பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 177

சென்னை திரும்பியிருந்த நான், தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்த எனது 'நியூஸ்கிரைப்' அலுவலகத்தில் இருந்தேன்.
பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 177


சென்னை திரும்பியிருந்த நான், தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்த எனது 'நியூஸ்கிரைப்' அலுவலகத்தில் இருந்தேன். பத்திரிகைகளுக்கு அனுப்புவதற்காகக் கட்டுரைகளைப் படித்துக் கொண்டும், பிழை திருத்திக் கொண்டும் இருந்தபோது, மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் இருந்து வெளிவரும் 'புதாரி' நாளிதழிலிருந்து எஸ்.டி.டி. அழைப்பு வந்தது.

'அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் சசிகலா நடராசன் குறித்து ஒரு சிறப்புக் கட்டுரை வேண்டும். அதன் பின்னணி, அவரது கைது, அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக அந்தக் கட்டுரை அமைய வேண்டும்' என்று செய்தி ஆசிரியராக இருந்தவர் எனக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரிடமிருந்து அப்படியொரு கோரிக்கை எழுந்ததற்குக் காரணம் இருந்தது.
ஜெ.ஜெ. தொலைக்காட்சி தொடர்பான அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சசிகலா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்தார். அவரது ஜாமீன் மனு அன்று விசாரனைக்கு வருவதாக இருந்தது. அவர் உடல்நலம் அடைந்துவிட்டார் என்றும், அவரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில்தான், ஜாமீன் மனு விசாரணை நடக்க இருந்தது.
ஜெயலலிதா, சசிகலா மீதான அமலாக்கத் துறை நடவடிக்கைகள் தேசிய அளவில் கூர்ந்து கவனிக்கப்பட்டன. அதுவரை அரசியல்வாதிகள் யார் மீதும் அமலாக்கத் துறையால் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படவில்லை என்பதால், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பல்வேறு மாநில அரசியல்வாதிகளும் ஜெயலலிதா - சசிகலா வழக்கின் போக்கு குறித்து ஆர்வம் காட்டியதில் வியப்பில்லை.
பத்திரிகை நண்பர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பி. அன்பழகன் முன்னிலையில் சசிகலா ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது என்று தெரிந்தது. சசிகலாவின் கணவர் நடராசன் சார்பில், அவரைத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கக் கோரிய மனுவும் அதே நாளில் நீதிபதி கனகராஜ் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்றும் அந்த நண்பர் தெரிவித்தார்.
நடராசன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்ததற்குக் காரணம் இருந்தது. சசிகலாவுக்கு உடல்நலம் சரியாகிவிட்டது என்றும் அவரை மீண்டும் மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லலாம் என்று சென்னை பொது மருத்துவமனை பரிந்துரைத்திருந்தது. அதைத் தடுக்கும் முயற்சியாகத்தான் நடராசன் உயர்நீதிமன்றத்தை அணுகியிருப்பதாக அந்த நண்பர் தெரிவித்தார்.
எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடக்க இருக்கிறது என்பதால், காஸா மேஜர் சாலையில் உள்ள 'வேன்டேஜ் லெதர்ஸ்' அதிபரும் எனது நண்பருமான பி.ஆர். சேதுபிரகாசத்தின் வீட்டுக்குச் சென்றேன். எல்லா கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உண்டு என்பது மட்டுமல்ல, பல பிரபல வழக்குரைஞர்களுடன் நெருங்கிய தொடர்பும் உண்டு என்பதுதான் காரணம். அவரை சந்தித்தால் சில பின்னணி விவரங்கள் கிடைக்கும் என்பதால் அவரை சந்திக்கச் சென்றேன்.
எனது எதிர்பார்ப்பு வீணாகவில்லை. வழக்கம்போல அவரது வீட்டு வரவேற்பறை, மந்திராலோசனை நிகழும் அரச சபையாகக் காட்சியளித்தது. அதிமுகவினரான வழக்குரைஞர்கள் சிலரும் அங்கே இருந்தனர். ஜாமீன் மனு சசிகலாவுக்கு சாதகமாக இருக்காது என்பது அங்கே கூடியிருந்த பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது.
எழும்பூர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்பதால் நான் சேதுபிரகாசத்தின் வீட்டிலேயே இருந்துவிட்டேன். எப்படி இருந்தாலும் இரண்டு வழக்குகள் குறித்த தீர்ப்புகளும் உடனடியாக அங்கே தெரிவிக்கப்படும் என்று எனக்குத் தெரியும். எனது எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.
முதலில் வெளிவந்தது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ம. நடராசன் மனுவின் மீதான தீர்ப்பு. தேவைப்பட்டால் சசிகலாவுக்குத் தனியார் மருத்துவமனையில் அவரது செலவில் சிகிச்சை வழங்க வேண்டும் என்றும், இந்தச் சலுகையை மற்ற வழக்குகளில் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் தீர்ப்பு வழங்கி இருந்தார் நீதிபதி கனகராஜ்.
உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையை அமலாக்கத் துறை ஏற்கவில்லை. அவருக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவது விசாரணையை பாதிக்கும் என்று கூறிவிட்டது. அரசு மருத்துவமனையில் உயர்நிலை மருத்துவக் குழு அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறியதை அடுத்து அன்று மாலையே அவர் மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நடக்கும் நிலையில் இல்லாததால் அவரை ஸ்டெச்சரில் கொண்டு சென்றனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
சிறிது நேரத்தில், எழும்பூர் நீதிமன்றத் தீர்ப்பும் வந்துவிட்டது. அவரது ஜாமீன் மனுவை நீதிபதி பி. அன்பழகன் தள்ளுபடி செய்திருந்தார். 'சசிகலா செய்துள்ள குற்றம் நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கக் கூடிய மிகப் பெரிய குற்றம். ஆகவே இந்தக் குற்றத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது' என்று குறிப்பிட்டு அவர் ஜாமீன் மனுவை நிராகரித்திருக்கிறார் என்று தொலைபேசியில் தனக்குக் கிடைத்த தகவலைப் பகிர்ந்து கொண்டார் அங்கே இருந்த வழக்குரைஞர் ஒருவர்.


