பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 180

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 180

சென்னை மத்திய சிறைச்சாலையில் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக வந்திருந்த பிரமுகர் வேறுயாருமல்ல, திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கி. வீரமணிதான்.

ஜெயலலிதாவின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை காரணமாக அப்போது அதிமுகவை திராவிடர் கழகம். இன்னும் சொல்வதாக இருந்தால், 50% வரம்பை மீறி 69% இட ஒதுக்கீடு என்கிற அதிமுக அரசின் அறிவிப்புக்குக் காரணமாக இருந்ததே திராவிடர் கழகமும், அதன் பொதுச் செயலாளர் கி. வீரமணியும்தான்.

வழக்குரைஞர் பாளை சண்முகத்துடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை சந்திக்கக் காத்திருந்த கி.வீரமணிக்கு மதியத்துக்கு மேல் தான் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. சுமார் 15 நிமிடங்கள் கி. வீரமணியும் வழக்குரைஞர் பாளை சண்முகமும் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அந்தச் சந்திப்பின்போது, கிரண்பேடி எழுதிய 'ஐ டேர்' (நான் எதற்கும் துணிந்தவள்) என்கிற புத்தகத்தை 'விடுதலை' ஆசிரியர் கி. வீரமணி, ஜெயலலிதாவுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார் என்றும், அதை அவர் சிரித்தபடியே வாங்கி வைத்துக்கொண்டார் என்றும் கூறப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் கைதுக்கு எதிர்ப்பு வலுத்தவண்ணம் இருந்தது. தீக்குளிப்பதும், மறியலில் ஈடுபடுவதும் பரவலாகக் காணப்பட்டன. அன்றைய ஆட்சியாளர்களின் நல்ல காலம் என்றுதான் சொல்ல வேண்டும். சென்னையையும் அதைச் சுற்றியுள்ள கடலோர மாவட்டங்களையும் நிலைகுலையச் செய்து கொண்டிருந்தது அடைமழை.

ஜெயலலிதா
ஜெயலலிதா

இதற்கிடையில் சிறைச்சாலைக்கும், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டுக்குமாக அந்த அடைமழையில் இங்கும் அங்குமாகப் பத்திரிகையாளர்கள் பயணித்துக் கொண்டிருந்தோம்.

'ஜெயலலிதா கைது செய்யப்பட்டது முதல் தொடர்ந்து ஐந்து நாள்களாக அவரது போயஸ் தோட்ட வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது, அங்கிருந்த பொருள்கள் குறித்த விவரங்களைச் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் வீடு, வாகனங்கள், அங்கிருக்கும் பொருள்கள் பற்றிய விவரங்களைப் பட்டியல் இடுவதுடன், விடியோ, புகைப்படங்கள் ஆகியவையும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

சோதனை நடந்தபோது சாட்சியாகத் தேனாம்பேட்டை சரகத்தைச் சேர்ந்த 2 வட்டாட்சியர்கள் காவல்துறையினருடன் இருந்தனர். எல்லா பொருள்களும் அங்கேயே வைத்து சீல் வைக்கப்படும். பிறகு நீதிமன்றத்

திலோ, அவர் மீது விசாரணை நடத்தும் தனி நீதிமன்றத்திலோ தாக்கல் செய்யப்படும்' - இதுதான் அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் பத்திரிகையாளர்களுக்குத் தந்த தகவல்.

தனது புகைப்படத்தையோ, தனது பெயரையோ வெளியிடக் கூடாது என்கிற நிபந்தனையின் அடிப்படையில் நான் உள்பட குறிப்பிட்ட நான்கு ஆங்கில தினசரிகள், செய்தி நிறுவனங்களின் நிருபர்களுக்கு அதிகாரி ஒருவர் பேட்டி அளித்தார்.

'ரூ.2 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. எல்லாமே ரூ.500 நோட்டுகள். இது தவிர தங்கம், வெள்ளி, வைர நகைகள், பட்டுச் சேலைகள், வெளிநாட்டுக் கைக்கடிகாரங்கள், காலணிகள் போன்றவையும் சோதனையில் சிக்கி இருக்கின்றன...

சுமார் இருநூறுக்கும் அதிகமான சூட்கேஸ்கள் இருந்தன. போயஸ் தோட்ட வீட்டில் பூமிக்கடியில் தங்க, வைர நகைகள் புதைத்து வைக்கப்பட்டனவா என்பதைக் கண்டறிய நவீன கருவிகள் மூலம் சோதனையிட்டோம். எதுவும் சிக்கவில்லை. அதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது...'

'சோதனையில் வேறு என்னவெல்லாம் சிக்கி இருக்கின்றன..?'

நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் கிடைத்தன. பெரும்பாலானவை அவர் நடிகையாக இருந்தபோது எடுத்தவை. திரைப்பட ஸ்டில்களும் அதில் அடக்கம். அவரும் சசிகலாவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இருக்கின்றன. முதல்வராக அவர் முக்கியமான பிரமுகர்களைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கிடைத்தன. அவற்றையும் பத்திரப்படுத்தி இருக்கிறோம்.'

போயஸ் தோட்டத்தில் அந்த அதிகாரியுடனான பேட்டியை முடித்துக்கொண்டு முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கலாம் என்று நாங்கள் அறிவாலயம் போனோம். அறிவாலயம் வெறிச்சோடி இருந்தது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்னை மாநகராட்சியின் மேயர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களுடன் முதல்வர் கருணாநிதி பார்வையிடப் போயிருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதனால், அறிவாலயத்திலிருந்து லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்குப் புறப்பட்டோம்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு வண்ணத் தொலைக்காட்சிகள் வாங்கியதில் நடந்த ரூ.8 கோடி ஊழல் தொடர்பான வழக்கில் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி ராமமூர்த்தியால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. புலன்விசாரணை இன்னும் முடியவில்லை என்கிற வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 'பத்து நாள்களில் புலன்விசாரணையை முடித்துக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்' என்று மாநில குற்றப்புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டார்.

ஜெயலலிதாவை வெளியே விட்டால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்கிற அரசுத்தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நீதிபதி ராமமூர்த்தி ஜாமீன் மறுப்பதற்கு வேறொரு காரணத்தைக் கூறியிருந்தார். அது மாலை நாளிதழ்களில் வந்திருந்தது. அதிமுக அலுவலகத்தில் அதை நாங்கள் படித்துத் தெரிந்து கொண்டோம்.

'ஜெயலலிதா கைதானவுடன் பல இடங்களில் வன்முறை தலைதூக்கியது. அரசு பஸ்கள் கொளுத்தப்பட்டன. கற்கள் வீசப்பட்டன. ஒரு வாரமாகியும் இன்னும்கூடத் தமிழகத்தின் பல பகுதிகளில் தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற செயல்கள் சாட்சிகளிடம் ஒருவித பயத்தை உருவாக்கும். சாட்சிகள் கலைய வாய்ப்புண்டு' என்று தனது முடிவுக்கு விளக்கம் கொடுத்திருந்தார் நீதிபதி ராமமூர்த்தி.

நாங்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள், அதிலும் குறிப்பாக தேசிய ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் குழுமி இருந்தனர். மழை விட்டபாடில்லை என்பதால், அங்கும் இங்குமாகப் பயணிப்பது எளிதாக இருக்கவில்லை. வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். மார்கபந்து வந்தபோது, அவர் சில செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.

ஜெயலலிதா சார்பில் உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் விவரத்தை ஆர். மார்கபந்து தெரிவித்தார். முதலாவது, வீட்டுக்காவல் கோரும் மனு. அந்த மனுவின் நகலை எங்களிடம் பகிர்ந்து கொண்டார் மார்கபந்து.

'முதல்வராக இருந்தபோது, என்னுடைய வலியுறுத்தலின் பேரில்தான் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது. பல்வேறு சமூக விரோதக் குற்றங்களை அடக்கி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி இருக்கிறேன். அவர்களில் பலர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழும் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் என்னுடைய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்த முடியும்.

ஆண், பெண் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் நானும் அடைக்கப்பட்டிருக்கிறேன். சிறையில் என்னுடைய உயிருக்குத் தொடர்ச்சியாக ஆபத்து இருந்து வருகிறது. 1894-ஆம் ஆண்டு இந்திய சிறைகள் சட்டம், தமிழ்நாடு சிறைகள் சட்டம் ஆகியவற்றின்படி, எந்த இடத்தையும் சிறையாக

அறிவிக்கலாம். மறைந்த காஷ்மீர் முதல்வர் ஷேக் அப்துல்லா கொடைக்கானலில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்ததை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எனக்கு மத்திய அரசால் 'இசட்' பிரிவின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனக்கு முன் ஜாமீன் வழங்கப்படும்வரை, என்னுடைய போயஸ் தோட்ட வீட்டை சிறையாக அறிவித்து எனக்கு வீட்டுக்காவல் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' - இதுதான் அந்த மனுவின் சாராம்சம்.

தனது போயஸ் தோட்ட வீட்டில் நடைபெறும் சோதனைகளை சட்ட விரோதம் என்று அறிவிக்கக் கோரியது அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த இன்னொரு மனு. தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டு சட்ட விரோதமாக சோதனைகள் நடத்தப்படுகின்றன என்பது ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு.

