பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 175

கருணாகரன்ஜி என்னிடம் கேட்ட கேள்வியின் அதிர்ச்சியில் நான் தடுமாறிவிட்டேன். தயக்கம், வருத்தம், தர்மசங்கடத்துடன் அவர் சைகை காட்டிய இடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தேன்.
பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 175

கருணாகரன்ஜி என்னிடம் கேட்ட கேள்வியின் அதிர்ச்சியில் நான் தடுமாறிவிட்டேன். தயக்கம், வருத்தம், தர்மசங்கடத்துடன் அவர் சைகை காட்டிய இடத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தேன். நான் நுழைந்தவுடன் அவர் என்னைப் பார்த்து எழுப்பிய கேள்வி இதுதான் - 'தன்னைச் சந்திக்க வேண்டும் என்று பிரணாப் முகர்ஜி, அவரே உங்கள் மூலம் சொல்லி அனுப்பி இருக்கிறாரா இல்லை, யார் மூலமாவது உங்களை அனுப்பி எனது விருப்பத்தைத் தெரிந்துகொள்ள நினைக்கிறாரா?'
நான் அவரிடம் எதையும் மறைக்காமல் நடந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டேன். ஒருவித பரிகாசப்  புன்னகையுடன் நான் பேசுவதை எல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டார்.
'இவர்கள் எல்லாம் ஏன் நரசிம்ம ராவ்ஜிக்காக இப்படி வரிந்து கட்டிக் கொண்டு பாடுபடுகிறார்கள் என்று தெரியவில்லை. அவருடைய 'ரோல்' முடிந்துவிட்டது. இப்போது அவர் காங்கிரஸூக்கு ஒரு சுமை. எனக்கு காங்கிரஸ் பெரிதா, நரசிம்ம ராவ் பெரிதா என்றால் காங்கிரஸ்தான் பெரிது.'
கருணாகரன்ஜியின் வார்த்தையில் சற்று கடுமையும் கோபமும் இருந்ததால் நான் குறுக்கிடவில்லை. நான் அவரிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்பதுபோல அவர் என்னைப் பார்த்தபோது, நான் மெதுவாகக் கேட்டேன்.
'அவர்தான் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து தானாகவே விலகிவிட்டாரே, பிறகென்ன?'
'நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக அவர் ஏன் தொடர வேண்டும்? அதிலிருந்தும் விலக வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை...'
'நரசிம்ம ராவ் விலகினால், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு யார் வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?'
'யார் வேண்டுமானாலும் வரலாம். முறையாகத் தேர்தல் நடத்தி நாடாளுமன்றக் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்போம். ஏன், பிரணாப் முகர்ஜியே தலைவராக வரட்டும். எனக்கு நல்ல நண்பர்தான். அவர் தலைவராவதில் யாருக்கும் எதிர்ப்பு இருக்காது.'
'நீங்கள்கூட அந்தப் பதவிக்கு ஆசைப்படுகிறீர்கள் என்று சொல்கிறார்கள்...'
'அப்படியொரு நினைப்பே எனக்கில்லை.'
'இதையெல்லாம் பிரணாப் முகர்ஜியை சந்தித்து நீங்கள் ஏன் வலியுறுத்தக் கூடாது? ஒருவேளை நீங்கள் இருவரும் நேரில் சந்தித்தால் இந்தப் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவு ஏற்படலாம், இல்லையா?'
'என்னைவிட பிரணாபைத் தெரிந்து வைத்திருப்பவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரிடம் பேசினால், அவர் நம்மை தனது கருத்தை ஆமோதிக்கச் செய்துவிடுவார்...'
'உங்களையுமா?'
சிரித்தார் கருணாகரன்ஜி. ஒரு விநாடி ஏதோ யோசித்துவிட்டுப் பேசத் தொடங்கினார்.
'நாங்கள் சந்திப்பதால் எதுவும் நடந்துவிடாது. நரசிம்ம ராவ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று விரும்புவது நானோ, சீதாராம் கேசரியோ மட்டுமல்ல, சோனியாஜியும் விரும்புகிறார்.'
'அவரே உங்களிடம் சொன்னாரா?'
'அவர் எல்லோரிடமும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. நெருக்கமானவர்கள் மூலம் தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். சோனியாஜியே நேரடியாக அரசியலுக்கு வந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். அதற்குப் பதிலாக அவரது ஆதரவாளர்கள் யாரையாவது அவர் முன்னிறுத்துவதற்கு முன்னால், நாம் முந்திக்கொண்டு நம்மில் யாரையாவது ஒருவரை நாடாளுமன்றக் கட்சித் தலைவராக்கிட வேண்டும் என்று நினைக்கிறேன். அதை என்னால் வெளிப்படையாகச் சொல்ல முடியாது...'
'நான் என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறீர்கள்?'
