
'சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒருசேர வளைத்து, அதே சமயம் சிறுசிறு தீவுகளாகப் பிரித்துப் போட்டிருக்கும் கைப்பேசிகளுக்கு ஆபத்து வரப் போகிறது. அவை இன்னும் சில ஆண்டுகளில் சந்தையில் இருக்காது. வெறும் "நியூராலிங்க்' மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்'' என்கிறார் "டெஸ்லா', "ஸ்பேஸ் எக்ஸ்', பிரபல சமூக ஊடகமான "எக்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க்.
"எக்ஸ்' தளத்தில், பயனாளி ஒருவர் எலான் மஸ்க்கிடம், 'எண்ணங்களின் மூலம் கைப்பேசியைக் கட்டுப்படுத்துவத்தைச் சாத்தியப்படுத்த உங்கள் மூளையில் நியூராலிங்க் இன்டெர்ஃபேஸ்-ஐ பொருத்திக் கொள்வீர்களா?'' என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்குப் பதில் அளித்து எலான் மஸ்க் கூறுகையில், 'எதிர்காலத்தில் கைப்பேசிகளே இருக்காது. "நியூராலிங்க்' மட்டுமே இருக்கும்'' என்று கூறியிருந்தார்.
2016-இல் எலான் மஸ்க் தொடங்கிய "நியூராலிங்க்' நிறுவனம் மனித மூளைக்கும், கணினிக்குமான தொடர்பு இணைப்பை உருவாக்கும் "சிப்' ஒன்றை மனிதனின் மூளையில் பொருத்தி சோதனையை மேற்கொண்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளின் மூளையில் "சிப்'பை பொருத்தி இந்தச் சோதனையை "நியூராலிங்க்' நிறுவனம் செய்திருந்தது. தற்போது மனித மூளையில் "சிப்'பைப் பொருத்தி ஆய்வு செய்து வருகிறது. "நியூராலிங்க்' என்பது ஒரு மூளையிலிருந்து இன்னொரு மூளைக்குத் தகவல் பரிமாற்றம் செய்யம் புதிய அறிவியல் முயற்சி.
விபத்து ஒன்றில் சிக்கிய 29 வயதான நோலண்ட் அர்பாக் என்பவரின் உடல் தோல்களுக்குக் கீழே செயலிழந்துவிட்டது. இவருக்கு ஜனவரி 28-இல் மூளையில் "நியூராலிங்க்' சிப் பொருத்தப்பட்டது. அறுவைச் சிகிச்சை நடந்து 100 நாள்களானதும் அர்பாக்கின் உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றி விரிவான அறிக்கையை "நியூராலிங்க்' பகிர்ந்துள்ளது.
தொடர்ந்து ஆராய்ச்சிக்காக, இன்னொரு நபருக்கும் மூளையில் "நியூராலிங்க்' சிப் பொருத்தும் பணியை "நியூராலிங்க்' நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இரண்டாவது நபருக்கு "நியூராலிங்க்' சிப்' மூளையில் பொருத்தப்பட்டுவிட்டால், இரண்டு பேரும் செல்போன் உதவியின்றி ஒருவருக்கு ஒருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியுமாம்.
'இந்தத் தொழில்நுட்பம் வெற்றியளிக்கும்பட்சத்தில், இன்னும் சில ஆண்டுகளில் தகவல் பரிமாற்றத்துக்கான கைப்பேசி என்ற கருவியே தேவைப்படாது என்ற நிலைமை உருவாகும்'' என்கிறார் எலான் மஸ்க்.
ஒரு பக்கம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அதிசயிக்க வைக்கும் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், இன்னொரு பக்கம் தனக்குப் புதிய வாரிசுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பாக எலான் 12- ஆவது குழந்தைக்குத் தந்தையாகி இருந்தாலும், தகவல்கள் அண்மையில்தான் வெளியே கசிந்துள்ளது. இப்போது பிறந்துள்ளது ஆணா, பெண்ணா என்று கூட வெளியே தெரியாமல் எலான் மஸ்க் ரகசியம் காத்துவருகிறார்.
முதல் மனைவி மூலம் ஆறு குழந்தைகளையும், இரண்டாம் மனைவி மூலம் மூன்று குழந்தைகளையும், மூன்றாம் மனைவி மூலம் மூன்று குழந்தைகளும் எலானுக்கு உண்டு. முதல் இரு மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டார். "நியூராலிங்க்' நிறுவன ஊழியரான ஷிவோன் ஜிலிஸ் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் 2021-இல் இருந்து எலான் வாழ்ந்து வருகிறார்.
அதிக குழந்தைகளுக்குத் தந்தையாவது குறித்து எலான் கூறுகையில், ' இனி உலகில் மக்கள் தொகை குறையும். அதிக அறிவுத்திறன் கொண்டவர்கள் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்'' என்கிறார் எலான் மஸ்க்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.