ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தும்மலை அடக்கியதால் வந்த ஆபத்து நீங்க..?

அலுவலகத்தில் மீட்டிங் நடந்தபோது, எனக்கு தும்மல் ஏற்படத் தொடங்கியது. அதை மரியாதை நிமித்தமாகவும், அபசகுணமாகிவிடுமோ என்ற காரணத்தினாலும் வலுக்கட்டாயமாக அடக்க வேண்டி வந்தது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தும்மலை அடக்கியதால் வந்த ஆபத்து நீங்க..?

அலுவலகத்தில் மீட்டிங் நடந்தபோது, எனக்கு தும்மல் ஏற்படத் தொடங்கியது. அதை மரியாதை நிமித்தமாகவும், அபசகுணமாகிவிடுமோ என்ற காரணத்தினாலும் வலுக்கட்டாயமாக அடக்க வேண்டி வந்தது. அன்று முதல் ஏற்பட்ட தலைவலி,  பின்கழுத்துப் பிடிப்பு விடாமல் பெரும் தொல்லையாக மாறிவிட்டது. இவை குணமாக ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?

-பீட்டர்ராஜ்,  
காரைக்கால்.

இயற்கை உபாதைகளை நாம் ஒருபோதும் வலுக்கட்டாயமாக அடக்கக் கூடாது என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. நீங்கள் குறிப்பிடும் தும்மலை அடக்கியதால் இரு வகையான உபாதைகளால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளீர்கள்.

தலைசார்ந்த புலன்களாகிய கண், காது, மூக்கு, நாக்கு, தோல் அனைத்தும் பலவீனமடைவதும், முக, வாய் கோணுவதும் ஏற்படக் கூடிய ஆபத்தான நிலைகளும் ஏற்படலாம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

மூக்கினுள் செலுத்தப்படும் மூலிகைப் புகைகளாலும், கண்களில் மூலிகைச் சொட்டு மருந்துகளை விடுவதன் மூல மாகவும், மூக்கினுள் விடப்படும் சொட்டு மருந்துகளின் வழியாகவும் சூரியனைப்பார்ப்பதாலும் அடைபட்டுப் போன தும்மலை ஏற்படுத்தி குணம் காண வேண்டும் என்ற ஆயுர்வேத மருத்துவப் பரிந்துரையை நீங்கள் ஏற்று அதன்படி செயல்படுவதே நல்லது.

ஊமத்தம் இலை, விராளி மஞ்சள், வசம்புக் கட்டை, வால் மிளகு போன்றவற்றில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து, புகைத்து அந்தப் புகையை முகர்வது நல்லது. 

இளநீர் குழம்பு, நயனாமிருதம், நேத்ராமிருதும் என்ற கண் சொட்டு மருந்துகளில் ஒன்றை கண்களில் விட்டுக் கொள்வது, அணுதைலம் எனும் மூக்கினுள் விடும் சொட்டு மருந்தை மூன்று, நான்கு சொட்டுகள் விட்டு உறிஞ்சுவது, காலையில் சூரியனைப் பார்த்தவுடன் ஏற்படும் தும்மலை அடக்காமல் தும்முவது போன்றவற்றால் நீங்கள் பயன் அடையலாம்.

தலையிலுள்ள முடியை முழுவதுமாக நீக்கிவிட்டு, தலையில் வெதுவெதுப்பாக ஊற்றி நிறுத்தி வைக்கப்படும் 'சிரோவஸ்தி' எனும் மூலிகைத் தலை வைத்திய முறை, அதை அகற்றிவிட்டு தலை, கழுத்து, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் நன்கு வியர்வை ஏற்படும்படி செய்யப்படும் நீராவி சிகிச்சை முறை ஆகியவற்றால் தும்மலை அடக்கியதால் ஏற்படும் தலைவலி, கழுத்துப் பிடிப்பு போன்ற உபாதைகளைக் குணப்படுத்த இயலும்.

பிராணன்- உதானன் எனும் இரு வாயுக்களின் வழித்தடங்களில் ஏற்பட்ட அதிர்வுகள், அடைப்புகள் ஆகியவற்றை நீக்கக் கூடிய   இந்தச் சிகிச்சை முறைகள் தோல்வி அடையாதவை.

தலைக்குத் தேங்காய் எண்ணெய் தேய்ப்பது, குளிர்ந்த நீரில் தலைக்குக் குளிப்பது, குளிரூட்டப்பட்ட அறையில் தலையின் மீது குளிர் காற்று படும்படி அமர்ந்திருப்பது, உணவில் சிறிதும் எண்ணெய்ப் பசை சேராமல் வரட்சியாக உண்ணுவது, தலைக்குத் தலையணை வைக்காமல் உறங்குவது போன்ற செயல்களைத்  தவிர்ப்பது நலம்.

உணவுக்குப் பிறகு தசமூலாரிஷ்டம், அஸ்வக கந்தாரிஷ்டம், வாயு குளிகை போன்ற மருந்துகளை மருத்துவர் பரிந்துரையின்படி நீங்கள் சாப்பிடலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com