
மிகவும் பேசப்பட்ட மொரிஷியஸ், சீஷெல்ஸ், மாலத் தீவுகளைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறியிருப்பது இந்தோனேஷியாவின் பாலித் தீவுகள். இந்தியாவிலிருந்து சுமார் ஏழு மணி நேர விமானப் பயணத் தூரத்தில், இந்திய பெருங்கடலில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக பாலித் தீவுகள் அமைந்துள்ளன. இந்தோனேஷியாவில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை என்றாலும், பாலியில் ஹிந்துக்கள்தான் பெரும்பான்மையினர்.
இந்தியாவுக்கும், ஹிந்து மதத்துக்கும் நெருக்கமான தொடர்புள்ள பாலித் தீவுகளில் இயற்கை என்னும் இளைய கன்னியின் அழகு பொங்கி வழிகிறது. சுத்தமான கடற்கரைகள், நெடிய மலைகள், நீர்வீழ்ச்சிகள், கடலில் நிற்கும் குன்றுகள், வயல்கள்... என்று எங்கும் பசுமையாக இருக்கும். வாழை, கரும்பு, தென்னை மரங்கள் மிகுதியாகவே உள்ளன.
வீடுகள், தெருக்கள், சாலை சந்திப்புகளில், மலை உச்சிகளில் என்று எங்கு பார்த்தாலும், கோயில்கள்தான். ஹிந்து, புத்த மதங்கள் இந்தியாவிலிருந்து பரவியிருந்தாலும், எந்த மன்னர் ஆட்சியில் பரவியது என்று சொல்ல முடியாத சரித்திரம் பாலிக்குச் சொந்தம்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கடாரம் வென்ற ராஜேந்திர சோழன், பல்லவர்கள் ஆதிக்கம் செய்திருந்தாலும், தமிழகக் கோயில்களைப் போல பாலியில் கோயில்களைக் கட்டவில்லை. பாலிவாசிகள் ஹிந்து மதத்தை ஏற்றாலும், தங்களது ஆதி இறைவழிபாடுகளுக்கும் கட்டடக் கலைகளுக்கும் தனி வடிவம் கொடுத்திருக்கின்றனர்.
பாலி மக்கள் கடவுள்களுக்குப் படைக்கும் ஓலையால் பின்னப்பட்ட சிறு தட்டில் பல வகைப் பூக்கள், புகையும் ஊதுவத்திகள், சிறிய வட்ட வடிவ பிஸ்கெட், சிகரெட் வைத்துப் படைப்பதிலிருந்து வழிபாடுகளின் மாற்றங்களை உறுதி செய்ய முடிகிறது.
விஷ்ணு, பிரம்மா, கணேசரை வழிபடும் பாலி மக்கள் கோயில்களைப் பெரும்பாலும் பூட்டியே வைத்திருக்கின்றனர். கோயில்களுக்குள் செல்லும்போது, பக்தர்கள் அங்கிருக்கும் வண்ணக் கைலிகளையும், ஆரஞ்சு வண்ண ரிப்பன்களையும் அணிய வேண்டும். கணேசர் கோயில்கள் பாலியில் அதிகமாகவே இருக்கின்றன.
கணேசா, கிருஷ்ணா, விஷ்ணு, சிவா , கர்மா, கருடா, குஸ்தி என்று பல இந்திய மொழி சொற்கள் பாலி மொழியில் இருக்கின்றன. 'பிள்ளையார்' என்று கூட கணேசரை குறிப்பிடுகின்றனர்.
மத்திய பாலியின் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 'தீர்த்த எம்புல்' கோயில் மூன்று முற்றங்களைக் கொண்டிருக்கிறது. இங்கு துளிகளிலிருந்து பாயும் புனித நீரில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று காத்திருக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் சேர்ந்து குளிக்கலாம். பெண்கள் அங்கு தரும் நீளமான துணிகளைச் சுற்றிக் கொள்ள வேண்டும்.
