நிழல் மாமா

'தேவானை ..எவ்வளவு நேரம்தான் அதை பாத்திட்டிருப்பே..?' - அப்பா  கேட்டது  அவள் காதிலேயே விழவில்லை. கையில் வைத்திருந்த போட்டோ  மீது  லயித்திருந்த அவள் விழிகள் சிறிதும் இடம் மாறவில்லை. 
நிழல் மாமா

'தேவானை ..எவ்வளவு நேரம்தான் அதை பாத்திட்டிருப்பே..?' - அப்பா கேட்டது அவள் காதிலேயே விழவில்லை. கையில் வைத்திருந்த போட்டோ மீது லயித்திருந்த அவள் விழிகள் சிறிதும் இடம் மாறவில்லை.
'அம்மாடியோவ் எவ்வளவு அம்சமாயிருக்கார். நெளிநெளியா முடி . அழகான கிராப்பும் ... கொத்து மீசையும் வெச்சுக்கிட்டு கண்ணில் எத்தனை குறும்புடன் என்னையே பாத்துக்கிட்டு... போட்டோவில் தானே' என்றாலும்... பாரதியார் பாடின மாதிரி...
'முதல் காதல் தோன்றுமே முதல் பார்வையில்'... அவளுக்குள் காதல் பிறந்துவிட்டது.
'மனசுக்குள் தன்னை வரிக்கப் போகும் மணாளன் இவன்தான்' என்று தீர்மானமே வந்ததில், 'போங்க மாமா எனக்கு வெக்கமாயிருக்கு..' என்று தனக்குத் தானே பேசிக் கொண்டு, முகத்தை மூடிக்கொண்டு... முண்டாசுக் கவியின் கவிதை உலகத்துக்குப் போய் விட்டாள்.
அவளுக்குப் பாரதியாரை நிரம்பப் பிடிக்கும். ஏழாவது படிக்கும்போது பாரதியார் பாடல் பாடி வெற்றி பெற்றதற்கு 'பாரதியார் கவிதைகள்' புத்தகம் பரிசாகக் கிடைத்தது. அடிக்கடி அந்தப் புத்தகத்தை விரும்பிப் படிப்பாள். அதுவும் கல்யாண வயது வந்ததிலிருந்து பாரதியாரின் காதல் கவிதைகள் அவள் மனதை மிகவும் ஈர்த்தன.
'தேவானை.. ஆத்தங்கரைக்குப் போகலாமா?' என்று துவைக்க வேண்டிய துணிகளுடன் அவளது உயிர்த் தோழி திலகா வந்தாள்.
''வாம்மா திலகா ... பாரு உன் தோழியை..நம்ப கந்தசாமி தரகர்கிட்டே தேவானைக்குக் கல்யாணம் பண்ணனும்னு சொன்னேன் பாரு.. உடனே மனுஷன் நாலைந்து பையன்களோட போட்டோக்களை கொண்டுவந்து கொடுத்துட்டாரு.. என்ன ஏதுன்னு பாக்கறதுக்குள்ளே இவ பாட்டுக்கு ஒரு போட்டோவை எடுத்து வைச்சுக்கிட்டு .. கூப்பிடக் கூப்பிட ஏன்னு கேக்காம.. காணாததைக் கண்டமாதிரி பிரமிச்சுக் கிடக்கா?'
'ஏய் தேவானை.. ஏய் ஏய் ,,,' என்று திலகா பிடித்து உலுக்கியதில் கனவிலிருந்து விழித்தவள் போல் திரும்பிய தேவானை 'ஹாய் திலகா...வா வா ..இங்கே பாரு இவருதான் நான் கட்டிக்கப் போறவர்' என்றாள்.
