

என் உறவினர் மகள் கல்லூரியில் படித்து வந்தார். திடீரென்று மன அழுத்தம் காரணமாக, சித்த பிரமை பிடித்தவள் போல் இருக்கிறாள். இதைக் குணப்படுத்த ஆயுர்வேத மருந்துகள் உள்ளதா?
-எம்.சிவசங்கரன், சென்னை-87.
சக்ரதத்தர் எனும் ஆயுர்வேத அறிஞர் நான்கு வகையான மூலிகைப் பயன்பாடுகளை சித்த பிரமை மற்றும் மனம் பேதளித்துக் கஷ்டப்படுபவர்களுக்காகப் பரிந்துரை செய்திருக்கிறார்.
ஐம்பது மில்லி வல்லாரை இலைச்சாறை ஒரு கிராம் அளவுள்ள கொட்டம் எனும் சீமக்கொட்டம் எனும் மூலிகைப் பொடி கலந்து, பத்து மில்லி தேனும் விட்டுக் குழைத்துச் சாப்பிடுதல்.
ஐம்பது மில்லி வெண்பூசணிச் சாற்றில் மேற்குறிப்பிட்ட அளவில் கொட்டம், தேன் கலந்து சாப்பிடுதல்.
ஐம்பது மில்லி வசம்புக் கஷாயத்துடன் கலந்த ஒரு கிராம் கொட்டம், பத்து மில்லி தேன் சாப்பிடுதல்.
ஐம்பது மில்லி சங்க புஷ்பி சாறுடன் மேலுள்ளது போல கொட்டம், தேன் கலந்து சாப்பிடுதல்.
மேற்குறிப்பிட்ட நான்கு வகையிலும், எது தங்களால் சேகரித்துத் தர முடியுமோ, அதைத் தரலாம். நான்கு வகைகளையும் சாப்பிட வைக்க முடியும் என்றால் அதுவும் மிக நன்மையே தரும்.
'பெண்குயில் பறவையைச் சமைத்து உண்ட பிறகு, காற்றோட்டம் இல்லாத அறையில் படுத்துக் கொள்வதால் மறந்துபோன வாழ்வின் நினைவைப் பெறுவதற்கும், மனம் சார்ந்த உணவுகள் திரும்புவதற்கும், மன உற்சாகத்துக்கும் பயன்படும்' என்ற ஒரு குறிப்பு 'பைஷஜ்யரத்னாவளி' எனும் ஆயுர்வேத நூலில் காணப்படுகிறது.
சாம்பல் நிற பூசணிக்காய் விதையினுள்ளே இருக்கும் சத்தான பகுதியை பத்து கிராம் எடுத்து நன்கு இடித்து, அதில் பத்து மில்லி தேன் விட்டு குழைத்து, மூன்று நாள்கள் சாப்பிட மனம் சார்ந்த சித்த பிரமை உபாதை நீங்கும்.
பனை மரத்தின் மூற்றாத இளம் தண்டிலிருந்து கிடைக்கும் சாறை தேனுடன் கலந்துச் சாப்பிட, பித்து பிடித்த நிலை மாறும். இதுபோன்ற உபாதை உள்ளவர்களுக்கு கடுகெண்ணெய்யை பத்து- பதினைந்து மில்லி பருகச் செய்து, ஐந்து- ஆறு சொட்டுகள் மூக்கினுள் விட்டு உறியச் செய்து உடலெங்கும் கடுகெண்ணெய்யைத் தடவி ஊற வைத்துக் குளிக்கச் செய்து செய்முறையும் நல்லதே.
ஊறவைக்கும்போது, அந்த நபரை உடலில் வெயில் படுமாறு சாய்ந்த நிலையில், அமரச் செய்வது மிகவும் நல்லது.
சுமார் பத்து வருடங்கள், நெற்களஞ்சியம் நடுவே வைத்திருந்த பசு நெய்யை உருக்கி பருகச் செய்வதன் வாயிலாக, பல மூளையைச் சார்ந்த உபாதைகளைக் குணமாக்க இயலும் என்று சக்கரதத்தார் மேலும் கூறுகிறார்.
பூசநட்சத்திர நன்னாளில் மர மஞ்சனை தூளாக்கி, தேன்விட்டு அரைத்து குளிகைகளாக்கி வைத்துகொண்டு, துளி நெய்விட்டு இழைத்துக் கண் இமைகளின் உள்ளே கண்மை போல இட்டு விடுவதால், சித்த பிரமை நீங்கும் என்று அவர் மேலும் கூறுகிறார்.
காய்ந்த வேப்பிலை, வசம்பு, பெருங்காயம், கடுகு போன்றவற்றைப் புகைத்து முகர்வதன் மூலமாக, சித்தபிரமை நீங்கும் என்று சக்ரத்தாரின் அறிவுரை கூறுகிறது.
கொட்டம், அஸ்வகந்தா, இந்துப்பு, கருஞ்சீரகம், சீரகம், சுக்கு, குரோசானியவாணி, கறுப்பு மிளகு, வட்டத்திருப்பி, சங்கபுஷ்பி, வசம்பு, வல்லாரை ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சூரண மருந்தை ஒரு கிராம் எடுத்து ஆறு மில்லி நெய், பன்னிரெண்டு மில்லி தேன் குழைத்துச் சாப்பிட, புத்திக் கூர்மை, பொறுமை, ஞாபகச் சக்தி மற்றும் பாட்டெழுதும் திறமை வளரும் என்று பாவபிரகாசர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.