பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 178

ஜெயலலிதா மீதும், சசிகலா மீதும் ப. சிதம்பத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அப்படி என்னதான் தனிப்பட்ட விரோதம் இருந்திருக்க முடியும் என்கிற கேள்விக்கு இன்று வரை எந்த பதிலும் இல்லை.
பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 178

ஜெயலலிதா மீதும், சசிகலா மீதும் ப. சிதம்பத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அப்படி என்னதான் தனிப்பட்ட விரோதம் இருந்திருக்க முடியும் என்கிற கேள்விக்கு இன்று வரை எந்த பதிலும் இல்லை. ஜெயலலிதாவும் சொல்லவில்லை, சிதம்பரம் குடும்பத்தினரும் அந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவில்லை. ஒருவேளை சசிகலாவுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். அவர் இது குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை.

ஆனால், வருமான வரித் துறையும், அமலாக்கத் துறையும் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை வெளியிட்டன - 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை விற்க மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் உத்தரவிட்டதாக அவர் கூறியுள்ள புகார் முற்றிலும் ஆதாரமற்றது. மத்திய நிதியமைச்சரோ அவரது உறவினர்களோ நடவடிக்கை விஷயங்களில் தலையிட்டதாகக் கூறுவது உண்மையல்ல. ஆதாரமற்றது.'

அமலாக்கத் துறையின் அறிக்கை வெளிவந்த அதே நேரத்தில், அதிமுக தலைமையகத்திலிருந்து ஜெயலலிதாவின் அறிக்கையொன்றும் வெளியானது. அதில் அவர் தனது வீட்டை ஜப்தி செய்ய ப. சிதம்பரம் ஆணையிட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

'என்னைப் பழிவாங்க, நான் எனது வேறு சொத்துகளை ஈடாக தரத் தயாராக இருக்கும் நிலையில்கூட நான் வசிக்கும் இந்த போயஸ் கார்டன் வீட்டையே ஜப்தி செய்யது துடிக்கிறது அமலாக்கத் துறை. முதலில் வங்கிக் கணக்கை முடக்கினார்கள். மறுநாள் அதிகப்படியான வரி செலுத்த வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்புகிறார்கள். வரியைச் செலுத்தவில்லை என்றால் 15 நாள்களில் சொத்தை ஜப்தி செய்வோம் என்கிறார்கள். வரி செலுத்த வங்கியில் பணம் எடுக்க அனுமதியுங்கள் என்கிறோம், அதற்கு அவர்கள் அனுமதி மறுக்கிறார்கள். இவையெல்லாம் என்னைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்று எடுக்கப்படும் நடவடிக்கை அல்லாமல் வேறென்ன?' 

என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார் ஜெயலலிதா.

அவரது அறிக்கை வெளிவந்த அடுத்த நாளே அவரது போயஸ் கார்டன் வீடு உள்பட அவரது நான்கு சொத்துகளை வருமானவரித் துறை முடக்கியது. ஏற்கெனவே வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், அவர் செலுத்த வேண்டிய வரிகளைக் கட்டுவதற்கு அசையாச் சொத்துகளை விற்க முடியாதபடி அவர் முடக்கப்பட்டார்.

அடுத்த நாள் காலை 6 மணிக்கு பத்திரிகை நண்பர் ஒருவர் என்னை தொலைபேசியில் (அப்போது தொலைபேசிதான், செல்பேசி வரவில்லை) அழைத்தார். ஜெமினியிலிருந்து மியூசிக் அகாதமி வரை போலீஸ் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகவும், போயஸ் கார்டனில் காவல் துறை வாகனங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார் அவர். ஜெயலலிதா எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்றும் உடனடியாகக் கிளம்பி வரவும் என்றும் அவர் தெரிவித்த பிறகு, நான் ஏன் காத்திருக்கிறேன்? கிளம்பிவிட்டேன்.

