
என் வயது ஐம்பத்து நான்கு. எனக்கு கொலஸ்ட்ரால் 198 மி.லி./டி.எல்,. என்ற அளவில் இருக்கிறது. அது கரைய வேண்டும். சாப்பிடும் முறையில் என்ன சாப்பிட வேண்டும். என்ன சாப்பிடக் கூடாது? நரம்புச் சக்திக்கு என்ன சாப்பிட வேண்டும். கண் விழி வெள்ளையாக இருக்க என்ன உணவைச் சாப்பிடலாம்?
-அப்துல் உசேன், திருவாரூர்.
வயது முதிர, முதிர உணவில் கனம், நெய்ப்பு, கொழுமை, வெம்மை, புஷ்டி, சுறுசுறுப்பு தரக் கூடிய அறுசுவை உணவு ஏற்றது. காலை, நடுப்பகல், இரவு என்று மூன்று நேரங்களிலும் ஒரே சீராக உணவை அமைத்துகொள்ளுதல் நலம்.
வாரத்தில் இரு நாள்களிலாவது இருபொழுதாவது துவர்ப்பும் கசப்பும் மிக்க கறிகாய் முதலிய வற்றலானதைச் சாப்பிடுவது, கறிகாய், கனமான பொருள் ஆகியவற்றை அறவே குறைத்து மிக லேசான உணவை உண்பது, ஓரிரு வேளை உபவாஸம் இருப்பது போன்றவற்றை பழகிக் கொள்வது மூலம் வாழ்வை எந்த நிலையிலும் ஏற்கும் மன திடத்தையும் உடல் திடத்தையும் ஏற்படுத்தவல்ல உணவுப் பழக்கமாகும்.
முதுமை நெருங்கும் பருவத்திலிருந்தே உணவைக் கட்டுப்படுத்துவது அவசியம். இனி மந்தப் பொருளும் கனத்த பொருளும் ஜீரணமாகாது . செரித்தாலும் உள்ளே சேராது. மலப் பொருளாக அதிகம் வெளியேறும். உடலைக் கனக்கச் செய்யும் வயிற்றில் காற்று, மலம் இவற்றின் அசைவைத் தடை செய்யும்.
முன்போல் உடல் உழைக்க மறுப்பதால் உழைப்பு குறையும். உழைப்பின்மையால் உணவின் அளவு அதிகமாகத் தேவை இருக்காது. நாப்பழக்கமும் சபலமும் காரணமாக, அதிகம் உண்டால் உடல் கனத்து முதுமை நோய்கள் எளிதில் ஏற்படக் காரணமாகும். அதனால் லேசான, வாயுத் தடை செய்யாத, அதிகச் சத்தற்ற உணவை ஏற்பது நல்லது. உபவாசம், கசப்பு, துவர்ப்பு மிக்கப் பொருளைக் கொண்ட பொறியல், கூட்டு வகைகள் மனச் சபலத்தைக் குறைப்பவை.
நெய்ப்பு- கசப்பு,- மந்தம்- கனம்- வழுவழுப்பு அதிகம் கொண்ட கொலஸ்ட்ரால் குறைய காரம், துவர்ப்பு, கசப்பு மிக்க உணவு ஏற்றது. இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, கசப்பு மிக்க உணவு ஏற்றது. இனிப்பு, புளிப்பு, உப்புமிக்கவைகளைக் குறைத்து கொள்ளவும்.
பகல் தூக்கம், அதிகம் ஓய்வு, மென்மையான இருக்கையில் அதிக நேரம் உட்கார்த்தல் தவிர்க்கவும். தூக்கத்தின் அளவைக் குறைத்து உடற்பயிற்சியும், சுறுசுறுப்பாக எல்லா செயல்களிலும் அதிகம் ஈடுபடுதலும் வழிநடையும் நல்லது.
கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, கொள்ளு முதலிய புஞ்சை தானியங்களாலான உணவு, பார்லியின் அன்னம் இவை அதிக அளவிலும் அரிசி, கோதுமை முதலிய நஞ்சைத் தானியங்களாலானதும் பருப்பு வகைகள் மிக்கதும் குறைந்த அளவிலும் சேர்ப்பது நல்லது.
அகத்திக் கீரை, கொத்துமல்லி, வெந்தயக் கீரை, மணத்தக்காளிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக் கீரை, புளியாரை, வல்லாரை, பண்ணைக் கீரை, பூசணிப் பிஞ்சு, கத்தரிப் பிஞ்சு, பாகல், வெள்ளரி, அவரை, சுரைக்காய், பாலமுசு, காராக்கருணை, முள்ளங்கி, வெங்காயம், களா, வாழைத் தண்டு, வாழைப் பூ, வாழைக் கச்சல், வற்றல் வகை, மிளகு, இஞ்சி இவற்றாலான ஊறுகாய்கள் ஏற்றவை. வேப்பம்பூ கோணவகக் காய் சாப்பிட நல்லது.
முளைக்கீரை, முருங்கைக் கீரை, தூதுவளை, சுண்டை வற்றல், வெண்டை, தூதுவளை வற்றல், மணத்தக்காளி வற்றல், நெல்லிக்காய், கசப்பும் துவர்ப்பும் புளிப்பும் மிக்க நார்த்தை, மாதுளை முதலிய கனிகள், புளிக்காத இனிக்கும் பழங்கள் போன்றவற்றால் நரம்புச் சக்தி கூடும்.
கண்விழி வெள்ளையாக இரவில் திரிபலை சூரணத்தில் தேன் கலந்து சாப்பிடுதல் நலம், கொலஸ்ட்ராலும் குறையும். ரஸோனாதி கஷாயம், வரணாதி கஷாயம், குக்குலுதிக்கம் கஷாயம், காஞ்சநார குக்குலு மாத்திரை, சிலாசத்து போன்ற ஆயுர்வேத மருந்துகள் கொலஸ்ட்ராலை குறைக்கப் பயன்படுத்த நல்லவை.
தொடரும்
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.