'சசிகலா ஒரு பெண். அவருக்கு அடிக்கடி வலிப்பு வருகிறது. ரத்த அழுத்தம் உள்ளது. இதனால் அவருக்குத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்' என்பதுதான் அவர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம். உயர்நீதிமன்றத்தில் அவருக்குக் காட்டப்பட்ட அனுதாபம் எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் காட்டப்படவில்லை.
'சசிகலா பெண், நோயாளி என்ற காரணங்களுக்காக அவருக்கு ஜாமீன் கொடுக்க முடியாது. அவருக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை அதிகாரிகள் எடுத்திருக்கிறார்கள். சசிகலாவை ஜாமீனில் விட்டால் சாட்சிகளைக் கலைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. வழக்கின் வேகமும் தாமதப்படும். சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பும் உள்ளது. அவரை மீண்டும் சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பது கடினம் என்று அமலாக்கத் துறை தெரிவிக்கிறது. ஆகவே அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்' என்று தனது தீர்ப்பில் மாஜிஸ்திரேட் பி. அன்பழகன் தெரிவித்திருந்ததாக அந்த வழக்குரைஞர் தெரிவித்தார்.
சசிகலா மீதான வழக்கு என்ன என்று அங்கிருந்த வழக்குரைஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். 25 ஆண்டுகளுக்கு முன்னர் செயல்பட்ட எல்லா தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் செய்த முறைகேட்டைத்தான் ஜெ.ஜெ. தொலைக்காட்சியும் செய்திருப்பதாகவும், அமலாக்கத் துறை குறிவைத்தது என்னவோ இவர்களை மட்டும்தான் என்றும் அந்த வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். அவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
'ஜெ.ஜெ. தொலைக்காட்சிச் சேனலின் நிகழ்ச்சி ஒளிபரப்புக்காக அமெரிக்காவில் 'ரிம்சாட்' செயற்கைக்கோள் டிரான்ஸ்பாண்டர்கள் மற்றும் மணிலாவில் உள்ள 'சுபிக்பே' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் அந்நியச் செலாவணி மோசடி செய்திருப்பதாக அவர் மீது 'காஃபிபோசா' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சசிகலா கைது செய்யப்பட்டார்.
அவர் 'காஃபிபோசா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை மத்திய ஆலோசனைக் குழு தள்ளுபடி செய்தது. உடனடியாக அவர் மீது அமலாக்கத் துறை வேறொரு வழக்கு பதிவு செய்து கைது செய்துவிட்டது. அதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
முதலில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு மாஸ்கோவில் உள்ள 'இன்டர் -ஸ்புட்னிக்' மற்றும் 'சிங்கப்பூர் டெலிகாம்' நிறுவனங்களுடன் புதிதாக செய்து கொண்ட ஒப்பந்தத்தில் 7 லட்சம் சிங்கப்பூர் டாலர் அந்நியச் செலாவணி மோசடி நடந்திருக்கிறது என்பதுதான் புதிய குற்றச்சாட்டு. அமலாக்கத் துறை சசிகலாவை விடுவதாக இல்லை' என்று வழக்கு குறித்து விளக்கினார் அந்த அதிமுக வழக்குரைஞர்.
நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, நண்பர் சேதுபிரகாசத்தை சந்திக்க அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.மார்கபந்து வந்தார். அவர் கையில் ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கை இருந்தது. சசிகலாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையையும், முதலமைச்சர் கருணாநிதி, மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட அனைவரையும் கடுமையாகத் தாக்கி அறிக்கை வெளியிட்டிருந்தார் ஜெயலலிதா.