அப்போதுதான் தேவானைக்கு நினைவுக்கு வந்தது அப்பா எடுத்துவந்த போட்டோக்கள். அவள் வேற எந்த போட்டோவையும் பார்க்கவில்லை. ஒரே போட்டோவை பார்த்து அவள் சரி என்று சொன்னதற்கு அப்பா சொன்னார், ' தேவாக்கண்ணு. நீ சொல்ற இந்த ஆள்.. வெறும் வெத்துப் பயல் அஞ்சாவதுதான் படிச்சிருக்கானாம். சொல்லிக்கிறாப்பலே வேலை கிடையாது.அப்பப்போ கிடைச்ச வேலையை செஞ்சு பொழைப்பு நடத்தறானாம். அப்பன், ஆத்தான்னு சொந்தம் கூட எதுவும் கிடையாதாம். இந்தப் பேப்பரில் அவனைப் பத்திக் குறிப்பு இருக்கு பாரு. தரகர் கொடுத்த மத்த போட்டோவெல்லாம் பாரும்மா?'
'தேவையில்லப்பா.. இவரைத்தான் நான் கட்டிப்பேன். இவரைப் பத்தின மத்த விஷயங்கள் எனக்கு கவலையில்லை. இவர் கல்யாணத்துக்கு ரெடி தானே .
அது போதும்' என்று பிடிவாதமாக சொன்னாள் தேவானை.
'இப்படி பேசலாமா. நீயே எட்டாவது படிச்சிருக்கே. தையல் கத்துக்கிட்டிருக்கே . என்னோட இந்த வீடு, உனக்குன்னு நான் செஞ்சு வச்சிருக்கிற பத்து பவுன் நகையைத் தவிர உங்கம்மாவோட இருபது பவுன் நகை எல்லாமே உனக்குதானேம்மா? உன் தகுதிக்கு இவன் காண மாட்டான். எனக்கு நீ ஒரே பொண்ணு.. அம்மா இல்லாத உன்னை எத்தனை அருமையா வளர்தேன். உன்னை கண் கலங்காமப் பாத்துக்கற நல்ல பையனாப் பார்த்துக் கொடுக்கணும்னு அப்பாவுக்கு ஆசையிருக்காதாம்மா ?'
பலமுறை சொல்லிக் கெஞ்சினார் அப்பா. திலகாவும், ' 'தேவா உன் நல்லதுக்குத் தானே அப்பா சொல்றார். வெறும் போட்டோவை பார்த்தா வாழ்க்கையை தீர்மானிப்பே..' என்று சொல்லியும் தேவானை கேட்கவில்லை.
' 'அப்பா... படிக்கலைன்னா என்னப்பா.. அவரு சம்பாத்தியத்திலே நான் சிக்கனமா குடும்பம் நடத்துவேன். என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவருக்கு சொந்தம் கிடைச்சுடுமே..அப்புறம் என்ன ?'
' எனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சிக் கொடுக்கணுமுன்னு அடிக்கடி சொல்வீங்களே. என் மனசில சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்டார். இவரைக் கட்டிக்கிட்டாத்தான் நான் சந்தோஷமா இருப்பேன். இல்லாட்டி எனக்கு கல்யாணம் கிடையாது.' என்று நறுக்குத் தெறித்தாற்போல் மகள் சொல்லிவிட்டாள். வேறு வழியின்றி அப்பா சம்மதித்தார். வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்கணும் என்ற கண்டிஷனுடன்!
மருமகன் முருகன் வீட்டுக்கு வந்ததும் தெரிந்த நண்பரின் லேத்துப் பட்டறையில் ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்தார்.
தேவானை தனது கணவன் முருகன் மீது காதலால் கசிந்து, அன்பால் உருகி, பாச மழையால்அவனைத் திணறடித்தாள். முருகனும்,ஆரம்பத்தில் தேவானையிடம் பாசத்துடன் வருடிக் கொடுக்கப்படும் நாயைப் போல், கிறங்கிக் கிடந்தான். போகப் போக மனைவிக்குத் தெரிந்தும் தெரியாமலும் சீட்டாடுவதும் சிகரெட் பிடிப்பதுவும்... என தொடர்ந்தது.
