ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உற்சாகத்துடன் இருக்க என்ன வழி?

உடல்நலம் காக்கும் ஆயுர்வேத ரகசியங்கள்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உற்சாகத்துடன் இருக்க என்ன வழி?

எனக்கு நாற்பத்து நான்கு வயதாகிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது மகள் பிறந்தபோது, எனக்கு தைராய்டு சுரப்பு குறைவாக இருப்பதால், தோல் வரட்சி, அரிப்பு கடுமையாக உள்ளன. காலையில் எழும்போதே சோர்வாக உள்ளது. எட்டு மணி நேரம் அலுவலகப் பணி காரணமாக, உடல் சூடு, கண் எரிச்சல், மலச் சிக்கல் உள்ளன. கால் முட்டி வலியும்கூட. உற்சாகத்துடன் இருக்க என் உபாதைகளுக்குத் தீர்வு என்ன?

-து. தீபா, ஆனைமலை.

வாயுவின் ஆதிக்ய பகுதியான தோலில் வரட்சி, கபத்தின் வேலையான அரிப்பையும் ஒருசேர நீங்கள் அடைந்துள்ளீர்கள். வாத, கப தோஷங்களின் சீற்றத்தைத் தோலில் இருக்கின்றன என்பதும் தெளிவாகத் தெரிகிறது. 'ஏலாதிகேரதைலம்' எனும் மூலிகைத் தைலத்தை இளஞ்சூடாக உடலெங்கும் தேய்த்து குளித்துவர இவ்விரு தோஷ சேர்க்கையின் விளைவாக ஏற்பட்டுள்ள வரட்சியும் அரிப்பையும் குறைக்கலாம்.

காலையில் எழும்போதே சோர்வாக உள்ளது என்று நீங்கள் குறிப்பிடுவதால், இரவில் எளிதில் செரிக்கக் கூடிய உணவை சிறிதளவே சாப்பிட்டு, அதன்மேல் சீரகம் போட்டுக் காய்ச்சிய வென்னீரை அருந்தி, சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து அதன்பிறகு படுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளவும். தயிரில் கால் பங்கு தண்ணீர்விட்டு, நன்கு கடைந்து மோராக்கி, அதை சூடாறிய புழுங்கலரிசி சாதத்துடன் கலந்து சிட்டிகை இந்துப்பு சேர்த்து, கொத்தமல்லி, கருவேப்பிலை, புளி, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்த துவையலைத் தொட்டு சாப்பிடுவதற்குப் பயன்படுத்தினால், மறுநாள் காலையில் உற்சாகத்துடன் சோர்வு நீங்க எழுந்துகொள்ளலாம்.

கனமான மாவுப் பொருள்கள், மைதா, எண்ணெயில் பொரித்தவை போன்றவற்றை முழுவதுமாகத் தவிர்க்கவும். புழுங்கலரிக் கஞ்சியும் இளஞ்சூடாக, மேற்குறிப்பிட்ட துவையலுடன் சாப்பிடலாம்.

உடல்சூடு, கண் எரிச்சல், மலச் சிக்கல் போன்றவை பித்த, வாயுவின் சீற்றத்தைக் குடல் அடைவதால் ஏற்படுகின்றன. சிவதைவேர் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். ஐந்து கிராம் வேருடன் பத்து கிராம் திரிபலை சூரணம் கலந்து, இருநூற்றி ஐம்பது மில்லி கொதிக்கும் தண்ணீரில் கலந்து, இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை வடிகட்டி வெறும் வயிற்றில் இளஞ்சூடாகப் பருக, நீர்பேதியாகி, பித்த- வாயு சீற்றத்தை வெளியே கொண்டுவந்து குடலைச் சுத்தப்படுத்திவிடும். வாரமிருமுறை இதுபோல் சாப்பிட்டாலே போதுமானது.

கால்முட்டி வலி ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்வதாலும் வரக் கூடும். மூலிகைப் பற்று இடுதல், மூலிகைத் தைலங்களை இளஞ்சூடாகப் பஞ்சில் முக்கி, முட்டியில் வைத்து கட்டிக் கொள்ளுதல், நீராவி காண்பித்தல் போன்ற சிகிச்சை மூலமாகக் குணப்படுத்தலாம். குடலுக்கும் முட்டிக்கும் நிறைய சம்பந்தமிருப்பதால், வாயுப் பொருள்களான பருப்பு சாம்பார், வேர்க்கடலைச் சட்னி, கசப்பும்- துவர்ப்பும் நிறைந்த கீரைகள், குளிர்ந்த நீர் போன்றவை நீக்கப்பட வேண்டும்.

'கல்யாணகுலம்' எனும் லேகிய மருந்தை தினமும் காலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக, நக்கிச் சாப்பிட்டு வந்தால் குடல் வாயு, மலச்சிக்கல் போன்றவை நீங்கிவிடும். இப்படி அறிகுறிகளுக்குத் தகுந்தவாறு மருத்துவம் செய்து, குறைவாகச் சுரக்கும் தைராய்டு உபாதையைக் குணப்படுத்தலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com