பேல்பூரி

விழுந்து விழுந்து சிரியுங்கள். ஆனால் விழுந்தவரைப் பார்த்து சிரிக்காதீர்கள்.
பேல்பூரி

கண்டது

(தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

'தாமரைமொழி'

-அண்ணா அன்பழகன், 
அந்தணப்பேட்டை.

(ஆம்பூரில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

'ஓட்டல் மொய் விருந்து'

-பி.கோபி, கிருஷ்ணகிரி.

(கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட புதுக்கடை  அருகேயுள்ள சில ஊர்களின் பெயர்கள்)

'தெருவுக்கடை, எட்டணி, கல்லடை.'

-அ.இரவீந்திரன், குஞ்சன்விளை.

கேட்டது

(நாகர்கோவில் திருமண மண்டபம் ஒன்றில்  இரு பெண்கள்)


'மக எப்படி இருக்கான்னு கேட்டா ஏன்டி கண்ணீர் விடுறே?'
'ஆமா. வேறென்ன செய்ய முடியும். பொத்தி பொத்தி வளர்த்தேன் பறந்து போச்சே..'

-கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

(திருச்சி பேருந்து நிலைய நிறுத்தம் ஒன்றின் அருகே இரு நர்ஸ்கள் பேசியது)

'ஏன்டி.. அந்த ஆஸ்பத்திரியில் வேலை கிடைக்குமுன்னு சொன்னியே? ஏன் செலக்ட் ஆகலை.'
'இன்டர்வியூ செய்தவர், ஒரு அரசியல்வாதி சீரியஸான நிûயில் ஆஸ்பத்திரிக்கு வந்தா என்ன பண்ணுவேன்னு கேட்டாரு. நான், முதலில் சிசி டிவியை ஆஃப் பண்ணுவேன்னு சொன்னேன்.  பதிலே சொல்லாம நிராகரிச்சுட்டாரு..'

-சம்பத்குமாரி, பொன்மலை.

(பெரம்பூர் பஸ் நிறுத்தம் அருகே இருவர் பேசியது)

'ஏன்டா. உங்க நாய் இன்னிக்கு அமைதியா இருந்துச்சு..'
'அது இன்னிக்கு மௌன விரதமாக இருக்கு?'

-சீ.பி.ஷபீ, பெரம்பூர்.

யோசிக்கிறாங்கப்பா!


ஓடினால் துரத்தும். 
துரத்தினால் ஓடும் துன்பம்.

-முனைவர் உமாபாரதி பலராமன், திருவண்ணாமலை.


மைக்ரோ கதை


அந்தக் கிராமத்துக்குத் தெருவில், அதிகாலையில் எழுந்து வித்தியாசமான கோலம் போடவே பெண்களுக்கு இடையே கடுமையான போட்டி.   சித்ரா மட்டும் எப்போது போடுவாள் என்று யாருக்கும் தெரியாது. எதிர்வீட்டு ரமணியும் கிரிஜாவும் அன்றைய தினம் பிடித்தே விட்டனர்.
'பார்த்தியாடீ அவ பாட்டுக்கு குனிஞ்ச தலை நிமிராம கோலம் போடுறா?' என்றாள் ரமணி.
'நல்லா கோலம் போடுற திமிருதான்டி. இன்னிக்கு வா நேரில் கேட்டுடுவோம். வாடி!' என்றாள் கிரிஜா.
இருவரும் அங்கே சத்தமின்றி சென்று கோலம் போட்டவரின் துப்பட்டாவை உருவ, அவர்கள் அசந்தே போயினர். காரணம் அது சித்ராவின் கணவர் ரவி.
'இதென்ன கோலம்.. இவ்வளவு நாள் நீங்கதான் கோலம் போட்டிங்களா? அண்ணா..' என்று நமட்டுச் சிரிப்புடன் நகர்ந்தனர்.

-பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்.

எஸ்எம்எஸ்


விழுந்து விழுந்து சிரியுங்கள். 
ஆனால் விழுந்தவரைப் பார்த்து சிரிக்காதீர்கள்.

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.

அப்படீங்களா!


உலகமே கூகுள் மேப்பை பின் தொடர்ந்து செல்கிறது.  புதிய இடத்துக்குச் செல்ல,  நெடுஞ்சாலைகளில் இரவுநேர பயணங்கள் என பலவற்றுக்கு கூகுள் மேப் சரியான பாதையை தேர்வு செய்ய உதவுகிறது. அதிலும், எத்தனை தொலைவில் என்ன சேவை உள்ளது, எத்தனை மணி நேரத்தில் சென்றடைய முடியும் என்பதை துல்லியமாக கணக்கிட்டு காண்பிப்பது அதன் சிறப்பு அம்சமாகும். 
இந்த கூகுள் மேப்பில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் புகுத்தி புதிய சேவைகளை வழங்கியுள்ளது. முப்பரிமாண முறையில் நாம் செல்லும் இடத்தை காண்பிக்கும் கூகுள் மேப்பில் கட்டடங்களை ஊடுருவி அடுத்த சாலைகளுக்கு செல்லும் புதிய சேவை வழங்கப்பட்டுள்ளது. 
மேலும், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், டெலிகிராமில் உள்ளதைப்போல் இருக்கும் இடத்தை துல்லியமாக பகிர உதவும் 'லைவ் லோகேஷன் ஷேரிங் சேவை'  கூகுள் மேப்பிலும் அறிமுகமாகி உள்ளது. 
எத்தனை மணி நேரம் இந்த சேவை பகிர வேண்டும். அங்கு இருப்பவரின் அறிதிறன்பேசியின் பேட்டரியின் அளவு வரையில் இந்த புதிய சேவையில் பகிர முடியும். 
இந்த;ஈ சேவையைத் தேர்வு செய்ய வேண்டுமென்றால், அறிதிறன்பேசியில் உள்ள கூகுள் மேப்பில் சென்று வலது மேல்புறத்தில் உள்ள புரோபைலை கிளிக் செய்து, லோகேஷன் ஷேரிங்கை தேர்வு செய்ய வேண்டும். அதில், எப்போது வரையில் பகிர வேண்டும், யார் யாருக்கு பகிர வேண்டும் என்பதை தேர்வு செய்து அனுப்ப வேண்டும். 
லைவ் லோகேஷனை நிறுத்தவும் செய்யலாம். நமது இருப்பிடத்தை தெரிந்துகொள்ள கூகுள் மேப்பை பிற செயலிகளிலும் பகிர முடியது. 13 வயதுக்கு குறைவானவர்கள் வைத்திருக்கும் கூகுள் கணக்குகளில் இந்த புதிய சேவை இயங்காது எனவும் கூகுள் தெரிவித்துள்ளது. 

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com