பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 176

தமிழ்நாடு இல்லத்தில் ஒரே பரபரப்பு. தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி, ஹைதராபாதில் மாரடைப்பால் காலமாகி இருந்தார்.
பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 176

தமிழ்நாடு இல்லத்தில் ஒரே பரபரப்பு. தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி, ஹைதராபாதில் மாரடைப்பால் காலமாகி இருந்தார். அவரது படம் வைக்கப்பட்டு, மரியாதை செலுத்த வருபவர்கள் மலரஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். 
ஒரு வாரம் முன்பு அவரது பேத்தியின் திருமணத்துக்காக ஹைதராபாத் சென்றவர், தமிழக அரசியல் நிலைமை கருதியோ என்னவோ உடனே சென்னை திரும்பிவிட்டார். அவரது நண்பரின் மகன் திருமணமும், பேரனின் திருமண நிச்சயதார்த்தமும் நடக்க இருந்ததால் மீண்டும் ஹைதராபாத் சென்றார் அவர். பேரனின் திருமண நிச்சயதார்த்தம் அவரது வீட்டில்தான் நடந்தது. அன்று இரவில் தூக்கம் வராமல் இருந்திருக்கிறார். கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும், அவர் உயிர் பிரிந்திருக்கிறது.
தமிழ்நாடு இல்லதில் வைக்கப்பட்டிருந்த ஆளுநர் சென்னா ரெட்டியின் படத்துக்கு நானும் மலரஞ்சலி செலுத்திவிட்டு ஓர் ஓரமாகப் போய் நின்று கொண்டேன். சென்னா ரெட்டியுடனான எனது சந்திப்புகள் ஒவ்வொன்றும் நினைவில் இருந்து அகலக் கூடியவை அல்ல. இன்று தெலங்கானா என்று ஒரு மாநிலம் அமைந்திருக்கிறது என்றால், அதற்கான அடித்தளத்தை அமைத்தவர் சென்னா ரெட்டிதான்.

மருத்துவப் பட்டதாரியான டாக்டர் சென்னா ரெட்டியின் அரசியல் பிரவேசம் மாணவப் பருவத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாகத் தொடங்கியது. 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் தான் கலந்துகொண்டு போலீஸ்காரர்களால் தாக்கப்பட்ட நிகழ்வை, தன்னை சந்திப்பவர்களிடம் எல்லாம் விவரிக்க அவர் தவறமாட்டார்.
அரசியல் சாசன சபையில் உறுப்பினராக இருந்தவர் அவர். தனது முப்பது வயதிலேயே நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக இருந்தவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 1952-இல் நடந்த முதல் பொதுத் தேர்தலிலேயே அவர் ஹைதராபாத் மாநில சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமல்ல, அமைச்சராகவும் பதவி ஏற்று மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, அதைக் கடுமையாக எதிர்த்தவர்களில் சென்னா ரெட்டியும் ஒருவர்.
ஆந்திர மாநிலம் உருவானபோது, அதில் ஹைதராபாத் மாநிலம் இணையக் கூடாது என்றும், தனி தெலங்கானா மாநிலம் வேண்டுமென்றும் போராடியவர் அவர். பல நிபந்தனைகளின் அடிப்படையில் ஏற்பட்ட, மொழி அடிப்படையில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவரும்அவர்தான்.
ஆந்திர பிரதேச மாநிலத்திலும் தொடர்ந்து சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச்சில உறுப்பினர்களில் அவரும் ஒருவர். 1967-இல் மீண்டும் அமைச்சரானார் என்றாலும் அவரது செல்வாக்கு அன்றைய முதல்வர் பிரம்மானந்த ரெட்டிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஓர் ஆண்டுதான் மத்திய அமைச்சராக இருந்தார் சென்னா ரெட்டி. பதவி விலகியது மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகி விட்டார். 

