அழைப்பு

'என்னங்க.. இன்னைக்கு நம்ம  பழைய வீட்டுப் பக்கம் நடக்கலாமா?''ம் .. போகலாமே ! எதுலயும் உன் விருப்பம்தானே எனதும்?'
அழைப்பு


'என்னங்க.. இன்னைக்கு நம்ம பழைய வீட்டுப் பக்கம் நடக்கலாமா?'
'ம் .. போகலாமே ! எதுலயும் உன் விருப்பம்தானே எனதும்?'
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கம் காலை நடை செல்கிறார்கள். இருள் விலகும் முன்னே தொலைவில் குயில் ஒலிக்கக் கேட்டு துயில் எழுவார் சுந்தரம். இருள் காலை இதமான அமைதியைக் குலைத்து விடாமல், எழுந்து ஓசைப்படாமல் பல் தேய்த்து , முகம் கழுவித் தயாராவார்.
பிரிட்ஜில் இருந்து இரவு கொஞ்சம் மிச்சம் வைத்திருக்கும் நேற்றைய பாலை எடுத்துக் காய்ச்சி, டிகாக்ஷன் போடுவார். நிதானமான குரலில் மனைவி மேகலாவை எழுப்புவார்.
பதற்றமின்றிப் போர்வையை விலக்கி , முகத்தில் புன்னகை மலர , 'நற்காலை தோழமையே! ‘ என்று கூறி, தம் நெற்றிப் பொட்டில் வலது கர விரல் பதித்துச் சிரிப்பார் மேகலா . பதில் வணக்கம் கூறி நகர்வார் .
சுந்தரம் அழகு சுந்தரம்தான். மேகலாவும் நர்மதை ஆறு போல் மேகலைதான். வயதானாலும் அழகு கூடுமோ !
இருவரும் வராந்தா மோடாவில் அமர்ந்து, வாசல் படியருகே தொட்டியில் எட்டிப் பார்க்கும் செம்பருத்தி மொட்டுக்களையும் விரிந்து மலர்ந்த குண்டு மல்லிகையையும் ரசித்த வண்ணம் காப்பியை ருசித்துப் பருகுவார்கள் . இதன் பின்னர் வாக்கிங் சென்று வருவது தினசரி அட்டவணை.
அறுபதைத் தொடும் தூரம் சுந்தரத்துக்கு. நகரின் பிரபல கார் நிறுவன விற்பனை நிலைய மேலாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். மேகலா பள்ளி ஆசிரியை . ஐம்பதைந்து வயது .
ஸ்கூட்டரில் மேகலாவை அழைத்துச் சென்று பள்ளியில் இறக்கிவிட்டு வருவார்.
இவர்கள் திருமணம் காதல் கலப்பு மணம். இரு பக்கப் பெற்றோர்களும் இவர்களைத் தலைமுழுகினர் . ஆரம்பத்தில் சில வருடங்கள் பெற்றோர்கள் பந்தம் பற்றிய வருத்தமும் தங்களுக்கான குழந்தைப்பேறு ஏக்கமும் எதிர்பார்ப்பும் எழுந்து அடங்கின . இரண்டுமே மூடப்பட்ட கதவுகள் ஆயின. சிறுகச் சிறுக இந்த விஷயங்களை மறக்கத் துணிந்தனர்.
ஒருவருக்கொருவர் குழந்தைகள் ஆகினர்.
காபி முடித்து முடிக்கும் வேளையில் இங்கேயே எந்தத் தெரு வழியே நடப்பது என்று தீர்மானித்துவிடுவார்கள். சுதந்திரப் பூங்காதான் இலக்கு; வழிகள்தான் வெவ்வேறு. மேகலா ஆசைப்பட்டபடி அவர்களது பழைய வீடு இருக்கும் சாமிநாதன் தெரு வழியே நடப்பதென முடிவானது. காபி குடித்தப் பாத்திரங்களைக் கழுவி வைத்தவுடன் மேகலா வந்ததும், சுந்தரம் வாசல் கதவைப் பூட்டிக் கிளம்பினார் .