ஜெமினி அருகில் காத்திருந்த நண்பரையும் அழைத்துக்கொண்டு போயஸ் கார்டனுக்குள் நுழைந்தபோது சுமார் 8 மணி இருக்கும். ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' வீட்டில் மாநில குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி ராதாகிருஷ்ண ராஜாவும் வேறு பல காவல் துறை அதிகாரிகளும் ஜெயலலிதாவை சந்திப்பதற்குக் காத்திருப்பதாகத் தெரிவித்தனர்.

காவல் துறையினரின் தடைகளை சாதுர்யமாகக் கடந்து நாங்கள் இருவரும் வேதா நிலையத்துக்குள் நுழைந்துவிட்டோம். அங்கிருந்த காவல் துறை உயர் அதிகாரியுடன் நட்பு முறையில் பேச்சுக் கொடுத்தபோது - 'ஜெயலலிதா பூஜையறையில் இருக்கிறார். அவர் வெளியே வந்ததும் கைது செய்யப்படுவார்' என்று அவர் தெரிவித்தார். ஊராட்சி மன்றங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் ரூ.8.53 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், அதில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

காவல் துறை அதிகாரிகள், அதிமுகவின் மூத்தத் தலைவர்கள், குறிப்பிடத்தக்க தொண்டர்கள் வேதா நிலைய வளாகத்தில் குழுமி இருந்தனர். அவர்களைப் போலவே நாங்கள் இருவரும் ஜெயலலிதா பூஜையை முடித்துவிட்டு வெளியே வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். கலைத்துறையிலும் சரி, அரசியலிலும் சரி உச்சத்தைத் தொட்ட ஆளுமையாக வலம்வரும் ஜெயலலிதா, தான் கைது செய்யப்படுவதை எப்படி எடுத்துக்கொள்வார் என்று பார்க்கும் ஆவல் எனக்கு இருந்தது.

ஜெயலலிதா வெளியே வரும்போது சுமார் ஒரு மணிநேரம் கடந்து விட்டிருந்தது. 10 மணி சுமாருக்கு வெளியே வந்த ஜெயலலிதாவைக் கைது செய்ய இருப்பதாகச் சொன்னபோது, அவரது முகத்தில் எந்தவிதச் சலனமும் இல்லை. மெலிதான வரட்டுப் புன்னகையொன்றை உதிர்த்தார். எந்தவித மறுப்புத் தெரிவிப்போ, விவாதத்தில் ஈடுபடவோ இல்லை.

ஒரு சூட்கேஸில் தனக்குத் தேவையான துணிமணிகளை எடுத்துக் கொண்டார். வீட்டுக்கு முன்னர் இருக்கும் விநாயகர் முன் கண்மூடி நின்று சில விநாடிகள் பிரார்த்தித்தார். ராதாகிருஷ்ண ராஜாவைத் திரும்பிப் பார்த்தார். அந்தப் பார்வையில் 'நான் தயார், நீங்கள் தயாரா?' என்கிற தொனி இருந்தது.

வீட்டு வளாகத்துக்குள் காவல் துறை வாகனம் கொண்டுவரப்பட்டது. அந்த வாகனத்தில் ஏறுவதற்கு முன்னர், அவரிடம் கருத்துக் கேட்க நாங்கள் (பத்திரிகையாளர்கள்) முண்டியடித்து நெருங்கியபோது, பதற்றம் சிறிதும் இல்லாமல், 'பழிவாங்கும் படலம் தொடங்கியது. நான் எதிர்பார்த்ததுதான்' என்று கூறிவிட்டு காவல் துறை வாகனத்தில் ஏற முற்பட்டார். அவருக்கு உதவ சில பெண் போலீஸார் முற்பட்டபோது, சிரித்துக் கொண்டே 'வேண்டாம். நானே ஏறிக் கொள்கிறேன்' என்று அவர் சொன்னபோது, கூடியிருந்த தொண்டர்கள் ஓ வென்று கதறி அழுதுவிட்டனர்.

