பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 179

ஜெயலலிதாவின் கைதுக்கு அவரவர் அரசியல் நிலைப்பாடு சார்ந்து அதை வரவேற்றும்  எதிர்த்தும் அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருந்தன.
பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 179

ஜெயலலிதாவின் கைதுக்கு அவரவர் அரசியல் நிலைப்பாடு சார்ந்து அதை வரவேற்றும்  எதிர்த்தும் அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருந்தன. மத்திய அமைச்சர்களான ப. சிதம்பரம், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் வழக்கம்போல, 'சட்டம் தனது கடமையைச் செய்திருக்கிறது' என்று சொன்னால், ஜெயலலிதாவையும், அதிமுகவையும் ஆதரிக்கும் கட்சிகள் அதைப் பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சித்தன.

ஜெயலலிதா கைதின்போது, திராவிடர் கழகம் அதிமுக சார்பு நிலைப்பாடு எடுத்திருந்த நேரம். அதனால், ஜெயலலிதா கைதைக் கொடுமையான செயல் என்று வர்ணித்து மிகவும் கடுமையாக அறிக்கை வெளியிட்டிருந்தார் அதன் பொதுச்செயலாளர் கி. வீரமணி. அந்த அறிக்கையின் நகலை எனக்கு அனுப்பித் தந்திருந்தார் ம. நடராசன்.

'அரசியலில் தூய்மையான நிர்வாகம், லஞ்ச லாவண்யமின்றி, ஊழலுக்கு இடமின்றி ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்பதிலோ, அதில் தவறாக நடந்தவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலோ நமக்கு வேறுபட்ட கருத்து ஏதும் கிடையாது. ஆனால், தமிழகத்தில் சில மாதங்களாக நடைபெறுபவை அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கைகள், அதிகமான கொடுமையான அத்துமீறல்கள் என்ற உணர்வினைத்தான் பொதுமக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெயலலிதாவின் வங்கிக் கணக்குகளை முடக்கிவிட்டு, வருமான வரி கட்டவில்லை என்பதற்காக ஜப்தி, ஏல நடவடிக்கை என்றால் அதைவிடக் கொடூரமான மனிதாபிமானமற்ற செயல் உண்டா? நீதிமன்ற விடுமுறை நாளான சனிக்கிழமையைக் கைது செய்ய ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? ஏன் இந்தத் திட்டமிட்டுப் பழிவாங்கும் படலம்?' என்றெல்லாம் அந்த அறிக்கையில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

அதிமுகவினரை ஆத்திரப்படுத்தும் விதத்தில் வெளிவந்தது சட்ட அமைச்சர் ஆலடி அருணா வெளியிட்டிருந்த அறிக்கை. 'ஜெயலலிதாவுக்கு சிறப்பு வகுப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. நாள் ஒன்றுக்கு அவருக்கு அரிசி 230 கிராம், கோதுமை 170 கிராம், பருப்பு 140 கிராம், பால் 420 மி.லி., நெய் 30 மி.லி., சர்க்கரை 30 கிராம் இவற்றுக்குத் தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் வழங்கப்படுகின்றன.

மின் விசிறி, கட்டில், மேஜை, நாற்காலி, ஜமுக்காளம், தலையணை வழங்கப்பட்டிருக்கின்றன. சொந்த மெத்தையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. எவர்சில்வர் தட்டு, டம்ளர், கரண்டிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவுக்கு சிறப்பு வசதி தருமாறு யாரும் கேட்கவில்லை. நீதிபதியும் அவ்வாறு உத்தரவிடவில்லை. எனினும் அவருக்கு சிறப்பு வசதிகள் செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது' என்று சட்ட அமைச்சர் ஆலடி அருணாவின் அறிக்கை தெரிவித்தது.

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதும் கைது செய்யப்பட்டு வருவதும் தொடர்ந்து கொண்டிருந்தன. அவைத் தலைவர் இரா. நெடுஞ்செழியனை சந்தித்தால் ஏதாவது விவரம் கிடைக்கும் என்று போனால், அவர் அதிமுக தலைமைக் கழகத்தில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கே போனபோது, கொட்டும் மழையிலும் அதிமுக தொண்டர்கள் அங்கே குவிந்திருந்ததையும், போராட்டம் நடத்திக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.

சுமார் ஒரு மணிநேரக் காத்திருப்புக்குப் பிறகு, வெளியே வந்தார் அவைத் தலைவர் நெடுஞ்செழியன். பி.எச். பாண்டியன், சுலோசனா சம்பத் உள்ளிட்டோர் அவருடன் இருந்தனர். 

'ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறோம். திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைதான் அனுமதி தருவார்கள் என்று நினைக்கிறேன். நானும் பி.எச். பாண்டியனும் அவரை சந்தித்துப் பேசிய பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துத் தீர்மானம் செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார்.