மும்மூர்த்திகளின் சக்தியான உலுவத்து கோயில் பிரபலமானது. பாலி கடலில் அமைந்துள்ள மிகப் பெரிய பாறையில் அமைந்திருக்கும் கோயில்தான் தன்னாலாட் கடல் கோயில். பாலி பகுதியில் கடலில் கட்டப்பட்ட ஏழு கோயில்களில் ஒன்றான தன்னாலாட் கோயிலில், அலைகள் அதிகமாக இருக்கும்போது, 'பாறை பாதை' கடலால் மூடப்படுவதால் கோயிலுக்குச் செல்ல முடியாது.
பாலியில் அந்த நாட்டின் தலைவர்கள் சிலைகள் மிகக் குறைவு. ஆனால், பயமுறுத்தும் கிங்கிரர்கள் சிலைகளும், கலைநயமிக்க அழகிய சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.
'கெசக் ராமாயண' கூத்தை பாலி முழுவதும் பல இடங்களில் பல குழுக்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக நடத்திவருகின்றன. ஒரு மணி நேரம் நடக்கும் கூத்தில், நடிகர்கள், ஒப்பனை, உடைகள், நடிப்பு என அனைத்தும் பிரமாதமாக அமைந்துள்ளன.
ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் நடித்திருக்கும் 'ஈட் ப்ரே லவ்' திரைப்படத்தின் சில காட்சிகள் பாலியில் 2009-இல் படம்பிடிக்கப்பட்டு, உலக அளவில் பிரபலமானது. ஐந்து நிமிடத்துக்கு ஒரு விமானம் வந்து இறங்கும் 'குஸ்திங்குரா ராய்' சர்வதேச விமான நிலையத்தில், மிகப் பெரிய பயணிகள் விமானங்களும் தரை இறங்கலாம்.
பிரசித்தி பெற்ற பாலி ஊஞ்சலானது நீண்ட கயிறில் தொங்கும். ஒரு பக்கம் நிலத்திலும், மறுபக்கம் பள்ளத்தாக்கிலும் ஆடும். பெண்களுக்கு மிக நீளமான சேலையை அணியச் சொல்லி புதிய கோணங்களில் படம் எடுத்துத் தருகின்றனர்.
'நுசா பெனிடா' பாலியின் தென்கிழக்கில் உள்ள ஒரு அற்புதத் தீவாகும். செங்குத்தான நாட்டுப் பாதைகள், திடீரென்று அதளபாதாளத்தில் இறங்கும் பாதைகளில் வாகனத்தில் பயணிப்பதே புது அனுபவம். 'நுசா பெனிடா'வின் முதன்மையான ஈர்ப்பு 'கெலிங்கிங் பீச்' ஆகும்,
கடலில் மிகப் பெரிய மரப்பல்லி கிடப்பதுபோல மலை அமைந்துள்ளது. மலையின் ஒருபுறம் சூரிய ஒளியில் தகதகக்கும் 'பளிச்' என்றிருக்கும் பீச். மலையில் உச்சியில் நின்று கீழே பார்க்கலாம். பீச் வரை இறங்கப் பாதை உண்டு. ஆனால், நடுத்தர வயதினர், முதியோர் எளிதாக கீழே இறங்கலாம். ஆனால் மீண்டும் ஏற முடியாது. அதனால் ராட்சதக் கிரேன் கொண்டு சுற்றுலாப் பயணிகளை மலையின் உச்சியிலிருந்து பீச்சில் இறக்கி, பிறகு அவர்களை அழைத்துகொள்ளும் வசதிகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
கடைகளில் தேநீர் கிடைப்பது அரிது. காபி கிடைக்கும். இந்தோனேஷியாவில் விலை எல்லாம் லட்சக்கணக்கில்தான். பணமதிப்பு மிகவும் குறைவு. ஆயிரம் ரூபாய்க்கு இந்தியாவில் கிடைக்கும் ஐந்து ரூபாய் மிட்டாய்தான் பாலியில் கிடைக்கும். ஐநூறு ரூபாய் பாலி நாணயம் இருந்தாலும் அதைக் கொண்டு குண்டூசி கூட வாங்க முடியாது. ஆப்பிள் கிலோ ஐம்பதாயிரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.