கோலிவுட் ரவுண்ட் அப்...

விஜய்யின் அடுத்த இயக்குநர் யார்? நயனின் புதிய பட அறிவிப்புகள்!
கோலிவுட் ரவுண்ட் அப்...

மீண்டும் தள்ளி போகும் தங்கலான்?

பா.ரஞ்சித் இயக்கும் 'தங்கலான்' நிஜமாகவே மிகப் பெரிய எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. அத்தனை ஹீரோக்களும் விக்ரம் ஏற்றிருக்கும் கேரக்டர் பற்றியும் அதற்கான உழைப்பு பற்றியும் ஆச்சரிப்படுகிறார்கள். அவரோடு பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் எனப் பலரும் நடிக்கிறார்கள். அத்தனை பேரும் சூட்டிங் முடிந்த பிறகும் ஹோட்டல்களுக்கு போகாமல் விக்ரமின் நடிப்பை பார்க்கக் கூடியிருப்பது நடந்திருக்கிறது. தங்கம் வெட்டியெடுக்கும் கோலார் தங்க வயலை பின்னணியில் வைத்து எடுக்கும் தங்கலானின் அடுத்தகட்ட ஷுட்டிங் மதுரை, சென்னையிலும் நடந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் அவசரப்படாமலும் வேண்டிய நேர்த்தி கிடைக்கும் வரைக்கும் எடுத்திருப்பதால் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் படத்திற்கு எக்கச்சக்கமாக செலவழித்திருக்கிறது.

இதில் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ஹீரோவுக்கும் அப்படியோர் ஒற்றுமை இருக்கிறதாம். படத்தின் குவாலிட்டிக்கு செலவழிப்பதில் எனக்கு பிரச்னையே இல்லை என ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார் ஞானவேல் ராஜா. ஷுட்டிங் முடிந்த பிறகு அடுத்தடுத்த வேலைகள் படுவேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை பிரமாதமாக வெளியிட்டு விடலாம் என ஆசையோடு இருந்தது யூனிட். அப்படியும் கொஞ்ச வேலைகள் நிலுவை இருந்ததால் அதை சரி செய்ய காலம் தேவைப்பட்டது. ஜனவரி 26-க்குள் தங்கலானை கொண்டு வந்து சேர்ப்பதில் கஷ்டங்கள் இருந்ததால் நேரம் எடுத்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை எடுத்துச் செய்யலாம். ஏப்ரல் மாதத்துக்கு தங்கலானை தள்ளி வைத்தார்கள்.

எப்படியும் ஏப்ரல் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மே முதல் இரண்டாவது வாரத்தில் புதிய அரசு அமைக்கப்படலாம் என்பதால், அதற்கு முன்பு தேர்தல் பரப்புரை, விவாதங்கள் என தேர்தல் களம் பரபரப்படைவதால் அந்தச் சமயத்தில் படம் வெளிவந்தால் கவனம் பெறாமல் போய்விடுமோ என்ற கவலை யூனிட்டுக்கு வந்திருக்கிறது. இவ்வளவு தூரம் கடுமையாக உழைத்து மக்கள் கவனத்துக்குப் பூரணமாக போக வேண்டும் என்பதே யூனிட்டின் விருப்பமாக இருக்கிறது.

இந்த விவாதத்தின் முடிவு எப்படி இருக்கும் என்பது முன்கூட்டியே இப்போது தெரிந்துவிடும். கண்டிப்பாக தங்கலான் தள்ளிப் போகும்.

விஜய்யின் கடைசி படத்தை இயக்குவது யார்?

நடிகர் விஜய், இப்போது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் 'தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அவரது அடுத்த படத்தை இயக்கப் போவது வெற்றிமாறன் என்றும், கார்த்திக் சுப்புராஜ் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் விஜய் அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தைகள் எந்த அளவில் இருக்கின்றன.

'தமிழக வெற்றி கழகம்' என்று கட்சி தொடங்கிய விஜய், அந்த அறிவிப்பின்போது 'அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன்.

என் சார்பில், நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்' என்று தெரிவித்திருந்தார்.

இந்தச் செய்திக்குப் பிறகு விஜய்யின் 69-ஆவது படத்தை இயக்கப்போவது யார் என்ற பேச்சு கிளம்பியது. வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அட்லி, வினோத், நெல்சன்.. என பேச்சு கிளம்பியது. இப்போது வெற்றிமாறன் தான்.. கார்த்திக் சுப்புராஜ் தான் என சமூக வலைதளங்களில் சொல்லி வருகிறார்கள்.

