

கண்டது
(காரைக்குடி சிவானந்த மஹாலில் எழுதியிருந்தது)
புகுந்த வீடு போகும் பெண்ணே!
ஓரடி கற்பைக் காக்க
ஈரடி கணவருக்காக
சீரடி மூன்றாம் பாதம் சேர்ந்தோர் குலத்தைக் காக்க
நாலடி அச்சம், மடம், நாணம், பயிற்பு, எனும் நலத்தைக் காக்க
ஐந்தடி புலன்கள் ஐந்தை அடக்கியே வாழ்வைக் காக்க
ஆறடி சுவைகளாலும் கணவர்க்கே அன்பில் ஊட்ட
ஏழடி உலம் ஏழும்
கணவனோடு சேர்ந்து வாழ்க!
-ப.விஸ்வநாதன்,
கீரமங்கலம்.
(அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)
'சூரியமணல்'
-மதிராஜா திலகர்,
சின்னபுங்கனேரி.
கேட்டது
(மயிலாடுதுறை கோயில் ஒன்றின் வெளிப்பிரகாரத்தில்...)
'டேய் மாப்ளே. கடவுள் ஏன் கல்லானார்?'
'கடவுள் கல்லாகவில்லை. கல்தான்டா கடவுளாக மாறியிருக்குது.'
-சோ.மாணிக்கம்,
மயிலாடுதுறை.
(பேரணாம்பட்டில் ஒரு வீட்டு கட்டும் பணியில் இருந்த மேஸ்திரியும் தொழிலாளியும் பேசியது)
'டேய்.. என் பென்சிலை பார்த்தியா?'
'உங்க காதிலேயே இருக்குங்க?'
''நான் வேலையா இருக்கேன். எந்தக் காதுல இருக்குன்னு சீக்கிரம் சொல்லு.'
-ஜெ.மணிகண்டன்,
பேரணாம்பட்டு.
(திருத்தணி கோயில் அருகே நண்பர்கள் இருவர் பேசியது)
'மச்சான். இவ்வளவு தூரம் மலையேறி வந்து என்னடா வேண்டிகிட்டே?'
''அடுத்த ஜென்மத்துலயாவது எனக்கு கல்யாணம் ஆகக் கூடாதுன்னுதான்!'
-ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.
யோசிக்கிறாங்கப்பா!
வாய் செய்த தவறுக்காக, கால்களுக்குக் கொடுக்கப்படும்
தண்டனைதான்- வாக்கிங், ஜாக்கிங்.
-தி.பச்சமுத்து,
கிருஷ்ணகிரி.
மைக்ரோ கதை
சுப்பனுக்கு உடல் சரியில்லாமல், மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார். வைத்திய செலவு ஆயிரம் ரூபாய் என மருத்துவர் கொடுத்தார். சீட்டைப் பார்த்த சுப்பன், ஒரு ரூபாயை கொடுத்தபோது, 'என்ன இது?' என்று மருத்துவர் கேட்டார். 'சைபருக்கு மதிப்பில்லை' என்று சுப்பன் கூறினார்.
உடனே மருத்துவரோ கோபப்படாமல் ஒரு காகிதத்தை எடுத்து ஒன்று என எழுதினார். அதன்முன்பு மூன்று பூஜ்ஜியங்களை எழுதி, 'இதை படி' என்றார். 'ஒன்று' என்று சுப்பன் கூறினார்.
உடனே மருத்துவரும் வேறு இடத்தில் ஒன்று என்று எழுதி, அதற்கு அடுத்ததாக மூன்று பூஜ்ஜியங்களை எழுதி, ''இதை படி' என்றார். ''ஆயிரம்' என்றார் சுப்பன்.
'இப்போது தெரியுதா? பூஜ்ஜியத்தின் மதிப்பு. எடு பணத்தை..' என்று மருத்துவர் கூறினார்.
உடனே சுப்பனும் பணத்தைக் கொடுத்துவிட்டு, அங்கிருந்து விருட்டென்று சென்றுவிட்டார்.
-க.வை.ராமச்சந்திரன்,
நாமக்கல்.
எஸ்எம்எஸ்
நீயே உனக்கு நண்பனும்,
பகைவனும் ஆவாய்!
-மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி.
அப்படீங்களா!
முன்னணி தகவல் பரிமாற்றம் செயலியான வாட்ஸ் ஆஃப்பில் பல்வேறு புதிய சேவைகள் அவ்வப்போது அறிமுகமாகி வருகின்றன. பயனாளர்களை கவர கூகுள், வாட்ஸ் ஆஃப் ஆகியவற்றை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தற்போது புத்தாண்டு தொடக்கத்தில் புதிய அறிவிப்பாக வாட்ஸ் ஆஃப் தகவல்களை அளவில்லாமல் சேமித்து வைப்பது நிகழாண்டு நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பகிரப்படும் சாட்ஸ், விடியோ, ஆடியோ, புகைப்படங்கள் உள்ளிட்ட தரவுகள் பல ஆண்டுகளாக கூகுள் டிரைவில் சேமிக்கப்பட்டு வந்தது. இந்த கூகுள் டிரைவில் தான் ஜிமெயிலில் வரும் தகவல்கள், போட்டோஸ், விடியோ ஆகியவற்றை சேமிக்க 15 ஜிபி-க்கு அனுமதிக்கப்படுகிறது.
தற்போது இந்த 15 ஜிபி இடத்தில்தான் வாட்ஸ் ஆஃப்பின் தகவல்களும் சேமிக்கப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
தரவுகளை சேமிக்க கூடுதல் இடம் தேவைப்படுவோர் கட்டணத்தைச் செலுத்தி பெற்று கொள்ள வேண்டும். இதற்காக 'கூகுள் ஒன்' என்ற சேவையையும் மெட்டா நிறுவனம் தொடங்கி உள்ளது. கூடுதல் சேமிப்பு இடத்தைப் பெற மாதம் 100 ஜி.பி.க்கு ரூ. 170-ஆகவும், 300 ஜி.பி.க்கு ரூ.250-ஆகவும், 2 டி.பி.க்கு ரூ.830-ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய பயன்பாட்டாளர்களுக்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த கூடுதல் இடத்தைப் பெறாமல் 15 ஜி.பி.க்குள்ளே வாட்ஸ் ஆஃப் தகவல்களைச் சேமித்தும் வைக்கலாம். வாட்ஸ் ஆஃப்பில் பதிவிறக்கம் செய்யப்படும் புகைப்படங்கள், விடியோக்கள்தான் அதிக இடங்களைப் பிடிக்கும். அவற்றின் சேமிப்பைத் தவிர்க்க வாட்ஸ் ஆஃப் செட்டிங்ஸில் சென்று ஸ்டோரேஜ்- டேட்டா - மேனேஜ் ஸ்டோரேஜ் என்பதற்குள் சென்று நிறுத்திவிடலாம்.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.