தேவானையின் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை.
'மாப்பிள்ளை... என்ன இது... புதுப் பழக்கம்.. ' என்று அவர் எச்சரித்த போது..தேவானை பரிந்து கொண்டு வந்தாள்.
'விடுங்கப்பா.. ஆம்பிள்ளைங்களுக்கு இதெல்லாம் சகஜம்தானே.'
' மகளின் கண்மூடித்தனமான பாசம்...அவள் வாழ்க்கை என்னாகுமோ?' என்ற கவலையிலேயே அவர் காலம் முடிவடைந்து விட்டது. அப்பாவின் வீடு தன் வசம் வந்ததும் உடனேயே தேவானை செய்த காரியத்தை திலகாவும் தடுத்துப் பார்த்தாள்.
'பாருங்க திலகா உங்க தோழியை' என்று முருகன் ஒப்புக்குச் சொன்னதைக் கேட்டு தேவானை
மகிழ்ந்தாள்.
'அய்யா.. சாமி கடவுளே.... வீடு என்னா வீடு.. என் மாமனுக்குதான் எம்மேலே எத்தனை பிரியம் ..அது போதும் எனக்கு' என்று வீட்டை கணவன் பெயருக்கு மாற்றி எழுதி பத்திரம் பதிவு பண்ணினாள்.
'தேவா..தேவா...' என்று முருகனும் நன்றிக் கடனுக்காய் ...மனைவியையே சுற்றி சுற்றி வந்தான்.
சில மாதங்கள் சென்றன. ஒருநாள் வேலை முடிந்து வந்த முருகன், 'தேவா.. எங்க முதலாளி பட்டறையை வித்துப் போட்டு மகன் ஊருக்குப் போகப் போறாராம். வேலை செய்யறவங்க வாங்கினா, கொஞ்சம் சகாயம் செஞ்சு தருவாராம். நம்மகிட்ட ஏதம்மா அவ்வளவு பணம்' என்று மனசுக்குள் மனைவியின் நகைகள் கணக்கு சொல்ல, முகத்தில் அப்பாவித்தனத்துடன் கண்களில் ஆசை பொங்க சொன்னான்.
'ஏன் மாமா...கவலைப்படுறீங்க...என்கிட்டேதான் நகைகள் இருக்கே. வித்துட்டாப் போச்சு. . அப்பாவோட ரொக்கப் பணம் கொஞ்சமிருக்குன்னு...' என்று எல்லாத்தையும் தாரை வார்த்து , பட்டறையை வாங்கி ,ஆசை மாமனை முதலாளியாக்கினாள்.
வழக்கம்போல் திலகாவின் பேச்சு எடுபடவில்லை.
அவ்வளவுதான், முருகனும் தான் ராஜாவாயிட்ட மாதிரி குஷாலாய் திரியலானான். பட்டறைக்குப் பக்கத்திலிருந்த சத்துணவுக் கூடத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த வள்ளியிடம் பழக்கம் கொண்டான். இருவரும் ஊர் சுற்றினார்கள். நேரம் கழித்து வீட்டுக்கு வர ஆரம்பித்தான் முருகன்.
ஒருநாள் தேவானையோ, 'என்ன மாமா... இப்பல்லாம் இவ்வளவு நேரம் வேலை பார்க்கணுமா...பட்டறை ஆளுங்க பார்த்துக்கட்டும்னு நீங்க வரவேண்டியதுதானே. நான் தனியா இருக்கேனில்ல..'
'தேவா.. மனசே சரியில்லம்மா.. நமக்குன்னு குழந்தை இல்லைன்னு ஆயிடுச்சே.. அந்தக் கவலைதாம்மா வாட்டுது. நாம என்ன பண்ண முடியும். அதான் அப்படி கால்போன போக்கிலே போயிட்டுத் திரும்பறேன்.' என்று முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு தேவானையையே பார்த்தான்.
