தானம் வாழ்க்கை நம்பிக்கை

சமூக ஊடகங்களில்  ஆயி என்ற பூரணம்   என்ற பெண் குறித்த செய்திகள் அண்மையில் வைரலானது.
தானம் வாழ்க்கை நம்பிக்கை

சமூக ஊடகங்களில் ஆயி என்ற பூரணம் என்ற பெண் குறித்த செய்திகள் அண்மையில் வைரலானது. காரணம் அவர் அனைவரும் ஆச்சரியப்படும்படியாகரூ. 4 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுப் பள்ளி கட்டடம் கட்டிக் கொள்ள தானமாக வழங்கியதுதான்.

மதுரையை அடுத்த மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் 142 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். இங்கு ஒன்பது ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்தப் பள்ளியைத் தரம் உயர்த்த தேவையான நிலத்தை விலை கொடுத்து வாங்க கால அவகாசம் தேவைப்பட்டதால், தரம் உயர்த்தும் பணி தாமதாகிக் கொண்டே சென்றது.

இதற்காக, தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை வழங்கி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் பூரணம்.

கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் பூரணத்தின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில், குடியரசு தின விழாவில் முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது.

அவரிடம் பேசியபோது:

'என் அப்பா தனது சொத்தில் எனது பங்காக எனக்கு வழங்கியது இந்த நிலம். எனது கணவர் உக்கிரபாண்டியன் கனரா வங்கியில் வேலை பார்த்து வந்தார். எங்கள் மகள் ஜனனிக்கு ஒன்றரை வயது இருக்கும்போது, கணவர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இது நடந்து 31 ஆண்டுகள் ஆகின்றன.

எனது கணவர் இறந்தபோது வாழ்க்கை வெறுத்துப் போனாலும், மகளுக்காக வாழத் தீர்மானித்தேன். மகள் ஜனனியை பி.காம் வரை படிக்க வைத்தேன். இரண்டு ஆண்டுக்கு முன்பு ஜனனிக்கு திருமணம் செய்து வைத்தேன். குடும்பப் பிரச்னை காரணமாக, மகள் அகால மரணம் அடைந்தார்.

'தான் இறக்கும் முன்பு சொத்துகளை தர்ம காரியங்களுக்கு செலவு செய்யுங்கள்' என்று ஜனனி என்னைக் கேட்டுக் கொண்டார். இதன்படி, தர்மங்களைச் செய்து வருகிறேன்.

1998-இல் எனது சகோதரருக்காக ஒரு சிறுநீரகத்தைத் தானம் செய்திருக்கிறேன்.

கொடிக்குளம் அரசுப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த நிலம் தேவைப்படுகிறது என்பதைக் கேள்விப்பட்டேன். சில்லறையாக தானம் செய்வதைவிட கல்வி தொடர்பான அறப்பணிக்கு அப்பா அளித்த 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானம் செய்யலாம் என்று முடிவு செய்தேன்.

பள்ளி தலைமை ஆசிரியரிடம் எனது முடிவைச் சொல்ல, அவரும் கல்வித் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து இசைவு பெற்றார். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.4 கோடி என்கிறார்கள்.

இந்த இடத்தை மகள் 'ஜனனி' நினைவாக அரசுக்கு ஜன. 5-இல் தானமாகப் பத்திர பதிவு செய்து, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தேன்.

இந்தத் தானத்தின் மூலம் எனது மகள் உயிருடன் வாழ்வதாக நினைக்கிறேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com