போயஸ் கார்டனிலிருந்து காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என்றுதான். நாங்கள் அங்கே செல்லவில்லை. விசாரணையில் என்ன நடந்தது என்று காவல் துறை நண்பர்கள் சிலரைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகச் சொன்னார்கள்.

அவரிடம் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு 'தெரியாது', 'சம்பந்தமில்லை' என்று ஒற்றை வார்த்தை பதில்கள்தான் அளித்தார் என்று சொன்னார்கள்.

'தவறு நடந்திருந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர்தான் பொறுப்பு. எல்லா கோப்புகளையும் முதல்வரே பார்த்து முடிவெடுக்க முடியாது' என்பதுதான் அவரிடமிருந்து வெளிப்பட்ட நீண்ட பதில்.

விசாரணைக்குப் பிறகு கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள முதன்மை செஷன்ஸ் நீதிபதி ராமமூர்த்தியின் வீட்டுக்கு, அவர் முன்னர் ஆஜர்படுத்துவதற்கு ஜெயலலிதா அழைத்துவரப்படுவார் என்கிற தகவல் கிடைத்தது. அதனால் கமிஷனர் அலுவலகம் செல்லாமல் டெய்லர்ஸ் சாலைக்கு நண்பருடன் சென்றுவிட்டேன்.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்தது நீதிபதி ராமமூர்த்தியின் வீடு. ஜெயலலிதா சார்பில் வாதாட பி.எச். பாண்டியன் வந்திருந்தார். நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, காவல் துறை வாகனம் வந்தது. அதிலிருந்து ஜெயலலிதா இறக்கப்பட்டு மின் தூக்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதற்குப் பிறகு நீதிபதி முன்னர் என்ன நடந்தது என்பதைக் காவல் துறை அலுவலர் மூலம் தெரிந்து கொண்டேன்.

நீதிபதி ராமமூர்த்தியின் முதல் கேள்வி, 'நீங்கள் காவல் துறையினரால் தரக்குறைவாக நடத்தப்பட்டீர்களா?' என்பது. அதற்கு 'இல்லை' என்று பதிலளித்தார். 

'நீங்கள் எதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்று விவரம் தெரிவிக்கப்பட்டதா?'

'தெரிவித்தார்கள்.'

'இந்த வழக்கு பற்றிய முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) உங்களுக்குத் தரப்பட்டதா?'

'இல்லை.'

நீதிபதி அங்கிருந்த காவல் துறை அதிகாரிகளைக் கண்டித்தவுடன், அரசு வழக்குரைஞர் ராஜா இளங்கோ அதை ஜெயலலிதாவுக்கு வழங்கினார்.

'எனது கண்ணாடியை நான் கொண்டுவரவில்லை. அதனால் இப்போது என்னால் படிக்க இயலாது' என்று கூறிவிட்டு, 'எனது சார்பில் வழக்குரைஞர் பி.எச். பாண்டியன் கோரிக்கைகளை முன்வைப்பார்' என்று தெரிவித்தார் ஜெயலலிதா. அதன் பிறகு பி.எச். பாண்டியன் தனது வாதங்களை முன்வைத்தார்.

'ஏற்கெனவே சிபிசிஐடி போலீஸார் ஜெயலலிதாவை அவரது வீட்டில் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். அப்படி இருக்கும்போது, இப்போது அவரைக் கைது செய்ய வேண்டிய அவசியமே இல்லை. தேசியப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பில் இருப்பவர் அவர். சிறைச்சாலையில் அவருக்கு அந்தப் பாதுகாப்பு வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. அவரைக் கைது செய்ய ஆளுநரிடம் அனுமதி பெறப்பட்டதா என்பதும் தெரியவில்லை' என்று பி.எச். பாண்டியன் வாதங்களை அடுக்கிக் கொண்டிருந்தபோது, ஜெயலலிதா அவரை இடைமறித்து நீதிபதியிடம் தெரிவித்த கருத்து இது - 'குண்டர் தடுப்புச் சட்டம், 'தடா' சட்டத்தின் கீழ் பலரைக் கைது செய்வதற்கான உத்தரவுகளை நான் முதலமைச்சராக இருந்தபோது வெளியிட்டிருக்கிறேன். இப்போது சிறையில் இருக்கும் அத்தகையவர்களால் எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று நான் பயப்படுகிறேன்' என்பதுதான் ஜெயலலிதா முன்வைத்த வாதம்.