கொஞ்ச நாளாவே இப்படித் தான், 'தேவா.. கல்யாணமாகி அஞ்சு வருசமாச்சு.. நமக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லையே...நீ வேணா டாக்டரம்மாவைப் பார்த்து செக்கப் பண்ணிட்டு வாயேன்' என்று தூண்டிவிட்டான் முருகன். அவளும் திலகாவுடன் போய், 'தனக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு கிடையாது' என்று டாக்டர் சொன்னதில், ரொம்பவே இடிந்து போயிருந்தாள்.
'ஐயோ .. என் மாமனுக்குத் தான் குழந்தை வேணும்னு எவ்வளவு ஆசை..நான் இப்படி மலடியாயிட்டேனே..' என்று தேவா மனசுக்குள் மருகினாள்.
மாமன் யாரோ ஒரு பெண்ணுடன் சுற்றும் விஷயம் அரசால் புரசலாக தேவானை காதிலும் விழுந்த சமயம், திலகா செய்தி கேட்டு ஓடி வந்தாள்.
'தேவானை உன் மாமன் யாரோ ஒரு பொண்ணுகூட சுத்தறான் தெரியுமில்லை.'
' 'அதனால் என்ன திலகா.. மாமாவுக்குப் புடிச்சிருக்கு .. பழகுறாரு..' என்று சிரித்துக் கொண்டே அசட்டையாக பேசிய தோழியைப் பார்க்க எரிச்சல் வந்தது திலகாவுக்கு. ஆனால் தேவானையோ அந்த நிமிஷமே ஒரு முடிவு எடுத்தாள்.
தன் பிரிய மாமனுக்கு, அவனுக்குப் பிடித்த அந்தப் பெண்ணையே மறுதாரமாய் கல்யாணம் செஞ்சு வச்சுடலாம்னு.. அதை வாய்விட்டுச் சொல்லவும் செய்தாள்.
இதைக் கேட்ட திலகா கொதித்தெழுந்து, 'உனக்கு பைத்தியம் பிடிச்சுக்கிச்சா?' என்று கேட்டாள்.
'இப்பவும் என் மாமனுக்காகத்தான் இதையும் செய்யறேன். அவருக்கு குழந்தை வேணும்ன்னு ரொம்ப ஆசை. அவருக்கு அந்த தகுதி இருக்கும்போது... அவரு ஏன் அதை இழக்கணும். ஊர்க்காரங்க நாக்கு மேல பல்லைப் போட்டு என் மாமனைப் பத்தி வம்பு பேசக் கூடாது..'
'வேண்டாம் தேவானை.. நாளைக்கு உன் கதியை நினைச்சுப் பாரு.. .நீ இப்படி கண்மூடித்தனமாய் பிரியம் வச்சுருக்கே..அதுக்கேத்த ஆளு கிடையாது உன் மாமன்.. தகுதியத்தவனைத் தலைமேல் வச்சுக் கொண்டாடறே..'
'திலகா... நீ சொன்னதையெல்லாம் பொறுத்துக்கிட்டேன் . இனியும் .என் மாமனை மரியாதைக் குறைவா பேசினா உன்கிட்ட பேசவே மாட்டேன்' என்று கண்டிப்புடன் தேவானை பேசினாள்.
இப்படி பேசிய தோழியை நினைத்து, 'யானை தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்வதுபோல் செய்கிறாளே‘ என்று திலகாவால் கவலைதான் பட முடிந்தது.
'தேவானையை தனக்கு வேண்டியதையெல்லாம் தான் கேட்காமலேயே நிறைவேற்றி வைக்கும் கற்பகத் தரு' என்று புரிந்து கொண்டிருந்த முருகனுக்கு அவள் முடிவில் சொல்லவொண்ணாத மகிழ்ச்சி.