நெடுஞ்செழியனும், பி.எச். பாண்டியனும் நினைத்ததுபோல ஜெயலலிதாவை உடனடியாக சிறைக்குச் சென்று சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. தினந்தோறும் அதற்காக மத்திய சிறைச்சாலைக்கு வருவதும் மனு போடுவதும், அது நிராகரிக்கப்படுவதுமாக இரண்டு நாள்கள் கடந்தன. ஜெயலலிதாவை யாரும் சந்திக்க அனுமதிப்பதில்லை என்கிற செய்தி பரவியதும், தொண்டர்கள் மத்தியில் கடுமையான ஆத்திரம் எழுந்தது.

கடந்த இரண்டு நாள்களைப் போலவே, புதன்கிழமையும் அனுமதி மறுக்கப்படும் என்கிற எண்ணத்துடன் மத்திய சிறைச்சாலைக்குச் சென்ற நெடுஞ்செழியனுக்கும், பி.எச். பாண்டியனுக்கும் ஆச்சரியம். அவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது.

அவர்கள் வெளியே வருவது வரை, ஏனைய பத்திரிகையாளர்களுடன் நானும் சிறைச்சாலைக்கு வெளியே காத்திருந்தேன். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சல்லடை போட்டுச் சோதனை நடத்தி வருவது குறித்து பல செய்திகளை அங்கிருந்த நிருபர்கள் பகிர்ந்து கொண்டனர். கழிவுநீர்த் தொட்டியில் ரகசிய அறை உள்ளதா என்று குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் மூலம் ஆராயப்பட்டதுவரை பல சுவாரஸ்யமான தகவல்களை அவர்கள் சொன்னார்கள்.

ஒரு வழியாக பி.எச். பாண்டியனும் நெடுஞ்செழியனும் வெளியே வந்தனர். அவர்கள் மூலம் ஜெயலலிதா சில தகவல்களைப் பத்திரிகையாளர்களுக்குச் சொல்லி அனுப்பி இருந்தார். அறிக்கையாக வெளியிடப்படவில்லையே தவிர, அது அறிக்கை போலத்தான் அமைந்திருந்தது.

'இந்திய அரசியலில் ஒரு தவறான முன்னுதாரணத்தை கருணாநிதி ஏற்படுத்தி இருக்கிறார். யாருமே நிரந்தரமாக முதல்வராகவோ, அமைச்சர்களாகவோ இருந்துவிட முடியாது. நாங்கள் மறுபடி ஆட்சிக்கு வருவோம். இப்போது இருக்கிற திமுக அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தினால், அந்த அமைச்சர்களும் சிறைக்குப் போக வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்' என்பதுதான் அந்த அறிக்கையின் மூலம் சிறையில் இருந்த ஜெயலலிதா சொல்லி அனுப்பியிருந்த செய்தி.

ஜெயலலிதா நினைத்ததுபோல அவ்வளவு சுலபமாக வழக்குகளில் இருந்து தப்பிவிட முடியாது என்பது நன்றாகவே தெரிந்தது. எந்தவிதத்திலும் அவர் விடுதலை பெற்று விடவோ, தண்டனை பெறாமல் தப்பிப்பதற்கான வழியில்லாத வகையில் வழக்குகள் போடப்பட்டிருந்தன.

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் கட்ட அனுமதி அளித்தது, மீனா அட்வர்டைசிங் நிறுவனத்துக்கு ரூ.2 கோடி தள்ளுபடி செய்தது ஆகிய இரு வழக்குகளில் விரைவில் விசாரணை முடிய இருந்தது. இப்போதைய வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டு விடுதலை பெற்றாலும், அவர் வெளியே வர முடியாதபடி அந்த வழக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக அவர் மீது கைது நடவடிக்கைகளைத் தொடர உதவும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

தமிழக அரசின் செய்தித் துறையில் இருந்து முன்னாள் ஆளுநர் சென்னா ரெட்டிக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்திருந்தது. முதல்வர் கருணாநிதி மட்டுமல்லாமல், முக்கியமான அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள் என்பதால், அந்த நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்.

நிகழ்கால அரசியல் குறித்து நிச்சயமாக முதல்வர் கருணாநிதி ஏதாவது கூறுவார் என்கிற எதிர்பார்ப்பில் ஏனைய பத்திரிகையாளர்கள் பலரும்கூட அந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.

சென்னா ரெட்டியின் உருவப்படத்தைத் திறந்து வைத்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, மறைந்த தமிழக ஆளுநர் டாக்டர் சென்னா ரெட்டிக்கு சென்னையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அந்தக் கூட்டத்தில் அறிவித்தார் (அது நிறைவேறவில்லை). அந்த நிகழ்ச்சியில் ஆளுநர் உறவு குறித்துக் கருணாநிதி தெரிவித்த கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் - வருங்கால ஆய்வுகளுக்கு பயன்படலாம்.

