பேல் பூரி

'கற்காடு, பெரியகாடு, எறும்புகாடு, துவரங்காடு, நாவற்காடு''.
பேல் பூரி
Published on
Updated on
2 min read

கண்டது

(கன்னியாகுமரி மாவட்டத்தில் 'காடு' என்ற பெயரில் அமைந்த ஊர்கள்)

'கற்காடு, பெரியகாடு, எறும்புகாடு, துவரங்காடு, நாவற்காடு''.

-கே.எல்.புனிதவதி, கோவை-17.

(மதுரை தல்லாகுளம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள ஒரு உணவகத்தின் பெயர்)

'கறிகஞ்சி''

-சீனி.செந்தில்குமார், தேனி.

(திருச்சியில் ஓர் உணவகத்தில் எழுதியிருந்தது)

'உங்கள் தட்டில் இருக்கும் சோற்றுப் பருக்கை

பயிறாக இருக்கும்போது

எலிகளிடமிருந்து தப்பித்து

கதிர் அடிக்கும்போதும்

மூட்டை கட்டும்போதும்

அரைக்கும்போதும்

புடைக்கும்போதும்

சிந்தாமல் தப்பித்து

கடைகளில் விற்பனையாகும்போது

கொட்டாமல் தப்பித்து

இப்போது தங்கள் தட்டில்

சுவையான உணவாக இருக்கும்போது

அதை வீணாக்குவது நியாயமா?

-ஸ்ரீ.கே.இ, ஸ்ரீரங்கம்.

கேட்டது

(திருச்சி ரயில் நிலையத்தில் இரு நண்பர்கள் பேசியது)

'மச்சான்... எனக்கு லவ்வர் கிடைச்சிட்டா...''

'ரொம்பவும் செலவு பண்ணியாடா...?''

'இல்லைடா.. அப்பப்போ.. அவ செல்போனுக்கு ரீசார்ஜ் பண்ணுவேன்.. அவ்ளோதான்...''

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

(திருச்சி பூங்கா ஒன்றில் நடைபயிற்சியில் இருவர்)

'இவ்வளவு மெதுவாக ஆமை மாதிரி நடக்கிறீங்களே.. ஏன்..?''

'சீக்கிரத்துல நடந்து முடிச்சிட்டால், வீட்டுக்குப் போகணுமே... அதான்..?''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

(மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் தந்தையும் மகனும் பேசியது)

'மாட்டுக்கு தமிழ் பேச தெரியுமாப்பா?''

'அதெப்படிப்பா தெரியும். அது ஐந்து அறிவு ஜீவன்..''

'பின்ன எப்படிப்பா நம்ம மாடு 'அம்மா'ன்னு கத்துது...?''

-பி.கனகராஜ், மதுரை.

யோசிக்கிறாங்கப்பா!

வாழ்க்கையில் மாற்றம் எங்கிருந்தும் வராது.

நீ மாறினால்தான் வரும்.

-சங்கரி முத்தரசு, கோவை-25.

மைக்ரோ கதை

கணவன் சுரேஷின் தம்பியின் மகள் திருமணத்துக்கு ஒருவாரமாக தான் வரமுடியாது என்று சண்டை பிடித்தாள் மனைவி ரோஜா.

'உனக்கு என்னதான் பிரச்னை'' என்றான் சுரேஷ்.

'எனக்கு நல்ல சேலை இல்லை'' என்றதும், மனைவிக்காக அதிக விலையில் பட்டுச் சேலையை வாங்கி வந்து தந்தான் சுரேஷ்.

ஆனால் திருமணத்தின்போதோ, ரோஜா வேறு சேலையை உடுத்திக் கொண்டு வந்தாள்.

இதைப் பார்த்த சுரேஷ், 'ஏன் நான் வாங்கிக் கொடுத்த சேலையைக் கட்டவில்லையா?'' என்று கோபமாகக் கேட்டான்.

இதற்கு ரோஜா, 'உங்க தம்பி மனைவியைப் பாருங்கள். அவ புது சேலையே கட்டவில்லை. கல்யாணத்துக்கு புது சேலை அணியட்டும் சொல்லி, நான் உங்கக்கிட்ட வாங்கி, அவளுக்குக் கொடுத்தேன்'' என்றாள்.

சுரேஷ் மகிழ்ச்சியில் திளைத்தான்.

-பி.ஜெகநாதன், கோவில்பட்டி.

எஸ்எம்எஸ்

உன்னை புரிந்தவர்களுடன் நெருக்கமாய் இரு.

புரியாதவர்களுடன் விலகிவிடு.

-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

அப்படீங்களா!

அனைத்து வகையிலான தேடுதல்களுக்கும் விரிவான தகவல்களை அளிக்கும் சாட்ஜிபிடி தற்போது வாட்ஸ் ஆஃப்பில் அறிமுகமாகி உள்ளது.

கூகுள் தேடுதலுக்கு மாற்றாக, 2022-இல் அறிமுகமான சாட்ஜிபிடி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப அனைத்துத் துறைகளிலும் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் தகவல்களை அளிக்கும் இந்த சாட்ஜிபிடியின் சேவை அனைவரையும் கவர்ந்தது.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் இயங்கும் இந்தச் சேவையை முதன்முதலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஓப்பன் ஏ.ஐ. நிறுவனம் அறிமுகம் செய்தது. அதன்பின்னர் இந்த வகை செயற்கை நுண்ணறிவு சேவைகள் பல அறிமுகமானாலும் சாட்ஜிபிடி தான் முதலிடத்தில் உள்ளது.

வாட்ஸ் ஆஃப்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் பிற தகவல்களைப் பெற சாட்பாட் என்ற சேவை அண்மையில் அறிமுகமானது. தற்போது சாட்ஜிபிடியும் வாட்ஸ்ஆஃப்பில் அறிமுகமாகி உள்ளது. புதிதாக இணைய பக்கத்துக்கோ, செயலிக்கோ செல்லாமல் இந்த சேவையை வாட்ஸ் ஆஃப்பிலேயே பயன்படுத்தலாம்.

இதைப் பயன்படுத்த 1-800-242-8478 என்ற எண்ணை வாட்ஸ் ஆஃப்பில் சேமித்து வைத்துகொண்டும் அல்லது க்யூ ஆர் கோட்டை ஸ்கேன் செய்துவைத்து கொண்டும் சாட்ஜிபிடியை பயன்படுத்தலாம்.

தொலைபேசி சேவை எண் மூலம் ஒலி வடிவில் சாட்ஜிபிடி தகவல்களை கேட்டுப் பெறலாம். வாட்ஸ்ஆஃப்பில் சாட் மூலம் தகவல்களைப் பெறலாம். எனினும், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கேள்விகளை மட்டும் சாட்ஜிபிடியில் கேட்டுப் பெற முடியும். இந்த சேவை பயன்பாட்டாளர்களை அதிகம் கவரும்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com