இருந்தும், 'என்ன தேவா.. இப்படியெல்லாம் செய்யறே.. ஒரு அநாதைக் குழந்தையை தத்து எடுத்துகிட்டாப் போச்சு..நானே ஒரு அனாதைதானே..' என்று மேலுக்கு பசப்பாக பேசினான்.
'நீங்கள் ஒன்றும் அநாதையில்லை, நான் இருக்கிறேன் உங்களுக்கு.. உங்கள் குழந்தை உங்களுடையதாகவே இருக்கணும்.. பேசாம வள்ளி கழுத்திலே தாலியைக் கட்டுங்கனு..' என்று கரும்பு திங்க கூலியும் கொடுத்தாள்.
முருகனும் வள்ளி, தேவானை சகிதம் குடும்பம் நடத்தினான். சீக்கிரத்திலேயே வள்ளி உண்டானாள்.தேவானை அவளைத் தாங்கித் தரித்தாள். ஆண் குழந்தை பிறந்தது. எங்கோ கிராமத்தில் இருந்த வள்ளியின் சின்னாயி என்று ஒரு கிழவி, 'என் மக்களுக்கு நான்தானே பிள்ளைப் பேறு செய்யணும்' என்று ஆமை புகுந்த வீடு மாதிரி வந்து ஒட்டிக் கொண்டாள். குடும்பத்தைப் பிரிக்க ஆரம்பித்தாள்.
'உன் சக்களத்தி குழந்தை பெறாதவ. மலடி கண் பொல்லாது.அவகிட்ட ராசாப்பயலைக் கொடுக்காதே. உள்ளாரா ரூமுக்கு எடுத்துட்டுப் போய் பால் குடு. நீயும் பிள்ளை பெத்தவ..அவ எதிரிலே சாப்பிடாதே...' என்ற ரீதியில் தொடர்ந்த சின்னம்மாவின் போதனைகள் வள்ளியின் மனசில் நன்றாகவே இடம் பிடித்துக் கொண்டன. தேவானையை சக்களத்தியாக்கிக் கொண்டாள் வள்ளி.
கணவனிடம் குழந்தை இருக்கும்போது பார்க்கலாம் என்று பக்கத்தில் போனால், 'தேவா..குழந்தை கழுத்திலே உரம் விழுந்திடுச்சாமே.. ஏன் நீ பிள்ளையை தூக்கறே....' என்று வள்ளி சொன்ன பொய்யை வழிமொழிவான். தேவானை பதில் பேசாமல் அப்பால் போய் நின்றுகொண்டு, தனது மாமா சந்தோஷமாகப் பிள்ளையை கொஞ்சுவதை வெகுவாய் ரசிப்பாள்.
தேவானையின் மாமா மேலான ஏமாளித்தனமான பாசத்தை வள்ளி நன்கு பயன்படுத்திக் கொண்டாள்.
நாளடைவில் மாமனுக்காக வீட்டு வேலை அத்தனையும் செய்துகொண்டு தையல் மெஷினோடு மெஷினாக மாமனுக்கு சம்பாதித்துக் கொடுக்கும் மெஷினாக ஆக்கப் பட்டாள்.
வீட்டில் எல்லோரும் தேவானையை மட்டும் தனியாகவிட்டு விட்டு அடிக்கடி சினிமான்னும், டிராமான்னும் வெளியே போய் விடுவார்கள்.
திலகாதான் அடிக்கடி அவளை ஆற்றங்கரையில் பார்த்து திட்டுவாள்.
' ஏண்டி இப்படி பித்துக்குளியா போயிட்டே. உன்னை இப்படிபகடைக்காயா ஆக்கிட்டாங்க... இன்னும் உன் மாமன் குணம் புரியல்லியா..'
'விடு திலகா. எல்லாம் வள்ளியோட வேலை.. மாமன் என்ன செய்வாரு..' என்று மாமனுக்கு பரிந்து பேசுவாள்.