சாமிநாதன் தெருவில் நுழைந்து சற்று தொலைவு நடந்ததுமே வலப்பக்கம் கையைக் காண்பித்து ,'அங்கே பாருங்களேன், நம்ம பழைய வீட்டை அடையாளமே தெரியாதபடி வித்தியாசமா முகப்பை எவ்வளவு அழகா மாத்திட்டாங்கபாருங்க?' என்று உற்சாகம் பொங்கக் கூறினார் மேகலா .
'ஆமா , வீட்டை முழுசா இடிச்சுக் கட்டாம மாற்றியமைச்சு இருக்காங்க ?'
'இடிச்சுக் கட்ட வேண்டிய அவசியமே இல்லாமல்தான் நாம பார்த்துப் பார்த்துக் கட்டினோமே? இவ்வளவு பெரிய வீட்டைப் பராமரிக்க முடியாமல்தானே இதை வித்திட்டு, நாம சின்னதா பிளாட் வாங்கிக்கிட்டு வந்தோம் ! அவங்க அவங்க தேவை , ரசனைக்குத் தக்கபடிஅமைத்துக் கொள்வது தானே நல்லது ?'
'வீட்டை மட்டும் தானே மேகலா?'
'அடகுறும்பா ! ஏன், எல்லாத்துக்கும் தான் .'
அந்த வீட்டை நெருங்குகையில் இருவரது நடையும் சற்று மெலிவடைகிறது . இருபத்தைந்து முப்பது வயதில் எழும் சொந்த வீடு ஆசை இவர்களுக்குள்ளும் அரும்பி மலர்ந்தது. இருபது வருடங்களுக்கு முன்னர். ஆனால் இவர்களுக்குப் பெரிய வசதிகள் இல்லை.
சுந்தரம் அர்ப்பணிப்பு மிகுந்த தன் வேலைத் திறமையால் பெற்றிருந்த அபிமானம் முதலாளியின் மனசைத் திறந்தது. இடம் வாங்கக் கடன் தந்தார். தமக்குத் தெரிந்த வங்கி நிர்வாகத்திடமும் சிபாரிசு செய்து சுந்தரத்துக்கு வீடு கட்டவும் கடன் கிடைக்க உதவினார். அதோடு
சுந்தரத்தின் சம்பளத்தையும் உயர்த்தினார் .
புறநகரில் கிடைத்தது பூமி. இரண்டு கிரவுண்டில் , சுற்றி இடம் விட்டு நடுவே வீடு கட்டினார். இயல்பாய் வெளிச்சம், காற்றுக்கு வழி அமைத்து பெரிய பெரியஅறைகள் , ஹால்கள், வராந்தா என்று உருவானது வீடு . நண்பன் பொறியாளர் கணேசன் உதவியால் அழகாக அமைந்தது வீடு . குடிவந்த நான்காவது வருடத்தில் கடனை அடைத்து முடித்தார் சுந்தரம் .
அதுவரையில் சுருக்குப் பை வாழ்க்கைதான்.
ஆசைகளுக்குக் கடிவாளம்; அத்தியாவசியத்துக்கேஇடமளித்தனர்இருவரும் .
புறநகர் என்பதும் நகரின் போஷாக்கான குழந்தையாகச் சீக்கிரமே வளர்ந்து பெருத்தது . கடனை அடைத்த பிறகே ஏ.சி. , கீசர் , குடிநீர், இன்வெர்ட்டர் , குடிநீர் சுத்திகரிப்பு யூனிட் எல்லாம் ஒவ்வொன்றாக வாங்கிச் சேர்த்தார் .
'அங்கே பாருங்க! வாசல் பக்கம் நல்ல உயரம் ஏத்திட்டாங்க ?'
'ரவி என்னிடம் மழைத் தண்ணி உள்ளே வந்துருமான்னு கேட்டப்பவே நான் என் செல்போன்ல இருந்து போட்டோவை அவருக்குக் காண்பித்தேன் இல்லையா? அதான், வாசல் பக்கம் பாதுகாப்பா ஒசத்தி இருக்காங்க?'