அவர் 'தெலங்கானா பிரஜா சமிதி' என்கிற பெயரில் தொடங்கிய கட்சி, ஆந்திராவின் தெலங்கானா பகுதியில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் 11 தொகுதிகளை வென்றது. இத்தனைக்கும் 1971-இல் இந்திரா அலை நாடு தழுவிய அளவில் அடித்தது என்பதை மறந்துவிடக் கூடாது. அவர் திட்டமிட்டதுபோல, பிரம்மானந்த ரெட்டியை முதல்வர் பதவியில் இருந்து அகற்றி விட்டார். அதன் மூலம் பி.வி. நரசிம்ம ராவ் ஆந்திராவின் முதல்வராவதற்கு வழிகோலியவர் சென்னா ரெட்டிதான்.
தேர்தல் முறைகேடுகளுக்காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டது மட்டுமல்ல, ஆறு ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடையும் விதிக்கப்பட்டபோது, அவரை உத்தர பிரதேச ஆளுநராக நியமித்தார் பிரதமர் இந்திரா காந்தி. அப்போது, அந்த முடிவு தார்மிக அடிப்படையில் மிகப் பெரிய அரசியல் சாசன உரிமை மீறல் என்று விமர்சிக்கப்பட்டது. அதைப் பற்றி யாராவது அவரிடம் கேட்டால், சென்னா ரெட்டிக்குக் கடும் கோபம் வந்துவிடும்.
இரண்டு முறை ஆந்திர முதல்வர், நான்கு முக்கியமான மாநிலங்களின் (உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு) ஆளுநர் என்று அரசியலில் வலம் வந்த டாக்டர் சென்னா ரெட்டியிடம் பேசிய தருணங்களை எல்லாம் மனதில் அசைபோட்டபடி நான் தமிழ்நாடு இல்லத்தின் வரவேற்பறையில் நின்று கொண்டிருந்தேன்.
சென்னா ரெட்டி குறித்துப் பல விமர்சனங்கள் இருந்தாலும், அவரிடம் தஞ்சமடைந்துவிட்டால் அவர்களுக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் போய் உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் அவர் மீது 'ஊழல்' கறை படிந்தது என்பது உண்மை.
தில்லியில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக அஞ்சலி செலுத்துவதற்காகத் தமிழ்நாடு இல்லத்துக்கு வந்து கொண்டிருந்தனர். பிரதமர் தேவே கெளடாவும், பி.வி. நரசிம்ம ராவும் சிறப்பு விமானத்தில் ஹைதராபாத் செல்ல இருப்பதாக அங்கே பேசிக் கொண்டனர். முதல்வர் கருணாநிதி அஞ்சலி செலுத்தப் போவதால், ஜெயலலிதா போவாரா என்று இன்னும் சிலர் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
சட்டென்று நினைவுக்கு வர, நான் வரவேற்பு அலுவலகத்துக்குப் போய், பிரணாப் முகர்ஜியின் வீட்டைத் தொடர்பு கொண்டேன். அவரிடம் விவரம் தெரிவித்து வரச்சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். நான் தொடர்பு கொண்டோது, அவர் ஏற்கெனவே கிளம்பி தமிழ்நாடு இல்லம் நோக்கி வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அவரை வரவேற்கக் காத்திருந்தேன்.
பிரணாப் முகர்ஜி காரில் இருந்து இறங்கியபோதே என்னைப் பார்த்துவிட்டார். அவர் உள்ளே போய் மலரஞ்சலி செலுத்தும்போது நானும் அவருடன் இணைந்து கொண்டேன். மலரஞ்சலி செலுத்திய பிறகு நான் அவர் அருகில் சென்று பேசத் தொடங்கினேன் - 
'பிரதமர் கெளடாவும், பி.வி. நரசிம்ம ராவும் சிறப்பு விமானத்தில் ஹைதராபாத் செல்லப் போவதாகச் சொல்கிறார்கள். நீங்களும் போகப் போகிறீர்களா?'
