
பதினெட்டாவது மும்பை சர்வதேசத் திரைப்பட விழா (என்.எஃப்.டி.சி.) அண்மையில் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் பயன்பாட்டில் உள்ள சென்னை தாகூர் திரைப்பட அரங்கில் கொண்டாடப்பட்டது. செய்திப் படங்களும், கதைப் படங்களுமாக சுமார் ஐம்பது படங்களுக்கு மேற்பட்டவை திரையிடப்பட்டன. இந்தியப் படங்களும், அயல்நாட்டுப் படங்களும் சிந்தனையைக் கவர்ந்து சிறந்து விளங்கின.
சேலஞ்ச்
திரையிடப்பட்ட இந்தியப் படங்களிலேயே சிறார் படம் என்று "சேலஞ்ச்' என்ற படத்தைக் குறிப்பிட வேண்டும். முப்பத்து ஏழு நிமிடங்கள்தான் ஓடுகின்றன.
"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்'
எனும் திருக்குறளுக்கு விரிவுரையாகியுள்ளது. வெற்றியைத் தடுக்கும் வழியையும் பின்னடையச் செய்து வெற்றி பெறும் ஒரு வீரக் குழந்தை பிரின்ஸியின் வரலாறு இந்தத் திரை ஓவியம்.
இரண்டு கைகளுமே இல்லாத குறைப் பிறவியாய் பிறக்கிறாள் பிரின்ஸி. அவளது விடாமுயற்சியும், தாயின் பேரன்பும் அவளை மாபெரும் சாதனையாளராக உயர்த்தும்.
சின்னக் குழந்தையாக பிரின்ஸி இருக்கும்போது, கால் விரல்களைக் கொண்டே தலை வாரவும் பிரஷ்ஷை பிடித்துகொண்டு பல் விளக்கவும் தாயார் கற்றுத் தருகிறார். வளர்ந்தவுடன் கால் விரல்களால் சீப்பைப் பிடித்தவாறு தாய்க்கே தலைவாரி விடுகிறாள் பிரின்ஸி.
பள்ளிகளில் சேர்ந்து படிக்கிறாள். கால் விரல்களாலேயே புத்தக ஏடுகளைப் புரட்டிக் கொண்டு படிக்கிறாள். பள்ளியில் ஓவிய ஆசிரியரும் கால் மூலமே தூரிகையைப் பிடித்தவாறு ஓவியம் தீட்டக் கற்றுத் தருகிறார். பார்ப்பவர் வியக்கும் வண்ணம் படங்களை வரைந்து குவிக்கிறாள்.
அவளுக்கு பொது மருத்துவமனையில் வரவேற்பாளர் பணியை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒன்றுசேர்ந்து வாங்கித் தருகின்றனர். கால் மூலமே தொலைபேசியை இயக்குதல், மருத்துவமனைக்கு நுழைவுச் சீட்டு எழுதித் தருதல் உள்ளிட்ட பணிகளைச் செய்கிறாள்.
இனிமையாகப் பாடவும் பயிற்சி எடுத்துகொண்டு கேட்பவர்களின் காதுகளில் தேன் பாய்ச்சுகிறாள். பல பரிசுகளையும் பெறுகிறாள். அவள் எங்கு சென்றாலும் நிழல் போலப் பின்தொடர்ந்து சென்று காபந்து செய்யும் தாயின் அன்பு அவளை வளர்த்தெடுத்து வார்க்கும் தாயன்போடு உடன்பிறந்த தம்பி, தங்கையின் பேரன்பும் அவளுக்கு உதவுகிறது.
இந்த உண்மைக் கதையை ராமன் போரா, சிபானு போரா எனும் இரட்டையர்கள் இயக்கியுள்ளனர். 2023-இல் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் ஓர் உன்னத திரைஓவியம். கொல்கத்தா சர்வதேசத் திரைப்பட விழாவில் பரிசு வென்ற படம். பார்ப்பவர்களின் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
ராணி துர்காவதி:
ஜான்சிராணியை அநேகருக்குத் தெரியும். ஆனால், ஜெய்ப்பூருக்கு அருகே தன் சாம்ராஜ்ஜியத்தை அமைத்துகொண்டு சீரிய ஆட்சி புரிந்த ராணி துர்காவதியைப் பலருக்குத் தெரியாது. அழகு, வீரம், பரிசுத்தம் போன்ற அருங்குணங்கள் நிறைந்த துர்காவதி பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
அக்பரின் படைகள் தனது சைன்யங்களைத் தாக்கியபோது, வீரப் போர் புரிந்து மரணம் அடைந்தவர் துர்காவதி. போரின் கடைசித் தருணத்தில் அம்பு கண்ணில் பாய்கிறது. எதிரின் இன்னொரு அம்பு கழுத்தில் பாய்கிறது.