' ஆமா , ரவி கிளம்பிய உடனே புரோக்கர் தாத்தா உங்களைக் கேலி செஞ்சாரே - 'ஏம்பா அரிச்சந்திர பிரபு , மழைத் தண்ணி வருமான்னு கேட்டா அவ்வளவு வராதுன்னு சொல்றதைவிட்டுட்டு , இதோ எங்கப்பன் குதிருக்குள்ளதான்னு செல்போன் படங்களை எடுத்து சாட்சிக் கூண்டிலே போய் நிற்கிறீங்களேன்னு.. 'பொழைக்கத் தெரியாத பிள்ளையப்பா நீங்க! ஹம்'- ன்னு சொன்னாரே ! அதுக்கும் நீங்க, 'அது எதுக்கு தாத்தா பொய் சொல்றது ? நாம பட்டகஷ்டம்அவங்க படக் கூடாதுன்னு வெள்ளந்தியாச் சொல்லிச் சிரிச்சீங்களே! மறக்கவாமுடியும் ?'
'அதுசரி , மேகலா , பெயின்ட் கலர் நல்லா இருக்குல்ல-வானத்தின் வெளிர் நீல நிறம்போல !'
'ம், நல்லாவே இருக்குங்க. நம்ம குடுத்த ஏ.சி. எல்லாம் அப்படியே பிக்ஸ்பண்ணியிருக்காங்க! '
'நாமதான் அப்படியே எல்லா பொருள்களையும் சேர்த்தே கொடுத்தோமே!'
'ஹம்.. அதற்கெல்லாம் ஒரு ரேட் போட்டுக் கேளுங்கன்னு உங்க கிட்ட சொன்னேன். நீங்கதான் தர்மப்பிரபுவாச்சே - அட , அதெல்லாம் இருக்கட்டும்மா காசெல்லாம் கேட்க வேணாம்னுட்டீங்க!'
'நமக்குத்தான் தெரியுமே மேகலா - வீடு வாங்குறவங்க, வீடு கட்டறவங்க கஷ்டம் எல்லாம்.
அது சரி , இப்போ உள்ளே போய்ப் பார்க்கணுமா ?'
'சேச்சே, வேணாம்ங்க. ஆனால் நீங்கள் ஒரு நல்ல படகோட்டிங்க - அப்பப்போ என் பேச்சை மாத்திறத்துக்குத் திசையை நல்லா திருப்பி விடுறீங்க !'
மவுனமாய் நகர்ந்து நடையைத் தொடர்ந்தனர்.
சின்னச் சின்ன தெருக்கள் . அங்கங்கே இடையிடையே அகண்ட சாலைகள். இரு பக்கமும் பூவரச மரங்கள் . அசோக மரங்கள். மக்கள் நடமாட்டம் லேசாக ஆரம்பித்து விட்டது . பள்ளிக்கூடத்தை அடுத்து உள்ள சுதந்திரப் பூங்காவில் நுழைந்தனர் . இருள் விடை பெற்று லேசாய் வெளிச்சம் விரிய ஆரம்பித்தது .
'குட்மார்னிங் ஸார் ! குட்மார்னிங் மேடம் !'
'குட்மானிங் தாமஸ் !'
'வெல்கம் ஸார் !'
செடிகளுக்கு நீர்ப் பாய்ச்சிக் கொண்டிருந்த தோட்டக்காரர் தாமஸ் ஓடி வந்து கதவைத் திறந்தார். மணி பார்க்க , செல்பேசியை எடுக்க முனைந்தார் சுந்தரம்.
'ஆறு மணி, பத்து நிமிஷம் !'
மேகலாவோ, 'வள்ளுவர் சொல்லும் குறிப்பறிதல் இதுதானோ ?'
' எனக்கு அது தெரியாது ; ஆனால் உங்களைத் தெரியும் !'
' டீச்சருக்கே தெரியாதுன்னு சொல்றதுநம்பும்படியா இல்லைங்க !'
'போதுமே கேலி . ம்.. நடப்போம் நாம் !'