அன்று இரவு ஏழு மணிக்கு தேவானை மட்டும் வீட்டில் இருந்த சமயம்.
தான் ஒரு வாரம் ஊருக்குப் போகும் விஷயத்தை சிநேகிதியிடம் சொல்வதற்காக வந்த திலகா நெடுநேரம் பேசிக் கொண்டிருந்ததில் சினிமா முடிந்து மாமன் க்ரூப் திரும்பி விட்டனர்.
இதைப் பார்த்த வள்ளி கோபத்துடன் சமையலறை சென்றவள், கூடத்துக்குத் திரும்பி வந்து தேவானையிடம் கத்தினாள்.
' 'என்னக்கா. ராசாப்பயலுக்குப் பசும்பால் வாங்கி வைக்கலியா...'
'நீ சொல்லவேயில்லையே வள்ளி.' என்று தேவானை சொன்ன பதிலுக்கு , 'பாருங்க மாமா.. நான் சொல்லிட்டுத்தான் வந்தேன். அவங்க சிநேகிதியிடம் பேசிக்கிட்டு, பால் வாங்காம வச்சுட்டு , பொய் சொல்றாங்க பாருங்க..? என்னு தேவானை மீது பழி போட்டு பேசினாள்.
ஏற்கெனவே சினிமா தியேட்டரில வச்சு, 'அக்கா பாருங்க வீட்டு வேலை ஒண்ணுமே செய்யறதில்லே.. வயசான எங்க சின்னம்மாவே எல்லா வேலையும் செய்ய வேண்டியிருக்கு.. சும்மா அந்த திலகாக்கா வீட்டுக்கு வம்பு பேசப் போயிடறாங்க..' என்றெல்லாம் இல்லாததையும் பொல்லாததையும் தொண தொணன்னு சொல்லிக் கொண்டேயிருந்ததில் செமக் கடுப்பில் முருகன் இருந்தான்.
இப்போது ஜிவு ஜிவுன்னு கோபம் தலைக்கு ஏறியதில் தேவானையிடம் யோசிக்காமல் வார்த்தைகளை
வீசினான்.
'ஏன் இப்படி என் பிராணனை எடுக்கறே.. பிள்ளைக்கு பால் கூட வாங்கி வைக்காம அப்படி என்ன உன் சிநேகிதியிடம் வம்பு...பிள்ளை பெத்திருந்தாத்தானே உனக்கு பிள்ளையின் அருமை தெரியும்.. சோத்துக்கு தண்டமா வீட்லே உட்காந்துகிட்டு..போ போ எங்கநாச்சியும். என் கண்முன்னாடி நிற்காதே...இந்த உன் துணிமணிகள் ...எடுத்துட்டு எங்காவது போ.. இனி நீ இந்த வீட்லே இருந்தா நான் இங்கே இருக்க மாட்டேன்..' என்று உள்ளே போய் ஒரு பையைக் கொண்டு வந்து அவள் முன் வீசினான்.
மாமனின் கடுமையான வார்த்தைகளில் விக்கித்துப் போன தேவானை செய்வதறியாது தடுமாறி நின்றாள்.
சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்ட தேவானை, 'மாமா, நீங்கள் எங்கும் போக வேண்டாம். நானே வீட்டைவிட்டு போய்விடுகிறேன்' என்று பையைக் கையில் எடுக்கவும்,, அதுவரை பேசாமல் இருந்த திலகா கோபத்துடன் 'நீ ஏண்டி வெளியே போகணும். இந்த வீடு. உன்னுது..' என்று ஆரம்பித்தாள்.
'திலகா. என் மாமாவே போன்னு. சொன்னபிறகு நானே இங்கே இருக்க மாட்டேன். நீ பேசாமல் வா..என்னை ஒரு அநாதை இல்லத்தில் சேர்த்துவிடு..' என்று திலகாவின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தவள் , 'அடடா..மறந்துட்டேனே...ஒரு நிமிஷம் திலகா ...' என்று உள்ளே ஓடினாள்.