'அம்மா.. போர்க் களத்தை விட்டுச் சென்று விடுங்கள்'' என்று ராணியின் காலில் விழுந்து அழுகிறார் தளபதி. மறுத்துவிட்டு துர்காவதி தொடர்ந்து வீரப் போர் புரிகிறார்.
எதிரிகள் சூழ்ந்துகொள்கின்றனர்.
'என் கழுத்தை வெட்டி எறி'' என்று தளபதியிடம் கெஞ்சியும், அவர் மறுக்கவே தன் உடைவாளை உருவித் தன்னையே மாய்த்துகொள்கிறாள் துர்காவதி. இந்த வீராங்கனையைப் பற்றிய படத்தை இயக்கியவர் அசோக் சரண். படம் வெளியான ஆண்டு 2023.
சாஸ்திரா சூர்யா சாவர்கர்:
சுபாங்கி ராஜன் சாவன்த் இயக்கிய "சாஸ்திரா சூர்யா சாவர்கர்' எனும் படம் நூறு நிமிடங்கள் ஓடும் படம். வீரசாவர்கரின் வரலாற்றைப் பேசும் இந்தப் படம், பல சிறப்பான செய்திகளைச் சொல்லிச் செல்கிறது. படம் வெளியான ஆண்டு 2023.
அந்தமான் தீவில் கடுங்காவல் தண்டனை அனுபவித்த சவார்கர் ஒரு மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் மட்டுமல்ல; சிறந்த கவிஞர், நூலாசிரியர், நாடக ஆசிரியர் என்று படம் சொல்கிறது.
பிரம் தி ஷேடோஸ்:
"பிரம் தி ஷேடோஸ்' என்ற படம் 2022-இல் வெளியானது. இயக்கியவர் மிரியம் சாண்டி மெனாச்சரி.
ஒவ்வொரு எட்டு நிமிடங்களுக்குள்ளும் ஒரு பெண் குழந்தை கடத்தப்படுகிறாள் என்ற அதிர்ச்சியான செய்தியை இந்தப் படம் சொல்லும். கடத்தப்படும் பல குழந்தைகள் வேசியர் விடுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களை மீட்டெடுக்க ஒரு சமூகச் சேவகி போராடுகிறாள்.
இன் சர்ச் ஆஃப் கஸ்தூரி:
இருபத்து இரண்டு நிமிடங்கள் ஓடும் படமான இது 2023-இல் வெளியானது. நேகா தீக்ஷித் - சம்ரீன் பரூக் ஆகிய இயக்குநர்கள் இயக்கியது.
கஸ்தூரி மான் என்று அழைக்கப்படும் அரிய மான் இனத்தைச் தரிசிக்கப் படக் குழுவினர் கிளம்புகின்றனர். நீண்ட தேடலுக்குப் பின்னர் கண்டுபிடித்து பதிவு செய்கிறார் ஒளிப்பதிவாளர். கஸ்தூரி மான்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது இந்தப் படம்.
தி கேர்டேக்கர்ஸ்:
இந்தப் படம் பிவ்வஜித் தாஸ் இயக்கியது. அஸ்ஸாமின் கிழக்குப் பகுதியின் வனப் பகுதிக்குள் வசிக்கும் யானைகள் உணவைத் தேடி ஊருக்குள் நுழைகின்றன. யானைகள் இனி அப்படிச் செய்யாதிருக்க, யானைகளுக்காகவே சில நிலங்களை ஒதுக்கி பயிர் செய்துவிட்டு வைக்கின்றனர்.
யானைகள் தமக்கென்று ஒதுக்கப்பட்ட நிலங்களில் நுழைந்து பசியாறி, ஊருக்குள் பிரவேசிப்பதைத் தவிர்க்கின்றன. கானக உயிரினங்களை நேசியுங்கள் என்று படம் அறைகூவி அழைக்கிறது.
தி சீ அன்ட் தி செவன் வில்லேஜர்ஸ்:
ஐம்பத்து ஆறு நிமிடங்கள் ஓடக் கூடிய செய்திப் படம் இது. ஹிமான்சு கதுவா என்ற இயக்குநர் இயக்கியது. நிகழ்வுகள் நடப்பது ஒரிஸ்ஸாவில். கடலோரம் உள்ள ஏழு கிராமங்கள் இயற்கையின் சீற்றத்தால் அழிந்து போகின்றன.
கிராம மக்கள் புலம்பெயர வேண்டி இருக்கிறது. 1971-இல் தொடங்கிய புயலின் சீற்றம், மழை மேலும் இருமுறை அட்டூழியம் செய்ததில் இந்த அவலம் நேர்ந்தது.
பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பின்னர் இந்த ஏழு கிராம மக்களும் வேறு இடங்களில் குடியேற்றப்பட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட ஒரு நபர் சொல்லும் கண்ணீர் கதை நம் இதயத்தைப் பிசைகிறது.