'ஒரு மாநிலத்துக்கு ஆளுநர் தேவையில்லை என்கிற கொள்கையுடைய திமுகவைச் சேர்ந்தவன் நான். ஆனால், அண்ணாவின் கூற்றுப்படி அந்தப் பதவியில் இருப்பவர்களுக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும். சட்டப் பேரவையில் ஆளுநரை விமர்சித்துப் பேசக் கூடாது என்று ஒரு மரபு இருக்கிறது. ஆனால், கடந்த ஆட்சியில் அந்த மரபை மீறி சென்னா ரெட்டி மீது அவதூறு கூறினார்கள்.  சட்டப் பேரவைக் குறிப்பிலிருந்து அவர் மீது கூறப்பட்டவற்றை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். கடந்த ஆட்சி எவ்வளவு மோசமாக நடந்து கொண்டது என்பதை எதிர்காலம் தெரிந்து கொள்வதற்கு அது ஓர் உதாரணமாக இருப்பதால் அதை அப்படியே விட்டுவிடலாம்...' - இது முதல்வர் மு. கருணாநிதியின் சென்னா ரெட்டி நினைவேந்தல் நிகழ்ச்சி உரையில் காணப்பட்ட வார்த்தைகள்.

மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை சந்திக்க சாரைசாரையாகத் தொண்டர்கள் வந்தவண்ணம் இருந்தனர். இப்போதுபோல காட்சி ஊடகங்கள் அதிகம் இல்லாத காலம் அது. பிரபலமாக இருந்த சன் தொலைக்காட்சியும் சரி, அரசின் தூர்தர்ஷனும் சரி ஜெயலலிதா தொடர்பான எதிர்மறை செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தன என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.

ஜெயலலிதா கைது செய்யப்பட்டது முதல் நான்கைந்து நாள்களாக அவரை சந்திப்பதற்காக வெளியூரிலிருந்து வந்த பல தொண்டர்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், அதைச் சுற்றியுள்ள தெருக்களிலும் இரவு பகலாகக் காத்துக் கிடந்தனர் என்பது குறித்து யாருக்கும் நினைவிருக்காது. தொண்டர்களின் வற்புறுத்தல் அதிகரித்ததால், சிறை நிர்வாகம் அனுமதி அளிப்பதா வேண்டாமா என்கிற தர்மசங்கடத்தில் திணறியது.

தன்னை சந்திக்க உணவும் உறக்கமும் இல்லாமல் தொண்டர்கள் வெளியே காத்திருக்கிறார்கள் என்கிற செய்தி ஜெயலலிதாவுக்குத் தெரியவந்தபோது அவர் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படுகிறது. வேறு வழியில்லாமல் அவரது வேண்டுகோளை ஏற்று சில நூறு தொண்டர்கள் அவரைச் சந்திக்கச் சிறை கண்காணிப்பாளர் அனுமதி அளிக்க இருப்பதாகச் செய்தி கிடைத்தது. சென்றபோது, ஏனைய பத்திரிகை நிருபர்களும் அங்கே கூடிவிட்டிருந்தனர்.

தொண்டர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில், அவர்கள் ஜெயலலிதாவைப் பார்த்து கதறியழுத சத்தம் சிறைச்சாலைக்கு வெளியே சாலை வரை கேட்டது. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலிருந்துகூடப் பலர் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் சிறை வாசலில் கூடிவிட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினரும், சிறை அதிகாரிகளும் தடுமாறிக் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் ஜெயலலிதா கண் கலங்கினார்... 'தைரியமாக இருங்கள்... எனக்கு ஒன்றும் ஆகிவிடாது...' என்று ஆறுதல் கூறினார்... தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது, தற்கொலை முயற்சியில் இறங்கக் கூடாது என்று அவர்களுக்கு ஜெயலலிதா அறிவுரை கூறினார் - இப்படி அவரை சந்தித்துவிட்டு வெளியே வந்த தொண்டர்கள் ஆளுக்கு ஆள் ஒவ்வொரு செய்தியைச் சொன்னார்கள்.

ஜெயலலிதாவின் முகம், கை கால்களில் கொசுக்கள் கடித்ததால் ஆங்காங்கே சிவப்பாக மாறியிருந்தது என்பது பரவலாக அவர்கள் தெரிவித்த கருத்து. அந்தத் தொண்டர்களிடம் நான் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, சிறைச்சாலைக்கு வெளியே ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அதில் யார் இருக்கிறார் என்று நாங்கள் யாரும் கவனிக்கவில்லை. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அந்தக் கார் அங்கே காத்திருந்தது என்பது மட்டும்தான் தெரியும்.

சிறையில் இருந்த ஜெயலலிதாவை சந்திக்க வந்திருந்த பிரமுகர் அவர் என்பதும், அனுமதிக்காகத்தான் சில மணிநேரமாக அவர் காரில் காத்திருந்தார் என்பதும் அவர் காரிலிருந்து இறங்கி சிறைக்குள் நடந்து போனபோதுதான் எங்களுக்குத் தெரிந்தது. அவர் ஜெயலலிதாவை சந்திக்க சிறைச்சாலைக்கு வருவார் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.

பத்திரிகையாளர்களைத் திரும்பிப் பார்க்காமல் சிறைச்சாலைக்குள் நுழைந்தார் அவர்...

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.