சற்று நேரத்தில் பூங்காவில் உரத்த குரல்கள் பின்தொடர்ந்தன. திரைப்படம், தொலைத்தொடர் , வெப் தொடர், அரசியல், முகநூல், இலக்கியம் என வானத்தின் கீழ் உள்ள அனைத்தும்அலம்பல்அலசலாகஉச்சஸ்தாயியில் !
இயற்கையின் அமைதிக் கொடையைப் பொதுவெளியில் தத்தம் உரத்த குரலாலும் மாசுபடுத்தலாகாது என்று ஏன் தெரிவதில்லை இவர்களுக்கு ? நடைப்பயிற்சி என்பது உடல் மட்டும் சார்ந்ததல்ல; மனசும் சேர்ந்ததே என்று ஏன் பலருக்கும்புரிவதில்லை?
பூங்காவில் நடக்கும்போது சுந்தரம் பெரும்பாலும் சிந்தனை, செயல் இரண்டையும் ஒருமுகப்படுத்தியே நடப்பார் .
தன் சகதர்மினி இப்போது இங்கே இப்படி நடக்கையில் அவர் மனதில் என்ன எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்பியதுண்டு . ஆனால் அவர் மேகலாவிடம் கேட்டதில்லை . அவரவர் அந்தரங்கம் தனி மனிதச் சுதந்திரம் . இதில் மற்றவர் - கணவனே ஆயினும் தலையிடல் அநாகரிகம். இந்த நினைப்பு வந்ததும் தலையை
இடவலமாகஆட்டியபடிச்சிலுப்பிக்கொள்வார் .
அரை மணி நேர நடையில் உடலின் மேல் பகுதி முழுவதும் வியர்வையாக நனைந்தது. தம் தோளில் தொங்கிய பிளாஸ்க்கில் இருந்து வெதுவெதுப்பான வெந்நீரை மேகலாவுக்குக் கொடுத்தார். தாமஸிடம் விடை பெற்று வெளியேறினர். பூங்கா வாசலில் அருகம்புல் ஜூஸ், ஆரோக்கிய உணவு , ஜூஸ்.. என எதையும்பொருட்படுத்தாமல் தெருவில் நடக்க ஆரம்பித்தார்கள் .
சாமிநாதன் தெருவின் வழியிலேயே மீண்டும் நடந்து வந்தனர் . வெண் பனி போர்த்திய மேகமென வேப்பம்பூக்கள் சூடிக்கிடந்தது சாலை .
' ஓ...இந்தப் பூவுக்கும் இலைக்கும் தான் எத்தனை மருத்துவ குணம்!'
'அடடா அங்கே பாருங்கள் - ஷாமியானா , நாற்காலி , மேஜை எல்லாம் வந்து இறங்குது! '
இவர்களது முன்னாள் வீட்டைச் சுட்டி காண்பிக்கிறார் மேகலா.
'ஆமாம், கிரகப் பிரவேசத்துக்கான ஏற்பாடாக இருக்கும் .'
நிசப்த நடை நீள்கிறது . சிறிது தூரத்தில் இருந்த பேப்பர்க் கடை அருகே சென்றதும் , 'மேகலா ! ஒரு நிமிஷம் இரு; பத்திரிகை வாங்கிக்கிட்டு வந்துடறேன்' என்று பாய்கிறார்.
'சுவரில் போஸ்டரை பார்த்ததும், நின்று அதைக் கிழித்து வாயில் கடித்துச் சாப்பிடற மெட்ராஸ் மாடு மாதிரி.'
'ஐயோ மேகா, நல்ல வேளை, லைட் கம்பத்தைப் பார்த்ததும் அதன் கிட்டே போகிற வேறொரு நாலு கால் ஜீவன் மாதிரின்னுசொல்லாமல் விட்டியே !'
'அட , என்னங்க நீங்க ? நான் போய் உங்களை அப்படில்லாம் சொல்வேனா, அதான், நீங்களே சொல்லிக்கிறிங்களோ?'
சட்டென்று நின்று மேகலாவைச் செல்லமாக முறைத்தார் சுந்தரம் .
