'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 174

கிண்டி ஆளுநர் மாளிகையில் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் வந்தால் தங்குவதற்காக இருக்கும் கட்டடத்தில், ஜன்னல் ஓரமாக நின்றபடி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 174

கிண்டி ஆளுநர் மாளிகையில் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் வந்தால் தங்குவதற்காக இருக்கும் கட்டடத்தில், ஜன்னல் ஓரமாக நின்றபடி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். முதல்வர் எப்போது வருவார், அவர் சோனியா காந்தியை சந்திப்பாரா உள்ளிட்ட கேள்விகளை எனக்கு நானே கேட்டபடி காத்துக் கொண்டிருந்தபோது, வெளியே பரபரப்பு எழுந்தது.

ஆளுநர் மாளிகையின் இன்னொரு கட்டடத்தில் இருந்து வரிசையாக கார்கள் கிளம்பிச் சென்று கொண்டிருந்தன. விசாரித்தபோது, இரவு விமானத்தில் சோனியா காந்தி தில்லி திரும்புகிறார் என்றும், அவரும் குழுவினரும் கிளம்பிச் செல்கிறார்கள் என்றும் அங்கிருந்த காவல் அதிகாரி ஒருவர் என்னிடம் தெரிவித்தார். அப்படியானால், முதல்வர் கருணாநிதி - சோனியா காந்தி சந்திப்புக்கு வாய்ப்பில்லை என்பது உறுதியானது.

சில நிமிடக் காத்திருப்புக்குப் பிறகு நான் உள்ளே அழைக்கப்பட்டேன். நான் உள்ளே நுழையும்போது, மரகதம் சந்திரசேகரும் அவரது மகள் லதா பிரியகுமாரும் வெளியே வந்து கொண்டிருந்தனர். சென்னையில் கே.ஆர். நாராயணன் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் மரகதம் சந்திரசேகரின் 80-ஆவது பிறந்த நாள் விழாவும் ஒன்று என்பதால் அந்த சந்திப்பு என்னை ஆச்சரியப்படுத்தவில்லை.

கே.ஆர். நாராயணன் என் மீது தனிப்பட்ட அக்கறை செலுத்தியவர். 1989 முதல் 1992-இல் குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படும்வரை எனது 'நியூஸ்கிரைப்' செய்தி நிறுவனத்துக்கு அவ்வப்போது கட்டுரைகள் எழுதி வந்தார். பெரும்பாலும் வெளியுறவு குறித்த கட்டுரைகள்தான் எழுதினார்.

கே.ஆர். நாராயணனும் சரி, அவரது மனைவி உஷா நாராயணனும் சரி பழகுவதற்கு இனிமையானவர்கள். மியான்மரைச் சேர்ந்தவர் என்றாலும், உஷா நாராயணன் இந்தியப் பண்பாட்டை விரும்பி ஏற்றுக் கொண்டவர்.

முதல்வர் கருணாநிதி சந்திக்க வரும்வரை எனக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததால், நாங்கள் பல்வேறு நிகழ்வுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அவர் எதுவுமே பேசாமல் என்னைப் பேசவிட்டு கே.ஆர். நாராயணன் கேட்டுக் கொண்டிருந்தார் என்பதுதான் நிஜம்.

ராஜ் பவனில் கூடியிருந்த காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் குறித்தும் அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு சோனியா காந்தியின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தது குறித்தும் நான் சொல்வதை எல்லாம் புன்னகைத்தபடி அவர் கேட்டுக் கொண்டிருந்தார். தில்லியில் நரசிம்ம ராவுக்கு எதிராக நடத்தப்படும் முன்னெடுப்புகள் குறித்தும் என்னைப் பேச வைத்து கேட்டுக் கொண்டார்.

''நீங்கள் சோனியா காந்தியை சந்தித்தீர்களா, இல்லையா?''

''நானும் சந்திக்கவில்லை. அவரும் என்னை சந்திக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. நாங்கள் இருவரும் ராஜ் பவனில் தங்கியிருப்பது எல்லோரையும்போல அவருக்கும் தெரிந்திருக்கும். தேவையில்லாத சர்ச்சைகள் எழ வேண்டாம் என்று கருதி அவர் என்னை சந்திப்பதைத் தவிர்த்திருக்கக் கூடும். அதில் தவறு இல்லையே...''