அந்த அறிக்கையின் நகலை அவரிடமிருந்து வாங்கிப் படித்துப் பார்த்தேன். கடுமையான ஆத்திரத்திலும், வேதனையிலும் ஜெயலலிதா இருக்கிறார்  என்று தெரிந்தது. 14 பக்க அறிக்கை அது. தனக்கு வேண்டியவர் என்பதற்காகவே சசிகலாவுக்கு சிதம்பரமும், கருணாநிதியும் அளவுக்கு மீறிக் கொடுமை செய்து வருகிறார்கள் என்பதுதான் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு.
'தனிப்பட்ட முறையில் சசிகலாவை சித்திரவதை செய்து பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கும் மத்திய நிதியமைச்சகத்தின் பழிவாங்கும் போக்கை என்னால் கண்டிக்காமல் இருக்க முடியவில்லை. ஆறு மாத சிறைவாசத்தில் சசிகலாவைக் கொடுமைப்படுத்தி, கடுமையான மனச்சோர்வு அடையச் செய்து, நடமாடும் பிணமாக மாற்றிவிட்டார்கள். அவர் அசிங்கப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு ஒரு கொலைக் குற்றவாளியைப்போல சிறைக்கும் நீதிமன்றத்துக்கும் அலைக்கழிக்கப்படுகிறார்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் அவர்.
'திமுகவும், தமாகாவும் அங்கம் வகிக்கும் ஐக்கிய முன்னணி அரசு மத்திய ஆட்சியில் அமர்ந்த பிறகு, அரசியல் எதிரிகள் மீது பொருளாதார குற்றங்களைச் சுமத்தி அமலாக்கத் துறையின் மூலம் அவர்களை வீழ்த்தும் தகாத முன்னுதாரணம் அரங்கேறி வருகிறது. கருணாநிதியும், ப. சிதம்பரமும் தங்களது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி அரசியல் எதிரிகளை அழிக்க முற்பட்டிருக்கிறார்கள்.
தவறு செய்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு இருவேறு கருத்துகள் கிடையாது. ஆனால் ஒருசில தலைவர்களின் குறுகிய பழிவாங்கும் மனப்பான்மை காரணமாக சிறிய தவறுகள் பூதாகரமாக்கப்பட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் முன்னரே பல மாதங்கள் சிறைக்கொடுமை அனுபவிக்கும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது. காலச்சக்கரம் சூழலும்போது இதே நிலை அவர்களுக்கும் ஏற்படும் என்பதை கருணாநிதியும், சிதம்பரமும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரே வழக்கைத் திட்டமிட்டுப் பிரிவுகளாகப் பிரித்து முதல் வழக்கில் கைது செய்கிறார்கள்; அந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தால் இரண்டாவது வழக்கு போடுகிறார்கள்; அதில் ஜாமீன் கிடைக்கும் நேரத்தில் மூன்றாவது வழக்குப் போட்டு காஃபிபோசாவில் கைது செய்கிறார்கள்; காஃபிபோசா பற்றிய ஆலோசனைக் குழு விடுதலை செய்த ஆணையை வேண்டுமென்றே தாமதப்படுத்தி நான்காவது வழக்கில் கைது செய்கிறார்கள். ஆறு மாதம் சிறையில் கழித்துவிட்ட சசிகலா கடுமையான பழிவாங்கலுக்கு ஆளாகி விட்டார்' என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
'அமலாக்கத் துறையின் நடவடிக்கையைப் பற்றி மத்திய நிதியமைச்சரின் மகன் பத்திரிகைகளுக்கு முன்கூட்டியே தகவல் கொடுப்பதும், நாங்கள் சசிகலாவை விடமாட்டோம் என்று அவரது மனைவி ஆணவத்தோடும் அதிகார மமதையோடும் பேசி வருவதும் எனக்குத் தெரியாமல் இல்லை. என் மீதுள்ள கோபத்தில் சசிகலாவை ஏன் வஞ்சம் தீர்க்க வேண்டும்?' என்கிற கேள்வியை எழுப்பியதுடன் நின்றுவிடாமல் மத்திய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் மீது மிகப் பெரிய தனிப்பட்ட குற்றச்சாட்டையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் ஜெயலலிதா.
தனிப்பட்ட முறையில் ப. சிதம்பரத்துக்கு ஜெயலலிதா மீது அப்படி என்னதான் விரோதம் இருந்திருக்க முடியும்?

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com