'ஜல்தி ; டைம் ஆகுது . இங்கே என்ன போட்டோ ஷூட்டா நடக்குது ? போய் சீக்கிரம் பேப்பரை வாங்கிக்கிட்டு வாங்க..'
சுந்தரம் சென்று பத்திரிகை வாங்கி வந்தார். அவரிடமிருந்து அதை வாங்கி வைத்துக் கொண்டார் மேகலா . பல மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் பத்திரிகையைப் படித்துக் கொண்டேநடந்து வந்த சுந்தரம் , சிறிய கல் தடுக்கிக் கீழே விழப் போய் விட்டார் . அன்றைக்கு வந்தது இந்தத் தடை உத்தரவு !
வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் மேகலாஅவரிடம் பத்திரிகையைக் கொடுத்தார். பாத்ரூம் சென்று வந்தவுடன் வராந்தாவில் நாற்காலியில் அமர்ந்து பேப்பரில் மூழ்க ஆரம்பித்தார் சுந்தரம் .
'என்னங்க , இன்னும் ராஜேந்திரன் பால் பாக்கெட்போடலையே? மணி ஏழே கால் ஆகிறது !பிளாக் காபி தரட்டுமா ?'
'வேணாம் ; வந்துருவார்..'
'சார்! பால்!' என்று அசரீரியாகப் பதில் வந்தது. வாசல் கதவு திறந்து மீண்டும் குரல் கொடுத்தார் ராஜேந்திரன்.
'அம்மா பால் !'
'மேகலா , ராஜேந்திரன் இன்னைக்கு லேட்டு ;
அஞ்சு நிமிஷம் நில்லுங்க ?'
அவரிடமிருந்துபால் பாக்கெட்டுகளைவாங்கிச்சென்றார்மேகலா.
'டீச்சர் சொன்னா கேட்டுக்கத்தான் வேணும்.' என்றுசுந்தரத்தைப் பார்த்ததும் பேச ஆரம்பித்தார் ராஜேந்திரன்:
' இன்னைக்கு பால் பூத்தில புது ஆசாமி. அதான் லேட்டு சார்.'
'நல்ல வேளை- கடுங்காப்பியிலிருந்து என்னைக் காப்பாத்தீட்டீங்க ராஜேந்திரன் .'
'சார் , நம்ம வீட்டை வாங்கினாரே ரவி,
அவர் தனக்கும் என்னையே பால் போடச் சொல்லி இருக்காரு . அவங்க கிரகப் பிரவேசத்துக்கு வேற தனியாக ஸ்பெஷல் பால் ஆர்டர் கொடுத்து இருக்காரு?'
'ஓ , நல்லதுப்பா . என்னைக்குப்பா கிரகப் பிரவேசம்?'
' சார் ! அவரு கொஞ்சம் ஒரு மாதிரி பேசுறாரு சார் .
பேச்சை சரியில்லை..'
'என்னப்பா விஷயம்?'
'அவங்க வீட்டு மேஸ்திரி மூலமா என்னைப் பிடிச்சு பாலுக்கு ஆர்டர் கொடுத்துப் பணமும் கொடுத்தாங்க ? அப்போ அவங்க வீட்டுக்காரம்மா இவர்கிட்டேசொன்னாங்க : 'ஏங்க , வீடு வித்தவங்களுக்குக் கிரகப் பிரவேச நோட்டீஸ் வைக்கலையே இன்னும் ! நாம பகல்ல போய் இன்விடேஷன் கொடுத்துக் கூப்பிடனும்னு 'சொன்னாங்க.
அதுக்கு அந்த மனுஷன் சொன்ன சொல்லுதான் எனக்குத் தாங்கலை சார் . மனசு நோகுது சார்.'
' அப்படி என்னப்பா சொன்னாரு ?'
மேகலா ஈரக்கையைத் தன் புடவை முந்தானையில் துடைத்துக் கொண்டே , தட்டில் மூன்று சிறிய டம்ளரில் காப்பி எடுத்து வந்துதந்தார் .
'ராஜேந்திரன் , இந்தாங்க கொஞ்சம் காபி குடிங்க ?'
