'இலக்கை நோக்கி பயணித்து, இலக்கை அடைவது என்பது மட்டுமல்ல; வாழ்நாள் முழுவதும் கலையுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதே என்னுடைய ஆசை' என்கிறார் கிரிஜா ஜெயராஜ்.
நடனக் கலைஞர், எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், கலைகளைப் பரப்பும் கலைப்பறவை ... என்று பன்முகத் தன்மைகளைக் கொண்டவர். 'பிறப்பால் இலங்கை; வளர்ப்பால் ஆஸ்திரேலியா; கலைகளால் இந்தியா; வாழ்வது ஆஸ்திரேலியா' என வாழ்பவர்.
அவரிடம் பேசியபோது:
'எனது குடும்பமே கலைக் குடும்பம். எனது தாத்தா இலங்கை திரையுலகத் தந்தை எஸ். எம். நாயகம். எனது தந்தை ஜெயராஜ், திரைப்படத் தயாரிப்பாளர். தாயார் சாந்தா, வானொலி - தொலைக்காட்சிகளில் எண்ணற்ற நிகழ்ச்சிகளை அளித்தவர்.
மொழிபெயர்ப்பாளர். எனது தாய் காட்டிய ஊக்கமுமே, எனது தந்தை அளித்த பொருளாதார உதவியுமே என்னை முன்னேற்றியது. எனக்கு மூன்று வயதிலேயே கலை ஆர்வம் தொற்றிக் கொண்டது. திரைத்துறையில் பட்டப் படிப்பை முடித்தேன்.
நடிகர் கமலஹாசன் நடித்த, 'சலங்கை ஒலி ' திரைப்படமே எனக்கு பெரிய தாக்கத்தை அளித்தது.
தமிழ்நாட்டில் மதுரை ஆர்.முரளிதரனிடம் நான் முறையாக பரதநாட்டியத்தைக் கற்றேன். ஆஸ்திரேலியாவில், சாந்தானந்த சுவாமிகளின் 'டெம்பிள் ஆஃப் பைன் ஆர்ட்ஸ்' குழுவினரிடமும், மெல்பர்னில் மொனிகா சிங்கிடம் ஒடிசியும், மெல்பர்னில் தீபாஞ்சலி பேடி யிடம் கதக் பயிற்சியையும் கற்றேன். தற்போது தஞ்சாவூர் கிட்டப்பா பிள்ளையின் மகன் சந்திரசேகரனிடம் நட்டுவாங்கம் கற்கிறேன். அத்துடன் மெல்பர்னில் ஸ்ரீராமிடம் 'நாட்டிய சாஸ்திரம்' கற்கிறேன்.
இந்தியா, இலங்கை ,ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பரதம், மோகினி, குச்சிப்பிடி, ஒடிசி, சமகாலக் கலைஞர்கள் நானூறு பேரை ஒருங்கிணைத்து 'சாஸ்திரம்' எனும் கலைநிறுவனத்தை 2011- இல் உருவாக்கினேன். இவர்கள் வாயிலாக, ஆஸ்திரேலியாவை மையமாக வைத்து, பாரம்பரியமான கலைகளை வளர்த்து வருகிறேன்.
ஆஸ்திரேலியாவில் மற்ற நாடுகளின் கதைகளையும் கலைஞர்களையும் ஊக்குவிக்கின்றனர். அந்த வகையிலே மேற்கு ஆஸ்திரேலியா அரசின் அங்கீகாரத்தையும், நிதியுதவியும் பெற்று, 'நாட்டியவந்தனம் ' என்ற அரிய நிகழ்ச்சியை பெர்த் நகரில் அரங்கேற்றினேன்.
இதற்காக, என்னுடன் ஐந்து தயாரிப்பாளர்களையும் அங்கீகரித்து 'ஃபெல்லோஷிப்' எனும் விருதை மேற்கு ஆஸ்திரேலிய அரசு வழங்கியுள்ளது.
பலவகை நாட்டியங்களை முறையாகப் பயிற்சி பெற்று 'சிருங்காரம் ' என்ற நவீன பாணியில், பழமையையும் புதுமையையும் ஒன்றிணைக்கின்ற பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
இதுவரை 15 திரைப்படங்களைத் தயாரித்துள்ளேன். அரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரம் வரை ஓடும் படங்களான இவை அனைத்துமே நடனக் கலைகளோடு தொடர்புடையவை. இவை சர்வதேச அளவில் பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளன.
தொழில்நுட்பத்தில் வித்தியாசமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறேன். படைப்புகளுக்கான 'ஸ்கிரிப்ட்' தயாரிப்பதுடன் இயக்கத்தையும் நானே மேற்கொள்வதால், மனநிறைவை அளிக்கிறது.
அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியாவில் கொல்கத்தா திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளேன். அங்கே என்னுடைய திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டு, பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
உலகத்தின் பார்வையில் பெரும்பாலும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஒன்றாகதான் உள்ளன. என்றாலும், நாகரிக நாடுகளில் இந்த நிலை மேம்பட்டு உள்ளது.
என்னுடைய 'சாஸ்திரம்' பரதநாட்டிய நிகழ்ச்சி சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் நடத்த வேண்டும் என்ற ஆசை. அது கரோனா காலத்தில் நிறைவேறியது. அன்றைய தினம் 'உலக நாட்டிய தினம்' என்பதாகவும் அமைந்தது. தில்லை தீட்சிதர்கள் ஆதரவு அளித்து ஊக்குவித்தது எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு.
என் வாழ்க்கையை கலைக்காகவே ஒப்படைத்து இறுதி மூச்சு வரை வாழ வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது. இன்றைய உலகத்திலே வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. அதற்கு முயற்சிகள் மட்டும் போதாது; விடாமுயற்சியும் தேவை. அதன் மூலம் எந்த இலக்கையும் அடைய முடியும்.
சென்னையில் 'செம்மண்
2025 ஜனவரி 19-ஆம் தேதியன்று மாலை சென்னை ஆர்.ஆர். சபாவில் 'செம்மண் ' எனும் புதுமையான நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்தியா, இலங்கை ,கனடா, ஜெர்மனி ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர் 140 கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக எனது குழுவினருடன் இந்தியாவுக்கு வந்துள்ளேன்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் எவ்வாறு தாங்கள் கற்ற கலைகள் மூலமும், தமிழ் மொழியின் மூலமும், தங்களது அடையாளத்தை நிலை நிறுத்துகிறார்கள் என்பதே செம்மண்ணின் கருவாகும்.
இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு புதுமையானதாகவும், வியக்கத்தக்க வகையிலும், பிரம்மாண்டத்தை உணர்த்தும் வகையிலும் இருக்கும்' என்கிறார் கிரிஜா ஜெயராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.