''திருமதி உஷா நாராயணனை சந்தித்திருக்கலாமே...''

''சந்திக்கவில்லை. உஷா அவரை இன்டர்காமில் அழைத்து நலம் விசாரித்தார். என்னிடம் கேட்டபோது அதற்கு நான் தடையேதும் சொல்லவில்லை. குடியரசுத் துணைத் தலைவர் என்கிற முறையில் நாங்கள் போய் அவரை சந்திப்பது சரியாக இருக்காது...''

அதற்குப் பிறகு நாங்கள் பொதுவான ஊடகத் துறையின் செயல்பாடுகள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம். நரசிம்ம ராவின் பொருளாதாரத் தாராளமயக் கொள்கையின் விளைவால் ஊடகங்களில் ஏற்பட்டிருக்கும் சமரசப்போக்கு அவரை மிகவும் பாதித்திருந்ததை நான் புரிந்துகொள்ள முடிந்தது.

முதல்வர் கருணாநிதியின் கார் ஆளுநர் மாளிகையை நெருங்கிவிட்டது என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டதும், நான் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்துவிட்டேன்.

நான் அந்தக் கட்டடத்தைவிட்டு வெளியே செல்வதற்குள், முதல்வரின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரத்தொடங்கிவிட்டன. முதல்வர் காரில் இருந்து இறங்கும்போது என்னைப் பார்த்துவிட்டார்.

''தில்லிக்கு வந்தால் அங்கே இருக்கிறீர்கள்; சென்னையில் பார்த்தால் இங்கே இருக்கிறீர்கள். நாரதரைப் போல திரிலோக சஞ்சாரியாக இருக்கிறீர்களே?'' - சிரித்துக் கொண்டே கேட்டார் முதல்வர்.

''நான் நாரதரெல்லாம் இல்லை. சாதாரண பத்திரிகையாளன்...''

''அதனால்தான் நாரதரைப் போல என்று சொன்னேன்...''

அவருடன் வந்திருந்த அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், தலைமைச் செயலர் கே.ஏ.நம்பியாரும், நானும் சிரித்தோம். அவர்கள் புடைசூழ கே.ஆர். நாராயணனை சந்திக்க முதல்வர் உள்ளே நுழைந்தார். நான் வெளியே வந்தேன்.

ஆளுநர் சென்னா ரெட்டியை சந்திக்கலாம் என்று நினைத்தால், 'முன் அனுமதி இல்லாமல் சந்திக்க முடியாது' என்று அவரது ஏடிசி கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். என்னைப் பார்த்துவிட்ட குமரி அனந்தன் ஆதரவாளர் ஒருவர் தனது காரில் ஏறிக்கொள்ளச் சொன்னார்.

அவருடன் மயிலாப்பூர் லஸ்ஸில் உள்ள கிருஷ்ணசாமி அவென்யூவில் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு நானும் சென்றேன். நான் போன நேரம் தலைவர் குமரி அனந்தன் சற்று ஓய்வாக அமர்ந்திருந்தார்.

''உங்களைத் தலைவர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் காங்கிரஸில் உள்ள எல்லா கோஷ்டியினரும் சோனியா காந்தியை சந்திக்க ராஜ் பவனை முற்றுகையிட்டிருந்தார்கள். சோனியா காந்தி உங்களிடம் அதைப் பற்றி ஏதாவது கேட்டாரா?''

''என்னிடம் அவர் எதுவும் கேட்கவில்லை. எனக்குக் காங்கிரஸ்தான் முக்கியம், பதவி முக்கியம் அல்ல. ஒருவேளை நான் இருப்பதுதான் ஒற்றுமைக்குத் தடை என்றால், என் பதவியைத் தியாகம் செய்ய நான் எப்போதுமே தயாராக இருப்பவன்.''