'ஐயோ ! லேட்டா வந்ததற்காகத் திட்டாம காபி கொடுக்கிற பெரிய மனசும்மா உங்களுக்கு'
'சரி , சரி .. ரவி என்ன சொன்னாங்க?' என்று சுந்தரம்தூண்டிலைப் போட்டார் .
தயக்கம் தடுத்தது; சிறிய மெளனத்தின் பிறகு மெல்லிய குரலில் பேசினார் ராஜேந்திரன்:
'அந்தம்மாவுக்கு உடனடியாக வேகமாகப் பதில் சொன்னாரு . 'வேண்டாம் , அவங்களைக் கூப்பிட வேண்டாம். அவங்க வந்து பார்த்துட்டுப் பொறாமைப்படுவாங்க. அவங்க கண்ணு பட்டுத் திருஷ்டியாகிவிடும்' என்று அடிச்சுக் கதவைச் சாத்தின மாதிரி சொல்லிட்டாரு அந்த ஆளு ! உங்களை மாதிரி நல்ல மனுஷங்களைப்போய்..'
'ப்ச் விடுப்பா ! அதனாலென்ன இப்ப ..'
'காபி நல்லா இருக்கும்மா. டம்பளர் கழுவணும் . குழாய் எங்கே இருக்கும்மா ?'
'எப்பவுமே முதல் காபி நல்லாயிருக்கும். பரவாயில்லை. நான்கழுவிக்கிறேன். குடுங்க?'
'ஐயோ வேணாம்மா! நான்கழுவி வைச்சுடுறேன்ம்மா?'
'ராஜேந்திரன் , நீங்க இன்னும் நாலு வீட்டுக்குப் போகணுமா, வேணாமா ? ஏற்கெனவேலேட்டு !'
மேகலாவோ கண்டிப்பும் அக்கறையும் கலந்த கட்டளையால் அனுப்பிவைத்தார்அவரை.
அதன்பின்னர், சுந்தரம் மவுனமாக அப்படியே அடைக்கலமானார் அடுப்படியில் வாசல் கதவைத் தாழிட்டு விட்டு பேப்பரை மடித்து வைத்த பிறகு அடுப்படிக்குள் வருகிறார் சுந்தரம் . பாத்திரம் கழுவும் மேகலாவில் அருகே செல்கிறார் சுந்தரம்.
அணில்களின் கீச் கீச் ஒலி ஓயாமல் ஒலிக்கிறது ஜன்னலின் வெளியே..
'என்ன ஆச்சு மேகலா? ஏன் டல்லா
இருக்கே ? வழக்கமா பாட்டுப்பாடும் ரேடியோவைக்கூட ஆன் பண்ணாம இருக்கியே ?'
'ஒன்னும்இல்லை . மனுஷங்க எப்படி எல்லாம் இருக்காங்கபார்த்தீங்களா ? மனசு சங்கடப்படுதுங்க . நாம இந்த பிளாட்டுக்கு வந்து பால் காய்ச்சுவதற்குக்கூட அவங்களைக் கூப்பிட்டோம் . வந்தாங்க . அது என்னங்க இப்ப அவங்கஎன்னடான்னா இப்படி..'
'மேகலா, இதை மனசுல வாங்கிக்காதே . விட்டுத்தள்ளு . எல்லாரும் ஒரே மாதிரி இருந்துட்டா இந்த உலகத்துல ஏது சுவாரசியம் ,
சொல்லு ? ஒவ்வொருத்தவங்க ஒவ்வொரு மாதிரி தான் ; அதுவும் ஒவ்வொரு சமயத்திலேயும் ஒவ்வொரு மாதிரி தான் . இங்கே , காரணங்கள் என்கிறது பார்வைகளின் மொழிதானே !'
சட்டென்று சுந்தரத்தை அண்ணார்ந்து பார்த்தார் மேகலா.
மேகலாவின் முகத்தைத்தன் இரு கரங்களிலும் ஏந்தி , அதில் திரண்டு நின்ற கண்ணீர்த் துளிகளை விரல்களால் ஒற்றி எடுத்தார் சுந்தரம் மேகலா புன்னகைக்க முயன்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com