'கைது செய்வதற்கு முன்னால் என்னுடைய வீட்டில் நான் இருக்கும்போதே சோதனை மேற்கொண்டிருக்கலாம். கைது செய்யப்பட்ட 7-ஆம் தேதி அல்லது அதற்கு முந்தைய நாளில் வாரண்டைக் கொடுத்திருக்கலாம். என்னையும், சசிகலாவையும் கைது செய்து சிறையில் அடைத்த பிறகு, சோதனைகள் நடக்கும்போது என்னுடைய பிரதிநிதியாக இரண்டு பேரை நியமிக்குமாறு கேட்கிறார்கள். அதன் மூலம் சோதனை நடத்தப்படுவதை காண எனக்கு இருக்கும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.

வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களைப் பற்றி திமுக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் தொலைக்காட்சி நிறுவனமும் ஊடகங்களும் பொய்யான பெரிதுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுகின்றன. கிரிமினல் சட்டம் 100-க்குப் புறம்பாக இந்தச் சோதனைகள் நடந்துள்ளன. பத்திரிகைகளும், தொலைக்காட்சிச் சேனல்களும் சோதனை பற்றிய செய்திகள் வெளியிடுவதை இடைக்காலமாகத் தடை செய்ய வேண்டும். சோதனை முடிந்து, கடைசிப் பட்டியல் தயாரித்து, எனக்கு அது குறித்த தகவல் தெரிவித்த பிறகுதான் செய்தி வெளியிட வேண்டும்' - இதுதான் இன்னொரு மனு.

சிறிது நேரத்தில் பி.எச். பாண்டியனும் லாயிட்ஸ் சாலை அதிமுக தலைமையகத்துக்கு வந்தார். நாங்கள் நீண்ட நேரம் வழக்கு குறித்தும், ஜெயலலிதாவின் மனநிலை குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். மத்திய சிறைச்சாலையில் காலை முதல் மாலை வரையிலான ஜெயலலிதாவின் அன்றாட நடைமுறைகள் குறித்தெல்லாம் தெரிவித்தார் பி.எச். பாண்டியன்.

நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, பொதுப்பணித் துறை முன்னாள் அமைச்சர் எஸ். கண்ணப்பன் கைது செய்யப்பட்டு, சிறைக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்த தகவல் வந்தது. அதிமுக ஆட்சியின்போது நிலக்கரி இறக்குமதி செய்ததில் ஊழல் செய்ததாகக் கைது செய்யப்பட்டிருந்தார் அமைச்சர் எஸ். கண்ணப்பன்.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்திருந்த வழக்கு அது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,

முன்னாள் அமைச்சர் எஸ். கண்ணப்பன், அப்போதைய தலைமைச் செயலர் டி.வி. வெங்கட்ராமன், மின்வாரியத் தலைவராக இருந்த ஹரிபாஸ்கர் ஆகியோர் கூட்டாக சதி செய்து நிலக்கரி இறக்குமதியில் ஊழல் செய்தனர் என்பது குற்றச்சாட்டு. இறக்குமதிக்கான டெண்டரில் தில்லுமுல்லுகள் செய்ததாகவும், கோப்புகளைத் திருத்தியதாகவும் சுவாமி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

'இந்த வழக்கிலும் ஜெயலலிதா கைது செய்யப்பட்டால், இப்போதைக்கு ஜாமீனில் வெளிவரமாட்டார் என்று தோன்றுகிறதே...'

என்கிற கேள்விக்கு சற்று தாமதித்து பதில் அளித்தார் பி.எச். பாண்டியன்.

'பழி வாங்குவது என்று முதல்வர் கருணாநிதியும், மத்திய நிதி யமைச்சர் ப. சிதம்பரமும் முடிவெடுத்துவிட்டனர். உயர்நீதிமன்ற மனுக்களும் சரி, இவர்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர இருக்கும் வழக்குகளும் சரி எங்களுக்கு சாதகமானதாக இருக்காது. ஆனால், இதுவே அவர்களுக்கு அடுத்த தேர்தலில் பாதகமாக இருக்கப்போகிறது. மக்கள் மன்றம் அவர்களை மன்னிக்காது' என்பதுதான் பி.எச். பாண்டியன் தெரிவித்த கருத்து.

நாங்கள் கிளம்பத் தயாரானோம். என்னைத் தனியாக அழைத்தார்

ஆர். மார்கபந்து. தனது கையிலிருந்த ஒரு காகிதத்தை எடுத்து நீட்டி இதைப் படித்துப் பாருங்கள் என்றார். பிரித்துப் பார்த்தபோது அது அதிர்ச்சியாக இருந்தது. இப்போது அதுவே சிரிப்பை வரவழைக்கிறது. காலம் அனைத்தையும் புரட்டித்தான் போடுகிறது...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com