'நீங்கள் ஸ்ரீகாந்த் ஜிச்கர் போன்றவர்களிடம் எல்லாம் போய் நான் சொன்னதாக எதையும் சொல்லாதீர்கள். வழக்கமாக சந்திக்கப் போவதுபோல பிரணாப் முகர்ஜியை சந்தித்து, நான் சொன்ன கருத்துகளைச் சொல்லுங்கள். அவர் ஏற்றுக் கொண்டாலும், இல்லாவிட்டாலும் பி.வி.யை நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து அகற்றும் எனது முயற்சிகள் தொடரும்...'
என்னைப் பார்த்து சிரித்தார். அழைப்பு மணியை அடித்து உள்ளே இருந்து உதவியாளரை அழைத்தார். குருவாயூர் சந்தனமும், பழம் சர்க்கரைப் பிரசாதமும் என்னிடம் தந்து, பிரணாப் முகர்ஜிக்குக் கொடுக்கச் சொன்னார். நான் அங்கிருந்து கிளம்பினேன்.
பயணக் களைப்பு ஒருபுறம், காலையில் எழுந்து விட்டதால் ஏற்பட்டிருந்த சோர்வு ஒருபுறம் என்று கண்ணை சுழற்றியது. நேராகக் கரோல் பாகில் இருந்த எனது அறைக்குக் கிளம்பிவிட்டேன். மெட்ராஸ் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்து படுத்தவன்தான் அடுத்த நாள் காலையில்தான் எழுந்திருந்தேன்.
நல்ல குளிர் தொடங்கி இருந்ததால் தில்லி பத்து மணிக்கு மேல்தான் சுறுசுறுப்படையும். நான் தயாராகி கன்னாட் பிளேஸ் அலுவலகத்துக்கு வந்தபோது நண்பகல் கடந்துவிட்டது. ஒருபுறம் பரபரப்பாக அரசியல் நகர்ந்து கொண்டிருக்கும்போது, அமைதியாக அலுவலகத்தில் அமர்ந்து நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
என்ன செய்வது என்று தெரியாத திகைப்பில் இருந்தேன் என்பதுதான் உண்மை. ஸ்ரீகாந்த் ஜிச்கரிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்றும், நேராக பிரணாப் முகர்ஜியிடம் மட்டுமே தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கருணாகரன்ஜி சொல்லியிருக்கும் நிலையில், என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. பிரணாப்தாவை அவரது வீட்டில் தனியாகப் பார்க்க வேண்டும் என்றால் இரவு வரை காத்திருக்க வேண்டும்.
எனது அலுவலகத்தின் அருகில் 'கோவில்' என்கிற தென்னிந்திய உணவு விடுதி இருந்தது. அதில் மதிய உணவு அருந்திவிட்டு, அக்பர் சாலை காங்கிரஸ் கட்சித் தலைமையகத்துக்கு ஒரு நடைபோவது என்று தீர்மானித்தேன். 
நான் அங்கே சென்றபோது நேரம் நல்ல நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். கட்சித் தலைவர் சீதாராம் கேசரியின் அறையில் அவரது ஆதரவாளர்கள் காரசாரமாக விவாதத்தில் இருந்தார்கள். நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நரசிம்ம ராவை எப்படி அகற்றுவது என்பது குறித்த தீவிரமான ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று அங்கே இருந்த மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

அவர்களின் அவசரத்துக்கான காரணம் இருந்தது என்பது, சீதாராம் கேசரிக்கு நெருக்கமான பிகார் மாநிலத்தைச் சேர்ந்த நிருபர் மகாவீர் பிரசாத் தெரிவித்தபோது நான் தெரிந்துகொண்டேன். காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்ததுதான் அவர்களது அவசரத்துக்கும் ஆத்திரத்துக்கும் காரணம்.
கட்சி அமைப்பு என்பது வேறு, நாடாளுமன்றக் கட்சி என்பது வேறு என்றாலும்கூட, கட்சித் தலைவர் சீதாராம் கேசரியின் கருத்தைக் கேட்காமல், நாடாளுமன்ற கட்சியின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது கேசரியின் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அந்தத் தேர்தலைக் கட்சித் தலைவர் ரத்து செய்ய வேண்டும் என்பது அவர்களது வாதம் என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.
மகாவீர் பிரசாத் என்னிடம் தந்த சுற்றறிக்கையின் நகலைப் படித்துப் பார்த்தேன். 16 பேர் மக்களவையில் இருந்தும், 8 பேர் மாநிலங்களவையில் இருந்தும் என்று 24 செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், மக்களவையில் இருந்து 2 செயலாளர்களும், மாநிலங்களவையில் இருந்து ஒருவரும், இரு அவைகளுக்கும் சேர்த்து ஒரு பொருளாளரும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சுற்றறிக்கை அது. மக்களவைத் தேர்தல் முடிந்து நாடாளுமன்றக் கட்சி கூடி, ஏற்கெனவே நரசிம்ம ராவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருந்த நிலையில், ஏனைய பொறுப்புகளுக்கான தேர்தல் மட்டுமே அறிவிக்கப்பட இருந்தது. 
