காச நோய் பாதிப்பிலிருந்து மீள..!

ஏழாம் வகுப்பு படிக்கும் என் மகளுக்கு காச நோய் தாக்கியது முதலே சிகிச்சை பெற்றுவருகிறாள். தற்போது மூன்றாம் நிலையில் நோய் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார்.
காச நோய் பாதிப்பிலிருந்து மீள..!


ஏழாம் வகுப்பு படிக்கும் என் மகளுக்கு காச நோய் தாக்கியது முதலே சிகிச்சை பெற்றுவருகிறாள். தற்போது மூன்றாம் நிலையில் நோய் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார்.  கழுத்தில் கழலை வீக்கம் மணிமணியாய் தென்படுகிறது.  வலியும் காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டு துன்புறுகிறாள். அவள் குணமடைய ஆயுர்வேத மருந்துகள் உள்ளதா?

-பாலு, மதுரை.

உட்புற அழற்சியினால் ஏற்படும் நிணநீர் கிரந்தி வீக்கம், காச நோயின் தீவிரத்தை எடுத்து உரைத்து கொண்டேயிருக்கிறது. படிப்பை நிறுத்த முடியாமல் மகள் பள்ளிக்குச் செல்லும் தருவாயில், பள்ளி அறையில் போதுமான அளவு காற்றோட்டம் இல்லாத சூழ்நிலை, மற்ற பிள்ளைகள் இருமுவதினாலும் தும்மல், கூச்சல் போடுவதினாலும் காற்றில் பரவும் அணுகிருமிகள், மகளின் நாசித் துவாரங்கள் வழியே  நுரையீரலில் பரவுகிறது.


அவை பல்கிப் பெருக, சூழ்நிலை சாதகமாக இருப்பதால், நோயின் தாக்கம் மேலும் வலுப்பெறுகிறது. கொண்டு செல்லும் மதிய உணவின் சூடு இல்லாத தன்மை, ருசியிழந்த நிலை ஆகியவற்றால் அந்த உணவின் சாரம்சம் குறைந்து போய், தன் பெருமைகளை இழந்து போய்விடுகிறது.  அதை உண்பதால்  வயிறு நிறையலாமே தவிர, உடல் போஷணையோ, நோய் எதிர்ப்புச் சக்தியையோ அது உருவாக்குவதில்லை. இப்படி உடலுக்கு உதவாத காற்றின் மாசுபட்ட தன்மை, உணவு சாரமில்லாத சத்து இழந்த  நிலை, சூடு இழந்த குடிநீர் ஆகியவற்றால் அவள் சாப்பிடும் மாத்திரை, மருந்துகளின் வீரியம் உடலில் சேராமல் நோய் குறையாமல் அடுத்தடுத்த நிலைக்குப் போய் கொண்டேயிருக்கிறது.

நன்னாரி வேர்ப்பட்டை, சுக்கு, கடுக்காய் சேர்த்து கஷாயமிட்டுக் குடித்தால் ரத்தத்தில் பரவி நிற்கும் அணுகிருமிகள், நுரையீரல், நிணநீர் கிரந்தி வீக்கம் ஆகியவைகளில் பற்றியிருக்கும் அழற்சி போன்றவை நன்றாகக் குறையும். வில்வ மரத்தின் வேர், துளரி, புங்கை மரப் பழம், தகர விதை, தேவதாரு போன்றவற்றை ஆட்டின் சிறுநீர் சேர்த்து அரைத்தெடுக்கப்படும், விற்பனையிலுள்ள குளிகையை மேற்குறிப்பிட்ட கஷாயம் (இதுவும் விற்பனையிலுள்ளது) சேர்த்து அரைத்துக் கொடுத்தால், மருந்தினுடைய வீரியமானது கூடி, அழற்சியை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றிவிடும். காலை, மாலை என இரு வேளை  வெறும் வயிற்றில் சுமார் நாற்பத்தி எட்டு நாள்கள் வரை சாப்பிட வேண்டும். மருந்துகலின் பெயர் குறிப்பிடாமைக்கு வருந்துகிறோம்.

கருந்துளசி, மிளகு ஆகியவற்றின் பெருமையை இந்த உபாதையில் நீங்கள் அறிந்துகொள்வது நலம். 

1940-களில் தமிழகத்தில் ஏற்பட்ட கடும் நிமோனியா காய்ச்சலிலிருந்து இந்த இரு மருந்துகளின் மூலம் பலர் காப்பாற்றப்பட்டனர் என்ற ஒரு செய்திக்குறிப்பைக் காண நேர்ந்தது.

பத்து கிராம் கருந்துளசி, ஐந்து கிராம் மிளகு என இரண்டையும் எடுத்து ஒரு லிட்டர்  தண்ணீரில் காய்ச்சி, அரை லிட்டராக வற்றியதும் வடிகட்டி, ஒரு நாளில் பல தடவை சிறிது சிறிதாகப் பருகுவதன் மூலமாக, உடல் அதிலும் முக்கியமாக நுரையில் அழற்சி உபாதைகளில் பெருமளவு குணப்படுத்திவிடும். 

பசு, ஆடு, செம்மறியாடு, எருமை, யானை, குதிரை, ஓட்டகம் மற்றும் கழுதை ஆகியவற்றின் சிறுநீர் அனைத்தும் பித்தத்தை அதிகப்படுத்துபவை. வறட்சி, ஊடுருவும் தன்மை, சூடு, காரமான மற்றும் சிறிது உப்புச் சுவை கொண்டவை. உடல் உட்புறங்களில் பரவி நிற்கும் அணுகிருமிகளை அழிக்க வல்லவை. உடல் வீக்கம், வயிற்றில் நீர்கட்டிக் கொண்டு நிற்கும் மஹோதரம், வயிற்றில் வாயு நிறைந்து உப்பிய நிலை, வயிற்று வலி, சோகை நோய், கப-வாத தோஷங்களால் ஏற்படும் குல்மம் எனும் வாயு உபாதை, நாக்கில் ருசி புலப்படாத உபாதை, உட்புற உடலில் விஷம் பரவிய நிலை, வெண் குஷ்டம், தோல் உபாதை, மூலம் ஆகியவற்றை குணப்படுத்துபவை. மகளுக்குச் சுமார் 15 மி.லி. காலை, இரவு உணவுக்குப் பிறகு இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொடுத்து வரலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com