''பிறகு ஏன் எல்லோரும் உங்களுக்கு எதிராக அணிவகுத்து நிற்கிறார்கள்?''

''அதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். கட்சிக்குள் வருபவர்கள் பதவிச் சண்டையோடு வருகிறார்கள். கட்சியின் அகில இந்தியத் தலைவர் சீதாராம் கேசரியின் நல்லெண்ணத்தை இவர்கள் புரிந்து கொள்வதில்லை.''

''இவர்கள் என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள் - வாழப்பாடியாரையா?''

''வாழப்பாடி ராமமூர்த்தியைச் சேர்க்க வேண்டும் என முதலில் சொன்னதே நான்தான். கட்சியின் மாநில செயற்குழுவில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினேன். கடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்துத் தனது வேட்பாளர்களை நிறுத்தியவர் வாழப்பாடி. அதை மறந்துவிட்டு என்னைத் தவறாகப் பேசுவது நியாயமா? ஒன்றுபட்டு இருப்பதையே தொண்டர்கள் விரும்புகிறார்கள்.''

தனது ஆதங்கத்தை எல்லாம் என்னிடம் கொட்டித் தீர்த்தார் குமரி அனந்தன். பள்ளிப் பருவத்தில்  இருந்து நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர் என்பதால், அவரது மனக்குமுறலின் நியாயத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பேசிக்கொண்டே, போகிற போக்கில் அவர் புதியதொரு குண்டைத் தூக்கிப் போட்டார். நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

''ராஜீவ் கொலையோடு ஜி.கே.மூப்பனாரைத் தொடர்புபடுத்தி நரசிம்ம ராவின் முன்னிலையில் சேலத்தில் பேசியவர் ஜெயலலிதா. தற்போது த.மா.கா. சார்பில் மத்திய அமைச்சர்களாக உள்ள ப. சிதம்பரம் உள்ளிட்ட நான்கு அமைச்சர்களும் வழக்குரைஞர்கள். ஜெயின் கமிஷன் முன் ஆஜரான ஜெயலலிதாவை அவர்கள் ஏன் குறுக்கு விசாரணை செய்யவில்லை?'' - கேட்டுவிட்டு, அடுத்த கேள்வியைத் தொடுத்தார்.

''முக்கியமான காலகட்டத்தில் காங்கிரஸைப் பிளவுபடுத்தி, எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க வழிகோலியவர் மூப்பனார். சோனியா காந்தி அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றால், தமிழ் மாநில காங்கிரஸுக்கு சோனியா காந்தியின் மறைமுக ஆசி இருந்ததா?'' என்று அடுத்த கேள்விக் கணையைத் தொடுத்தார்.

சோனியா காந்தியுடனான ராஜ் பவன் சந்திப்புக்குப் பிறகு குமரி அனந்தன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். அவரிடமிருந்து விடைபெற்று நான் அண்ணா நகர் மேற்கு விரிவாக்கத்தில் இருந்த எனது வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது, இரவு மணி 10 கடந்துவிட்டது. அடுத்த நாள் காலையில் வாழப்படியாருடன் மீண்டும் தில்லி திரும்புவது என்பது ஏற்பாடு.

கடுமையான குளிர் தொடங்கி விட்டிருந்த நிலையில் நான் தில்லிக்கு உடனே திரும்புகிறேன் என்றபோது, வீட்டில் கடுமையான எதிர்ப்பு. ஏதோ விருந்தாளிபோல வந்து போகிறேன் எனும்போது ஆத்திரமும் வேதனையும் இருக்கத்தானே செய்யும்? எனக்கேகூட சென்னையில் இருந்துவிடலாமா என்கிற சலனம் ஏற்பட்டது. ஆனால், கையிலிருந்த விமானப் பயண டிக்கெட் அதற்கு முட்டுக்கட்டை போட்டது.

தில்லிக்குப் போவது என்று முடிவெடுத்து, அவசர அவசரமாகக் குளித்துத் தயாராகி மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து சேர்ந்தால், வாழப்பாடியார் வந்திருக்கவில்லை. விமானம் கிளம்ப நேரமாகிவிட்டதால் நான் உள்ளே போய்விட்டேன். அவருடன் சென்னை வந்த நான் இப்போது தனியாக தில்லி திரும்பிக் கொண்டிருந்தேன்.

