பவான் ஆனந்த விஸ்வநாத்தின் 'வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றவர்களில் குகேஷும் ஒருவர்.

கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னாவிடம் பயிற்சி பெறத் தொடங்கியதும் குகேஷுக்கு வரப்பிரசாதம். அப்போது குகேஷிக்கு வயது பதினொன்று.

வீரர்கள் 'செஸ் என்ஜின்' எனப்படும் செயலியைப் பயன்படுத்துவார்கள். எதிராளியின் நகர்வுகளை அலசி ஆய்வு செய்து அவற்றுக்குச் சவால் விடும் நகர்வுகளை பரிந்துரைக்கும்.

இத்தகைய 'செஸ் என்ஜின்'களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு விஷ்ணு பிரசன்னா சொன்ன ஆலோசனையை குகேஷ் ஏற்றார். அதனால் தனது அடுத்த காய் நகர்த்துதலை அவரே பலமுறை யோசித்து துல்லியமாகக் கணிக்க முடியும்.

இதனால், எதிராளியின் அடுத்த நகர்வைக் கணிக்கும் திறமையை குகேஷ் வளர்த்துகொண்டார். 2023 செப்டம்பரில், ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை முந்தி, தரவரிசையில் இந்தியாவின் மிக உயர்ந்த தரவரிசை வீரராக குகேஷ் உயர அந்தப் பயிற்சி காரணமாக அமைந்தது.

ஆனந்த்தும் தன் பங்குக்கு குகேஷை தொடக்கத்திலிருந்தே வழிநடத்திவந்தார். போலந்தின் கிரஸிகோர்ஸ் கஜெவ்ஸ்கியிடம் குகேஷ் பயிற்சியைத் தொடங்க ஆனந்த் ஏற்பாடு செய்தார். குகேஷ் பிரபல மனநலப் பயிற்சியாளர் பேடி அப்டனின் ஆலோசனைகளையும் பெற்று வந்தார்.

குகேஷ் தனது பன்னிரெண்டாம் வயதில், 'ஆசிய இளைஞர்' செஸ் சாம்பியன்ஷிப்'பில் ஐந்து தங்கப் பதக்கங்களைப் பெற்றார். 2023-இல் குகேஷ் '2750' மதிப்பீட்டை எட்டிய இளைய சதுரங்க வீரரானார்.

திவ்யா
திவ்யாPicasa

பெண்களுக்கும் அங்கீகாரம் தேவை...

'என் மேல் வரும் அழுத்தத்தைச் சமாளிக்கவும், அழுத்தத்தை எப்படி கையாள்வது என்றும் கற்றேன். எனது ஆட்டத்தில் வலுவான செயல்திறன் வெளிப்பட்டாலும், அதனை தள்ளிவிட்டு பார்வையாளர்களின் கவனம் எனது உடைகள், தலை முடி, உச்சரிப்பு போன்ற அம்சங்களில் கவனம் செலுத்துகின்றனர்.

பெண்கள் விளையாடும்போது அவர்கள் திறமையைக் கவனிக்கவில்லை. ஆண் வீரர்களைப்போல, பெண் போட்டியாளர்களையும் சமமாக நடத்துங்கள். பெண் வீராங்கனைகளின் திறமைகள், சாதனைகளுக்காக அங்கீகரிக்கப்பட வேண்டும்' என்கிறார் திவ்யா தேஷ்முக். பத்தொன்பது வயதாகும் திவ்யா, பிளஸ் 2 முடித்துள்ளார். பெற்றோர் இருவரும் டாக்டர்கள்.

உலகின் தலைசிறந்த ஆண், பெண் ஜூனியர்ஸ் சாம்பியன்கள் இருவரும் இந்தியர்கள்தான். ஆகஸ்ட் 2024 தரவரிசைப் பட்டியலில் குகேஷ் 2,766 புள்ளிகளுடன் உலகின் நம்பர் ஒன் ஜூனியராகவும், 'இன்டர்நேஷனல் மாஸ்டர்' திவ்யா தேஷ்முக் 2,472 ரேட்டிங்குடன் பெண்கள் பிரிவில் உலகின் நம்பர் ஒன்னாகவும் உள்ளனர். திவ்யாவின் இப்போதைய மதிப்பீட்டுப் புள்ளிகள் 2,493.

பல்கேரியாவின் பெலோஸ்லாவா க்ரஸ்டெவாவைத் தோற்கடித்து, சாத்தியமான 11 புள்ளிகளில் 10 புள்ளிகளை திவ்யா பெற்று வெற்றி பெற்றார். 2024 ஜூனில் குஜராத் காந்தி நகரில் நடைபெற்ற 'உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்' போட்டியின்போது, திவ்யா '20 வயதுக்கு கீழ்' பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

'கிராண்ட்மாஸ்டர்' பட்டத்தைப் பெற ' டஃபிடே' தரவரிசை பட்டியலில் 2,500 புள்ளிகளை மூன்று முறை பெற்றிருக்க வேண்டும்.

ரஷியாவில் அதிகபட்சமாக 364 பேர் உள்ளனர். பிறநாடுகளில் உள்ளோரின் எண்ணிக்கை: ஜெர்மன்-118, உக்ரைன்- 108, அமெரிக்கா- 89, இந்தியா- 84.

இந்தியாவில் உள்ள 84 பேரில் 31 பேர் தமிழ்நாட்டின் பங்களிப்பு. இதனால், 'செஸ் விளையாட்டில் இந்தியாவின் முதன்மை மாநிலம்- தமிழ்நாடு' என்றும் 'இந்தியாவின் செஸ் தலைநகரம்- சென்னை‘ என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

பிற மாநிலங்களில்: மகாராஷ்டிரா-12 , மேற்கு வங்கம்- 11, தில்லி, தெலங்கானா- தலா 6, ஆந்திரம், கர்நாடகா- தலா 4, கேரளா- 3, ஒடிஸா, கோவா, குஜராத்- தலா 2, ஹரியாணா, ராஜஸ்தான்- தலா 1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com