'பொதுக் கணக்குக் குழு அல்லது சட்டப்பேரவைதான் இத்தகைய முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும். அரசியல் நோக்கத்துடன் ஜெயலலிதாவைக் கைது செய்திருக்கிறார்கள். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாதலால் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்ய முடியாது என்கிற உள்நோக்கத்தோடு அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்' உள்ளிட்ட பி.எச். பாண்டியனின் வாதத்தை நீதிபதி ராமமூர்த்தி காது கொடுத்துக் கேட்டாரா என்பதே சந்தேகம்தான்.

இதுபோன்ற கைதுகளின்போது, வழக்குரைஞர்களின் வாதம் என்பது வெறும் சம்பிரதாயத்துக்கு மட்டும்தான்.

'வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்குவது குறித்து அமைச்சரவைகூடி முடிவு செய்ததா, இல்லை அமைச்சரே முடிவு செய்தாரா என்பதெல்லாம் விசாரணையின்போதுதான் வெளிவரும். அதனால் ஜெயலலிதா சிறையில் வைப்பதற்கு ஏற்ற வழக்குதான் இது' என்று விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீதிபதி ராமமூர்த்தி.

கீழே அந்த வளாகத்தில் நாங்கள் காத்திருந்தோம். சுமார் 11 மணிக்கு நீதிபதி முன்னால் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயலலிதா, அரை மணிநேரத்துக்குப் பிறகு கீழே வந்தார். அதற்குள் அவரது கைது உறுதி செய்யப்பட்ட தகவல் எங்களுக்கு வந்து விட்டிருந்தது.

முன்பு போலவே ஜெயலலிதாவின் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் பார்க்க முடியவில்லை. 'பத்திரிகையாளர்கள் இருக்கிறீர்களா?' என்று ஜெயலலிதா அழைத்தார். அருகில் விரைந்தபோது நறுக்கென்று நாலே வார்த்தையில் ஜெயலலிதா சொன்னது இதுதான் - 'திமுகவுக்கு அழிவுகாலம் நெருங்கிவிட்டது!'

அங்கிருந்து அவர் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். லாயிட்ஸ் சாலை அதிமுக அலுவலகத்தில் நிருபர்கள் சந்திப்பு இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே போனால், அலுவலகம் சோகத்தில் மூழ்கி இருந்தது. ஜெயலலிதாவுக்கு முன்பே, கட்சியின் பெரும்பாலான முதல், இரண்டாம் நிலைத் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கட்சி களையிழந்து காணப்படுவது இயற்கைதானே...

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்சிக்குத் தலைமை ஏற்கவும், கட்சியை வழிநடத்தவும் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது.

'கட்சியின் அவைத் தலைவரான நாவலர் நெடுஞ்செழியனிடம் கட்சியின் தலைமைப் பொறுப்பை வழங்கலாம். இல்லையென்றால், துணைப் பொதுச் செயலாளர் எஸ். திருநாவுக்கரசிடம் தலைமைப் பொறுப்பை, இடைக்கால ஏற்பாடாகக் கொடுக்கலாம்' என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா எப்படி நடத்தப்படுகிறார்? அவருக்கு என்ன வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொள்ள சட்ட அமைச்சர் ஆலடி அருணாவைத் தொடர்பு கொண்டபோது...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com