பின்னாடியே போன திலகா. உள்ளே 'அதை என்கிட்டே கொடு ' என்று முருகன் மிரட்டுவதும் 'ஊஹூம் இதை நான் தரமுடியாது ' என்று தேவானை மறுப்பதும் காதில் விழ உள்ளே போகாமல் வாசல் இடைக்கழியிலேயே நின்று விட்டாள்.
அதற்குள் முருகன் கையை ஓங்கிக் கொண்டு வர ஒரு சிறிய கவரை மார்போடு அணைத்து கொண்டு தேவானை வெளியே ஓடிவந்து விட்டாள்.
பிரமித்து நின்று கொண்டிருந்த திலகா , தேவானையை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தாள்.
'கிழக்கே உதிக்கின்ற சூரியன் கூட மேற்கே உதிச்சுடும் . ஆனால் உங்க மாமா கேட்டு நீ கொடுக்க மாட்டேன்னு பிடிவாதமா? என்னாலே நம்பவே முடியவில்லை. அது.என்னடி தேவா அப்படிப்பட்ட பொருள்' என்றாள் திலகா.
தேவா கையிலிருந்த கவரைப் பிடுங்கி உள்ளேயிருந்ததை எடுத்தாள். முருகனின் போட்டோ.
'உன் மாமன்கிட்டே இதையா தரமாட்டேன்னு தூக்கிட்டு ஓடி வந்தே.. அவன் மேல பாசம் வச்சு ...நாய்க்குட்டி கணக்கா அவனையே சுத்தி சுத்தி வந்தே... வீடு, நகை, பணமுன்னு அத்தனையையும் அவன் காலடிலே கொட்டினே... ஏன் அவனுக்காக அவனையே இன்னொருத்திக்கு அடமானம் வச்சே.. உன் அருமை தெரிஞ்சுதா அவனுக்கு. தெரு நாயை விரட்டற மாதிரியில்ல நடந்துக்கிட்டான்... அவனையே விட்டுக் கொடுத்துட்டே... அவன் போட்டோ மட்டும் எதுக்கு ....அவன் மூஞ்சிலே விட்டெறிஞ்சுட்டு வராம...வச்சுக்கிட்டு ஏன்னா
செய்யப்போறே...'
'ஐயோ திலகா...என் உசுரு இருக்கும் வரை என் மாமனை என்கிட்டேர்ந்து பிரிக்க முடியாது. நிஜ மாமன் வேணா வள்ளியோட இருந்துக்கட்டும். ஆனா இந்த போட்டோ மாமா என்கூடவே தான் இருப்பாரு.. முதல் முதலில் இவரைத் தானே பார்த்தேன் .அப்பவே எனக்குள்ளே பூந்துக்கிட்டாரே.இவரோட தினமும் நிறைய பேசுவேன் ..கவலை ,சந்தோஷம் எல்லாத்தையும் சொல்வேன். படுக்கும்போது பக்கத்திலே படுக்க வச்சுக்கிட்டு ஊர்க்கதைபேசுவேன். மாமாவுக்குப் பிடிச்ச சினிமாப பாட்டெல்லாத்தையும் மெதுவாக பாடுவேன்..' என்று நீளமாக சொல்லிக் கொண்டே போனாள் தேவானை.
'அம்மாடி இப்படியும் ஒரு காதல் இருக்குமா.. நிஜத்தை விட்டு நிழலைப் பிடித்துக் கொண்டு ...கடவுளைப் பத்தி..., வேதம் ..சாஸ்திரம் பத்தி எல்லாம் பத்திஎல்லாம் கதை சொல்வாங்களே. அந்த மாதிரியான புராணக் காதல் கணக்கால்ல இருக்கே..' என்று வியப்பில் பேச்சே வரவில்லை திலகாவுக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com