'குடிக்கத் தண்ணீர் இல்லாமல் ஒரு தருணத்தில் இயற்கையின் சீற்றத்தில் நான் கஷ்டப்பட்டேன். குடிநீர் எல்லாம் மாசுபட்டுவிட்டது. என் சகோதரி தன் மார்பகப் பாலை பீய்ச்சித் தந்து என் தாகத்தைப் போக்கினாள்!'' என்கிறார் அவர்.
ரங்கா வைபோகா:
தேவதாசி நடனக் கலையை இந்தக் கன்னட செய்திப் படம் பதிவு செய்கிறது. படத்தை இயக்கியவர் சுனீல் புரானிக். இருபத்து ஒன்பது நிமிடங்கள் ஓடுகிறது.
ரங்கா போகா என்று அழைக்கப்படும் நடனக் கலை ஆதிநாளில் இருந்து கோயில் பெண்களால், கோயில்களில் வளர்த்து எடுக்கப்பட்டது.
கர்நாடகத்தின் பல கோயில்களில் இருக்கும் நடனமாடும் பெண்களின் சிலைகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்தச் சிலைகள் கலைநேர்த்தி மிக்கவை. சில பெண்களின் ரங்கபோகா நடனங்கள் ஆடிக் காட்டுவது ரம்மியமாக இருக்கிறது.
லைப் இன் லூம்:
2023-ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர் எட்மண்ட் ரான்சன். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரும் இவரே.
நாடு முழுவதும் உள்ள நெசவாளர் குடும்பங்களைப் படம் பதிவு செய்கிறது. காஞ்சிபுரம் சேலை, வாரணாசி சேலை போன்றவை எல்லாம் உடல் உழைப்பு வாயிலாகவே நெய்யப்படுகின்றன என்பதை பார்த்து அதிசயிக்கிறோம்.
எத்தனையோ நூற்றாண்டுகளாகப் பரம்பரை, பரம்பரையாக இந்தக் கைத்தறி நெசவு நடக்கிறது. இனிமேலும் நடக்குமா? என்பதே கேள்விக்குறி.
ஏனெனில் நெசவாளர் குடும்பங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் மேற்படிப்பு படிக்கவும் வேறு தொழில்களுக்குப் போகவும் விழைவது நெசவுத் தொழிலுக்கு ஒரு பின்னடைவு. ஒரு புடவை ஒரு லட்சம் ரூபாய் என்பது வியக்க வைக்கிறது. எல்லா நெசவு முறைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் புராதன பாரம்பரியம் செழிக்க வேண்டும் என்றும் குரல் கொடுக்கிறது இந்தச் செய்திப் படம்.
கற்பரா:
2023-இல் வெளியான இந்தப் படத்தை விக்னேஷ் என்ற இளைஞர் இயக்கியுள்ளார். 71 நிமிடங்கள் ஓடும் தமிழ்ப் படம் இது. விக்னேஷின் கன்னி முயற்சி இந்தத் திரை ஓவியம்.
ஒரு சிறிய கிராமம். 90 வயதைக் கடந்த தம்பதி. இருவரும் தத்தம் மகன்களின் வீடுகளில் வசிக்கின்றனர். இவர்களைப் பராமரிப்பதில், இளைய தலைமுறையினருக்கு ஏற்படும் பொறுமையின்மையும் சலிப்பும் அராஜகமும் இந்தப் படத்தில் நன்றாகப் பதிவாகிறது.
சில சமயம் கௌரவமாக நடத்தப்படும் முதியவர்கள் பல சமயங்களில் வார்த்தைகளால் துன்புறுத்தப்படுவதை இயக்குநர் விக்னேஷ் கோடிட்டுக் காட்டுகிறார்.
இதில், 90 வயதைக் கடந்த ஒரு மூதாட்டி தன்னை சிறுநீர் கழிக்க அழைத்துச் செல்லும்படி, 25 வயது பேரனை வேண்டுகிறாள். அப்போது அவனது வார்த்தைகள் அதிர்ச்சி அடைய வைக்கும்.
'ஒரு நாளைக்கு எத்தனை முறை ஒன்றுக்குப் போவாய்?'' என்று சலித்துகொள்கிறான். ஒரு மேட்டுப் பகுதியில் தாழ்வான பகுதிக்குக் கால் வைக்கத் தயங்கும்போது பாட்டியை, 'நல்லா காலை எடுத்துவை. ஒன்னும் செத்துப் போய்விட மாட்டே'' என்று எரிந்து விழுகிறான்.
"இளசுகளே.. திருந்துங்கள்.. அன்பு, கருணை, இரக்கம், இவற்றின் ஜீவ ஊற்றாக இருங்கள்' என்கிறார் இயக்குநர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.