'உன்னிடம் அப்படி யார் சொன்னது? பிரதமர் கெளடா பெங்களூரில் இருக்கிறார். நரசிம்ம ராவ் ஹைதராபாத் கிளம்பிப் போய்விட்டார். தப்புப் தப்பாகத் தகவல் சொல்லாதே... நான் போகவில்லை. வீட்டுக்கு வா, பேச வேண்டும்' - நறுக்குத் தெறிந்தார்போல சொல்லிவிட்டு பிரணாப்தா கிளம்பிவிட்டார்.

தமிழ்நாடு இல்லத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகளில் ஒருவரான மாமூலனிடம் சென்று விசாரித்தபோது அவர் விவரமாக என்ன நடக்கிறது என்பதைத் தெரிவித்தார். முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோருடன் ஹைதராபாத் சென்றிருப்பதாகவும், பெங்களூரிலிருந்து பிரதமர் தேவே கெளடா கர்நாடக முதல்வர் ஜே.எச். பாட்டீலுடன் ஹைதராபாத் செல்வதாகவும் மாமூலன் என்னிடம் தெரிவித்தார்.
அப்படியானால், ஹைதராபாதில் பிரதமர் தேவே கெளடா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி ஆகியோரின் சந்திப்புக்கான வாய்ப்புகள் ஏற்படுமா என்கிற எதிர்பார்ப்பு என்னில் எழுந்தது. மாமூலனுக்கு அது குறித்துத் தெரியவில்லை. கருணாகரன், அர்ஜுன் சிங், என்.டி. திவாரி உள்ளிட்ட பல மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சென்னா ரெட்டிக்கு அஞ்சலி செலுத்திச் சென்றனர். நானும் மெதுவாக அங்கிருந்து கிளம்பி கிரேட்டர் கைலாஷிலுள்ள பிரணாப் முகர்ஜியின் வீட்டை நோக்கிப் புறப்பட்டேன்.
ஆட்டோவில் கிரேட்டர் கைலாஷுக்குப் போகும்போது, சென்னா ரெட்டி - ஜெயலலிதா இருவருக்கும் இடையே நடந்த மோதல்களும், கடைசியில் ஏற்பட்ட நெருக்கமும் எனக்கு நகைப்பை வரவழைத்தது. 'என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார்' என்கிற அளவுக்கு மிகக் கடுமையாக ஜெயலலிதா அவரை விமர்சித்தும்கூட, சென்னா ரெட்டிக்கு ஜெயலலிதாவிடம் அனுதாபம் இருந்தது என்பதை நான் அறிவேன். அவரது ஆலோசனைகளைக் கேட்டு நடந்திருந்தால், ஜெயலலிதா ஊழல் வழக்குகளில் சிக்கி இருக்க மாட்டார் என்பது எனது கருத்து.
பிரணாப் முகர்ஜியின் வீட்டில் பார்வையாளர்கள் இருக்கவில்லை. தனது அறையில் அவர் ஏதோ படித்துக் கொண்டிருப்பதாகவும் அவரைத் தொந்தரவு செய்ய முடியாது என்றும் அங்கிருந்த உதவியாளர் தெரிவித்தார். நான் அமைதியாக வரவேற்பறையில் காத்திருந்தேன். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகியும் உள்ளே இருந்து தகவல் எதுவும் வரவில்லை.
கிளம்பலாம் என்று நினைத்தபோது, உள்ளே நாற்காலி நகர்த்தப்படும் சத்தம் கேட்டது. உதவியாளர் உள்ளே போக எத்தனித்தார். நான் எனது முகவரி அட்டையை அவரிடம் நீட்டி உள்ளே கொடுக்கும்படி தெரிவித்தேன். அடுத்த சில விநாடிகளில் அவர் விரைந்து வந்தார். என்னை உள்ளே அழைப்பதாக சொன்னார். சென்றேன். நாற்காலியில் அமரும்படி சைகை செய்தார் பிரணாப்தா. அமர்ந்தேன். கருணாகரன்ஜியை சந்தித்தது குறித்து அவரிடம் தெரிவித்தேன்.
