பாலிவுட் ஸ்டுடியோ!

பிரபல மாடலும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே கர்ப்பப் பை புற்றுநோய் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு  காலமானதாக செய்திகள் அண்மையில் வெளியானதால்,  அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பாலிவுட் ஸ்டுடியோ!
Published on
Updated on
3 min read

உயிரோடுதான் இருக்கிறேன்

பிரபல மாடலும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே கர்ப்பப் பை புற்றுநோய் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு  காலமானதாக செய்திகள் அண்மையில் வெளியானதால்,  அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  திடீர் திருப்பமாக அவர், 'இறக்கவில்லை.  உயிரோடுதான் இருக்கிறேன்'  என்று கூறி, காணொலியை வெளியிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில், 'கர்ப்பப் பை புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற ஒரு செய்தி பரவ விடப்பட்டது. கர்ப்பப் பை புற்றுநோய் காரணமாக ஆயிரக்கணக்கான பெண்கள் உயிரிழக்கின்றனர். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த நோயைத் தடுக்க முடியும். அதனால் இந்த நோய் தொடர்பான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளுங்கள்'  என்று குறிப்பிட்டுள்ளார். 

பூனம் பாண்டேயின் காணொலியை சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்கள் பதிந்து,  தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.  பூனம் பாண்டே கடைசியாக நடிகை கங்கனா ரணாவத்தின் 'லாக் அப்' டி.வி. ஷோவில் கலந்து கொண்டார். இதில் அவர் வெற்றி பெற முடியாவிட்டாலும் தனது திருமண வாழ்க்கையில் நடந்த குடும்ப வன்கொடுமைகள் குறித்து பகிர்ந்து கொண்டார். பூனம் பாண்டேயின் வாழ்க்கை சர்ச்சை நிறைந்ததாகவே இருந்தது. 

பூனம் பாண்டேயை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். 

2021-ஆம் ஆண்டு சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்து கொண்டார். கோவாவுக்கு தேனிலவு சென்றபோது,  அங்கு தனது கணவருக்கு எதிராக மானபங்க புகாரை பூனம் பாண்டே கொடுக்க, அவரது கணவரை காவல்துறை கைது செய்தது.  உலகக் கோப்பையை 'இந்தியா வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன்' என்று இவர் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. 

2017-ஆம் ஆண்டில் பூனம் பாண்டே தனது பெயரில் மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்தார். அதில் ஆபாச புகைப்படங்கள், காணொலிகளைப் பதிவேற்றியிருந்தார். இதையடுத்து,  மொபைல் ஆஃப் அறிமுகம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் கூகுள் நிறுவனம் தடை விதித்தது.

திறமை - எப்படி நிருபிப்பது?

'சீதா ராமம்' படம் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர்.  இதன் வெற்றி அடுத்தடுத்த பட வாய்ப்புகளை உருவாக்கித் தர, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.  

'ஹாய் நான்னா' என்ற தெலுங்குப் படத்தில் அண்மையில் நடித்திருந்தார். தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் 'ஃபேமிலி ஸ்டார்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஹிந்திப் படங்களிலும் நடிக்கும் மிருணாள் தாக்கூர் ஹிந்திப் பட இயக்குநர்களிடம் தனது திறமையை நிரூபித்துச் சோர்வடைந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், ' எனக்கு 'சீதாராமம்', 'ஹாய் நான்னா' போன்ற காதல் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. 'ரொமான்ஸ் குயின்' என்று என்னை அழைத்ததில் சந்தோசமடைகிறேன். ஹிந்தியில் காதல் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால், அதுபோன்ற கதைகள் எனக்குக் கிடைக்கவில்லை. ஒருவேளை, காதல் கதைகளில் நடிக்கும் அளவுக்கு நான் பிரபலமாகவில்லையா என்று தெரியவில்லை.  என் நடிப்புத் திறமையை ஹிந்தி இயக்குநர்களிடம் இதற்கு மேல் எப்படி நிரூபிக்க வேண்டும் என்றும் தெரியவில்லை. அதில் நான் சோர்வடைந்து விட்டேன்' என்று தெரிவித்திருந்தார்.

இருபது போல் முப்பதால் இருக்க முடியாது !

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மெரி கிறிஸ்துமஸ்'.  

இந்தப் படம்  நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இதில் கத்ரீனா கைஃப்பின் நடிப்பைப் பலரும் பாராட்டி இருந்தனர். 

இந்நிலையில் 'மெரி கிறிஸ்துமஸ்' பட விழாவில் கலந்து கொண்ட கத்ரீனா கைஃப் பேசுகையில், 'வரும் காலங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். நீங்கள் இருபது வயதில் இருந்ததுபோல் உங்களின் முப்பது வயதில் இருக்கப் போவதில்லை. சில அனுபவங்களுடன் நீங்கள் முன்னேறி இருப்பீர்கள். அதுபோலத்தான் வேலையும்! வயது அதிகரிக்கும்போது இயல்பாக உங்களின் விருப்பங்களும் மாறுபடும். அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என நினைக்கின்றேன். குறிப்பாக,  நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும்  பீரியட் படங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். இது தொடர்பாக நல்ல கதைகள் வந்தால் நிச்சயமாக நடிப்பேன்' என்று கூறியிருந்தார்.

இந்தப் படத்தின் இயக்குநர் குறித்துப் பேசிய அவர், 'ஸ்ரீராம் ராகவனின் தீவிர ரசிகை நான். 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தில் அவரோடு இணைந்து பணியாற்றியது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது' என்று தெரிவித்திருக்கிறார்.  

டேட்டிங் குறித்து விளக்கம்!

சமூக வலைதள டிரெண்டில் தன்னைத் தொடர்ந்து பேசு பொருளாகவே வைத்திருப்பவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். அரசியல் விமர்சனங்கள், டேட்டிங் சர்ச்சைகள், நெட்டிசன்களின் கமென்டுகளுக்குப் பதிலளிப்பது என எப்போதும் ஆக்டீவாக இருப்பார்.  தினமும் புது புது சர்ச்சைகளைத் தானாகவே அள்ளித் தலையில் போட்டுக்கொள்வது அவரது வழக்கம். 

'மேக் மை ட்ரிப்' நிறுவனத்தின் இணை நிறுவனர் நிஷாத் பிட்டியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை இவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார். அயோத்தி ராமர் கோயில் விழாவிலும் இருவரும் ஜோடியாக இருக்கும் காணொலிகள் சமூகவலைதளங்களில் வைரலாகின.  ரசிகர்கள் பலரும் கங்கனா, நிஷாத் பிட்டி இருவரும் டேட்டிங்கில் இருக்கிறார்கள் என பதிவிட்டு வந்தனர். ஒரு சில ஹிந்தி 
ஊடகங்களிலும் இது செய்திகளாக வெளிவந்தன. 

இந்த நிலையில், 'வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.  நிஷாத் பிட்டியோ திருமணமானவர். நான் அவருடன் டேட்டிங்கில் இல்லை, வேறு ஒருவரைத்தான் டேட் செய்து வருகிறேன். அவர் யார் என்பதைச் சொல்வதற்குச் சரியான நேரம் வரும். அதுவரை காத்திருங்கள். அதற்கு முன் எங்களைச் சங்கடப்படுத்த வேண்டாம். போட்டோ எடுத்தற்காகவெல்லாம் தினமும் ஒரு பெண்ணை புது புது ஆண்களுடன் சேர்த்து வைத்து தவறாகப் பேசவேண்டாம்'  என்று பதிவிட்டிருந்தார் கங்கனா ரணாவத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com