அதைப் போல, சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100-ஆவது படம் விஜய் படமாகவே இருக்க வேண்டும் என ஆர்.பி.செüத்ரியும் விரும்பி வருகிறார். விஜய் எந்த இயக்குநரை கை காட்டினாலும், அவருடன் பணியாற்ற 'பீஸ்ட்' தயாரிப்பு நிறுவனமும் காத்திருக்கிறது. ஹெச்.வினோத்துக்கு தீரன் 2 அடுத்து தனுஷை வைத்து இயக்கும் படம் என்ற பேச்சு இருப்பதால், இந்தப் பட்டியலில் வினோத்தும் இல்லை. 'மெர்சல், 'தெறி', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கிய அட்லியும் அடுத்து விஜய்யை இயக்கலாம் என்ற பேச்சு இருக்கிறது.நடிகராக இது கடைசி படம் என்பதால், விஜய் தனது அரசியலுக்கு தூணாக அமையும் கதையையே தேர்ந்தெடுப்பார். அனேகமாக அட்லி அதற்கு பொருத்தமானவர் என்றும், இந்த பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸிற்கும் ஒரு வாய்ப்பு அமையலாம் என்றும் சொல்கிறார்கள்.

விஜயகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாக, அவருக்கு ரமணா பிரேக்கிங் படமாக அமைந்தது. தெலுங்கிலும் சிரஞ்சீவி கட்சித் தொடங்குவதற்கு முன்பாகவும் முருகதாஸ் படம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்தில் அறிவித்து விடுவார்கள் என்கின்றனர். அரசியலுக்கு முன்பான படம், அதில் எந்தப் பிசகும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது விஜய் தரப்பு. இத்தனை இயக்குநர்கள் பேச்சுவார்த்தையில் இருப்பதைப் போலவே, தயாரிப்பு நிறுவனமும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. சினிமாவை விட்டு விலகுவதற்கு முன் இந்த இயக்குநர்களில் ஒருவரை தான் டிக் செய்வார் என்கிறார்கள். கூடிய விரைவில் அந்த அறிவிப்பும் வந்துவிடும் என்கின்றனர்.

நயனின் லைன் அப் !

ஹீரோயின் சென்ட்ரிக்கோ அல்லது ஹீரோக்களின் ஜோடியோ... நயன்தாரா நடிக்கும் படங்களில் அவருக்கான ஸ்கோப் நிச்சயம் இருக்கும். சமீபத்தில் வெளியான 'அன்னபூரணி', 'ஜவான்' எனப் பல படங்களை உதாரணமாகச் சொல்ல முடியும்.

இதனை அடுத்தும் வியக்க வைக்கும் படங்கள் பலவற்றை கைவசம் வைத்துள்ளார். நயன்தாரா நடிப்பில் வரும் ஏப்ரலில் திரைக்கு வரும் படமாக 'டெஸ்ட்' உருவாகியுள்ளது. மாதவன், சித்தார்த் நடிப்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் படமிது.

இந்தப் படத்தில் நயனின் கதாபாத்திரத்தின் பெயர் குமுதா. இதன் நிறைவு நாள் படப்பிடிப்பில் கூட, நயன்தாரா, 'குமுதாவை ரொம்பவே மிஸ் செய்கிறேன். குமுதாவுக்குப் பக்கபலமாக இருந்த மாதவனுக்கு நன்றி. எப்போதும் முன்னுதாரணமாக இருக்கும் நடிகர் சித்தார்த்துக்கு நன்றி. 'டெஸ்ட்' என்னும் தொழிலாளிகளின் அன்பைப் புரிந்துகொள்ள நீங்கள் வெகுநாள்கள் காத்திருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்' என நெகிழ்ந்து போய் தெரிவித்திருந்தார்.

அந்தப் படத்தை அடுத்து 'மண்ணாங்கட்டி 1960' என்ற ஹீரோயின் சென்ட்ரிக் படத்திலும் நடித்து முடித்துவிட்டார். 'கோலமாவு கோகிலா' கூட்டணியான யோகிபாபுவுடன் இதில் நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில், கொடைக்கானலில் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள். யூடியூப்பரான டியூட் விக்கி இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஜூன் மாதம் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து விக்னேஷ் சிவன் தயாரிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனது 81-ஆவது படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார் நயன்தாரா. ஒரு வனவிலங்குக்கும் (யானை), ஒரு பெண்ணிற்கும் இடையே உள்ள பாசப்பிணைப்புதான் படத்தின் கதை என்கிறார்கள்.

இப்போது சூரியை வைத்து 'கருடன்' படத்தை இயக்கியிருக்கும் துரை செந்தில்குமார், அந்தப் படத்தின் ரிலீஸிற்குப் பிறகே, நயன்தாரா படப்பிடிப்பைத் தொடங்குவார் என்கிறார்கள்.

இதற்கிடையே விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து ஜல்லிக்கட்டு பற்றிய ஆவணப்படமான 'ரூட்ஸ்' என்ற படைப்பையும் தயாரித்து வருகின்றார். பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு இதை அனுப்பி வருகின்றனர். தவிர, ஆர்.ஜே.பாலாஜியுடன் 'மூக்குத்தி அம்மன் 2' டேக் ஆஃப் ஆக உள்ளதாகவும் சொல்கிறார்கள். மலையாளத்தில் நிவின் பாலியுடன், 'டியர் ஸ்டூடண்ட்ஸ்', ஜெயம் ரவியுடன் 'தனி ஒருவன் 2' ஆகிய படங்களிலும் இவரை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com