பிரணாப் முகர்ஜி எதுவும் சொல்லவில்லை. நான் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டார். நரசிம்ம ராவ் பதவி விலக வேண்டும் என்று சோனியா காந்தியும் விரும்புகிறார் என்று கருணாகரன் சொன்னதாக நான் சொன்னபோது, பிரணாப்தா மெல்லப் புன்னகைத்தார்.
எனது கைப்பையில் வைத்திருந்த கருணாகரன், பிரணாப் முகர்ஜியிடம் கொடுக்கும்படி சொல்லியிருந்த குருவாயூர் பிரசாதத்தைக் கொடுத்தேன். தனது தலைமீது வைத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு அதை மேஜையில் வைத்தார்.
'கருணாகரன்ஜி சொன்னதுபோல, சோனியா காந்தியே கட்சித் தலைவராக வருவதாக இருந்தால் அதில் பி.வி. உள்பட யாருக்கும் எந்தவித எதிர்ப்பும் இருக்காது. அவரது பெயரைச் சொல்லிக்கொண்டு கட்சித் தலைமைப் பொறுப்புக்கு சிலர் வர நினைக்கிறார்கள். அதைத் தடுப்பதற்கு பி.வி.யைவிடத் திறமையானவர்கள் யாரும் இருக்க முடியாது.'
'நீங்கள் தலைவரானால் அதை ஏற்றுக்கொள்வதாகக் கருணாகரன்ஜி சொல்கிறார்...'
'அவர் ஏற்றுக் கொள்ளலாம். சோனியா காந்தி ஏற்றுக்கொள்வாரா? இப்போதைக்கு எந்தவித மாற்றமும் இல்லாமல் இப்படியே போவதுதான் சரியாக இருக்கும்...'
நான் எதுவும் சொல்லவில்லை. சற்று நேர அமைதிக்குப் பிறகு அவர் 
சொன்னார் - 'சென்னா ரெட்டியின் மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பல மாற்றங்கள் 
நிகழக்கூடும். அதனால் நீ சென்னை திரும்புவதுதான் நல்லது.'
'காங்கிரஸில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது என்று நினைக்கிறீர்களா?'
'என்ன நடந்தாலும்தான் என்னவாகிவிடும்? தேவே கெளடா ஆட்சி 
கவிழாது. ஆட்சி கவிழ்வதையும் மீண்டும் தேர்தல் வருவதையும் காங்கிரஸ் எம்.பி.க்கள் விரும்பமாட்டார்கள். சீதாராம் கேசரி அவசரப்பட்டால், பல விபரீதங்களை அவர் சந்திக்க நேரிடும்.'
இதற்கும் நான் எதுவும் பேசவில்லை. சற்று நேர மெளனத்திற்குப் பிறகு நான் விடைபெற்றுக் கொண்டேன். அவர் தலையசைத்தார்.
நரசிம்ம ராவைக் கட்சியிலிருந்து நீக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார். சீதாராம் கேசரி என்பதற்கு முன்னோட்டமாக சில அறிவிப்புகள் காங்கிரஸ் தலைமையகத்திலிருந்து வெளிவரத் தொடங்கின. ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் ஷீலா கெளல், சத்தீஷ் சர்மா, சுக்ராம் ஆகிய மூவரையும் கட்சியிலிருந்து விலக்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அடுத்தபடியாக அந்தப் பட்டியலில் பி.வி. நரசிம்ம ராவ் இணையக்கூடும் என்பதற்கான முன்னறிவிப்பாக அது இருந்தது.
அரசியல் நகர்வுகள் தில்லியில் நடந்து கொண்டிருந்தபோது, ஐக்கிய முன்னணி அரசின் உத்தரவுப்படி அமலாக்கத் துறை சென்னையில் தனது வேலையைத் தொடங்கி இருந்தது. யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதுபோல, அமலாக்கத் துறை வரும் முன்னே, கைது வரும் பின்னே என்பதன் தொடக்கம், 1996 டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி சென்னையில் அரங்கேற இருந்தது.

நான் சென்னை திரும்பி இருந்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com