கன்னாட் சர்க்கஸிலுள்ள எனது அலுவலகத்தில் அமர்ந்து தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்த கட்டுரையை எழுதி முடித்துப் பிழை திருத்திக் கொண்டிருந்தேன். தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் இருந்தவர் ஸ்ரீகாந்த் ஜிச்கர்.

''தில்லியில்தான் இருக்கிறீர்களா? நீங்கள் ஏன் சந்திக்க வருவதில்லை?''

நான் சென்னை சென்றிருந்த விவரத்தைத் தெரிவித்தேன்.

''உங்களிடம் ஒரு முக்கியமான தகவலைத் தெரிவிக்கும்படி பிரணாப்தா என்னிடம் கூறியிருக்கிறார். நீங்கள் என் வீட்டுக்கு வாருங்களேன்'' என்று அவர் அழைத்த பிறகும் உட்கார்ந்திருக்க முடியுமா? அந்தக் கட்டுரையை முழுமைப்படுத்திவிட்டுக் கிளம்பிவிட்டேன்.

ஸ்ரீகாந்த் ஜிச்கர் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார் என்பதைப் புரிந்து கொண்டேன். சுற்றி வளைக்காமல் அவர் என்னிடம் நேராகவே விஷயத்தைச் சொன்னார்.

''கருணாகரனும் அர்ஜுன் சிங்கும் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். நாடாளுமன்ற கட்சித் தலைவர் பதவியிலிருந்து நரசிம்ம ராவ்ஜி விலக வேண்டும் என்று கருணாகரன் பிடிவாதமாக இருக்கிறார். எங்களுக்கும் கருணாகரன் கேம்புக்குமான தொடர்பு முற்றிலுமாக முறிந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில், கருணாகரனும் பிரணாப் முகர்ஜியும் ஏதாவது பொது இடத்தில், வெளியில் தெரியாமல் சந்திக்க நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். நீங்கள் கருணாகரன்ஜியுடன் பேசினால் அவரை ஒருவேளை சம்மதிக்க வைக்கலாம் என்று பிரணாப்தா கருதுகிறார்...''

இதுதான் ஜிச்கர் என்னிடம் சொன்ன வார்த்தைகள். பிரணாப் முகர்ஜியும், கருணாகரனும் மிகப் பெரிய தலைவர்கள். அவர்கள் இருவரும் சந்திக்க நான் ஏற்பாடு செய்வது என்றால் எப்படி? அதனால் யோசனையில் ஆழ்ந்தேன்.

''யோசிக்காதீர்கள். நீங்கள் கருணாகரன்ஜியை சந்தித்துப் பேசுங்கள். பேச்சுவாக்கில் அவரை சந்திக்க பிரணாப் முகர்ஜி விரும்புவதாகச் சொல்லுங்கள். அவர் சம்மதித்தால், அடுத்தகட்டம் குறித்துத் தீர்மானம் எடுப்போம்...'' என்று என்னைத் தூண்டினார் ஜிச்கர்.

எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆனாலும் பிரணாப்தாவின் கட்டளை என்பதால், கருணாகரனின் சுநேரிபாக் சாலை பங்களாவை நோக்கி விரைந்தேன். நல்ல வேளையாகப் பார்வையாளர்கள் அதிகம் இருக்கவில்லை. வந்திருப்பதாகச் சொன்னவுடன் நான் உள்ளே அழைக்கப்பட்டேன்.

சோபாவில் அமர்ந்திருந்த கருணாகரன்ஜியின் வழக்கமான 'ஹா... வரு.. வரு..' வரவேற்புக்குப் பதிலாக, சிரித்தபடியே அவரிடமிருந்து வந்த கேள்வியைக் கேட்டதும் நான் அதிர்ந்துப்போய் நின்றுவிட்டேன். 

நிலைகுலைந்துபோன என்னை உட்காரும்படி சைகை செய்தார் கருணாகரன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com