நாடாளுமன்றக் கட்சி நிர்வாகிகள் தேர்தலுக்கு முன்பாக, தலைவர் பதவியிலிருந்து நரசிம்ம ராவ் விலக வேண்டும் என்று அவரது எதிர்ப்பாளர்கள் கச்சை கட்டி நின்றனர். குறிப்பாக, கட்சித் தலைவர் சீதாராம் கேசரியும் அவரது ஆதரவாளர்களும். தலைவர் பதவிக்கும் சேர்த்துதான் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற கருணாகரனின் கோரிக்கைக்கு சரத் பவாரும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
சீதாராம் கேசரி அறையில் இருந்து வெளிவந்த பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி, தாரிக் அன்வர் உள்ளிட்ட தலைவர்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, 'ராவ் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கட்சித் தலைவர் சீதாராம் கேசரி நேரடியாக வற்புறுத்த வேண்டும் என்று நாங்கள் அவரிடம் கூறியிருக்கிறோம். அவரது ராஜிநாமாவுக்குப் பிறகுதான் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் பதவிக்கும் சேர்த்து நிர்வாகிகள் தேர்தல் நடைபெற வேண்டும்' என்று தெரிவித்தார்.
அக்பர் ரோடு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நாங்கள் (நிருபர்கள்) பேசிக் கொண்டிருந்தபோது சுரேஷ் கல்மாதி வந்தார். நரசிம்ம ராவின் ஆதரவாளர்களில் முக்கியமானவர் அவர் என்பதால் அவரைத் தொடர்ந்து போய் பேச்சுக் கொடுத்தேன்.
'புதிய மக்களவை அமைந்த பிறகுதான் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக நரசிம்ம ராவ்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒரு பதவிக்கு ஒருமுறைதான் தேர்தல் நடத்தப்படும். மாதத்துக்கு மாதமா தேர்தல் நடத்துவார்கள்? இந்தக் கோரிக்கைகளில் அர்த்தமில்லை. அவர் தொடர்ந்து அந்தப் பதவியில் இருப்பார். ஏனைய நிர்வாகிகள் தேர்தல்தான் நடைபெறும்' - சுரேஷ் கல்மாதி தீர்மானமாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் பிரணாப் முகர்ஜியை சந்திக்கச் செல்ல வேண்டும். அதுவரை பொழுதைக் கடத்த வேண்டும். நிருபர் மகாவீர் பிரசாத்தும் நானும் அவரது காரில் சாணக்கியபுரியிலுள்ள பிகார் பவனுக்குப் பயணித்தோம்.
கெளடில்யா மார்கில், தமிழ்நாடு இல்லத்துக்கு அடுத்த கட்டடம்தான் பிகார் பவன். அங்கே முன்னாள் முதலமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜகந்நாத மிஸ்ரா இருப்பதாக மகாவீர் பிரசாத் தெரிவித்தார். அவரை சந்திக்கப் போவதாகத் தெரிவித்ததும் நானும் சேர்ந்து கொண்டேன்.
ஜகந்நாத மிஸ்ரா குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேனே தவிர எனக்கு அவருடன் நேரடிப் பரிச்சயம் கிடையாது. அவரைத் தெரிந்து கொள்ள எனக்குக் கிடைத்த வாய்ப்பு என்பதால் நான் மகாவீர் பிரசாதுடன் சென்றேன். என்னை அவருக்கு அறிமுகப்படுத்தியபோது, நான் சற்றும் எதிர்பார்க்காமல் ஜகந்நாத மிஸ்ரா சொன்னது என்னை ஆச்சரியப்படுத்தியது.
'பிரணாப் முகர்ஜி வீட்டு வரவேற்பறையில் இவர் உட்கார்ந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்' என்று ஹிந்தியில் அவர் சொன்னபோது, அரசியல் தலைவர்களின் நினைவாற்றல் எத்தகையது என்பது வெளிப்பட்டது. நரசிம்ம ராவின் பதவி விலகல் கோரிக்கை குறித்து நான் கேட்டபோது அவர் சொன்ன பதில் இதுதான் - 
'ஏதோ அதிர்ஷ்டம் வாய்த்ததால் சீதாராம் கேசரி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகி விட்டார். அதுவும்கூட நரசிம்ம ராவின் தயவால் அவருக்குக் கிடைத்தது. அதற்காக நாடாளுமன்றக் கட்சித் தலைவராக வேண்டும், பிரதமராக வேண்டும் என்றெல்லாம் அவர் பேராசைப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. நரசிம்ம ராவ் பதவி விலக வேண்டும் என்று இப்போது கோரிக்கை வைப்பது காங்கிரஸை மேலும் பலவீனப்படுத்திவிடும். அதற்கான நேரமல்ல இது!'
ஜகந்நாத மிஸ்ராவிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு வெளியே வந்தேன். தமிழ்நாடு இல்லத்தை நோக்கி நடந்தேன். இரவு உணவை முடித்துக் கொண்டு,  கிரேட்டர் கைலாஷில் உள்ள பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்குப் போகலாம் என்பது எனது திட்டம்.
தமிழ்நாடு இல்லத்தில் நுழைந்தபோது நான் திடுக்கிட்டேன். அங்கே தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்தது!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com