ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கருக் குழாய்களில் அடைப்பு நீங்க வழி என்ன?

மகப்பேறு மறுப்பை முறியடிக்கும் மூலிகை மருத்துவம்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கருக் குழாய்களில் அடைப்பு நீங்க வழி என்ன?

என் மகளுக்குத் திருமணமாகி, இரு ஆண்டுகளாகியும் குழந்தை பிறக்கவில்லை. கருப்பையின் இரு பகுதிகளிலுமுள்ள குழாய்களில் அடைப்பு உள்ளதால்தான் இதற்கு காரணம் என மருத்துவர் கூறுகிறார். இதற்கு ஆயுர்வேத சிகிச்சை உள்ளதா?

வாசகி

கருப்பைக் குழாய் அடைப்பால் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை பெண்களுக்குக் குழந்தைப் பிறப்பு ஏற்படாமல் போவதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

வாதம், கபம் எனும் இரு தோஷங்களின் ஆதிக்யம் காரணமாக, இவ்வாறு நிகழலாம். குழாயின் உட்புற விட்டத்தை வாதம் சுருக்குவதாலும், கபம் அங்கு ஏற்படுத்தும் வீக்கத்தினாலும், கருப்பைக் குழாய் அடைப்பு உருவாகிறது. இதனால் கருவை உருவாக்கும் சினை முட்டையின் வரவானது கருப்பையில் நிகழாமல் போய்விடுவதன் பலனால் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உந்தித் தள்ளுதல் எனும் சக்தியை வாயுவின் மூலமாக மட்டுமே நிகழ்வதால் அடைப்பு அதை ஏற்படுத்த விடாமல் தடுக்கிறது. மலட்டுத் தன்மை, சினை முட்டை அழிவு, உடலுறவில் விருப்பமின்மை போன்றவை இதன்மூலம் பெண்களுக்கு ஏற்படுகிறது.

'உத்தரவஸ்தி' எனும் பெண்குறி வாயிலாகச் செலுத்தப்படும் மூலிகை மருந்துகள், ஒரு சிறந்த வரப்பிரசாதமான ஆயுர்வேதச் சிகிச்சை மூலமாக இந்த அடைப்பை நீக்க முடியும்.

வாத- கபங்களை அடக்குதல், மூவகை தோஷங்களையும் வென்றுவிடக் கூடிய குணங்களைக் கொண்ட மூலிகைகள், நுண்ணிய, இளக்கக் கூடிய , காரமான, சூடான, உடைத்து உள்நுழையக்கூடிய, சுரண்டக் கூடிய குணங்கள் நிறைந்த மூலிகைகளால் மட்டுமே அடைப்பை மூழுவதுமாக நீக்க முடியும்.

இதனால் சூடும், நெய்ப்பும், கனமுமான குணம் நிறைந்த விளக்கெண்ணெய்யில் கலக்கப்பட்டு மேற்குறிப்பிட்ட மூலிகை மருந்துகள் சேர்த்து காய்ச்சப்பட்ட 'கந்தர்வஹஸ்தாதி' விளக்கெண்ணெய் மருந்து உள்ளுக்குச் சாப்பிட்டு, குடலை நன்றாகச் சுத்தப்படுத்த வேண்டும். இந்த மூலிகை மருந்து வாத- கப தோஷங்களை நீக்கி, வாயுவின் நகரும் தன்மையை மேம்படுத்தித் தருகிறது.

'நிரூஹவஸ்தி' எனும் கஷாயவஸ்தி- அதாவது மூலிகைகளால் காய்ச்சப்பட்ட கஷாய மருந்துடன் தேன், இந்துப்பு, தைலம், கல்கம் எனும் மூலிகை உருண்டை ஆகியவற்றைச் சேர்த்த மருந்தை ஆசனவாய் வழியாக, மலப்பைக்குச் செலுத்தி கீழ்பெருங்குடலைச் சுத்தப்படுத்துவதன் மூலமாக, கருப்பைக் குழாய் அடைப்பை நீக்க வேண்டும்.

உட்புறக் கருப்பைப் பகுதிகளைக் கழுவக் கூடிய தசமூலம் எனும் கஷாய மருந்தைப் பயன்படுத்துவதன் விளைவாக கருப்பை, அதன் குழாய் பகுதிகளில் ஏற்பட்டுள்ள அழற்சி, வீக்கம் போன்றவை நீங்கி விடுகின்றன.

மஹாராஸ்னாதி கஷாயம், அசோகாரிஷ்டம், குமார்யாஸவம், சப்தஸôரம் போன்ற ஆயுர்வேத மருந்துகளால், உங்கள் மகளுக்கு ஏற்பட்டுள்ள உபாதை நீங்குவதற்கு வாய்ப்புள்ளது. உணவு, செயல்பாடு போன்றவை நாடி பார்த்துச் சொல்ல வேண்டியிருப்பதால், ஆயுர்வேத மருத்துவரை அணுகி அறிந்துகொள்ளவும்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com