ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காது கேளாமை பிரச்னைக்கு தீர்வு என்ன?

திருநீற்றுப்  பச்சிலையை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இரவு படுக்கப் போகும் முன் காதில் ஒரு சொட்டு ஊற்றினால் காது கேளாமை எனும் உபாதை மாறி, காது நன்றாகக் கேட்கும் என்கிறார்கள்.  
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காது கேளாமை பிரச்னைக்கு தீர்வு என்ன?


எனக்கு வயது எழுபத்து ஐந்து ஆகிறது. திருநீற்றுப்  பச்சிலையை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இரவு படுக்கப் போகும் முன் காதில் ஒரு சொட்டு ஊற்றினால் காது கேளாமை எனும் உபாதை மாறி, காது நன்றாகக் கேட்கும் என்கிறார்கள்.  ஆயுர்வேதத்தில் வேறு மருந்துகள் உள்ளனவா?

-கே.திருமலை, பெரியார் நகர்,
சென்னை-82.

பல வகையான துளசி இனங்களில் ஓரினமான திருநீற்றுப் பச்சிலை காரமான சுவையுடையது குணத்தில் வரட்சியும், வீரியத்தில் சூடானதும், செரிமான இறுதியிலும் காரமான சுவையுடன் கூடியதாகும். நாக்கிலுள்ள சுவை கோளங்களில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றி, சுவை அறியும் தன்மையைத் தூண்டிவிடும் செயலாற்றத்தை தன் அகத்தே கொண்டுள்ளது. 

குடலில் தேவையற்ற கிருமிகளை அழித்து, வெளியேற்றக் கூடியது. தோல் அரிப்பை குணமாக்கும். உடல் உள்புறங்களில் படியும் விஷப்பொருள்களை வெளியேற்றும். கப, வாத, ரத்த தோஷங்களின் சீற்றத்தை அடக்கக் கூடியது. இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியது. இவை அனைத்தும் அதன் உள்புற உபயோகத்தால் ஏற்படும் நன்மைகளாகும்.

காற்றின் வழியாகச் செலுத்தப்படும்  ஒலி அலைகளைச் செவிப்பறையில் செய்தியாக மாற்றி, மூளைக்கு அனுப்பி அந்தச் செய்தியின் சாரம்சத்தை கிரகிக்கக் கூடிய செயலை பிராணன் எனும் வாயு மேற்கொள்கிறது.
தேங்காய் எண்ணெயில் காய்ச்சப்பட்ட திருநீற்றுப் பச்சிலையின் வரவானது செவிப்பறையில் சொட்டாக விழும்போது, அதனுள் பொதிந்துள்ள சூடான வீரியத்தால் உள்புற அடைப்புகளை அகற்றி நகர்ந்து செயலாற்றக் கூடிய வாயுவின் தடையை நீக்கி, அதன் செயல்திறனைக் கூட்டும் சக்தியாக, இந்தப் பச்சிலை செயல்படுவதாகவே தோன்றுகிறது.

காதினுள் இருக்கும் சவ்வு, நுண்ணிய எலும்புகள், நரம்புகள் அனைத்தும் இந்த மருந்தினால் புத்துயிர் அடைந்து, செவியின் கேட்கும் சக்தியை அதிகப்படுத்தித் தருகிறது.  இந்த மூலிகை தேங்காய் எண்ணெய் தைலத்தை காதினுள் வெதுவெதுப்பாக விடுவதே நல்லது.

காது கேளாமை எனும் பிரச்னையைத் தவிர்க்கும் விதமாக, இளஞ்சூடான நல்லெண்ணெயை காதினுள் விட்டு நிரப்பி சுமார் பத்து நிமிடங்கள் வரை வைத்திருந்து அதன்பிறகு வடித்துவிட்டு, கைத்தறித் துணியால் காதுகளைத் துடைத்துவிட்டுக் கொள்ளும் முறையை முன்னோர்கள் செய்துவந்தனர். 
அவசர கதியான உலகில் இன்றைய வாழ்க்கை முறையில் இதை செய்துகொள்ள முடியாமல் போனதும், காதினுள் எண்ணெய் விடுவது தவறானது என்ற பிரசாரத்தினாலும் நல்லதொரு சிகிச்சை முறையை தவறவிட்டோம். 

தலையைச் சார்ந்த நரம்புகளின் ஊட்டத்தை இழக்காமல் இருக்க, தலைக்கு மூலிகைத் தைலங்களை அவரவர் உடல் வாகுக்கு ஏற்ப இளஞ்
சூடாகத் தேய்த்து கொள்வதையும், மூக்கினுள் மூலிகைத் தைலத்தைவிட்டு உறிஞ்சுவதையும் வாயினுள் மருந்தாகக் காய்ச்சிய தைலத்தைவிட்டு கொப்பளித்துத் துப்புவதையும், கண்களில் மூலிகை மருந்துகளால் காய்ச்சிய நெய் மருந்துகளை விடுவதும், முகத்துக்கு மருந்து தைலங்களை இளஞ்சூடாகத் தடவி சிறிதுநேரம் ஊறியவுடன் குளிப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் காதுகள் நன்றாகக் கேட்கும் திறனை என்றென்றும் கொண்டிருக்கும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com